புயலுக்குப் பின் புயல்
தானே புயல் தாக்கிய பகுதிகளில் நிவாரண நடவடிக்கைகள் அறிவிப்பு நிலையிலேயே நின்றுள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமோ உதவிகளோ இன்னும் முறையாக சென்று சேரவில்லை. குடிதண்ணீர், உணவு கூட முறையாக கிடைக்காமல் மக்கள் துன்பப்படுகின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய கணக்கெடுப்பு பணியே இன்னும் பல பகுதிகளில் முறையாக, முழுமையாக நடைபெறவில்லை. இந்த நிலைமைகளை கண்டித்தும் உடனடி நிவாரண நடவடிக்கைகள் எடுக்கக் கோரியும் மாலெ கட்சி ஆர்ப்பாட்டங்கள் நடத்தியது.
கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேர வேண்டிய நஷ்டஈட்டை முறையாக வழங்காததை கண்டித்து ஜனவரி 6 அன்று கடலூர் மாவட்டம் கோஆதனூரில் ஊராட்சி அலுவலகம் முன் மாலெ கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. கட்சி மாவட்டப் பொறுப்பாளர் தோழர் அம்மையப்பன் மற்றும் வெகுஜன அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்று பேசினார்கள்.
ஜனவரி 6 அன்று விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் பேரூராட்சி அலுவலகம் எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி மாவட்ட செயலாளர் தோழர் வெங்கடேசன் பங்கேற்றார். அதிகாரிகள் குழு போட்டு சேத மதிப்பீட்டை கணக்கிட்டு நிவாரணம் வழங்குவதாக தெரிவித்தபின் போராட்டம் முடிந்தது.
ஜனவரி 7 அன்று சேந்தநாடு சந்தையில் 3 மணி நேரம் நடந்த மறியல் போராட்டத்தில் பேருந்துகள் சிறை பிடிக்கப்பட்டன. அதன் பின்பு வந்த அதிகாரிகள் துணை வட்டாட்சியர் தலைமையில் குழு போட்டு முறையான கணக்கெடுப்பு நடத்திய பின் நிவாரணம் நட்டஈடு தருவதாக வாக்குறுதி அளித்ததன் பேரில் போராட்டம் முடிவுக்கு வந்தது.
ஜனவரி 9 அன்று திருநாவலூரில் நடந்த மறியலிலும் அதிகாரிகள் வாக்குறுதி அளித்தபின் போராட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு முறையாக நிவாரணமும் மறுவாழ்வும் கிடைக்கும் வரை போராட திட்டமிடப்பட்டுள்ளது.
தொகுப்பு: எஸ்.சேகர்