COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Friday, January 27, 2012

2-3

அம்பலம்

பாதிப்புக்கு ஆளான மக்களின் வாழ்வாதாரம் முழுவதுமாக மீட்டெடுக்கப்பட வேண்டும்!

விவசாயம் முழுவதுமாக புதுப்பிக்கப்பட வேண்டும்!

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாலெ கட்சிக் குழு பார்வையிட்டபின் 06.01.2012 அன்று விழுப்புரத்தில் பத்திரிகையாளர் கூட்டத்தில் மாலெ கட்சி மாநிலச் செயலாளர் தோழர் பாலசுந்தரம் வெளியிட்ட செய்தி குறிப்பு

தானே புயலால் பாதிப்புக்கு ஆளான மக்களின் வாழ்வாதாரத்தை முழுவதுமாக மீட்டெடுக்கவும் அழிந்து போயுள்ள விவசாயத்தை முழுவதுமாகப் புதுப்பிக்கவும் அரசாங்கம் உடனடி, நீண்டகால திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

30.12.2011 அன்று புதுச்சேரி, தமிழ்நாட்டின் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களை தானே புயல் மிகமோசமாக தாக்கி பேரழிவையும் பெருநாசத்தையும் ஏற்படுத்தியதை அடுத்து, 04.01.2012 அன்று மாலெ கட்சி மாநிலச் செயலாளர் தோழர் பாலசுந்தரம் தலைமையில் கட்சியின் புதுச்சேரி மாநிலச் செயலாளர் தோழர் சோ.பாலசுப்ரமணியன், விழுப்புரம் மாவட்டச் செயலாளர் தோழர் எம்.வெங்கடேசன் கடலூர் மாவட்டப் பொறுப்பாளர் தோழர் சி.அம்மையப்பன், தஞ்சைநாகை மாவட்டச் செயலாளர் தோழர் இளங்கோவன், விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் தோழர் டி.கே.எஸ். ஜனார்த்தனன், மற்றும் கலியமூர்த்தி, தனவேல், ராஜசேகர், கணேசன் ஆகியோர் 280 கி.மீ. பயணம் செய்து பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு மக்களை சந்தித்தனர்.

தானே புயலால் ஏற்பட்ட பேரிழப்புக்கும், பெரும்துயரத்துக்கும் அஇஅதிமுக அரசாங்கத்தின் செயலற்ற தன்மையே காரணம். ஆமை வேகத்தில் நடந்து வரும் துயர் துடைப்பு நடவடிக்கைகள், பெரும் துயரில் இருந்து மக்களை மீட்பதாக இல்லை. போர்க்கால அடிப்படையில் என்ற சொல்லுக்கு பொருந்துவதாகவும் இல்லை.

24.12.2011 முதலே புயல் பற்றிய எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டு வந்தது. புயலின் வேகம் மணிக்கு 150 கி.மீ. வரை இருக்குமென்று திரும்பத் திரும்ப அறிவிக்கப்பட்டது. ஏறத்தாழ ஆறு நாட்கள் அவகாசமிருந்தும் அரசாங்கம் எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலும் இறங்கவில்லை. மாவட்ட நிர்வாகங்களும் கடும் அலட்சியத்துடன் இருந்துள்ளன. இதுவே பெரும் இழப்புக்கும் துயரத்துக்கும் முதன்மையான காரணம்.

டிசம்பர் 30 அன்று அதிகாலை கோர தாண்டவத்துடன் புயல் கரையைக் கடந்தது. அன்று பிற்பகலில் ஆளும் கட்சியின் பொதுக் குழுக் கூட்டம், அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் புடைசூழ தடபுடலான விருந்துடன் நடந்துள்ளது. பொதுக்குழுவில் கலந்துகொண்ட முதலமைச்சரோ, அமைச்சர்களோ, கட்சிக்காரர்களோ தானே புயல் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களை சின்னாபின்னமாக்கியதைப் பற்றி எதுவும் பேசவில்லை. முதலமைச்சரின் பிறந்த நாளுக்கு வாழ்த்துத் தீர்மானம் நிறைவேற்றிய பொதுக்குழு புயலின் கொடுமையால் இறந்தவர்களுக்கு இரங்கல் தீர்மானம் கூட நிறைவேற்றத் தயாராக இல்லை.

புயல் பற்றிய செய்தி அறிந்ததும் பொதுக்குழுவை தள்ளிவைத்துவிட்டு அமைச்சர்களையும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களையும், கட்சி நிர்வாகிகளையும் புயல் பாதித்த பகுதிகளுக்குச் சென்று துயர் துடைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு முதலமைச்சர் உத்தரவிட்டிருக்க வேண்டும். மக்களுக்குப் பேரழிவை ஏற்படுத்திய தானே புயலை கண்டு கொள்ளாத முதலமைச்சர், சசிகலா புயலை சமாளிப்பதில் மும்முரமாக இருந்துள்ளார்.

இதில் இருந்தே அதிமுக அரசாங்கம் புயலைச் சமாளிப்பதற்கு, மக்களைக் காப்பதற்கு முன்னெச்சரிக்கை (மின்சாரத்தை துண்டித்ததை தவிர) நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை, அரசாங்க இயந்திரத்தை இறக்கிவிடவில்லை என்பது தெளிவாகிறது. பொதுக்குழுக் கூட்டத்தை முடித்த பிறகே அமைச்சர

வையைக் கூட்டியிருக்கிறார்.

புயல் ஏற்படுத்திய பாதிப்புகள் தெரிந்திருந்த போதும்கூட வெறும் ரூ.150 கோடி மட்டுமே ஒதுக்கியதும் நான்கு நாட்கள் கழித்து மேலும் ரூ.750 கோடி ஒதுக்கியதும் முதலமைச்சரின் செயலின்மைக்கு எடுத்துக்காட்டு.புயல் தாக்கி 5 நாட்களுக்குப் பிறகே முதலமைச்சர் கடலூருக்குச் சென்றுள்ளார் என்பது இதை மேலும் உறுதிப்படுத்துகிறது. 2004ல் பேரழிவு சுனாமி தாக்கியபோதும் இப்படித்தான் நடந்துகொண்டார்.

புயல் தாக்கி ஏழு நாட்களுக்குப் பிறகும் விழுப்புரம், கடலூர் கிராமங்கள் இருட்டில் மூழ்கிக் கிடக்கின்றன. இன்னும் குடிதண்ணீர், உணவு, தங்குவது, மருத்துவம், எதுவுமின்றி லட்சக்கணக்கான மக்கள் கடும் துன்பத்தில் உள்ளனர். மின்சாரம் முழுவதுமாக மீண்டும் கொண்டு வரப்படுமென்பதற்கு மாவட்ட நிர்வாகங்கள் எந்த உத்தரவாதத்தையும் தரத்தயாராக இல்லை

விவசாயம் பேரழிவு

கடலூர், விழுப்புரம், நாகை, திருவாரூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், தஞ்சை மாவட்டங்களில் 10 லட்சம் ஏக்கர் அளவுக்கு பயிர் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. ஆனால் அரசாங்கம் 5 லட்சம் ஏக்கர் மட்டும் என்று கூறுகிறது. சேதமடைந்துள்ள குடிசைகள், வீடுகள் உயிரிழந்துள்ள கால்நடைகள், சாய்ந்துள்ள மின் கம்பங்கள், சரிந்துள்ள மின் மாற்றிகள், வேரோடு விழுந்துள்ள மரங்கள் இவை அனைத்து விசயத்திலும் கணக்கெடுப்பு தவறானவை. திட்டமிட்டு குறைத்துக் காட்டப்பட்டிருக்கிறது. அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணங்களும் மிக குறைவானவை. சின்னக் குடிசையைக்கூட ரூ.2500க்கோ ரூ.5000க்கோ கட்ட முடியாது என்பது தெரிந்திருந்தும் அரசாங்கம் இவ்வாறு அறிவித்திருப்பது ஏமாற்று வேலையே.

நெல் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.10,000 வேண்டுமென விவசாயிகள் கேட்கும் நிலையில் ஹெக்டேருக்கு (2.5 ஏக்கர்) ரூ.10,000 என (ஏக்கருக்கு ரூ.4000 மட்டுமே) அறிவித்திருப்பது துயரமடைந்துள்ள விவசாயிகளை ஏமாற்றுவதாகும். ஆண்டுக்கு ஏக்கருக்கு ரூ.30,000 வரை வருமானம் தரும் முந்திரிப் பயிர்கள் முற்றிலுமாக அழிந்து போயுள்ளன. முந்திரி விவசாயத்தில் (விவசாய இழப்பு ரூ.300 கோடி) மீண்டும் வருமானம் கிடைக்க 10 - 15 ஆண்டுகளாகும். அப்படியிருக்க முந்திரி விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.3,600 என அறிவித்திருப்பது புயல் ஏற்படுத்திய கொடுமையைவிட பெரும் கொடுமையாகும்.

மூன்று லட்சம் தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள், மின் சேத மதிப்பே ரூ.1000 கோடி என மதிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் மொத்த சேதத்திற்கும் அரசாங்கம் ரூ.850 கோடி மட்டுமே ஒதுக்கியிருப்பது, பாதிப்பின் தீவிரத்தையும் மக்களின் பாதிப்பையும் அரசாங்கம் உணரவில்லை என்பதையே காட்டுகிறது.

கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் விவசாயம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குடிசை வீட்டில் வாழ்ந்த ஏழை மக்கள் அனைத்தையும் இழந்துள்ளனர். மூன்றரை லட்சம் வீடுகள் பாதிப்பு என்ற அரசாங்க அறிவிப்பும் தவறு. பல லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்தக் காலில் நிற்பதற்கே இன்னும் பல மாதங்களாகும். விவசாயிகள் பெரும் கடனாளியாவார்கள். விலைவாசி கடுமையாக உயரும். வேலை தேடி வெளியேறுவது படு மோசமாக அதிகரிக்கும். ஒட்டுமொத்தப் பொருளாதாரமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் விவசாயத் தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், சிறு, குறு, நடுத்தர விவசாயிகள், நகர்ப்பகுதிகளில் வாழும் அன்றாடக் கூலிகள் மிக மோசமாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. பல லட்சக்கணக்கான மரங்கள் சாய்ந்துள்ள நிலையில் வரும் கோடை காலம் அக்கினி சுவாலை வீசுவதாகவே இருக்கும். சுற்றுச் சூழல் மிக மோசமாகப் பாதிக்கப்படும்.

அதிக நெல் விவசாயம் நடந்து வரும் விழுப்புரம் மாவட்டத்தில் நெல் பெரும் சேதமடைந்துள்ளது. முந்திரி, சவுக்கு, கரும்பு, உளுந்து, தென்னை போன்ற பயிர்களும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. புயல் பாதித்த எட்டு ஒன்றியங்களில் இன்னும் மின்சாரம், குடிநீர் வழங்கப்படவில்லை. கிராமங்கள் இருளில் மூழ்கியுள்ளன. ஏழு நாட்களுக்குப் பிறகும் அரசாங்கம் அறிவித்த நிவாரணம் வழங்கப்படவில்லை. பல்லாயிரக்கணக்கான வீடுகள், குடிசைகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஊருக்கு ஒருசில பேர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகளும் ஆளும் கட்சிக்காரர்களும் கூறுகின்றனர். ஆளும் கட்சிக்காரர்களின் குறுக்கீடு மிக அதிகமாக இருக்கிறது.

அரசாங்கம் உடனடி மற்றும் நீண்டகால அடிப்படையில் பின்வரும் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்

* பாதிப்பின் முழு விவரங்களையும் கணக்கெடுத்து வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

* குடிசை வீடுகளை முழுமையாகவும் பகுதியாகவும் இழந்தவர்கள், வேறு வகையில் பாதிக்கப்பட்ட ஏழைக் குடும்பங்கள் அனைத்துக்கும் 4 மாதங்களுக்குக் குறையாமல் மாதம் 50 கிலோ அரிசி, தேவையான மண்ணெண்ணெய், பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இலவசமாக வழங்க வேண்டும்.

* கூரை வரி, வீட்டு வரிகளை ரத்து செய்ய வேண்டும். கிராமங்களில் 100 நாள் வேலைத் திட்டத்தை 200 நாட்களாகவும் கூலியை ரூ.300 ஆகவும் உயர்த்திச் செயல்படுத்த வேண்டும். வேறு புதிய வேலைவாய்ப்புத் திட்டங்களையும் உருவாக்கிட வேண்டும். நகர்ப்பகுதிகளிலும் புதிய வேலை வாய்ப்புத் திட்டங்களைச் செயல்படுத்திட வேண்டும்.

* பாதிக்கப்பட்ட குடும்பங்களின் குழந்தைகளின் கல்விச் செலவை அரசே ஏற்க வேண்டும். முழுமையாகவோ, பகுதியாகவோ பாதிக்கப்பட்ட குடிசை வீட்டில் இருந்த அனைத்து குடும்பங்களுக்கும் அரசு செலவில், வாழத்தகுதியான கான்கிரீட் வீடுகள் கட்டித்தர வேண்டும். வரும் 5 ஆண்டுகளுக்குள் கூரை வீடுகள் இல்லாத தமிழ்நாடு என்ற நிலையை உருவாக்கிட வேண்டும்.

* விவசாயிகள் பெரும் கடனாளியாவதையும் தற்கொலைக்கு தள்ளப்படுவதையும் தடுக்க முழுமையான இழப்பீட்டை (பயிர் செய்ய ஏக்கர் ஒன்றுக்கு ஆன செலவு, விளைச்சலின் மதிப்பு ஆகியவற்றை சேர்த்து) வழங்குவதோடு லட்சக்கணக்கான விவசாயிகள் விவசாயத்தை மீண்டும் தொடங்கிட விதை, உரம், பூச்சி மருந்து, விவசாயக் கருவிகள் உள்ளிட்ட முழுச் செலவையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும். நிலவரி உள்ளிட்ட அனைத்து வரிகளையும் தள்ளுபடி செய்ய வேண்டும். அனைத்து வகைக் கடன்களையும் ரத்து செய்ய வேண்டும். விவசாய பம்பு செட்டுகளுக்கான மின் இணைப்பு, கம்பங்கள் துண்டிக்கப்பட்ட இடங்களில் அரசு செலவில் கம்பங்கள் நட்டு விரைந்து மின் இணைப்பு வழங்கிட வேண்டும்.

* பல லட்சக்கணக்கான மரங்கள் சாய்ந்து சுற்றுச் சூழல் கடுமையாக பாதிக்கப்பட உள்ள நிலையில் பசுமை சூழலை உருவாக்க அரசு பெரும் திட்டம் ஒன்றை விரைந்து இந்த மாவட்டங்களில் செயல்படுத்த வேண்டும்.

* புயல் பாதிப்பு பற்றி அறிந்த பிறகும் கூட மன்மோகன் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆட்சியில் பங்கு பெற்றுள்ள காங்கிரஸ், திமுகவும் இதுபற்றி வாய் திறக்கவில்லை. இது கடும் கண்டனத்திற்குரியது. 2004 சுனாமி பேரழிவுக்குப் பிறகு மத்திய அரசு உருவாக்கியுள்ள பேரிடர் மேலாண்மை விதிமுறைகள் துயர்துடைப்புக்கு ஏற்றதாக இல்லை. மேலும் இயற்கைச் சீற்றங்களை அறிவியல்ரீதியாக தடுக்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளும் அமைப்பை உருவாக்கவும் தவறிவிட்டது. பேரிடர் மேலாண்மை விதிமுறைகளை முற்றிலுமாக மாற்றி அமைக்க வேண்டும். முதல் சுனாமியால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் இரண்டாவது சுனாமியாலும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. மத்திய, மாநில அரசுகள் சிறப்பு பெருந்திட்டத்தை உருவாக்கி இவ்விரு மாவட்டங்களின் பொருளாதார சமூக வளர்ச்சிக்கு விரைந்து செயலாற்ற வேண்டும். இல்லாவிட்டால் பெரும் வேலைஇல்லா திண்டாட்டம், பட்டினிச் சாவு, தற்கொலைகளைச் சந்திக்கும் அவல நிலை உருவாகும்.

Search