அரசு வேலைவாய்ப்பு: கலைகிற கனவுகள்
ஜி.ரமேஷ்
‘பணிச்சுமை காரணமாகவும் மாவட்ட
ஆட்சியர் திட்டியதாலும் மனமுடைந்த
அம்பாசமுத்திரம் தாசில்தார் தற்கொலை’
‘சிறப்பாகப் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு விருது. ஜெயலலிதா அறிவிப்பு’
‘வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு
சொந்தக் கட்டிடங்கள் கட்ட முதல்வர்
உத்தரவு’
இந்த மூன்று செய்திகளுமே டிசம்பர் 25 அன்று நாளிதழ்களில் வெளிவந்த செய்திகள்.
இவை ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதது போல் தெரிந்தாலும் இந்த மூன்று
செய்திகளுக்கும் இடையே தொடர்பு உள்ளது.
அரசாங்க வேலை ஒவ்வொரு குடும்பத்தினருடைய லட்சியக் கனவு. அரசாங்க வேலை
கிடைத்துவிட்டால் ஆயுசுக்கும் நிம்மதியாக
வாழலாம் என்கிற எண்ணம். ஆனால், இந்த
எண்ணத்தில் மண்ணை அள்ளிப் போடும்
வேலையை மாறி மாறி செய்து வருகிறார்கள்
கருணாநிதியும் ஜெயலலிதாவும்.
சுமார் 70 லட்சம்பேர் வேலைவாய்ப்பு
அலுவலகங்களில் பதிவு செய்து விட்டு
வேலைக்காகக் காத்துக் கிடக்கிறார்கள். அரசாங்கப் பணிகளுக்கு ஆட்கள் எடுப்பது
நிறுத்தப்பட்டு ஆண்டுகள் பல ஆகிவிட்டன.
ஜெயலலிதாவின் முந்தைய ஆட்சியின்போதே தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆட்கள் பணியமர்த்தப்படுவது நிறுத்தப்பட்டு விட்டது. அதற்குப்பின்
வந்த திமுக ஆட்சியிலும் அது மாற்றப்படவில்லை. மாறாக, வேலையில்லா இளைஞர்களின் கோபமும் சீற்றமும் தங்கள் மேல் பாயாமல் இருக்கச் செய்ய மக்கள் நலப் பணியாளர்கள், சாலைப் பணியாளர்கள் போன்றவர்கள் தொகுப்பூதியத்தில் பணியமர்த்தப்பட்டார்கள். மக்கள் நலப் பணியாளர்கள் முதலில்
பணியமர்த்தப்பட்டபோது அவர்களுக்குச்
சம்பளம் வெறும் 250 ரூபாய்தான்.
முதுகலைப் பட்டம் பெற்ற இளைஞர்கள்
பலர் மண்வெட்டியையும் மண்சட்டியையும்
தூக்கிக் கொண்டு சாலைப் பணியாளர்கள்
நேர்முகத் தேர்வுக்குச் சென்ற கொடுமை திமுக
ஆட்சியில்தான் நடந்தது. அரசாங்க வேலை. பின்நாளில் பணிநிரந்தரம் செய்யப்பட்டு விடலாம் அல்லது அரசுத் துறையில் ஆட்கள்
சேர்க்கப்படும்போது தங்களுக்கு முன்னுரிமை
அளிக்கப்படலாம் என்ற எண்ணத்தில் படித்த
வர்கள் பலர் ஆள் பிடித்தும் லஞ்சம் கொடுத்தும் பணியில் சேர்ந்தார்கள்.
2001ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, திமுக ஆட்சியில் நியமிக்கப்பட்டவர்கள் என்பதால் மக்கள்நலப் பணியாளர்களை, சாலைப்பணியாளர்களை தூக்கி எறிந்தார். பலர் உயிர்
விட்டார்கள். 2006ல் திமுக ஆட்சியின் போது
மீண்டும் பணியமர்த்தப்பட்டார்கள். 2011ல்
அதிமுக ஆட்சி 13500 மக்கள் நலப்பணியாளர்களை மீண்டும் பணிநீக்கம் செய்தது.
அன்று போராடிய அரசு ஊழியர்களையும்
ஆசிரியர்களையும் அதிரடியாக டிஸ்மிஸ் செய்த
ஜெயலலிதா அவர்கள் இடத்தில் 4000 ரூபாய்
தொகுப்பூதியத்தில் பலரை பணிநிரந்தரம்
கேட்கக் கூடாது, ஊதிய உயர்வு கோரிக்கை
வைக்கக் கூடாது, சங்கம் அமைக்கக் கூடாது
என பல்வேறு நிபந்தனைகளில் கையொப்பம்
வாங்கிக் கொண்டு வேலைக்கு அமர்த்தினார். அடுத்து வந்த கருணாநிதியும் அதை அப்படியே தொடர்ந்தார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் குரூப் 1 மற்றும் குரூப் 2 பணிகளுக்கு மட்டும் குறைந்த
எண்ணிக்கையில் ஆட்கள் எடுக்கப்பட்டார்கள். போட்டிகளை உருவாக்கி கோடிக்கணக்கில் சம்பாதித்தார்கள் அமைச்சர்களும், அதிகாரிகளும். உதவிப் பல் மருத்துவர், மோட்டார்
வாகன ஆய்வாளர், குரூப் 1 தேர்வுகளில்
நடந்த ஊழல்கள் தொடர்பாக டிஎன்பிஎஸ்சி
தலைவர் மற்றும் உறுப்பினர்கள் வீடுகள், தலைமை அலுவலகம் என பல இடங்களில்
இன்று லஞ்ச ஒழிப்புத் துறையினர் பல கோடிகளைக் கைப்பற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் திமுக
வால் நியமிக்கப்பட்டவர்கள் என்பதாலேயே
ரெய்டு நடக்கிறது என்று முதலில் அறிக்கை
விட்ட கருணாநிதி, வெட்ட வெட்ட ஊழல்
பூதங்கள் கிளம்பியவுடன் அமைதியாகி விட்டார். ஜெயலலிதாவும் இந்த ஊழல்களைத்
தடுத்து நிறுத்த எந்தவொரு நடவடிக்கையும்
எடுப்பதாகத் தெரியவில்லை.
அரசாங்க அலுவலகங்களில் பல ஆயிரம்
பணியிடங்கள் நிரப்பப்படாமலேயே உள்ளன. ஓர் அலுவலகத்தில் அதிகாரிகள் முதல் அட்டெண்டர் வரை சுமார் 31 பேர் இருக்க
வேண்டிய இடத்தில் 12 பேர்தான் வேலை
செய்கிறார்கள். பல துறைகளில் 50 இடங்களுக்கு மேல் ஆள் இல்லாமல் காலியாக உள்ளன. ஓய்வு பெறுகிறவர்கள் இடத்தில் புதிதாக
யாரும் பணியமர்த்தப்படுவதில்லை. 5 நபர்கள்
செய்ய வேண்டிய வேலையை ஒருவரே செய்கிறார். விளைவு வேலையை முன்னுரிமை
கொடுத்து முடிக்க முன்பணம் (லஞ்சம்) நடமாடுகிறது. அல்லது பணிச் சுமையால் வேலைகள்
கிடப்பில் போடப்படுகின்றன. நேர்மையானவர்கள் பணிச்சுமை தாங்க முடியாமல் மன
அழுத்தத்திற்குள்ளாகி அம்பை தாசில்தார்
போல் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.
திமுகவும் அதிமுகவும் மாறி மாறி இலவசத்
திட்டங்களை அறிவிக்கிறார்கள். உழைக்கும்
மக்களின் போராட்டத்தின் காரணமாக வாரியங்கள் அமைக்கப்படுகின்றன. ஆனால் அத்திட்டங்களை நிறைவேற்றத் தேவையான
நிதியை ஒதுக்கவோ பணியாளர்களையோ
நியமிக்கவோ ஆட்சியாளர்கள் தயாராக
இல்லை. ஆனால், உயர்மட்ட அதிகாரிகளை
மட்டும் அதிக சம்பளம் கொடுத்து முறையாக
நியமித்துக் கொள்வார்கள்.
சிறந்த ஆளுகை, நிர்வாகத்தில் புது உத்திகள் புகுத்தி நடைமுறைப்படுத்தும் 3 பேருக்கு
ஆண்டுதோறும் ரூ.2 லட்சம் பரிசுத் தொகையும்
பதக்கமும் கொண்ட நல்ஆளுகை விருது தரப்போவதாக ஜெயலலிதா அறிவித்துள்ளார். எதற்காக? ஊழியர்களுக்குள்ளே புதைந்து
கிடக்கும் திறமைகளை வெளிக் கொண்டுவர, விருது வழங்கவும் அவற்றை ஆவணப்படுத்தவுமாக மொத்தம் 14 லட்ச ரூபாய் ஒவ்வொரு
ஆண்டும் செலவிடப் போகிறாராம்.
உண்மையில் இது ஊழியர்களை ஊக்குவிக்க அல்ல. குறைந்த பணியாளர்களை, இல்லாத நிதி ஆதாரங்களைக் கொண்டு
ஆட்சியாளர்களின் விருப்பத்திற்கேற்ப ஊழியர்களை அடக்கி ஒடுக்கி, அரசின் திட்டங்களை (அரைகுறையாகதான்) செயல்படுத்திடும்
அதிகாரிகளை ஊக்குவிக்கவே ஜெயலலிதா
இதை அறிவித்துள்ளார்.
நியாயவிலைக் கடை முதல் தலைமைச்
செயலகம் வரை எல்லா துறைகளிலும் தற்காலிக, அல்லது பகுதி நேர அல்லது ஒப்பந்த
அல்லது தொகுதிப்பூதிய முறைகளில்தான் பணியாளர்கள் அமர்த்தப்படுகிறார்கள். காலவரைமுறை வேலை என்பது இளநிலை
உதவியாளர்கள் போன்ற அடிமட்ட வேலைகளில் இப்போது இல்லை. பணிச் சுமையில்
இருக்கும் நிரந்தரப் பணியாளர்களிடம் இருந்தும் 5000 ரூபாய் சம்பளத்தில் அடுத்த நாள்
செலவிற்கு என்ன செய்வது என்று யோசித்துக்
கொண்டிருக்கும் தற்காலிக ஊழியர்களிடம்
இருந்தும் என்ன திறமை வெளிப்பட்டுவிடும்?
25 ஆண்டுகளாக சத்துணவுப் பணியாளர்கள் பணிநிரந்தரம் கேட்டுப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். டாஸ்மாக் தொழிலாளர்கள்
நிலையும் அதுதான். கழகங்களின் ஆட்சி
மாறும்போதெல்லாம் தன் அரசாங்க வேலையின் பணிநிரந்தரக் கனவு பலித்திடாதா என்று
ஏங்குவார்கள். ஆனால் அவர்களுக்கு அவர்களின் ஏக்கம் மட்டுமே நிரந்தரம். தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் அடிப்படை ஆதாரப்பாடங்கள் நடத்திடத் தேவையான 53,000 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுள்ள
2000த்திற்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமன ஆணைக்காகக் காத்துக்
கொண்டிருக்கிறார்கள். சமச்சீர் கல்வித்திட்டம்
அமல்படுத்தப்பட்ட பின்பு அரசாங்க மாநகராட்சி, நகராட்சிப் பள்ளிகளில் பெற்றோர்கள்
தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க அதிக ஆர்வம்
காட்டுவதாக செய்திகள் வருகின்றன. இந்த
நிலையில் அரசு, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 16,549 சிறப்பு ஆசிரியர்களை நியமனம் செய்ய முடிவு செய்துள்ளது. இந்த ஆசிரியர்கள் ஓவியம், தையல், கணினி, கட்டிட வேலை, உடற்கல்வி போன்ற பாடங்களை வாரத்திற்கு 3 நாட்கள் எடுப்பார்களாம். தினமும் 3 மணி நேர வேலையாம். இரண்டு, மூன்று பள்ளிகளில் கூட அவர்கள் இப்பாடங்களை நடத்துவார்களாம். அவர்களுக்கு மாதச்சம்பளம் 5000 ரூபாய் தொகுப்பூதியமாக வழங்கப்படுமாம். அரசாங்க வேலைதான்.... ஆனா
ஆயுசுக்கும் அல்லல்தான்.
கடந்த திமுக ஆட்சியில் கருணாநிதியின்
மகள் கனிமொழி தனியார் நிறுவனங்களை
அழைத்து வேலை வாய்ப்பு முகாம்களை
நடத்தினார் என்றால் இப்போது அதிமுக
ஆட்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர்களைக்
கொண்டே வேலை வாய்ப்பு முகாம்கள்
நடத்தி தனியார் நிறுவனங்களுக்கு ஆள்
பிடித்துக் கொடுக்கப்படுகிறது. சமீபத்தில் திருவண்ணாமலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு அதில் 31 நிறுவனங்கள் பங்கு பெற்றன. 1527 பேருக்கு பணிநியமன உத்தரவை
மாவட்ட ஆட்சியர் திரு அன்சுல் மிஸ்ரா
வழங்கியுள்ளார். மேலும் 337 பேர் தேர்வு
செய்யப்பட்டு அவர்களுக்கு கூடுதல் திறமைகள் வளர்த்துக் கொள்ள பயற்சி தரப்படும்
என அறிவித்துள்ளார். அத்துடன் படித்த இளைஞர்கள் கூடுதல் தகுதியை வளர்த்துக் கொள்ள
வேண்டும், அப்போதுதான் நிறுவனங்கள்
எதிர்பார்க்கும் தகுதிகளைப் பெற முடியும்
என கனிமொழியை வழிமொழிந்துள்ளார்.
ஆண்டுகள் பல ஆனாலும் வேலைகள்
வழங்காமல் பதிவை மட்டுமே புதுப்பித்துக்
கொண்டிருக்கிற 37 வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 32 அலுவலகங்களுக்கு சொந்தக்
கட்டிடம் இல்லையாம். அதனால் தலா ரூ.1.5 கோடியில் சொந்தக் கட்டிடங்கள் கட்டிட
ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். மேம்பாலங்கள், கட்டிடங்கள் கட்டி கழகங்களின் வழக்கப்படி தங்கள் கல்லாவை நிரப்புவது என்பது
ஒரு புறம் இருந்தாலும் அரசாங்க வேலையை
எதிர்பார்த்து காத்திருக்கும் இளைஞர்களுக்கு
பதில் சொல்லும் தன் பொறுப்பில் இருந்து
நழுவிக் கொண்டு வரும் அரசு தனியார் நிறுவனங்களுக்கு ஒரு முறையான வகையில்
குறைந்த கூலிக்கு ஆட்களை ஏற்பாடு செய்திட
தன் அடுத்த கட்ட நடவடிக்கையைத் துவங்கியுள்ளது. எல்லாவித உள்கட்டுமான வசதிகளுடன் இந்த அலுவலகங்கள் இனிமேல் தனியார்
நிறுவன ஏஜென்சி மய்யங்களாக மாற்றப்பட்டுவிடும். மட்டுமின்றி, எந்தவொரு பணியிலும்
சேர்ந்துவிட்ட ஒருவர் பெயர் காத்திருப்போர்
பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு விடலாம். அதன் மூலம் வேலையற்றோர் எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டலாம்
ஜெயலலிதா உலகமய, தனியார்மய, தாராளமய நிகழ்ச்சிநிரலை நிறைவேற்றும்
முயற்சியில் தற்போது மக்களை மயக்கும் சில
மாய்மால வேலைகளைச் செய்யப் பார்க்கிறார். சிலரை வேலையில் இருந்து தூக்கும்
அதே வேளையில், வேறு சிலருக்கு அதே
வகையில் வேலை வழங்கப் போவதாக
அறிவிக்கிறார். ஆளெடுப்பு தடை நீக்கப்பட்டு
விட்டதாகச் சொல்லிக் கொண்டு பகுதி நேர, தொகுப்பூதிய பணிகள் மட்டுமே வழங்கப்படுகின்றன. (சிலர் கால வரைமுறையில் பணியமர்த்தப்படுவதாகச் சொல்லப்படுகிறார்கள். அப்படி அமர்த்தப்படுபவர்கள் கூட அரசின் திட்டங்களை அமல்படுத்த வேண்டிய பொறியாளர்கள் (உய்ஞ்ண்ய்ங்ங்ழ்ள்), மேற்பார்வையாளர்கள்
(ஞஸ்ங்ழ்ள்ங்ஹழ்ள்) போன்றவர்கள். இவர்கள் இல்லையென்றால் திட்டங்கள் கிடப்பில் போய்விடும்.)
இவையெல்லாமே கழக அரசுகளின் கண்துடைப்பு நாடகங்கள். 2002ம் ஆண்டிற்குப்பிறகு பணியமர்த்தப்பட்ட அரசு ஊழியர்கள்
(காவல் துறையினர் உட்பட) எவருக்கும் ஓய்வூதியம் கிடையாது என்று கையொப்பம் வாங்கிக்
கொண்டுதான் பணியமர்த்தப்படுகிறார்கள். கேட்டால் சர் டங்ய்ள்ண்ர்ய் சர் பங்ய்ள்ண்ர்ய் அறிவுரை
வேறு. மொத்தத்தில் வேலையில்லா
பட்டாளம் அதிக எண்ணிக்கையில் இருக்க வேண்டும்
என்பதுதான் இவர்கள் குறிக்கோள்.
உலகம் முழுவதும் சிலி முதல் டுனிசியாவரை, வால் ஸ்ட்ரீட் முதல் மாஸ்கோ வரை
உழைப்பவர்களிடம் இருந்து உழைப்பைச்
சுரண்டிக் கொண்டு அவர்களுக்குரிய பயன்களைக் கொடுக்க மறுத்த அரசுகளுக்கு எதிராகத்தான் போராட்டங்கள் வெடித்துக் கிளம்பியுள்ளன. அதில் இருந்து பாடம் கற்பதற்குப்
பதிலாக நம் ஆட்சியாளர்களும் அதே பாதையில் செல்வார்களேயானால் அங்குள்ள ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்ட கதி இவர்களுக்கும்
ஏற்படும் காலம் வெகுதூரமில்லை.