COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Saturday, January 28, 2012

2-9

உலகம்

கிரீஸ் நெருக்கடி

நாகரிகம் மிதமிஞ்சிவிட்டது அதனால் அநாகரிகம் தலைவிரித்தாடுகிறது

மஞ்சுளா

வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்று வள்ளுவன் பெருமையையும், தமிழ்நாட்டின் பெருமையையும் சேர்த்துப் பாடினான் பாரதி. உலகினுக்கு மிகச்சிறந்த அறிஞர்களைத் தந்த புகழ் கொண்டது கிரேக்க நாடு. மேற்கத்திய அறிவு வரலாற்றுக்கு கிரேக்க மண் தளமாக இருந்தது. கேள்வி கேள் அறிவு பிறக்கும் என்று இளைஞர்களை சிந்திக்கத் தூண்டிய சாக்ரடீஸ், அவர் மாணவர் பிளேட்டோ, தேல்ஸ், பித்தகோரஸ், யூக்ளிட், இப்போகிரடிஸ், அரிஸ்டாட்டில் என கணிதம், வானவியல், மருத்துவம், தத்துவம் என இன்றைய நவீன வாழ்வின் அடிப்படைகளை 2500 ஆண்டுகளுக்கு முன்பே கண்டறிந்து சொன்ன பல அறிஞர்களை கிரேக்கம்தான் தந்தது. அட்லஸ், அண்டேயஸ் என பல நீதிக் கதைகளை கிரேக்கம் தந்தது.

இன்று இதே கிரேக்க நாடு உலகுக்குப் பொருளாதார நெருக்கடியைத் தரப்போகிறது என்று முதலாளித்துவ பொருளாதார அறிஞர்கள் சொல்கிறார்கள்.

2007 முதல் கிரீசில் நிலவுகிற பொருளாதார நெருக்கடி சாமான்ய கிரேக்க மக்களின் வாழ்வுரிமையை முழுவதுமாகப் பறித்துவிட்டது. 2011ன் இறுதி நாட்களில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு உணவளிக்கக் கூட வசதியில்லாமல் அவை பிழைத்திருந்தால் போதும் என்று குழந்தை பராமரிப்பு நிலையங்களில் விட்டுவிடுவது உலகச் செய்தியாகி இருக்கிறது.

டிமிட்ரிஸ் காஸ்பரினடாஸ் என்பவர் தனது 10 குழந்தைகளில் நான்கை அரசு பராமரிக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். எங்கள் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. நாங்கள் தரையில் விரிக்கப்பட்ட மெத்தையில் தான் தூங்குகிறோம். பல மாதங்களாக வாடகை தர முடியவில்லை. மாமிசம், மளிகை என கடன் வைத்திருக்கிறோம். ரொட்டி வாங்க 2 யூரோ கூட என்னிடம் இல்லை. நாங்கள் மனரீதியாக துன்பப்பட்டு இருக்கிறோம். நெருக்கடி எங்களை கொன்றுவிட்டது.

உள்ளாட்சி நிர்வாக அதிகாரி ஒருவர் தனது 4 குழந்தைகளை பராமரிக்க வேண்டும் என்று கேட்க வந்த அவரது மனைவி அலங்கோலமான நிலையில் இருந்தார். இந்தப்பகுதியில் மட்டும் சென்ற ஆண்டு கிறிஸ்மஸ் சமயத்தில் 400 குடும்பங்களுக்கு உணவுப்பொட்டலங்கள் அனுப்பப்பட்டன. இந்த ஆண்டு உணவு கேட்டு 1200 வேண்டுகோள்கள் வந்துள்ளன. அவர்கள் நேற்று வரை நல்ல நிலையில் இருந்தவர்கள். ஆனால் குழந்தைகளை எடுத்துக் கொள்ளச் சொல்வது புதிய விசயம். அவர்கள் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது அங்கு மூன்றாம் உலக நாடுகளில் இருக்கும் நிலை இருந்தது. எங்கள் கண்களை எங்களால் நம்ப முடியவில்லை என்றார்.

குழந்தைகள் மருத்துவமனைகளின் வாசல்களில் விடப்படுவது, பராமரிப்பு நிலையங்களில் விடப்படுவது நாளும் அதிகரித்து வருகிறது.

கோல்டுமேன் சாக்ஸ் நிதிநிறுவனத்தின் மோசடியான ஆலோசனைகளின் பேரில் கடந்த பத்து ஆண்டுகளாக கிரீஸ் பொருளாதாரம் சரிவில் இருப்பது மறைத்துக் காட்டப்பட்டது. 2001ல் அய்ரோப்பிய யூனியனில் கிரீஸ் இணைந்தபோது கோல்டுமேன் சாக்ஸ் உதவியுடன் பெருமளவு கடன் பெறப்பட்டது. இது கடன் என்று காட்டப்படாமல் நாணய வர்த்தகம் என்று காட்டப்பட்டது. கோல்டு மேன்சாக்ஸ், ஜேபி மார்கன் சேஸ் போன்ற நிதிநிறுவனங்களின் நிதி பத்திரங்களை கிரீஸ் அரசாங்கம் வாங்கியது. இப்போது கிரீஸ் நெருக்கடியில் தத்தளித்துக் கொண்டிருக்கும்போது, 2001ல் கடன் ஏற்பாடு செய்ததற்காக கிரீஸ் அரசாங்கம் கோல்மேன் சாக்ஸ் நிறுவனத்துக்கு 300 மில்லியன் டாலர் கட்டணமாக தர வேண்டியுள்ளது. இதுவும் இறுதியாக செலுத்தப்படுவது இல்லை. 2019 வரை கிரீஸ் அரசாங்கம் கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனத்துக்கு தொடர்ந்து ஒரு மிகப்பெரிய தொகையை செலுத்த வேண்டியுள்ளது. அனைத்துமாக சேர்ந்து இன்று கிரீஸ் மக்கள் தலையில் சுமத்தப்படுகிறது.

கிரீஸ் அரசாங்கம் கடன் நெருக்கடியைச் சமாளிக்க சர்வதேசிய நிதியத்திடம் கடன் வாங்கி, சர்வதேச நிதியத்தின் ஆணைகளை நிறைவேற்ற, அரசு மேற்கொண்ட சிக்கன நடவடிக்கைகள் மக்கள் வாழ்க்கையைப் படுகுழியில் தள்ளின. தொழிலாளர்களின் ஊதியத்தில் 30% குறைக்கப்பட்டது. அவர்கள் வருமானத்துக்கு செலுத்தப்படும் வரி உயர்த்தப்பட்டது. ஒப்பந்த, தற்காலிக தொழிலாளர்கள் வேலையிழந்தார்கள். ஆட்குறைப்பு செய்யப்பட்டது. பொதுமுதலீடு, மான்யங்கள் வெட்டப்பட்

டன. அரசு நிறுவனங்கள் தனியார்மயம் செய்யப்பட்டன. கூட்டுபேர உரிமை ரத்து செய்யப்படுவது மூலம் தங்கள் விருப்பம்போல் சம்பளத்தைக் குறைக்க தனியார் நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டன. 1000 யூரோக்களுக்கு மேல் ஓய்வூதியம் பெற்றவர்கள் ஓய்வூதியம் 20% குறைக்கப்பட்டது. அவர்கள் 55 வயதுக்கு குறைந்தவர்கள் என்றால் 40% வெட்டு. ஓய்வு பெறும் வயது உயர்த்தப்பட்டது. 40 ஆண்டுகள் பணிக்காலம் முடித்தவர்களுக்கு மட்டுமே முழு ஓய்வூதியப் பயன்கள். இந்த நடவடிக்கைகளுக்கு எதிரான மக்கள் போராட்டங்களை அரசு கண்டுகொள்ளாமல் தனது சிக்கன நடவடிக்கைகளைத் தொடர்ந்தது. சிக்கன நடவடிக்கைகள் நெருக்கடியைத் தீர்க்கவில்லை. இன்று கிரேக்கக் குழந்தைகள் குப்பைத் தொட்டிகளில் இருந்து எடுக்கப்படுகிறார்கள்.

அமெரிக்க பொருளாதார வல்லமைக்கு சவால்விடும் நோக்கோடு உருவான அய்ரோப்பிய யூனியனில் இருந்து, டாலருக்கு மாற்றாக உருவாக்கப்பட்ட, யூரோவை பொது நாணயமாக பயன்படுத்தும் யூரோ பிராந்தியத்தில் இருந்து, கிரீஸ் வெளியேறக் கூடிய நிலையும் அனுமானிக்கப்படுகிறது. அயர்லாந்து, ஸ்பெயின், போர்ச்சுகல், இத்தாலி என பிற அய்ரோப்பிய யூனியன் நாடுகளுக்கும் நெருக்கடி பரவுகிறது. பிரான்சின் கடன் பெறும் தகுதியையும் மூடி நிறுவனம் குறைத்து மதிப்பிட்டுள்ளது.

நிலவுகிற சூழலில் வளர்ச்சியடைந்த பொருளாதாரம் கொண்ட நாடுகளில் சிக்கன நடவடிக்கைகள் நெருக்கடியை இன்னும் மோசமானதாக்குமே தவிர, அதைத் தீர்க்க உதவாது என்று வர்த்தகம் மற்றும் வளர்ச்சி தொடர்பான அய்க்கிய நாடுகள் அமைப்பும் சொல்லிப் பார்க்கிறது.

கிரீஸ் மக்கள் மீது பொருளாதார போர் தொடுத்துள்ள ஆட்சியாளர்கள் வயிற்றை இறுக்கக் கட்டிக் கொள்வது ஒன்றுதான் வழி என்கிறார்கள். கட்டமைப்புச் சீர்திருத்தங்கள் நிலைமைகளைச் சரி செய்துவிடும் என்கிறார்கள். வேறு வார்த்தைகளில் சொல்வதானால் தக்கவை பிழைக்கும் என்ற காட்டு நீதிதான் நியதி என்கிறார்கள்.

உலகமயப் பொருளாதாரத்தின் நிதிசூதாட்டத்தின் மூலம் பெரும் பில்லியனரான ஜார்ஜ் சோரோஸ், பணத்தை இழந்து கொண்டிருப்பதை விட ஏதும் செய்யாமல் இருப்பது நல்லது என்கிறார். 1930களின் மாபெரும் பொருளாதார நெருக்கடியின் மற்றும் ஒரு வடிவம்தான் அய்ரோப்பா இன்று சந்திக்கும் நெருக்கடி என்றும், திடீரென ஞான உதயம் பெற்றவராக கல்வியை, மருத்துவத்தை அரசு பார்த்துக் கொள்வதுதான் நல்லது என்றும் சொல்கிறார். அன்று அமெரிக்கா நெருக்கடியில் இருந்து மீள, வேலை வாய்ப்பை அதிகப்படுத்தியதும், அது போருக்கு அமெரிக்க சாமானியர்களை அனுப்பியது என்றாலும், (பெண்கள் உழைப்புச் சந்தைக்கு நேரடியாக கொண்டு வரப்பட்டனர்) மக்கள் கையில் வாங்கும் சக்தி அதிகரித்ததும் முக்கிய பங்கு வகித்தன. இப்போதும் கிரீசின் உலகமய ஆட்சியாளர்கள் மக்கள் தலையில் பொருளாதார நெருக்கடியின் சுமையை ஏற்றுவதை நிறுத்தி விட்டு அவர்கள் வாங்கும் சக்தியை அதிகரிக்கும் வழிகளைக் கண்டறிவது தான் பிரச்சனைக்கு தீர்வு தரும்.

நெருக்கடிக்குக் காரணம் சொல்பவர்கள், பொருளாதாரச் சொற்கள் பல சொல்லி, நம்மை மிரட்டுகிறார்கள். மார்க்ஸ் 153 ஆண்டுகளுக்கு முன் இந்த நெருக்கடியின் அடிப்படை விதிகள் பற்றி கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் எளிமையாகச் சொல்லியுள்ளார்.

திரும்பத்திரும்ப எழுந்து ஒவ்வொரு முறையும் முன்னிலும் அபாயகரமான முறையில் இந்த நெருக்கடிகள் முதலாளித்துவ சமூகத்தின் நிலவுதலை ஆட்சேபக் கேள்விக்குரியதாக்குகின்றன. இந்த வாணிக நெருக்கடிகளின் போது ஒவ்வொரு தரமும் இருப்பிலுள்ள உற்பத்திப் பொருட்களில் மட்டுமின்றி, ஏற்கனவே உருவாக்கப்பட்ட உற்பத்தி சக்திகளிலும் ஒருபெரும்பகுதி அழிக்கப்படுகிறது. இந்த நெருக்கடிகளின்போது, இதற்கு முந்தைய எல்லா சகாப்தங்களிலும் அடிமுட்டாள்தனமாய் தோன்றியிருக்கும்படியான ஒரு கொள்ளை நோய் - அமித உற்பத்தி என்னும் கொள்ளை நோய் - மூண்டுவிடுகிறது. திடுமென சமுதாயம் பின்னோக்கி இழுக்கப்பட்டுசிறிது காலத்துக்கு காட்டுமிராண்டி நிலையில் விடப்பட காண்கிறோம். பெரும்பஞ்சம், சர்வநாச முழுநிறை போர் ஏற்பட்டு வாழ்க்கை தேவை பொருட்கள் எவையும் கிடைக்காதபடி செய்துவிட்டாற்போல் ஆகிறது. தொழிலும் வாணிபமும் அழித்தொழிக்கப்பட்டுவிட்டதாய் தோன்றுகிறது - ஏன் இப்படி? ஏனென்றால் நாகரிகம் மிதமிஞ்சிவிட்டது. வாழ்க்கை தேவைப் பொருட்கள் அளவு மீறிவிட்டன. தொழிலும் வாணிபமும் எல்லை கடந்து விட்டன. சமூகத்தின் வசமுள்ள உற்பத்தி சக்திகள் முதலாளித்துவ சொத்துடைமை உறவுகளின் வளர்ச்சிக்கு இனி உதவுவதாய் இல்லை. மாறாக, அவை இந்த உறவுகளுக்கு பொருந்தாதபடி அளவு மீறி வலிமை மிக்கவையாகிவிட்டன. இந்த உறவுகள் அவற்றின் வளர்ச்சிக்கு தடையாகிவிட்டன. பொருளுற்பத்தி சக்திகள் இந்தத் தடைகளை கடக்க முற்பட்டதும் அவை முதலாளித்துவ சமூகம் முழுமையிலும் குழப்பம் உருவாக்குகின்றன. முதலாளித்துவ சொத்துடைமை நிலவுவதற்கே அபாயத்தை ஏற்படுத்துகின்றன. அவை உற்பத்தி செய்த செல்வத்துக்கு தம்முள் இடம் போதாதபடி முதலாளித்துவ சமூக உறவுகள் குறுகலாய் இருக்கின்றன. இந்த நெருக்கடிகளை முதலாளித்துவ வர்க்கம் எப்படி சமாளிக்கிறது? ஒரு புறத்தில், வலுக்கட்டாயமாய் உற்பத்தி சக்திகளின் ஒரு பெரும்பகுதியை அழிப்பதன் மூலமும், மறுபுறத்தில் புதிய சந்தைகளை வென்று கைப்பற்றுவதன் மூலமும், பழைய சந்தைகளை இன்னும் அழுத்திப் பிழிவதன் மூலமும் - அதாவது, மேலும் விரிவான, மேலும் நாசகரமான நெருக்கடிகளுக்கு வழி கோலுவதன் மூலமும் நெருக்கடிகளை தடுப்பதற்கான வழிதுறைகளை குறைப்பதன் மூலமும்

கிரிசில் மட்டுமின்றி உலகெங்கும் இப்போது இதுதான் நடக்கிறது. கடன் நெருக்கடியில் சிக்கிய அமெரிக்க அரசாங்கம் சாமானிய மக்களின் மருத்துவ பாதுகாப்பில் கைவைத்தது. வேறுபல மக்கள் நல நடவடிக்கைகளை வெட்டிச் சுருக்குகிறது. கார் வைத்திருப்பவர்கள் வீடுகளை இழந்து அந்தக் கார்களையே வீடுகளாக்கிக் கொண்டார்கள். இன்று அமெரிக்காவில் மனிதர்கள் இல்லா வீடுகள் அதிகரித்து விட்டன. அந்த வீடுகள் பயன்படுத்தப்படாமல் வீணாகிப் போகும். மார்க்ஸ் சொல்வது போல் உற்பத்தி சக்திகள் அழியும். சிக்கன நடவடிக்கைகள் மார்க்ஸ் சொல்வதுபோல், நெருக்கடிகளைத் தடுப்பதற்கான வழிதுறைகளை குறைக்கும்.

பித்தகோரஸ் தேற்றங்கள் எப்படி சில திட்டவட்டமான விதிகளுக்கு உட்பட்டவையோ, முதலாளித்துவத்தின் வளர்ச்சி மற்றும் வீழ்ச்சி பற்றி மார்க்ஸ் சொல்லும் விசயங்களும் திட்டவட்டமான விஞ்ஞானபூர்வமான விதிகளே. மார்க்ஸ் சொல்வதுபோல் செய்ய கிரீசுக்கு நாட்களாகலாம். கிரேக்க அரசாங்கம் கிரேக்க மண்ணின் மாபெரும் அறிஞர் அரிஸ்டாட்டில் சொல்வதையாவது கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். சட்டங்கள் எழுதப்பட வேண்டும்தான்; ஆனால் அவை எப்போதும் மாற்றி எழுதப்படாமல் அப்படியே தொடர வேண்டியதில்லை என்கிறார் அரிஸ்டாட்டில். சிக்கன நடவடிக்கைகள் எடுப்பதாக சட்டம் இயற்றி விட்டதாலேயே அது அப்படியே தொடர வேண்டிய அவசியமில்லை. அது மாற்றி எழுதப்பட வேண்டும். அது மட்டுமே நெருக்கடிக்கு தீர்வு காண்பதாக இருக்கும்.

வளர்ச்சி விகிதம் அதிகரிப்பதாக நேற்று வரை பெருமை பேசிய பிரணாப் முகர்ஜி, நாடு பொருளாதார நெருக்கடியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்று ஒப்புக்கொள்கிறார். உலகமயக் கொள்கைகளால்தான் வளர்ச்சி, வாழ்வு என்று ஏற்றிப்போற்றும் இந்திய ஆட்சியாளர்கள், கிரீஸ் நிலைமைகளில் இருந்து சில பாடங்கள் கற்க வேண்டும்

Search