COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Sunday, January 1, 2012

7


ரஷ்ய வசந்தம்
மஞ்சுளா
1905, ஜனவரி 22. கேபன் பாதிரியார் தலைமையில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஜார்மன்னன் அரண்மனை நோக்கி பேரணியாய்ச் சென்றார்கள். கையில் ஆயுதங்கள் ஏதும் அவர்கள் ஏந்தியிருக்கவில்லை. அந்த சாமான்ய மக்களின் கோரிக்கைகள் சாமான்யமானவை. மேலான வாழ்நிலைமைகள் வேண்டும் எனக் கேட்டார்கள். அத்துடன் நாடாளுமன்றம் வேண்டும் என்றும் கேட்டார்கள். அதாவது ஜனநாயகம் வேண்டும் என்றார்கள். ஜார் மன்னனின் படையால் சுட்டுத் தள்ளப்பட்டார்கள்.
அடுத்து நிகழ்ந்தது வரலாறு. அன்று ஜார் மன்னனை வீழ்த்திய ரஷ்ய மக்கள் இன்று புடினை, மெத்வதேவை வீழ்த்திவிடமாட்டார்களா?
அவர்கள் இருவருக்குமே தங்கள் நாற்காலிகள் ஆட்டம் காணுவது புரிகிறது. அரபு வசந்தம் அமெரிக்காவைத் தொட்டு இப்போது ரஷ்யாவில் வீசிக் கொண்டிருக்கிறது. எகிப்திலும் அமெரிக்காவிலும் எழுப்பப்பட்ட அதே கோரிக்கைகளை ரஷ்ய மக்களும் எழுப்புகிறார்கள். சிலருக்கு வளமை, பலருக்கு வறுமை, வேலையின்மை, உரிமை மறுப்பு, பறிப்பு ஆகியவற்றுக்கு எதிராக அடுத்தடுத்து போராட்டங்களில் ரஷ்ய மக்கள் இறங்குகிறார்கள். மாஸ்கோவிலும் ரஷ்யாவின் பிற நகரங்களிலும்நாங்கள் விழித்துக் கொண்டோம் இது துவக்கம் மட்டுமே’ ‘எங்களுக்கு மாற்றம் வேண்டும்என அவர்கள் முழக்கங்கள் சொல்கின்றன.
கூடவே, நடத்தப்பட்ட முறைகேடான தேர்தல் ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் தேர்தல் சீர்திருத்தம் வேண்டும் என்றும் ரஷ்ய மக்கள் கேட்கிறார்கள்.
மியான்மரில் ஆங் சூ கியோ, அவரது கட்சியோ தேர்தலில் போட்டியிடுவதைத் தடுக்க மியான்மர் ராணுவ அரசாங்கம் தேர்தல் விதிகளில் மாற்றம் கொண்டு வந்தது போல், புடின் கொண்டு வந்த தேர்தல் விதி மாற்றங்களால் டிசம்பர் 4 அன்று நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பல கட்சிகள் போட்டியிட முடியாமல் போனது. உண்மையான எதிர்க்கட்சிகள் தடை செய்யப்பட்டன.
தேர்தல்களில் புடினின் யுனைட்டட் ரஷ்யா கட்சி வெற்றி பெற்றாலும் ஆகப் பெரும்பான்மை பெறுவதில் தோல்வி அடைந்திருக்கிறது. புடின் ஆட்சி அமைத்தாலும் 2007 தேர்தல்களில் பெற்றிருந்த 64% இடங்கள், இந்த முறை 50% என குறைந்துவிட்டதால் நாடாளுமன்றத்தில் எடுக்கும் எந்த முயற்சிக்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லாமல் போகும். சொன்னபடி கேட்கும் கூட்டணிக் கட்சிகள் இருந்தாலும் அவற்றை முன்னைவிட இன்னும் கூடுதலாகச் சார்ந்திருக்க வேண்டியிருக்கும். அவரை அடுத்து பிரதமராக வரவிருக்கும் மெத்வதேவ் பெரும்பான்மை இல்லாத நாடாளுமன்றத்தைச் சமாளிக்க பெரும்சிரமம் எடுக்க வேண்டியிருக்கும்.
கம்யூனிஸ்ட் கட்சி 20% வாக்குகளுடன் 92 இடங்களைப் பெற்று பிரதான எதிர்க் கட்சியாக மாறியிருக்கிறது. மய்யத்தின் இடதுசாரி கட்சியான ஜஸ்ட் ரஷ்யா கட்சி 64 இடங்கள் பெற்றுள்ளது. இது பெரும்பாலும் புடின் பக்கம் நின்றுவிடுகிற கட்சியே.
யுனைட்டட் ரஷ்யா கட்சி பெற்றுள்ள இந்த 50% இடங்கள் கூட தேர்தல் முறைகேடுகளால் பெறப்பட்டவையே என்று ரஷ்ய மக்கள் கருதுவதால்தான் தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டதில் இருந்து டிசம்பர் 24 வரை இரண்டு மிகப்பெரிய பேரணிகளை ரஷ்யா கண்டுவிட்டது. 2012 மார்ச்சில் நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் போட்டியிட்டு புடின் மீண்டும் அதிபராவது, மெத்வதேவ் பிரதமராவது என்று அவர்கள் இடையே ஏற்பட்டுள்ள உடன்பாடும் ரஷ்ய மக்கள் போராட்டங்களுக்கு காரணமாக அமைந்துள்ளதைபோதும், புடின் வெளியேறட்டும்என்ற அவர்கள் முழக்கம் சொல்கிறது.
டிசம்பர் 10 அன்று நடந்த பேரணி கடந்த இருபது ஆண்டுகளில் ரஷ்யாவில் நடந்த பேரணிகளில் மிகவும் பெரியது என்று சொல்லப்படுகிறது. இப்போது, 1 லட்சம் பேர் கலந்து கொண்டு டிசம்பர் 24 அன்று நடந்த பேரணியில் போராட்டக்காரர்கள் ஆங்காங்கே கைது நடவடிக்கைகளுக்கு ஆளாகியிருந்தாலும் அடுத்து உடனடியாக 10 லட்சம் பேர் கொண்ட பேரணி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
ரஷ்ய மக்கள் கட்டியெழுப்பிய பாட்டாளி வர்க்க ஆட்சியை பின்னோக்கித் திருப்புவதில் முக்கிய பங்காற்றிய கோர்ப்பசேவ் கூட, இரண்டு முறை அதிபராகவும் ஒரு முறை பிரதமராகவும் இருந்துவிட்ட புடின் இப்போது மக்கள் விருப்பங்களுக்கு மதிப்பு கொடுத்து பதவி விலக வேண்டும் என்கிறார்.
புடினும் பழைய முறையில் ஆள முடியாது என்பதைப் புரிந்து கொண்டு விட்டார். தேர்தல் முடிவுகள் நாட்டு மக்களின் மனநிலையை மிகச்சரியாக பிரதிபலிப்பதாக புடின் ஒப்புக்கொள்கிறார். கட்சிகள் பதிவுக்கான விதிமுறைகள் தளர்த்தப்படும் எனத் தேர்தல் சீர்திருத்தங்கள் சிலவற்றை, மக்கள் போராட்டங்களின் நிர்ப்பந்தத்தில் அறிவித்துள்ளபோதிலும், தேர்தல் முடிவுகளை ரத்து செய்ய முடியாது என்பதில் உறுதியாக உள்ளார்.
தேர்தலுக்குப் பிந்தைய ரஷ்ய நிலைமைகள் பற்றி கவனித்து வருவதாக ஹிலாரியும் மக்கள் போராட்டங்களை அனுமதிப்பதற்காக புடினை வாழ்த்துவதாக ஒபாமாவும் சொல்லியுள்ளார்கள். கூத்தாடிகள் உள்ளுக்குள் கொண்டாடுகிறார்கள்.
2010 ஜனவரியில் விடாலி நிகிμன் என்ற 17 வயது மாணவர் ரஷ்ய அரசாங்கம் அறிவித்த குறைந்த பட்ச உணவுச் செலவுக்கு எதிராக நூதனமான போராட்டம் ஒன்றில் இறங்கினார். மாதமொன்றுக்கு உணவுக்கு ஆகக்கூடிய குறைந்தபட்ச செலவு 2626 ரூபிள்கள் என்று ரஷ்ய அரசாங்கம் அறிவித்தது. அந்தத் தொகைக்குள் வாழ்ந்தால் என்ன ஆகும் என்பதைத் தான் காட்டப் போவதாக தனது வலைப்பூவில் அறிவித்து அதற்கேற்றாற்போல் உணவருந்தத் துவங்கினார். ஒவ்வொரு நாளும் அவர் என்ன சாப்பிடுகிறார் என்பதை வலைப்பூவில் தெரிவித்து வந்தார். அவருடைய உணவாக அவர் விரும்பிச் சாப்பிடும் உணவின் நிழற்படங்கள் மற்றும் விவரணைகளும் இருந்தன. இந்தப் போராட்டம் துவங்கிய சில நாட்களிலேயே 2 கிலோ எடை இழந்தார். அவர் போராட்டத்துக்கு மக்கள் மத்தியில் கிடைத்த வரவேற்புக்குப் பிறகு உள்ளூர் அதிகாரிகள் அதுபோன்ற ஓர் அளவீடு பொருளற்றது என்று ஒப்புக்கொண்டனர். தனது போராட்டம் பற்றிய விவரங்கள் அனைத்தையும் அரசாங்கத்துக்கு மனுவாக அனுப்பப் போவதாக அவர் தெரிவித்துள்ளார். இது ரஷ்யாவில் உள்ள ஏற்றத்தாழ்வான நிலைமைகள் பற்றிய ஓர் உதாரணம் மட்டுமே.
2000 - 2007ல் வசதி படைத்தவர்கள் வருமானம் 14 - 17 மடங்கு உயர்ந்தது. சிஅய்ஏ தரும் விவரங்கள்படி 1999ல் 40%ல் இருந்து 2009ல் 13.1% என ரஷ்யாவில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்பவர் எண்ணிக்கை சீராகக் குறைந்து வருகிறது. ஆனால், ரஷ்ய அரசாங்கத்தின் கணக்குப்படியே 2008 இறுதிக் காலாண்டில் 1.85 கோடி என இருந்த வறியவர் எண்ணிக்கை 2009 முதல் காலாண்டில் 2.45 கோடி என உயர்ந்துள்ளது. இது உண்மையில் இன்னும் கூடுதலாக இருக்கும் என்று ப்ராவ்தா பத்திரிகை சொல்கிறது. 2010 ÷ன் முதல் 2011 பிப்ரவரியில் மட்டும் உணவுப் பொருட்கள் விலை 17.5% அதிகரித்துள்ளது. இது உண்மை ஊதியத்தை மேலும் குறைத்துள்ளது.
தொழிலாளர் வர்க்க தொடர் போராட்டங்கள் பொது வேலை நிறுத்தங்களால் 2008 சர்வதேச நெருக்கடியில் சிக்காமல் இந்தியா தப்பித்ததுபோல், ஏற்கனவே இருந்த பாதுகாப்புக்களால் ரஷ்யாவும் தப்பியது.
திட்டமிட்ட பொருளாதாரத்தின் நல்விளைவுகளை ருசித்த ரஷ்ய மக்கள் சந்தைப் பொருளாதாரம் உருவாக்குகிற ஏற்றத்தாழ்வுகளின் முன், அந்த ஏற்றத்தாழ்வுகளை நீடிக்கச் செய்யும் பொருளாதார மற்றும் அரசியல் நடவடிக்கைகள் முன் அப்படியே அடிபணிந்துவிடத் தயாராக இல்லை என்பதையே டிசம்பர் மாத போராட்டங்கள் காட்டுகின்றன.
ஆதிபராசக்தி கடைக்கண் பார்த்ததால் காலன் அழிந்தான் என்று ரஷ்யப் புரட்சி பற்றி பாரதி பாடினான். ரஷ்ய மக்களுக்கு ஆதிபராசக்தி பற்றி தெரிய வாய்ப்பில்லை. ஆனால் ரஷ்யப் புரட்சி பற்றி தெரியும். போராட்ட மொழி தெரியும். ரஷ்யாவில் வீசுகிற வசந்தம் உலகமயக் காலனை எதிர்கொள்ளும்.

Search