சாதிவெறி தாக்குதல்கள் மாலெ கட்சி ஆர்ப்பாட்டம்
ஆசைத்தம்பி
கந்தர்வகோட்டை ஒன்றியம் புனல்குளம் கிராமத்தில் தலித் இளைஞர்கள் புத்தாண்டு கொண்டாடியபோது தலித் தெருவிற்குள் புகுந்து இரவு நேரத்தில் சாதியை சொல்லி இழிவுபடுத்தி தாழ்த்தப்பட்டவனுக்கு புத்தாண்டு ஒரு கேடா என பேசி சாதி வெறியர்கள் கொலைவெறி தாக்குதல் தொடுத்தனர்.
டிசம்பர் 26, 2011 அன்று இரவு தலித் சமூகத்தை சேர்ந்த பெரியசாமி என்பவர் அழைத்தவுடன் வரவில்லை என்ற காரணத்தால் சொக்கம்பேட்டை (கந்தர்வகோட்டை ஒன்றியம்) தலித் தெருவிற்குள் புகுந்து வீடுகளை அடித்து சேதப்படுத்தி தலித் மக்களை தாக்கி, ஆதிக்க சாதியினர் சாதிவெறி தாக்குதல் நடத்தினர்.
இந்தத் தாக்குதல்கள் தொடர்பாக முறையாக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்காமல் ஆதிக்க சாதியினருக்கு ஆதரவாகவே காவல்துறையினர் செயல்பட்டனர். சொக்கம்பேட்டையில் மனு ரசீது கூட கொடுக்கவில்லை. புனல் குளத்தில் திட்டமிட்டு 10
தலித் இளைஞர்கள் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது.
காவல் துறையினரின் இந்த தலித் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து ஜனவரி 6 அன்று கந்தர்வகோட்டையில் மாலெ கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியது.
ஆர்ப்பாட்டத்தில் அஇஅதிமுக ஆட்சியின் தலித் விரோத போக்கையும் (பரமக்குடி, பள்ளச்சேரி, விழுப்புரம்) அஇஅதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் குமாரின் சொந்த ஊரான புனல்குளத்திலும், அஇஅதிமுக ஒன்றிய செயலாளர் ரெங்கராஜின் சொந்த ஊரான சொக்கம்பேட்டையிலும் இந்தத் தாக்குதல்கள் நடந்துள்ள பின்னணியில் இவர்களது உறவினர்களால் தலித் மக்கள் தாக்கப்பட்டதையும் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் கட்சி மாவட்ட குழு உறுப்பினர்கள் தோழர்கள் சோதிவேல், வீ.மூ.வளத்தான் மற்றும் மாவட்ட செயலாளர், தோழர் பழ.ஆசைத்தம்பி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.