உளுந்தூர்பேட்டை - சேலம் தேசிய நெடுஞ்சாலைத் திட்டத்தால் பாதிக்கப்பட்டோர் கூட்டமைப்பு கூட்டம்
14.12.2011 அன்று கள்ளக்குறிச்சியில் நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள்
கலந்து கொண்டனர். பல ஆயிரக்கணக்கான குடும்பங்களின் நிலம், வீட்டுமனை, வீடு மற்றும் கட்டிடம், கடைகள், தென்னை மரம் உள்ளிட்ட சொத்துக்கள் அபகரிக்கப்பட்டதை விவசாயிகள் கண்ணீரோடு, ஆவேசத்துடன்
எடுத்துக் கூறினார்கள். உளுந்தூர்பேட்டை விழுப்புரம் நெடுஞ்சாலை திட்டத்தில் பாதிக்கப்பட்டோரும் பங்கேற்றனர். அவிதொச அகில இந்திய துணைத்தலைவர் தோழர் பாலசுந்தரம், மாலெ கட்சி விழுப்புரம் மாவட்டச் செயலாளர்
தோழர் எம்.வெங்கடேசன் பேசினர். பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1. ஒரு சென்ட் நிலத்துக்கு குறைந்தபட்சம் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். நிலத்தின் சந்தை
மதிப்பு, நிலத்தின் மீதுள்ள சொத்துக்களின் சந்தை மதிப்பு, பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் மன
உளைச்சல்கள், இதர இழப்புகள் ஆகியவற்றை கணக்கிட்டு இழப்பீடு வழங்கிட வேண்டும். நெடுஞ்சாலை
மூலம் வருமானம் ஈட்டும் ரிலையன்ஸ் போன்ற முதலாளிகளின் வருமானத்திலும் நிலம் இழந்தவர்களின்
குடும்பத்துக்கு பங்கு அளிக்கிற வகையில் இழப்பீடு சட்ட விதிமுறைகள் திருத்தப்பட வேண்டும். முழு
இழப்பீட்டுக்கும் மூன்றாண்டுகள் வட்டி கணக்கிட்டு அதையும் சேர்த்து வழங்க வேண்டும்.
2. பொதுப் பணித்துறை, வருவாய்துறை, ரிலையன்ஸ் நிறுவன அதிகாரிகள் அடியாட்கள் ஆகியோர்
கூட்டு சேர்ந்து நில அபகரிப்பு மோசடி மற்றும் லஞ்ச, ஊழல், முறைகேடு உள்ளிட்ட குற்ற நடவடிக்கைகளில்
ஈடுபட்டுள்ளனர். முதலமைச்சர் இதில் தலையிட்டு கடந்த மூன்றாண்டுகளில் பணிபுரிந்த பொதுப்பணித்துறை
வருவாய்த் துறை, ரிலையன்ஸ் நிறுவன அதிகாரிகள் இரண்டு (விழுப்புரம், சேலம்) மாவட்ட ஆட்சியர்கள்
மீது விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.