2012அய் தீவிரமான போராட்டங்களின் சக்திவாய்ந்த முன்முயற்சிகளின் ஆண்டாக மாற்றுவோம்!
இருபத்தியோராம் நூற்றாண்டின், இரண்டாவது பத்தாண்டின் முதல் ஆண்டு முடிகிற நேரத்தில், உலகம் முழுவதும் வெகுமக்கள் போராட்டங்களின் வரவேற்கத்தக்க எழுச்சியை காண முடிகிறது. பொருளாதார பின்னடைவு, பெருநிறுவனக் கொள்ளை, சர்வாதிகார ஆட்சி ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட மக்கள், உலகம் முழுவதும் போராடத் துவங்கிவிட்டார்கள். 2011 அரபு வசந்தத்தின் ஆண்டு என்றும் ‘ஆக்கிரமிப்பு’ இயக்கத்தின் ஆண்டு என்றும் வரலாற்றில் நினைவுகூரப்படும். அரபு வசந்தத்தின், ‘ஆக்கிரமிப்பு’ இயக்கத்தின் பின்னால் இருந்த உணர்வுகள்/தூண்டுதல்கள் இன்னும் துடிப்புடனேதான் இருக்கின்றன. எனவே நடந்துகொண்டிருக்கிற போராட்டங்கள் வருகிற ஆண்டுக்குள்ளும் நிச்சயம் முன்னெடுத்துச் செல்லப்படும். ஊழலுக்கு எதிராக, பெருநிறுவனக் கொள்ளைக்கு எதிராக, வாழ்வின் பல்வேறு அம்சங்களிலும் மக்கள் உரிமைகளை பெறுவதற்காக இந்தியாவில் நடந்துகொண்டிருக்கும் போராட்டங்களுக்கும் இது பொருந்தும்.
சர்வதேச மூலதனத்தின் தற்போதைய நெருக்கடி ஆழமானதாகவும் நீடிக்கக் கூடியதாகவும் மாறுகிறது. அது சர்வதேச மூலதனத்தின் இரண்டு பெரிய மய்யங்களான அமெரிக்காவையும் அய்ரோப்பாவையும் ஒரே நேரத்தில் தாக்கியுள்ளது. அது நிதித்துறையையும் பல உற்பத்தி தொழில்களையும் தாக்கியுள்ளது. கட்டவிழ்ப்பு மற்றும் தனியார்மயம் என்கிற சுதந்திரச் சந்தை மந்திரத்தின் அடிப்படையிலான நவதாராளவாதத்தின் மேலோங்கிய முதலாளித்துவ மாதிரி, ஒரு முட்டுச்சந்தை எட்டிவிட்டதாகத் தெரிகிறது. தொழில்களை வேறு இடங்களுக்கு மாற்றியமைப்பது, தீவிர உழைப்பு கோரும் உற்பத்தியை அவுட்சோர்ஸ் செய்வது, தீவிர உழைப்பு தேவையைக் குறைக்கும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் ஆகியவை அதிகரிப்பதன் கூட்டு விளைவால், பல முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் வேலைவாய்ப்பின்மை மட்டம் தாங்க முடியாத அளவு அதிகரித்துள்ளது.
சாத்தியப்படும் அளவுக்கு இயற்கை செல்வாதாரங்களை கைப்பற்றுவதன் மூலம் இந்த நெருக்கடியில் இருந்து மீள சர்வதேச மூலதனம் முயற்சி செய்கிறது. அதனால், கருத்தில்படும் செல்வாதாரங்கள் அனைத்துக்காகவும், மிகவும் குறிப்பிடத்தக்க விதத்தில் நிலம், நீர், வனங்கள், கனிமங்கள், எண்ணெய், எரிவாயு என அனைத்துக்காகவும் வெறிபிடித்த பெருநிறுவன பாய்ச்சலை உருவாக்கியுள்ளது. இதனுடன், இயற்கை செல்வாதாரங்களின் ஆகக்கூடுதலான பங்கை கைப்பற்றும் உந்துதலுடன், பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்துவது, ஜனநாயகத்தை, மனித உரிமைகளை மேம்படுத்துவது என்ற பெயரில், ஏகாதிபத்தியம், செல்வாதார செழிப்பு கொண்ட நாடுகள் மீது விடாப்பிடியான போரையும் தொடுக்கிறது. ஆப்கானிஸ்தான், ஈராக் ஆகியவற்றுக்குப் பிறகு, இப்போது, அறிவிப்பு ஏதுமின்றி, போர் ஈரான் மற்றும் பாகிஸ்தான் நோக்கிப் பரவுகிறது. லிபியாவில் அமெரிக்க மற்றும் நேட்டோ படை தலையீடு குறிப்பதுபோல், ஆப்பிரிக்காவுக்கும் பரவுகிறது. ஆனால், அதே அளவுக்கு, ஆக்கிரமிக்கப்பட்ட, ஊடுருவப்பட்ட நாடுகளில், சர்வதேச மூலதனத்தின் சன்னிதானங்களில், குறிப்பாக அமெரிக்காவில், போருக்கு அதிகரித்த அளவில் எதிர்ப்பும் காணப்படுகிறது.
ஆக, உலகமயம் ஓர் இயங்கியல் நிகழ்வுப்போக்காக எழுகிறது. பெருநிறுவனக் கொள்ளையும் ஏகாதிபத்தியப் போரும் உலகமயமாகும்போது, அக்கம்பக்கமாக, நாம் இப்போது உலகமயத்தின் மற்றொரு பரிமாணத்தையும் பார்க்கிறோம். முதலாளித்துவ நெருக்கடி உலகமயமாகிறது; மக்கள் சீற்றமும் எதிர்ப்பும் உலகமயமாகின்றன. மிகச் சமீப காலம் வரை அமெரிக்காவும் பிற மேற்கத்திய சக்திகளும் தங்கள் விருப்பம்போல், உலகின் மீது ஆதிக்கம் செலுத்துவது போன்ற ஒரு சூழலை நாம் எதிர்கொண்டதற்கு, புத்துணர்வளிக்கும் விதம் முரணாக, இன்றைய சர்வதேச சூழல் உள்ளது. உலகெங்கும் உள்ள கம்யூனிஸ்டுகளுக்கும் முற்போக்கு சக்திகளுக்கும், ஒரு புதுப்பிக்கப்பட்ட முன்னேற்றத்துக்கான சாத்தியப்பாடுகள் நிச்சயம் கதவுகளை தட்டுகின்றன.
சமீபத்திய தேர்தல் முடிவுகளைப் பார்த்தால், இந்திய நிலைமைகளில் இது ஒருவர் விருப்பம்போல் தெரியலாம். ஆனால் வளர்ந்து வருகிற உள்ளார்ந்த அமைப்பு நெருக்கடி, தீவிரமான வெகுமக்கள் செயல்பாடு என்ற சூழலில் வெறும் தேர்தல் கொண்டு அரசியல் யதார்த்தத்தை மதிப்பிடுவது மிகப்பெரிய தவறாகும். உதாரணமாக, மாலெ கட்சிக்கு பீகாரில் ஓரளவு அடித்தளமே இருக்கிறது என்று தேர்தல் முடிவுகள் காட்டலாம். ஆனால் நவம்பர் 21 பாட்னா பேரணியின் மகத்தான வெற்றியும் பேரணிக்கு முன்பு நடந்த வெகுமக்கள் முன்முயற்சிகளுக்கு கிடைத்த பதில்வினையும், வெகுமக்களை அணிதிரட்டும், நடந்துகொண்டிருக்கிற அரசியல் நிகழ்வுகளில் தலையிடும் ஆற்றலை கட்சி நிச்சயம் தக்கவைத்துக் கொண்டுள்ளது என்பதை தெளிவாகக் காட்டுகின்றன. உண்மையில் 2011 முழுவதும், பீகார் மற்றும் நமது வேலைகள் நடக்கிற பிற மாநிலங்கள் அறைகூவல் மட்டுமின்றி, பல புதிய பகுதிகளிலும் எழுந்துவருகிற துறைகளிலும், விரிவாக்கத்துக்கான, சக்திவாய்ந்த தலையீட்டுக்கான உள்ளாற்றலையும் உணர முடிந்தது. 2012ல் இந்த மகத்தான உள்ளாற்றலை யதார்த்தமாக்க நமது முயற்சிகளை மேம்படுத்த வேண்டும்.
இந்திய இடதுசாரி இயக்கம் ஒரு சவால்மிக்க கட்டத்தின் ஊடே சென்று கொண்டிருக்கிறது. இடதுசாரிகளின் அனைத்து பிரிவினருக்கும் யதார்த்தத்தை பரிசோதித்துக் கொள்வதற்கான நேரம் இது. மார்க்சிஸ்ட் கட்சியின் கொண்டாடப்பட்ட தேர்தல் பலம் மேற்குவங்கத்தில் பெரிய அடி வாங்கியது; அதனுடன் சேர்ந்து தலைமை தாங்குகிற இடதுசாரி நீரோட்டம் என்ற அதன் ஆகிருதியும் கணிசமான அளவுக்கு அரித்துப்போனது. மேற்குவங்கத்தில் பல ஆண்டு காலம் ஆட்சியில் இருந்ததால் மட்டும் இது நடக்கவில்லை. நடைமுறையில் நவதாராளவாத நிகழ்ச்சிநிரலை அமல்படுத்திக் கொண்டு, தத்துவத்தில் அதை எதிர்ப்பதாகச் சொல்லும் அதன் கட்சி வழியால் அது கடுமையான நெருக்கடிக்கு உள்ளானது.
மாவோயிஸ்டுகளும் மேற்குவங்கத்தில் ஒரு பெரிய பின்னடைவை சந்தித்துள்ளனர். அவர்களுடைய போர்த்தந்திரம் பற்றி அவர்கள் மறுபரிசீலனை செய்யவில்லை என்றால், அவர்கள் புதிய முன்னேற்றத்தை நிகழ்த்தவோ, ராணுவ பலத்தின் அடிப்படையில் மட்டும் தங்கள் அடித்தளத்தை தக்கவைத்துக் கொள்ளவோ முடியாது என்பது தெளிவாகத் தெரிகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திராவில் ஏற்பட்ட பேரழிவுமிக்க அனுபவத்துக்குப் பிறகு, மாவோயிஸ்டுகள் அதே போன்ற ஒரு சரிவை மேற்குவங்கத்திலும் சந்தித்துள்ளனர். ராணுவ வழிமுறைகள் மூலம் அரசியல் தலையீடு என்ற அவர்களுடைய தத்துவமும் நடைமுறையும் முழுமையாக அம்பலப்படுத்தப்பட்டுவிட்டது. ராணுவ பலம், வெகுமக்கள் வேலைகளுக்கோ, சுதந்திரமான அரசியல் முன்முயற்சிகளுக்கோ மாற்றாக முடியாது என்பது தெளிவாகத் தெரிகிறது.
பல்வேறு போராடுகிற இடதுசாரி சக்திகளை ஒரு பொதுமேடையில் ஒன்றிணைக்கும் நமது முன்முயற்சி சீராக முன்னேறுகிறது. மார்க்சிஸ்ட் கட்சியும் மாவோயிஸ்டுகளும் பெரிய சவால்களை எதிர்கொள்ளும்போது, ஊழலுக்கு எதிரான, பெருநிறுவனக் கொள்ளைக்கு எதிரான, மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கான, நடந்து கொண்டிருக்கிற நமது நாடு தழுவிய இயக்கத்தை தீவிரப்படுத்தும் அதேநேரம், நமது புரட்சிகர கம்யூனிஸ்ட் வழியின் சரித்தன்மையை அறுதியிட, கருத்தியல், அரசியல் விவாதத்தை கூர்மைப்படுத்த வேண்டும். 2012அய், தீவிரமான போராட்டங்கள், இன்னும் பெரிய அரசியல் முன்முயற்சிகள், போராடுகிற இடதுசாரி மற்றும் ஜனநாயக சக்திகளுடன் நெருக்கமான ஊடாடல் ஆகியவற்றின் ஆண்டாக நாம் மாற்ற வேண்டும்.
2012, கட்சியின் அடுத்த காங்கிரசின் தயாரிப்புக்கான ஆண்டாகவும் இருக்கும். 2013 துவக்கத்தில் 9ஆவது கட்சி காங்கிரசை நடத்த கட்சி மத்திய கமிட்டி முடிவு செய்துள்ளது. 9ஆவது காங்கிரசுக்கு கட்சியை அனைத்துவிதத்திலும் தயார்படுத்த வருகிற ஆண்டை பெருமளவில் பயன்படுத்திக் கொள்வோம். அமைப்பு விரிவாக்கம், உறுதிப்படுத்துதல் மற்றும் மொத்த கட்சியையும் கருத்தியல், அரசியல்ரீதியாக அணிதிரட்டுவது ஆகியவற்றுக்கு குறிப்பான அழுத்தத்துடன், இந்த விசயத்தின் சில முக்கிய அம்சங்கள் பற்றி மத்திய கமிட்டி ஏற்கனவே ஒரு வரைவு தந்துள்ளது. 9ஆவது காங்கிரசுக்கான தயாரிப்புக்களில், நமது நண்பர்கள் மற்றும் நலன்விரும்புபவர்களின் படைப்பாற்றல்மிக்க கருத்துக்களையும் கேட்டுப்பெறுவோம்; வரவேற்போம்.
இந்த டிசம்பர் 18, நமது அன்புக்குரிய தலைவர் தோழர் வினோத் மிஸ்ராவின் 13ஆவது நினைவுதினம். துவக்ககால தலைமறைவு நாட்களில் மிகச்சில பகுதிகளில் கட்சி குறுகியிருந்தது முதல், ஓர் அகில இந்திய இருத்தல் மற்றும் அனைத்தும் தழுவிய நடைமுறை கொண்ட ஒரு புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியாக அனைத்தும் தழுவிய வளர்ச்சி பெற்ற வரை, தோழர் வினோத் மிஸ்ரா கட்சியை வழிநடத்தியுள்ளார். கடுமையான வெகுமக்கள் வேலையை துடிப்பான அரசியல் கருத்துக்கள் மற்றும் முன்முயற்சிகளுடன் இணைப்பதில், குழுவாத, வறட்டுவாத கருத்துக்கள் மற்றும் நாடாளுமன்ற முடக்குவாதம் மற்றும் பிற அனைத்து சந்தர்ப்பவாத கருத்துக்கள் மற்றும் நடைமுறைகளுக்கு எதிரான நீடித்த போராட்டம் நடத்துவதில், தொலைதூரப் பகுதிகளில் அன்றாட வேர்க்கால் மட்ட வேலைகளுக்கு போர்த்தந்திர அழுத்தம் மற்றும் தேசந்தழுவிய பார்வை தருவதில், கட்சியை வழிநடத்தினார். மாலெ கட்சி மிகப்பெரிய கம்யூனிஸ்ட் கட்சியாக எழுவது பற்றி, புரட்சியின் இறுதி வெற்றி நோக்கி, கம்யூனிச இயக்கத்தை முன்னோக்கி வழிநடத்திச் செல்வது பற்றி கனவு கண்டார்.
இன்று 9ஆவது காங்கிரசுக்கான தயாரிப்புகளில் நாம் இறங்கும்போது, ‘மக்கள் எதிர்ப்புப் போராட்டங்கள் மூலம் இடதுசாரி புத்தெழுச்சிக்கான’ சவால்மிக்க சாத்தியப்பாடுகள் நமது கதவுகளைத் தட்டும்போது, தோழர் விஎம் போதனைகளில் இருந்து நாம் மீண்டும் கற்றுக்கொள்வோம். அவருடைய நிறைவேற்றப்படாத கடமைகளை, கனவுகளை யதார்த்தமாக்க நம்மை மறுஅர்ப்பணிப்பு செய்துகொள்வோம்.
மத்திய கமிட்டி,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) விடுதலை
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) விடுதலை