COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Sunday, January 1, 2012

6


சிறப்புக் கட்டுரை
மக்கள் விரோத ஜெ ஆட்சிக்கு எதிராக மக்களைத் திரட்டுவோம்!
கோவைப் பேரணியை பெருவெற்றி பெறச் செய்வோம்!
பாலசுந்தரம்
2011 டிசம்பர் 16,17 தேதிகளில், கோவையில் கூடிய கட்சி மாநிலக் கமிட்டி, கட்சியின் 9வது மாநில மாநாடு, பேரணியை 2012, மார்ச் 30, 31, ஏப்ரல் 1 தேதிகளில் கோவையில் நடத்துவதென முடிவு செய்துள்ளது. டிசம்பர் 17 மாலை நடைபெற்ற உழைக்கும் மக்கள் உரிமைப் பிரகடன பொதுக் கூட்டத்தில் பலத்த கரவொலிக்கிடையே அறிவிக்கப்பட்டது. டிசம்பர் 18, தோழர் வி.எம். 13வது நினைவு நாளில் கூடிய கட்சி உறுதி ஏற்பு கூட்டம் மாநாடு, பேரணியை பெருவெற்றிபெறச் செய்வதென உறுதி ஏற்றது. டிசம்பர் 20அன்று கூடிய கோவை மாவட்டக் கமிட்டி மாநாடு, பேரணி முடிவை உற்சாகத்துடன் வரவேற்று வேலைகளை தொடங்கியுள்ளது
கட்சி மாநில மாநாடு - பேரணி தயாரிப்புகள் இரண்டு அடிப்படைகளைக் கொண்டது. கட்சி முழுவதையும் அரசியல், கருத்தியல்ரீதியாக அணிதிரட்டுவது, வலுப்படுத்துவது, மக்கள் விரோத அதிமுக ஆட்சிக்கெதிராக வெகுமக்கள் அரசியல் இயக்கத்தை நடத்துவது, பல்லாயிரக்கணக்கான உழைக்கும் மக்களை கோவை பேரணிக்கு அணிதிரட்டுவது, என்பவையாகும். இந்த கடமைகளை நிலவும் நிலைமைகளில் வெற்றிகரமாக முன்னெடுக்க வேண்டும்.
வெகுமக்கள் வேலையை வலுப்படுத்துவோம்.
பெரிய அரசியல் முன்முயற்சிக்குத் தயாராவோம்.
சூழ்நிலை வெகு வேகமாக மாறி வருகிறது. பல புதிய காட்சிகள் அரங்கேறி வருகின்றன. பலதரப்பு மக்களும் எட்டு மாத அதிமுக ஆட்சிக்கு எதிராக திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். சிறப்புத் திட்டங்களுக்கான தனி அமைச்சர், தனி அதிகாரி என்பவை நலத்திட்டங்களை விரைந்து நிறைவேற்றுவதில் முதலமைச்சருக்கு உள்ள தீவிர அக்கறையைக் காட்டுவதாகப் பேசப்படுகிறது. ஆனால் அவரது அக்கறை சமச்சீர் கல்வி, பஸ், பால், மின்சார கட்டண உயர்வு, மக்கள் நலப்பணியாளர் வேலை நீக்கம் போன்றவற்றில் தெளிவாகிவிட்டது. கொடுத்ததைவிடப் பறித்தது அதிகம். விலையில்லா பொருட்கள் (இலவசம் என்பதற்கு இவர்கள் மொழிபெயர்ப்பு) பற்றி பிரச்சாரம் காது கிழிகிறது. ஆனால், பாலுக்கும், பேருந்துக்கும் பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கிறது. அதிமுக ஆட்சி பேசும் விவசாய வளர்ச்சி, தொழில் வளர்ச்சி, முதல் மாநிலம், தொலைநோக்கு (விஷன்) 2025 ஆகியவை ஆட்சியின் நவதாராளவாத மேட்டுக்குடி சார்பு, மக்கள் விரோத திட்டங்களையே காட்டுகின்றன. ஏழைகள் சார்பு முகமூடிக்குள் மறைந்திருக்கும் பெருமுதலாளித்துவ திட்டம் அம்பலப்பட்டுவிட்டது.
சமச்சீர் கல்வி பிரச்சனை முதல் பரமக்குடி துப்பாக்கிச் சூடு வரை, அதிமுக ஆட்சி மக்களின் கடும் எதிர்ப்பைச் சந்தித்து வருகிறது. பெரும்பான்மை பலம் கொண்ட ஆட்சி, பெரும்பான்மை மக்களுக்கு எதிராகத் திரும்பிவிட்டதால், பெரும்பான்மை மக்கள் ஆட்சிக்கு எதிராகத் திரும்பி வருகிறார்கள். நீதிமன்ற தீர்ப்புகள், கட்சிகள், ஏடுகள், முன்வைக்கும் கருத்துகள், கண்டனங்கள், விமர்சனங்கள் ஆட்சிக்கு உவப்பானதாக இல்லை. பரமக்குடி துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்துக்கு மேலும் 4 லட்சம் இழப்பீடும் குடும்பத்தில் ஒருவருக்கு வேலையும் வழங்கவேண்டிய நிர்ப்பந்தம் உருவாகிவிட்டது. டி.மண்டபம் பழங்குடி இருளர் பெண்கள் மீது வன்புணர்ச்சி கொடூரத்தை நடத்திய காவலர்களை இடைநீக்கம் செய்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 5 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டிய கட்டாயம் உருவானது இடைத்தேர்தலில் வெற்றிபெற்று அமைச்சராகப்பட்ட பரஞ்ஜோதியை நீக்க வேண்டியதாகிவிட்டது. 25 ஆண்டுகால உடன்பிறவா சகோதரியைக்கூட கட்சியிலிருந்தே தூக்கவேண்டி வந்துவிட்டது. அனைத்தும் ஆட்சிக்கு எதிராக தாக்குதலை தடுத்துக் கொள்ளவும் எதிர்ப்புகளை எல்லை தாண்டி செல்லாமல் கட்டுப்படுத்தவுமான நடவடிக்கைகளாகும். ஆட்சியின் சரியும் தோற்றத்தை தூக்கி நிறுத்தும் நடவடிக்கைகளாகும்.
மற்றுமொரு புதிய சூழல், மூவர் தூக்கு, கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு. மக்கள் தன்னெழுச்சியாக அணிதிரண்டு வருகின்றனர். போராடி வருகின்றனர். கொடியங்குளத்தின் நீட்சியாக பரமக்குடி மூர்க்கமான தலித் விரோத ஆணவத்துடன் தலித்துக்கள் ரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டனர். பலத்த எதிர்ப்புக்குப் பிறகும் பஸ், பால் மின் கட்டணம் உயர்வை ரத்துசெய்ய ஜெ ஆட்சி மறுத்துவிட்டது. ஆனால் மூவர் தூக்கு, கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு முல்லைப் பெரியாறு பிரச்சனைகளில் மக்கள் கோரிக்கைகளுக்கு செவி சாய்ப்பது போல், பின்வாங்குவது போல் நடந்துகொண்டது.
இந்த மூன்று பிரச்சனைகளிலும், சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு, உணவு பாதுகாப்பு (ரூ.1800 கோடி கூடுதல் செலவாகும் என்ற முகாந்திரத்தில்) போன்ற பிரச்சனைகளிலும் மத்திய அரசை பொறுப்பாக்கும் குற்றம்சாட்டும் அணுகுமுறையை மிகவும் கவனமாக கையாளுகிறார் ஜெயலலிதா. மன்மோகன் ஆட்சிக்கு கடும் எதிர்ப்பு வளர்ந்து வரும் நிலையில் மத்திய அரசை நோக்கி எழுப்பும் எதிர்க் கட்சி குரல் ஆளும் கட்சிக்கு ஆதரவைக் கொண்டு வரும் என்பது முதலமைச்சரின் கணக்கு ஆனாலும், மத்திய அரசாங்கத்துக்கு எதிர்ப்பு, மத்திய அரசாங்கத்தின் நவதாரளவாத கொள்கைக்கு ஆதரவு என்ற அவரது சாணக்கியமும் கூட ஆட்சிக்கெதிரான எதிர்ப்பை தணித்துவிடவில்லை.
நவதாராளவாத பொருளாதாரக் கொள்கைகள் உருவாக்கியுள்ள, அனைத்தும் தழுவிய நெருக்கடிகள் வெடித்துச் சிதறும் நிலையை எட்டியுள்ளன. விலையில்லா பொருட்கள், மாற்றம் தந்த மக்களுக்கு ஏற்றம் போன்ற வார்த்தை விளையாட்டுகளால் இந்த நெருக்கடிகளை மக்களின் மாற்றங்களை தணித்து விடமுடியாது என்பது தெளிவாகி வருகிறது. அதிமுக ஆட்சி பேசும் இரண்டாவது பசுமைப்புரட்சி மத்திய அரசாங்கத்தின் கொள்கை தொடர்ச்சிதான். மூன்று கோடி பேருக்கு மேல் நம்பியிருக்கும் விவசாயத்தை ஒரு கோடி பேர் மட்டுமே பார்க்கக் கூடியதாக மாற்றப் போகிறார்களாம். (விஷம் 2025) எவ்வளவு பெரிய பேரழிவுக் கொலைவெறி? அமைப்புச்சார்ந்த, அமைப்புசாரா உழைக்கும் வர்க்கத்தை கோரமான மூலதனத் தாக்குதலுக்கு ஆளாக்குவதையே தொழில் வளர்ச்சி என்கிறது அதிமுக ஆட்சி, விவசாய நெருக்கடி, வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, ஊழல், பெருநிறுவனக் கொள்ளை போன்றவற்றால் மக்கள் கடும் அதிருப்திக்கும் கோபத்துக்கும் ஆளாகியிருக்கிறார்கள். நிலம், வேலை, கூலி, கவுரவமான வாழ்க்கை, சமூக சமத்துவம், ஜனநாயக உரிமைகள் முதன்மை முன்னுரிமைப் பிரச்சனைகளாக உள்ளன. இந்தப் பிரச்சனைகளில் பரந்த உழைக்கும் மக்கள் பெருந்திரள் கிளர்ச்சிகளில் இறங்கும் நிலை முதிர்ந்து வருகிறது. இளம் தலைமுறையினரும், அறிவாளிப் பிரிவினரும் மாற்றத்துக்கான வேட்கையை வெளிப்படுத்துகின்றனர். எனவே ஆட்சிக்கு எதிராக பெருந்திரள் உழைக்கும் மக்களின் ஆவேசங்களை, இளம் தலைமுறையினரின் வேட்கையை அணிதிரட்டும் அவசியம் தீவிரமடைந்துள்ளது.
இந்த வேலைகளில் பெருமுயற்சி மேற்கொண்டு வருகிறோம். லட்சக்கணக்கான நகர்புற தொழிலாளர்களை அவர்களது அமைப்பில் அணிதிரட்டி வருகிறோம். ஆனால் சூழ்நிலை கோருவதற்கேற்ப பரந்த வெகுமக்கள் முன்முயற்சியை வெகுமக்கள் இயக்கத்தைக் கொண்டு வருவதற்கு முனைந்து போராட வேண்டும். பிரிக்கால் ஆலைத் தொழிலாளர்களின் முன்முயற்சி, நீடித்த போராட்ட உணர்வை தக்கவைப்பதில் முன்னேறி யிருக்கிறோம். அதையொத்த, அதை விடவும் கூடுதலான முன்னேற்றங்களைக் கொண்டு வர, கிராமப்புற நகர்ப்புறப் பகுதிகளில் வளர்த்தெடுக்ககடும் முயற்சி மேற்கொள்ள வேண்டும். இந்தக் கடமையில் நமது முன்னேற்றத்தை தடுக்கும் பிரச்சனைகளை தீர ஆராய்ந்து கடந்து வந்தாக வேண்டும். வெகுமக்கள் ஆதரவு, முன்முயற்சி, கிளர்ச்சிகள் என்ற வேலைப் பகுதிகளை வளர்ப்பதற்கு தீவிர கவனம் செலுத்தியாக வேண்டும். மாநாட்டை நோக்கிய வெகுமக்கள் அரசியல் பிரச்சாரம் மற்றும் பேரணிக்கான தயாரிப்பும் அதற்கு பிந்தைய முயற்சிகளும் வெகுமக்கள் வேலையில் பெரும்முன்னேற்றத்தைக் கொண்டு வந்தாக வேண்டும். வெகுமக்களை அணிதிரட்டும் நமது ஆற்றல் வளர்ந்தாக வேண்டும்.
மற்றொரு பக்கம், சமச்சீர் கல்வி, மூவர் தூக்கு, கூடங்குளம் அணு உலை, முல்லைப்பெரியாறு போன்ற பிரச்சனைகளில் எழுந்துள்ள பரந்த மக்கள் அணிதிரட்டல்களை, போராட்டங்களைக் காண்கிறோம். பெருமுதலாளித்துவ கொள்கைகளுக்கு, ஆட்சியாளர்களின் ஜனநாயக விரோத ஆளும் முறைக்கு எதிரான போராட்டங்கள் மிகவும் கவனிக்க வேண்டிய செய்தி. இந்த போராட்டங்கள் மத்திய ஆட்சிகளை தடுமாறச் செய்துள்ளன. பின்வாங்கச் செய்துள்ளன.
மூவர் தூக்கு பிரச்சனையில் தமிழர் எழுச்சி ஒன்று உருவானதென்று சித்தரிக்கப்படுகிறது. ஜனநாயக இயக்கங்களை பின்னுக்கு தள்ளும் நோக்கத்துடன் இவை போன்ற பிரச்சனைகள் முன்னுக்கு கொண்டு வரப்படுகின்றன என்ற கருத்துக்களும் உள்ளன. பரந்த மக்கள் பங்கெடுக்கும் மொழி, மாநிலம், தேசிய இனம் சார்ந்த பிரச்சனைகளில் உள்ள ஜனநாயக அம்சத்தை மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் கட்சி எப்போதுமே புறக்கணித்ததில்லை. இவற்றின் ஊடாக தீவிரப் போக்குகள் முன் வரும் என்பதையும் காணத்தவறுவதில்லை. ராஜீவ் கொலை வழக்கில் சட்டநெறிமுறைகளையெல்லாம் மீறி தண்டனை விதித்தது. கருணை மனுக்கள் மீது கருணையின்றி நடந்து கொண்ட ஆட்சியாளர்களின் (காங்கிரஸ் - பாஜக) அடாவடி, ஆகியவற்றுக்கு எதிராக எழுந்த எதிர்ப்பு உணர்வாகும். சட்டமன்றத்தில் ராஜபக்ஷவை போர்க்குற்றவாளியாக அறிவிக்கக் கோரும் வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானம் நிறைவேற்றி மார்த் தட்டிக்கொண்ட முதலமைச்சர் தூக்குதண்டனை விசயத்தில் தனக்கு அதிகாரமில்லை என்று கைவிரித்த நயவஞ்சகத்தை, இரட்டை வேடத்தை கடுமையாக அம்பலப்படுத்திய நிகழ்வுகளாகும். இந்த அணிதிரட்டலுக்கு திட்டவட்டமான ஜனநாயக உள்ளடக்கம் இருக்கிறது. இந்தப் பின்னணியிலேயே தமிழ்நாடு தழுவிய எதிர்ப்பு உருவானது. மூவர் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட வேண்டுமென்ற தமிழ்நாடு தழுவிய குரலோடு சேர்ந்து நின்றோம். ஆட்சியும் பணிந்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டியதாயிற்று.
பரமக்குடி சம்பவத்துக்குப் பிந்தைய தலித் அரசியல் ஒரு புதிய கட்டத்தை எட்டியுள்ளது. பழைய வகை தலித் அணிதிரட்டல், அரசியல், தீவிர மாறுதலுக்கு ஆளாகி வருகிறது. கூர்மையான அரசு எதிர்ப்பு தன்மை பெற்று வருகிறது. இமானுவேல் சேகரன் பிறந்த நாளில் பரமக்குடியில் திரண்ட 15000 பெண்கள் அணி திரட்டல் முற்றிலும் புதிய காட்சி. திமுக அதிமுக உள்ளிட்ட கட்சிகளால் உள்வாங்கப்பட்ட தலித் கட்சிகள், தலித் மக்களின் இந்த மாறுதலுக்கு ஈடுகொடுக்க முடியாத நிலையில் உள்ளன. இககமா வகைப்பட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் கூட இந்த சூழ்நிலைக்கு ஈடுகொடுக்கத் தக்கதாக இல்லை. புரட்சிகர கம்யூனிஸ்ட்கள் முக்கிய பங்காற்றியாக வேண்டும். கிராமப்புற ஏழைகள் மத்தியில் வேலை செய்து வரும் நமக்கு மிக முக்கியமானது. இந்த வகையான தீர்மானகரமான புரிதலுடனே ஊக்கமான தலையீட்டை மேற்கொண்டோம். நமது நிலைப்பாடும் கருத்துக்களும் மாறிவரும் இந்த மனோநிலையைப் பிரதிபலிப்பதாக இருந்தன. பலத்த வரவேற்பைப் பெற்றன.
அதிமுகவிலிருந்து சசிகலா கும்பலை நீக்கிய ஜெயலலிதாவின் துணிச்சலை சுப்ரமணியசுவாமி போன்ற நபர்களும் ஹிண்டு, தினமணி போன்ற ஏடுகளும் பாராட்டுகின்றன. அரசு நிர்வாகத்தில், அரசியல் சட்டத்துக்குப் புறம்பான மய்யம் செயல்பட்டதை ஒழிக்கும் நடவடிக்கை, சுத்தமான, வெளிப்படையான நிர்வாகத்துக்கான முதலமைச்சரின் துணிச்சல்மிக்க நடவடிக்கை என்றெல்லாம் பாராட்டப்படுகிறது. பல முனையிலிருந்தும் தாக்கப்படும் ஆட்சிக்கு தூய்மைத் தோற்றம் தரும் முயற்சி இது. உடன்பிறவாச் சகோதரி, சசிகலா கும்பல் அரசியல் சட்டத்துக்குப் புறம்பான மய்யமாகச் செயல்பட்டது என்ற குற்றச்சாட்டு நிரூபண மாகிவிட்டது. அவ்வாறு செயல்பட்ட காலங்களில் உருவான சேதாரங்களுக்கு முதலமைச்சர் பரிகாரம் காண்பாரா? சிறுதாவூர் தலித்துக்கள் நிலத்தை மீட்பாரா? பரமக்குடி துப்பாக்கிச் சூட்டிலும் இந்த அதி காரபூர்வமற்ற மய்யத்தின் கைகள் உண்டு என்பது அனைவருக்கும் தெரியும். என்ன பரிகாரம்? இதைக் கொண்டு ஆட்சியின்மீது உள்ள கோபத்தை தணிக்கவும் தலித்துகளிடமிருந்து அரசை நோக்கிய ஒரு சாய்வைக் கொண்டுவரும் முயற்சிகளுக்கும் இதைப் பயன்படுத்திக் கொள்வார்கள். ஆனால் அரசியல் சட்ட மய்யமான முதல்வர், சட்டப் பேரவையில் தலித்துக்களை வன்முறையாளர்கள், கலவரக்காரர்கள் என்று தீண்டாமை பாராட்டிப் பேசியதற்கு யார் பொறுப்பு? அரசியல் சட்டம் தலித்துக்களின் உரிமை. சமத்துவத்தை அங்கீகரிக்கவில்லையா? தலித் விரோத பேச்சுக்கு முதலமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும் சட்டப்பேரவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முக்கியவத்துவம் பெறுகிறது. அது மட்டுமல்ல பரமக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் அரசியல்சட்ட அதிகார மய்யம், அரசியல் சட்டத் துக்குப் புறம்பான மய்யம் இரண்டின் பாத்திரம் பற்றி மத்திய புலனாய்வுத்துறை விசாரிக்க வேண்டும்.
முல்லைப் பெரியாறு பிரச்சனையில் மத்திய அரசுக்கு எதிராக வலுவான எதிர்ப்பைக் காண்கிறோம். கருப்புக்கொடிகள் மன்மோகன்சிங்கை வரவேற்பதையும் காண்கிறோம். நீண்டகால விவசாய நெருக்கடியின் விளைவுகள் முல்லைப்பெரியாறு பிரச்சனையில் வெளிப்படுகிறது. பல்லாயிரக்கணக்கான விவசாயிகளை வீதிக்கு கொண்டு வந்திருக்கிறது. தமிழ்நாடு தழுவிய அளவில் வர்த்தகர்கள், பிற பிரிவினர் ஆதரித்து வீதிக்கு வருவதையும் கடையடைப்பு செய்வதையும் மாநில உரிமை, பிராந்திய எழுச்சி என்பதாகக் குறுக்கிவிட முடியாது. மாறாக விவசாய நெருக்கடியின் தீவிரத்தையும் விவசாயத்தின் முக்கியத்துவத்தையும் உணர்த்துவதாகவே உள்ளது. இன்னமும் 54% மக்கள் விவசாயத்தை சார்ந்திருக்கும் நிலையில் அவர்களது வாங்கும் சக்தி, வாழும் திறன் உயராமல் வணிகமும் பிற பொருளாதார நடவடிக்கைகளும் வளராது என்பதை வணிகர்கள், பிற பிரிவு மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். கூடங்குளத்திற்கு ஆதரவாக தீவிரமாக வரிந்து கட்டிக்கொண்டு வாதாடும் முதலாளிகள் இந்தப் பிரச்சனைகயில் மவுனம் காக்கிறார்கள். அவர்கள் விவசாய நெருக்கடியை வரவேற்பார்கள். அதனால் வளர்ந்து கொண்டிருப்பவர்கள். நெருக்கடிகளுக்கெல்லாம் தலையாய நெருக்கடி விவசாய நெருக்கடியாகும். எனவே விவசாய நெருக்கடி ஜனநாயக அடிப்படையில் தீர்க்கப்படாமல் எந்தவொரு தொழில் வளர்ச்சியும் எதிர்மறை வளர்ச்சியே, கட்சிகள் சட்ட மன்றத்தில் ஓரணியாக நிற்பதன் மூலம் விவசாய சமூகத்தின் மீது கரிசனம் போல் காட்டிக்கொள்ள விரும்புகின்றனர். விவசாய நெருக்கடியை தீவிரப் படுத்திய குற்றத்தை மறைத்துக் கொள்ளப் பார்க்கின்றன. எனவேதான், முல்லைப்பெரியாறு பிரச்சனையில் தமிழக விவசாய சமூகத்தின் நீர் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும், இருமாநில மக்களின் நல்லுறவு, ஒற்றுமை பாதுகாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிற அதே வேளை விவசாய நெருக்கடிக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். பிற இடதுசாரி கட்சிகள் இதை எழுப்ப முன்வரவில்லை.
தமிழர் எழுச்சியை பின்னுக்கு தள்ள தலித்துக்கள் (பரமக்குடி) பிரச்சனை கொண்டு வரப்படுகிறது. தலித்துக்களின் போராட்டத்தை பின்னுக்கு தள்ள முல்லைப் பெரியாறு பிரச்சனை எழுப்பப்படுகிறது என்ற கருத்துக்கள்கூட முன்வைக்கப்படுகின்றன. நாம் காணும் பிரச்சனைகளும் போராட்டங்களும் உயிருள்ளவை. பின்னிப் பிணைந்தவை. ஆட்சியாளர்களின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்து எழுபவை. தலித்துகளும் கூடங்குளம் மக்களும் தமிழர்கள் இல்லையா? கூடங்குளம் அணுஉலை வெடித்தால் தலித்துகளை தாண்டிச்சென்று தாக்குமா? முல்லைப்பெரியாறு நீருக்காகப் போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகள் கூடங்குளம் அணுஉலையை மூடவேண்டும் என்று போராட வைக்க வேண்டியது தேவையில்லையா? கூடங்குளம் அணுஉலை முதல், தலித்துகள் உரிமை, விவசாய நெருக்கடி வரை மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ள பேரழிவுத் திட்டங்களைத் தடுத்து நிறுத்த தொழிலாளர்கள், கிராமப்புறத் தொழிலாளர்கள் தலித்துக்கள், விவசாயிகள், தமிழர்கள் ஒன்று சேர்ந்து போராடியாக வேண்டும்.
தமிழர்களின் ஒன்றுபட்ட குரல் தூக்கு தண்டனையைத் தள்ளிப்போட்டிருக்கிறது. தலித்துக்களின் போராட்டம் தலித்துக்கள் விரோத அதிமுக அரசாங்கத்தை முகத்தில் அறைந்திருக்கிறது. போராடி சிபிஅய் விசாரணையைப் பெற்றிருக்கிறது. கூடங்குளம் மக்களின் போராட்டம் அணு உலை வேலையை நிறுத்த வைத்திருக்கிறது. 5 மாவட்ட விவசாயிகள் நாட்டின் பிரதமர் மன்மோகன் முகத்தில் கருப்பு கொடியால் அலங்காரம் செய்திருக்கிறார்கள். இவை அனைத்துமே ஆட்சியாளர்களை தற்காலிகமாவது பின்வாங்க வைத்திருக்கிறது. இந்தப் போராட்டங்கள் ஒவ்வொன்றும் மற்றதிலிருந்து ஊக்கம்பெற வேண்டும். ஒன்றுக்கு மற்றொன்று உதவி செய்யவேண்டும். போராடும் சக்திகள் ஒன்று கலக்கவேண்டும். இந்த ஜனநாயகப் பார்வை தெளிவு இருப்பதால்தான் இந்த அனைத்துப் பிரச்சனைகளிலும் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி ஊக்கமாக பங்கெடுத்திருக்கிறது. சமச்சீர் கல்விப் பிரச்சனை தொடங்கி, சில்லறை வர்த்தகம், முல்லைப்பெரியாறு பிரச்சனை வரை ஜனநாயக அடிப்படைகளை, இயக்கங்களின் ஜனநாயக ஆற்றலை அடையாளம் கண்டு அவற்றின் சிறப்புகளை முன்னிறுத்திக் காட்டியிருக்கிறது.
நவதாராளவாத ஆளுகைக்குள் இந்தியாவை அடக்கிவிடத் துடிக்கும் ஆட்சியாளர்களின் மூர்க்கத்தனத்தை முறியடிக்கும் வல்லமை கொண்டவர்கள் நகர்ப்புற, கிராமப்புற உழைக்கும் மக்கள். அவர்களது வாழ்வுரிமை, ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடிக் கொண்டிருக்கும் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி அவர்களையும் இந்த அனைத்து போராட்டங்களுக்கும் ஆதரவாக அணிதிரட்டியிருக்கிறது. ஜனநாயகத்துக்காகப் போராடும் அனைத்து சக்திகளும் தங்கள் உண்மையான கூட்டாளிகளை, நேர்மையான நண்பர்களை உழைக்கும் வர்க்கத்திடம்தான் கண்டுகொள்ள முடியும். நம்பிக்கையுடன் கைகோர்க்க முடியும்.
அரசியல் கட்சிகள், கூட்டணிகளும், தீவிர மாறுதலுக்கு ஆளாகியுள்ளன. ஏறத்தாழ அனைத்து கட்சிகளும் ஆட்சிக்கு எதிராக பேசவேண்டிய நிலை உருவாகியுள்ளது. நிலை குலைந்து போயுள்ள திமுகவும் கூட வீதிக்கு வரவேண்டிய கட்டாயத்தை சூழ்நிலை ஏற்படுத்தியுள்ளது. திமுகவின் நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள தேமுதிக, பாமக கட்சிகள் முன்கை எடுக்க விழைகின்றன. மக்கள் முன்னுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். கட்சிகள் தங்கள் அடையாளத்தை காத்துக்கொள்ள பின்னால் சென்று கொண்டிருக்கின்றன. தன்னெழுச்சியான இயக்கங்களை கட்சிகள் தங்கள் வழியில் (முல்லைப்பெரியாறு பிரச்சனையில் ஸ்டாலின், விஜயகாந்த் தேனி, கம்பம் ஆர்ப்பாட்டங்கள்) கொண்டு செல்ல முயல்கின்றன. எழுந்து வரும் இயக்கங்களிலிருந்து தனிமைப்படாமலிருக்க சில அடையாள முயற்சிகளை எடுக்கின்றன. இயக்கங்களின் இடது ஜனநாயக உள்ளடக்கங்களும் இந்த கட்சிகளின் கொள்கைகளும் பொருந்தாதவை. இயக்கங்களின் ஆற்றல்களை மட்டுப்படுத்த தடம்புரளச் செய்யவுமே இந்த கட்சிகள் முயற்சி மேற்கொள்ளும். இடதுசாரி கட்சிகள், சூழ்நிலையின் தேவைக்கு எழுந்து வருவதாக தெரியவில்லை.
இந்த பின்னணியில், நமது வெகு மக்கள் வேலையும் மாநாட்டை நோக்கிய அரசியல் பிரச்சாரத்தையும் முன்னெடுத்து செல்ல வேண்டும். எழுந்துவரும் சூழ்நிலையில் சக்திமிக்க தலையீடு செய்வதற்கேற்ப நமது வெகு மக்கள் பலத்தை அதிகரிக்க வேண்டும். வலுப்படுத்த வேண்டும். எழுந்து வரும் இயக்கங்கள், அனுபவங்கள், நமது தலையீடுகளின் சரித்தன்மையிலிருந்து நமது வெகுமக்கள் வேலைகளை உந்துதல்பெறச் செய்ய வேண்டும். தீவிரமான (வெகுமக்கள்) போராட்டங்கள், இன்னும் பெரிய அரசியல் முயற்சிகள், போராடுகிற இடது, ஜனநாயக சக்திகளுடன் நெருக்கமான ஊடாடல் ஆகியவற்றின் ஆண்டாக மாற்றுவோம், எனும் டிசம்பர் 18 அழைப்பை பொருளுள்ளதாக ஆக்க ஒட்டுமொத்த கட்சியும் கடும்முயற்சி மேற்கொள்ள வேண்டும். கோவை கட்சிப் பேரணி இதன் அடையாளமாக இருக்க வேண்டும்.

Search