COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Friday, January 27, 2012

2-8

கேள்வி - பதில்

மின்வெட்டு - மின் நிலையங்கள் - அணுமின்சாரம் - மர்ம முடிச்சுக்கள்

.சந்திரமோகன்

கேள்வி: தமிழகத்தில் மின் வெட்டு நீங்க, ஆளும் கூட்டங்கள் என்ன பரிந்துரைகளை முன் வைக்கின்றனர்?

பதில்: மாணவர் படிக்க, தொழில்கள் நடக்க, விவசாயிகள் விவசாயம் செய்ய, மக்கள் வாழ, மின்சாரம் வேண்டும். போதுமான மின்சாரம் கிடைக்க, கூடங்குளம் அணுமின்நிலையம் வேண்டும்.

கேள்வி: இந்தக் கருத்து சரிதானா?

பதில்: நிச்சயமாகத் தவறு. நாட்டின் மொத்த மின் உற்பத்தியில், அனல் மின்சாரம் 60 சதம், புனல(நீர்) மின்சாரம் 10 சதம், அணுமின்சாரம் 2 சதம், பங்கு வகிக்கின்றன. மீதமுள்ளது மரபுசாரா காற்று மற்றும் சூரியசக்தியின் மூலம் கிடைக்கிறது. தலைகீழாய் நின்றாலும், இன்னமும் 20 ஆண்டுகள் போனாலும், அணுமின்சாரம் 5 சதம் தாண்டாது. அதுவும் கூடுதல் செலவில்தான் கிடைக்கும்.

கேள்வி: பிறகு ஏன் அணுமின்சாரம் பற்றி இத்தனை ஆர்ப்பாட்டம்?

பதில்: 1. இந்திய முதலாளித்துவம் சார்ந்திருக்கும், அந்நிய முதலீடு கொண்டுவரும் அமெரிக்கா மற்றும் இதர ஏகாதிபத்திய நாடுகள், தமது காலாவதியான அணு உலைகளை - நிலையங்களை, நம் தலையில் கட்ட விரும்புகின்றனர். அவர்களுக்குச் சேவை செய்ய, மன்மோகன் துடியாய்த் துடிக்கிறார்.

2.இந்தியாவின் வல்லரசுக் கனவுக்காக, அணுக் கழிவில் இருந்து அணுகுண்டுகள் தயாரிக்க வேண்டும்.

கேள்வி: அணு மின்சாரம் பற்றி சொல்லி விட்டீர்கள் மின் வெட்டு பற்றிப் பேசுவோம். மின் வெட்டுக் காலங்களில் பயனடைந்தவர்கள் இருக்கிறார்களா?

பதில்: மின் வெட்டால், தமிழகம் முழுவதும் இன்றுவரை ஏறத்தாழ அனைத்துப் பகுதி மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். மின் வெட்டில்லாத நாளில்லை. இடமில்லை. உடனடி எதிர்காலத்தில் மின்வெட்டில் குறைவு ஏற்படுவதாகவும் தெரியவில்லை. ஆனால், இந்த மின்வெட்டுக் காலத்தில் பன்னாட்டு இந்நாட்டு முதலாளிகள் பயன்பெற்றுள்ளார்கள். தமிழக அரசு தனியார் மின் நிலையங்களிலிருந்து ஒரு யூனிட் ரூ.15 க்கு வாங்கி முதலாளிகளுக்கு ஒரு யூனிட் ரூ.4.50 என விற்கிறார்கள். 2010-2011ல் இவ்வாறு 20,623 மில்லியன் யூனிட்கள் விற்கப்பட்டன. செலவு ரூ.18,650 கோடி. வரவு ரூ.9,280 கோடி. ஆக மின்வாரியத்திற்கு நட்டம் ரூ.9,370 கோடி. இதுபோன்ற நட்டங்களைத் தான், மின் கட்டண உயர்வு என ஜெயலலிதா தமிழக மக்கள் தலையில் கட்டப் பார்க்கிறார்.

கேள்வி: மின்சாரத் தட்டுப்பாட்டை போக்க முடியாதா?

பதில்: அரசுகள் சொல்லும் விவரங்கள்படியே, மின் தட்டுப்பாட்டைப் போக்க முடியும்.

கேள்வி: எப்படி?

பதில்: தினசரி பற்றாக்குறை 3000 முதல் 3500 மெகாவாட் மின்சாரம்.

. மத்தியத் தொகுப்பிலிருந்து (நெய்வேலி உட்பட) தமிழகத்திற்கு கிடைக்க வேண்டியது 2825 மெகாவாட். கிடைப்பதோ 1500 மெகாவாட். துண்டுவிழுவது 1325 மெகாவாட்.

. நாகப்பட்டினம் நரிமணம் எரி வாயுமின்நிலையம் 10 மெகாவாட், ராமநாதபுரம் வழுத்தூர் எரிவாயு மின்நிலையம் 92 மெகாவாட், தஞ்சாவூர் குத்தாலம் எரிவாயு மின்நிலையம் 92 மெகாவாட், குந்தா நீர் மின்திட்டம் 175 மெகாவாட் ஆகியவை முடங்கியுள்ளன.

. பேசின் பிரிட்ஜில் கூடுதலாய் 120 மெகாவாட் கிடைக்க வாய்ப்புண்டு. அரைகுறையாய் நிறுத்தப்பட்டுள்ள விரிவாக்கத் திட்டங்கள் அமலானால், வடசென்னை 1200 மேட்டூர் 600 எண்ணூர் 500 என 2300 மெகாவாட் மின்சாரம் கூடுதலாய்க் கிடைக்க வாய்ப்புண்டு. நெய்வேலி 1, 2 விரிவாக்கத் திட்டங்கள் முழுமையடைந்தால், மேலும் 500 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும்.

. காற்றாலை மின்சாரம் மூலமே, அவற்றிற்குள்ள முழு உற்பத்தித் திறன் பயன்படுத்தப்படும்போது, 2000, 3000 மெகாவாட் வரை கூடுதல் மின்சாரம் கிடைக்கும்.

.காஞ்சியில் (செய்யூர்) மத்திய அரசு நிறுவ உள்ள கோஸ்டல் தமிழ்நாடு பவர் லிமிடெட் (அனல் மின்சாரம்) மூலம் 4000 மெகாவாட் கிடைக்க வாய்ப்புண்டு.

கேள்வி: மின்வெட்டு நீங்குவது மட்டுமல்லாமல் மின்சாரம் உபரியாக கிடைக்கவும் வாய்ப்புண்டு என்கிறீர்களா?

பதில்: ஆமாம். தமிழ்நாடு தன்னிடம் உபரியாகக் கிடைக்கும் சில ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை மற்ற மாநிலங்களுக்குக் கொடுக்க முடியும்.

கேள்வி: அப்படியானால், மேலே குறிப்பிட்டுள்ளதைச் செய்யாமல், வேறு ஏதாவது செய்கிறார்களா?

பதில்: சரியான கேள்வி. நாடு முழுவதுமே மின் பற்றாக்குறை 20000 மெகாவாட் தான். மத்திய அரசின் சுற்றுச் சூழல் வனத்துறை அமைச்சகம் 1,92,913 மெகாவாட் திட்டங்களுக்கு பச்சைக் கொடி காட்டியுள்ளது. அனல் மின்சார உற்பத்தியில் தற்போது மத்திய மாநில அரசுகளின் பங்கு 82 சதம். புதிய திட்டங்களின் மூலம் தனியார் துறைப் பங்கு 67 சதம் ஆகும். ரிலையன்ஸ், அதோணி, வெல்ஸ்பன், எஸ்ஸார் இந்தியா, புல்ஸ் டாட்டா பவர் மற்றும் வேதாந்தா போன்ற பெரு நிறுவனங்கள் 1,60,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய அனுமதி பெற்றுள்ளன. தமிழக கடலோர மாவட்டங்களில் 23 மின் நிலையங்கள் எனவும் நாகை மாவட்டத்தில் மட்டும் 12 மின் நிலையங்கள் எனவும் அமைந்துள்ளன. மேட்டூர் (கெம்பிளாஸ்ட்சன்மார்வேதாந்தாமால்கோ) முதல் பூம்புகார் வரை உள்ளன. தலச்சங்காடில் என் எஸ் எல் பவர், சீர்காழியில் சிந்தியா பவர், நெய்தவாசலில் எம்பி பவர், தரங்கம்பாடியில் செட்டிநாடு பவர், பிள்ளைபெருமாநல்லூரில் பிபிஎன் பவர், கீழ்வேளூரில் டிரெய்டம் பவர், மருதம் பள்ளத்தில் டிஇஎல் பவர், கீழ்ப்பிடாகையில் நாகை எனர்ஜி, திருக்கடையூரில் டிபிஎன் பவர் என்ற நிறுவனங்கள் வந்துள்ளன. தூத்துக்குடி தர்மபுரி ராமநாதபுரம் கடலூர் மாவட்டங்களிலும் இவை நுழைந்துள்ளன.

கேள்வி: இவர்களுக்கு என்ன ஆதாயம்?

பதில்: இயற்கை சக்திகளை பயன்படுத்திக் கொள்ளும் தொழில்துறை முதலாளிகள் எங்கெல்லாம் அவற்றை தமது ஏகபோகமாக்கிக் கொள்வதன் மூலம் உபரி லாபம் அடைய முடிகிறதோ- அவை அருவிகளானாலும் சரி, வளமான சுரங்கங்களானாலும் சரி, மீன்வளம் கொண்ட நீர் நிலைகளானாலும் சரி, சாதமான இடவாகு உடைய கட்டிட மனைகளானாலும் சரி, அங்கெல்லாம் இந்த புவிக் கோளில் ஒரு பகுதி மீது தமக்குரிய உடைமை உரிமையின் பயனாய், இந்த இயற்கைப் பொருட்களின் உடைமையாளராய் அமைகிறார். - மார்க்ஸ்

மார்க்ஸ் சொன்னதுதான் இன்று இந்தியா முழுவதும் நடக்கிறது. மின் நிலையங்கள் துவங்கினாலும் துவங்காவிட்டாலும், இயங்கினாலும் இயங்காவிட்டாலும், இந்த முதலாளிகளின் கைகளுக்கு போன நிலங்களோ சலுகைகளோ, மக்களுக்கோ அரசுக்கோ திரும்பக் கிடைக்காது. மின்சாரம் உற்பத்தி செய்தால் ஏகபோக விலை, ஏகபோக லாபம். உற்பத்தி ஆகாவிட்டாலும், விழுங்கிய நிலங்களை சலுகைகளை, ஏப்பம் விடலாம். விளை நிலங்கள் பறிக்கப்படுவதால் விவசாய நெருக்கடி தீவிரமடைகிறது. சிறுகுறு ஏழை நடுத்தர விவசாயிகள் விவசாயத்தை விட்டு வெளியேறுவார்கள். ஒரு பெரிய வேலையில்லா சேமப்பட்டாளம் உருவாகும். எப்படியும் குறைந்த கூலிக்கு ஏராளமான ஆட்கள் கிடைப்பார்கள். கூலி மட்டம் அழுத்தப்பட்டு, லாப விகிதம் உயரும். நிலக்கரி விசயத்திலும் இதே கதைதான் நடக்கிறது.

கேள்வி: எல்லாம் சரி, நாம் என்னதான் செய்யலாம்?

பதில்: எரிசக்தி இயற்கை வளங்களை விழுங்கும் பெருமுதலாளித்துவப் பேராசைக்கு, தீனி போடும் அரசுகளின் கொள்கைகளை எதிர்த்து, போராட வேண்டும். அணு மின்சாரம் வேண்டாம், அனல் புனல் காற்று சூரிய சக்தி மின்சாரத்தை அரசே போதுமான அளவு உற்பத்தி செய்ய வேண்டும் என, போராட வேண்டும்.

Search