COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Friday, January 27, 2012

2-7

விமர்சனம்

மனித உடலுறுப்புக்களுக்கான சந்தை

அமல் ஜோசப்

ஸ்காட் கார்னே வழக்கத்திற்கு மாறான ஒரு வியாபாரம் பற்றி - மனித உடல் உறுப்புகள் வியாபாரம் பற்றி எழுதியுள்ளார். ஓரே ஒரு செல் கொண்ட மனித முட்டையில் ஆரம்பித்து முழு வளர்ச்சியடைந்த குழந்தை வரை எல்லாமும் உலக சிவப்புச் சந்தையில் விற்கப்படுகிறது. அதில் ஒன்றைப் பற்றி கார்னே மிக அற்புதமாக விவரித்துள்ளார். வழக்கமான வணிகச் சட்டங்கள் மனித உறுப்புகளுக்கும் பொருந்தும். இதில் விதிவிலக்கு என்னவென்றால், இங்கு விற்பவர் எப்போதும் ஏழையாகவும் வாங்குபவர் எப்போதும் பணம் படைத்தவராகவும் இருக்கிறார்கள். இருவருமே வேறு வேறு காரணங்களுக்காக விரும்பியே இதில் ஈடுபடுகிறார்கள். அதுமட்டுமல்லாமல், இடைத்தரகர் வேறு ஒரு பெரும் தொகையை வெட்டிக் கொள்கிறார். அதிகாரிகளும் சட்டத்தை அமல்படுத்துவர்களும் கூட தங்கள் பங்கிற்கு அள்ளிக் கொண்டு போகிறார்கள்.

கார்னே சரியாகவே சொல்கிறார்

உடல் உறுப்பு வியாபாரம் மேல் நோக்கியே போகிறது. ஒருபோதும் கீழ் நோக்கி வருவதில்லை... தங்கு தடையில்லாத சுதந்திரச் சந்தைகள் இரத்தக் காட்டேரிகள் போல் செயல்பட்டு தானம் கொடுக்கும் ஏழைகளின் உடல் நலத்தையும், வலிமையையும் உறிஞ்சி தங்கள் வளத்தைப் பெருக்கிக் கொள்கின்றன...(பக்கம்.6)

இந்தியா, சட்டவிரோத உடல் உறுப்புக்கள் மற்றும் திசுக்கள் வியாபாரத்தில் முன்னணி மய்யங்களில் ஒன்றாக இருந்தது, இருகிறது என்பதில் யாருக்கும் எந்த அய்யமும் கிடையாது. நன்கு வளர்ச்சியடைந்த மூன்றாம்நிலை சிகிச்சைக்கான மருத்துவ உள்கட்டமைப்பும் பணம் படைத்த, வளரும் நடுத்தர, மேட்டுக்குடி வர்க்கமும் சேர்ந்து இதற்கு நல்ல தீனி போடுகின்றன. சுழற்றியடிக்கும் வறுமையினால் ஏழை மக்களுக்கு எதை வேண்டுமானாலும் விற்றுப் பிழைத்திட வேண்டும் என்ற நிலையும், ஓட்டை சட்டங்களும், சிக்கலான சட்ட நடைமுறைகளும், இந்த உடல் உறுப்பு வியாபாரத்தை மேலும் சாத்தியமாக்குகின்றன.

கார்னே இந்த வியாபாரத்தின் முக்கியத்துவத்தை, தன்னுடைய மாணவர்களில் ஒருவர் வாரணாசியில் இறந்த பின்னர் அவரது உடல் அமெரிக்காவின் லூசியானாவிற்குக் கொண்டு செல்ல வேண்டியிருந்தபோதுதான் உணர்ந்தார். அப்பொழுதான் மரணத்துடன் சம்பந்தப்பட்ட ஒட்டுமொத்த எந்திரங்கள், காவல் துறையினர், வேதியியல் பகுப்பாய்வு நிபுணர்கள், பிணவறை ஆளுநர்கள், விமானப் போக்குவரத்து போன்ற வற்றைப் பற்றி முழுமையாக அறிந்து கொண்டார். அதுதான் மனித உடல் உறுப்புகளின் சர்வதேச சந்தை பற்றி முதன்முதலில் தான் அறிந்து கொள்வதற்கான தொடக்கம் என அவர் சொல்கிறார். அதுவே அவரை இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் சைப்ரஸ், அமெரிக்கா போன்ற இடங்களுக்கும் சென்று திசுக்கள் வியாபாரம் பற்றி ஆவணப்படுத்தத் தூண்டியது.

கல்லறையைத் தோண்டி எடுப்பவர்கள்

1985 வரை இந்திய அரசாங்கம் உடல் உறுப்புகள் ஏற்றுமதியைத் தடை செய்திருந்த சமயத்தில் கல்லறையைத் தோண்டி எடுப்பது மகத்தான தொழில். அமெரிக்கப் பள்ளிகளின் ஒவ்வொரு வகுப்பறைகளுக்கான எலும்புக் கூடுகளும் கட்டாயம் இந்தியாவில் இருந்து மட்டுமே சென்று கொண்டிருந்தன. (பக்கம். ஷ்ண்ண்). ஒரு வருடத்தில் மட்டும் 60,000 மண்டை ஓடுகள் மற்றும் எலும்புக் கூடுகளை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது என சிகாகோ டிரிப்யூன் என்ற பத்திரிகை 1985ல் குறிப்பிட்டுள்ளது. அதாவது 60,000 கல்லறைகள் கொள்ளையடிக்கப்பட்டன என்பது அதற்குப் பொருள். அதிகபட்சமாக கொல்கத்தாவின் எலும்புத் தொழிற்சாலைகள் ஒரு வருடத்தில் 1 மில்லியன் டாலர் பார்த்தது என லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் குறிபிட்டுள்ளது (பக்கம் 50). இவை எல்லாம் அந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ஆளுகின்ற மேற்கு வங்கத்தில்தான். வேலை மிகச் சுலபம். கல்லறைகளைத் தோண்டி பிணத்தை எடுத்து திசுக்களைத் தனியாகப் பிரித்து விட்டு எலும்புகளை வியாபாரிகளிடம் கொடுத்து விடுவார்கள். அவர்கள் அவற்றை ஒன்றிணைத்து பின்னர் கப்பல் மூலம் உலகம் முழுக்க அனுப்பிவிடுவார்கள் (பக்கம் 41).

முழு விவரங்களையும் கேட்டால் குமட்டல் எடுக்கும்

முதலில் பிணங்களை வலைகளில் கட்டி ஆற்றுக்குள் ஒரு வார காலத்திற்கு மேல் மூழ்கடித்துவைத்திருப்பார்கள். அங்கே பாக்டீரியா மற்றும் மீன் களினால் சதைப் பகுதிகள் கரைக்கப்பட்டுவிடும். பின்னர் இருக்கும் சதைகளையும் சுரண்டிவிட்டு எலும் புகளை பெரிய கொதிகலன்களில் போட்டு கொதிக்கவைத்து காஸ்டிக் சோடாவைப் போட்டு மிச்சம் மீதி இருக்கும் சதைகளையும் சுத்தமாக நீக்கி விடுகிறார்கள். அது மஞ்சள் நிறத்தில் கால்சியம் கொண்டதாக இருக்கும். அதை வெள்ளையாக மாற்ற வெயிலில் ஒரு வார காலத்திற்கு காய வைத்து பின்னர் ஹைட்ராலிக் அமிலத்தில் முக்கி எடுப்பார்கள் (பக்கம் 43).

நல்ல தரமான எலும்புகளை வெளிநாட்டில் உள்ள பள்ளிக் கூடங்களுக்கு எலும்புக் கூடுகளாக அனுப்பிவிட்டு தரமற்ற எலும்புகளை சந்தைகளுக்கு அனுப்பிவிடுகிறார்கள். மேலும் நீளமான எலும்புகளை புல்லாங்குழலாகவும் மண்டையோடுகளை பூசைக்கான பாத்திரங்களாகவும் மாற்றி மரணத்தைப் பற்றி ஆழ்ந்து சிந்தித்துக் கொண்டிருக்கும் திபெத்திய புத்த பிட்சுகளுக்கு விற்றுவிடுகிறார்கள் (பக்கம் XV).

1985ல் போடப்பட்ட தடை உத்தரவு எந்தவிதத்திலும் இந்த வியாபாரத்தைத் தடுத்து நிறுத்திடவில்லை. கொல்கத்தாவின் எலும்புத் தொழிற்சாலைகள் மீண்டும் இயங்க ஆரம்பித்துவிட்டன என கார்னே சொல்கிறார் (பக்கம் 58).

மேற்கு வங்கம் செத்த எலும்புகளை விற்றுக் கொண்டிருந்த நேரத்தில் சென்னையில் உயிருள்ள சிறுநீரகங்களை விற்றுக் கொண்டிருந்தார்கள். 2004 சுனாமியில் பாதிப்படைந்த பெருமளவில் மீனவ சமூகத்தைச் சேர்ந்த 25,000 பேருக்கு சுனாமி நகர் உருவாக்கப்பட்டது. வறுமை வாட்டி வதைக்க அநேக பெண்கள் தங்கள் சிறுநீரகத்தை விற்றார்கள். அதன் காரணமாக அந்தப் பகுதிக்கு கிட்னிவாக்கம் என்ற பெயர் ஏற்பட்டது. மனித உறுப்புகள் மாற்றுச் சட்டம் 1994 அமலில் இருந்தபோதும்கூட ஒரு வருடத்தில் மட்டும் 2,000க்கும் மேற்பட்ட சட்ட விரோத சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தமிழ்நாட்டில் நடந்துள்ளது என கார்னே கூறுகிறார். இது பற்றி ஊடகங்கள் வெளிக்கொண்டு வந்த பின்னரும் கூட அதில் ஈடுபட்ட எந்தவொரு மருத்துவரும் தண்டனைக்குள்ளாக்கப்படவில்லை. அரசாங்கம் வெளியே நன்கு தெரிந்த சட்டவிரோத சிறுநீரக மாற்றுச் சிகிச்சை மேற்கொண்ட சிறிய, மோசமான உபகரணங்களைக் கொண்டிருந்த இரண்டு மருத்துவமனைகளை மட்டும் மூடியது (பக்கம் 65).

மற்ற மாநிலங்களிலும் கூட இந்த சட்டவிரோதச் செயல்கள் நடக்கத் தொடங்கின. குர்கானில் மட்டும் 10 ஆண்டுகளில் 600க்கும் மேற்பட்ட மாற்று அறுவைசிகிச்சை நடைபெற்றுள்ளன. விருப்பமில்லாதவர்களுக்கும் மயக்க மருந்து கொடுத்து அவர்களின் சிறுநீரகத்தை கட்டாயப்படுத்தி எடுத்து அவற்றை அமெரிக்கா, இங்கிலாந்து, கிரீஸ் போன்ற நாடுகளில் உள்ளவர்களுக்கு விற்றுள்ளார்கள். கொசாவோ மற்றும் சீனாவில் உள்ள சிறைக் கைதிகளிடம் இருந்து முக்கிய உடல் உறுப்புகள் அகற்றப்பட்டதாக கடுமையான புகார்கள் எழுந்தன. மேலும் சண்டையில் கொல்லப்பட்ட பாலஸ்தீனியரிடமிருந்து கண் விழிப் படலத்தை இஸ்ரேலிய ராணுவத்தினர் தோண்டி எடுத்துள்ளனர்.

தமிழ்நாட்டில் இருந்து குழந்தைகள் கடத்தப்பட்டு வெளிநாட்டினர் தத்தெடுக்கக் விற்கப்பட்டார்கள். சென்னையில் இருந்த ஒரு ஏஜென்சி மட்டும் 12 ஆண்டுகளில் 165 குழந்தைகளை தத்துக் கொடுத்து 2,50,000 டாலர் கட்டணம் என்ற பெயரில் சம்பாதித்துள்ளது (பக்கம் 94). இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு ஒரு குழந்தையைக் கொண்டு செல்ல 14,000 டாலர் செலவாகிறதாம். இதில் அநாதை இல்லங்களுக்கு வழங்கப்படும் 3,500 டாலர் சேர்க்கப்படவில்லை என்று கார்னே எழுதியுள்ளார் (பக்கம் 96).

குழந்தைகள் வியாபாரம் உலகம் முழுவதும் கடும் எச்சரிக்கையை ஏற்படுத்தியுள்ளது. சாட்டில் (Chad) இருந்து மட்டும் 103 குழந்தைகளை ஒரு பிரஞ்சு நிறுவனம் திருடிக்கொண்டு போயுள்ளது. சீனாவின் øனன் மாவட்டத்தில் உள்ள அரை டஜன் அநாதை இல்லங்கள் 2002 முதல் 2005 ஆண்டு வரை குறைந்தது 1000 குழந்தைகளையாவது விலைக்கு வாங்கியுள்ளன (பக்கம் 96). நாடுகளுக்கிடையிலானதத் தெடுத்தல் தொடர்பான ஹேக் மாநாடு பணக்கார நாடுகளின் தத்தெடுப்பதற்கான கட்டணம் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. இதில் உள்ள ஓட்டையின் காரணமாக மூன்றாம் உலக நாடுகளில் இருந்து குழந்தைகள் கடத்தப்பட்டு அதிகமான ஏலத் தொகைக்கு விற்கப்படுகிறார்கள்.

பயங்கரமான கதைகள்

இரத்தப் பணம் ஒரு பயங்கரமான கதையாகும். மூளைக் காய்ச்சலின் தலைநகரான கோரக்பூரில் ஒரு கொள்ளைக்காரன் அப்பாவி ஏழைகளை மதிமயக்கம் செய்து கடத்தி வைத்துக் கொண்டு அவர்களிடம் திரும்பத் திரும்ப இரத்தத்தை எடுத்து கொண்டு அவர்கள் தப்பிச் செல்ல நினைக்கக் கூட முடியாத அளவிற்குப் பலவீனமாக்கிவிடுவான். நுண்ணுயிர் தொற்று அபாயம் பற்றி கொஞ்சம் கூடக் கவலைப்படாமல் ஒரு தொழுவத்தில் வைத்து இவற்றைச் செய்வான். ஒருமுறை காவல் துறையினர் அந்த இடத்தில் சோதனை செய்த போது 17 நபர்கள் அதிர்ச்சி தரக்கூடிய நிலையில் இரத்தச் சோகை பிடித்து மிகவும் பலவீனமாக இருந்துள்ளார்கள். அவர்கள் மீண்டும் கொஞ்சம் பலம் பெறுவதற்கு ஒரு மாதம் மருத்துவமனையில் கழிக்க வேண்டியதிருந்தது. அவர்களிடம் இருந்து எடுக்கப்பட்ட இரத்தத்தை கோரக்பூர் மருத்துவமனைகளில் இரத்தம் அவசரமாகத் தேவைப்படும் நோயாளிகளுக்கு அதிகமான விலைக்கு விற்றுவிடுவான். இந்த கோரக்பூர் பயங்கரம் இந்தியாவில் உள்ள மற்ற நகரங்களில்கூட இருக்கிறது. அளவுதான் மாறுபடும். இரத்தத்திற்கான தேவை அதிகமாகவும் இரத்த தானம் செய்வோர் சொற்பமாகவும் உள்ளது தான் இதற்குக் காரணம்.

அடுத்து இளம் பெண்கள் தங்கள் கருமுட்டையை விற்பனை செய்வது நடைபெறுகிறது. இரத்தத்தைப் போல் இல்லாமல் கருமுட்டை விற்பனை நீண்டகாலத்தையும், வேதனையையும் கொண்டது. ஹார்மோன் உருவாக்குவதற்கு இரண்டு வாரம் ஆகும். பின்னர் அதை அறுவை சிகிச்சை செய்து எடுக்க வேண்டும் (பக்கம் 115). சைப்ரஸ் (அதைத் தொடர்ந்து ஸ்பெயின்) கருமுட்டைகளின் உலகச் சந்தை. இங்கு கருமுட்டை வியாபாரத்தோடு மனித உறுப்புகள் அனைத்தும் மறைமுகமாக விற்பனை செய்யப்பட்டு பெரிய அளவில் பணம் பண்ணப்படுகிறது (பக்கம் 117). நாடு விட்டு நாடு வரும் கிழக்கு அய்ரோப்பா மற்றும் ஸ்பானிஷ் பேசும் அர்ஜென்டைனா நாட்டினர், சிலி நாட்டினர், பிரேசிலைச் சேர்ந்த ஏழைகள் அவர்களுடைய வெள்ளைத் தோலுக்காகவே இந்த வியாபாரிகளால் குறிவைக்கப்படுகிறார்கள். இந்தப் பெண்களுக்கு தங்களின் கருமுட்டை தானத்திற்கு வெறும் 500 டாலர்தான் கொடுக்கப்படுகிறது. அதே வேளை அமெரிக்காவைச் சேர்ந்த கல்லூரிப் படிப்பு முடித்த நல்ல விளையாட்டு வீராங்கனையின் உடல்வாகு கொண்ட பெண்ணிற்கு 50,000 டாலர் வரை கொடுக்கப்படுகிறது (பக்கம் 114). 100% உயர்வு. கருமுட்டை விலையில் 2,350 டாலர் உயர்வு.

இரண்டு விசயங்கள் கவனிக்கத்தக்கவை. ஒன்று இரத்தம் மற்றும் விந்து போல் அல்லாமல் கருமுட்டையானது எடுக்க எடுக்க நிரம்பக் கூடியது அல்ல. பெண்ணின் பிறப்பின் போதே ஒரு பெண்ணின் கருமுட்டைகளின் அளவு நிர்ணயிக்கப்பட்டுவிடுகிறது. இரண்டாவது, நல்ல கருமுட்டை வேண்டும் என்பதற்காக ஒரே நேரத்தில் ஒரு முட்டை என்பதற்கு பதிலாக, பல முட்டைகள் இஷ்டத்திற்கு எடுக்கப்படுகின்றன. ஓர் இஸ்ரேல் மருத்துவர் இனம் தெரியாத ஒரு பெண்ணிடம் இருந்து மட்டும் 181 முட்டைகளை எடுத்து அதைப் பல பிரிவுகளாகப் பிரித்து, குழந்தைகள் வேண்டிய 37 நபர்களுக்கு விற்றுள்ளார் (பக்கம் 127).

வரவர இவை மிகக் கொடுமையாக மாறிக் கொண்டிருக்கின்றன. லேவி ஆரோன், ஓமர் சட்ஷ்கி என்ற டெல்அவிவ்வைச் சேர்ந்த இரண்டு ஆண்கள் 2008ல் டோரண்டாவில் திருமணம் செய்து கொண்டார்கள். அவர்களுக்கு குழந்தை ஆசை வந்தது. ஒரு வெளிர் நிறக் குழந்தையை பெற வேண்டி மெக்சிகோவைச் சேர்ந்த கருமுட்டை தானம் செய்பவரை கண்டுபிடித்தார்கள். அதற்காக வாடகைத் தாய் ஒருவர் அமெரிக்காவில் இருந்து இந்த ஆண்கள் ஒருவரின் விந்தைச் சுமந்து கொண்டு மெக்சிகோவிற்கு வந்தார். மெக்சிகோ பெண்ணின் கருமுட்டைகள் இஸ்ரேல் ஆண் விந்துடன் பொருந்திப் போனது. ஒவ்வொரு பெற்றோரிடமிருந்தும் எடுக்கப்பட்ட ஒரு விந்தணுவிற்கு ஒரு கருமுட்டை என்ற வகையில் இரண்டு கருமுட்டைகள் அமெரிக்கப் பெண்ணின் கர்ப்பப்பைக்குள் செலுத்தப்பட்டது. 2010ம் ஆண்டு இரட்டைக் குழந்தைகள் கலிபோர்னியாவில் பிறந்தன. பின்னர் அவர்களை இஸ்ரேலுக்குக் கொண்டு சென்று சட்டப்படி தத்தெடுத்துக் கொண்டார்கள். மொத்தச் செலவு 1,20,000 டாலர் ஆனது.

கருமுட்டை வியாபாரத்தின் எதிர்காலம் எப்படியிருக்கும் என்று ஒரு முதலீட்டாளரால் கீழ்க்கண்டவாறு விவரிக்கப்படுகிறது.

ஆசியாவைச் சேர்ந்த வாடகைத் தாய்மார்கள் அமெரிக்காவைச் சேர்ந்த மாடல் அழகிகளுக்காக கருமுட்டைகளைச் சுமப்பார்கள். அது ஒரு கவுரவம். கருமுட்டைகளுக்காக அவர்களுக்கு 1,00,000 டாலர் வரை கொடுக்கப்படும். பின்னர் அந்தக் குழந்தைகள் 1 மில்லியன் டாலருக்கு விற்கப்படுவார்கள். முதலில் எங்களுடைய முதலீட்டாளர்களுக்கும்; பின்னர் உலகத்தில் உள்ள மற்றவர்களுக்கும் (பக்கம் 133).

கருமுட்டையில் இருந்து வாடகைத் தாய் வரை அது படிப்படியான நடவடிக்கை. கார்னே ஆனந்த் எனுமிடத்தில் உள்ள மருத்துவமனைக்கு நம்மைக் கூட்டிச் செல்கிறார். அங்கே கருமுட்டை எடுக்கப்பட்டு அது கரு உருவாக்கம் செய்யப்பட்டு பின்னர் கர்ப்பப் பைக்குள் வைக்கப்பட்டு வளர்ந்து பின்னர் ஓர் ஒப்பந்தக் குழந்தையை ஒரு வார காலத்திற்குள் பெற்றெடுக்கப்படுவதைக் காண்பிக்கிறார் (பக்கம் 135).

சுகப் பிரசவம் என்பது பெரும்பாலும் அறுவை சிகிச்சை பிரசவம்தான். பிரசவித்த மாற்றாந்தாய்ப் பெண் தன்னுடைய கர்ப்பப் பையை தானம் செய்ததற்காக அவருக்கு 5,000 அல்லது 6,000 டாலர் வாடகை கொடுக்கப்படும். இவர்கள் எல்லாரும் பரம ஏழைகள்தான். இந்தியா இந்த கர்ப்பம் சுமப்பதை 2002ல் சட்டமாக்கியுள்ளது. இதன் விளைவாக எல்லா பெரிய நகரங்களிலும் இதுபோன்ற ஒரு மருத்துவமனையைக் காணலாம்.

உயிரியல் திசுக்கள் வியாபாரத்தில் ஒரு விறுவிறுப்பான வரலாறு உள்ளது. இரத்தம் செலுத்துவது என்பது இரண்டாம் உலகப்போர் காலக்கட்டத்தில் சாத்தியமானது. அமெரிக்கர்களும் பிரிட்டிஷ்காரர்களும் இராணுவத்திற்கு தங்களுடைய ஒருமைப்பாட்டைத் தெரிவிப்பதற்காக இரத்த தானம் செய்தார்கள். சிக்கலான அறுவை சிகிச்சையின் போது இரத்தத்தின் தேவை அதிகமானது. இரத்தம் கொடுப்பவர்கள் எண்ணிக்கை குறைந்தபோது தேவைக்காக வெளிச்சந்தையில் இருந்து வாங்கினார்கள். சிறைவாசிகளின் இரத்தம் சந்தையில் விற்பனை செய்யப்பட்டது. அர்கான்சாஸ் சரிசெய் துறையில் உள்ளவர்களின் இரத்தம் (பெரும்பாலும் திறந்தே இருக்கும்) நோய் கிருமிகளுடனேயே பல்வேறு நாடுகளுக்கும் சென்றது. கனடாவில் மட்டும் 1,000 பேருக்கு இதனால் எய்ட்ஸ் வந்தது. 2,00,000 பேருக்கு மஞ்சள் காமாலை சி நோய் வந்தது (பக்கம் 170).

ரிட்சர் டிட்மஸ்தான் இரத்த வியாபாரத்தில் உள்ள அபாயம் பற்றி முதலில் வெளிக் கொண்டு வந்தவர். அவருடைய கிப்ட் ஆப் ரிலேசன்μப் புத்தகத்தில் இரத்தம் வாங்கப்படுவதால் மஞ்சள் காமாலை நோய் அதிகரிக்கிறது என்றும், தானே முன் வந்து தரும் இரத்தத்தைப் பெறுவதே பாதுகாப்பானது என்றும் கூறியுள்ளார். இன்று பல்வேறு நாடுகளில் இரத்த வியாபாரம் தடை செய்யப்பட்டுள்ளது. கோரக்பூரில் பலருக்கு பைத்தியம் பிடித்துள்ளது. மற்ற மனித உறுப்புகளால் இப்படி ஆவதில்லை. உடல் உறுப்புகளின் தட்டுப்பாடு காரணமாகவும் முன்னேறிய தொழில்நுட்ப வளர்ச்சியாலும் உடல் உறுப்பு வியாபாரத்தை நியாயப்படுத்துவது மீண்டும் தலை தூக்குகிறது. இரானில் இருப்பதுபோல் அரசே உடல் உறுப்புகள் வியாபாரத்தை அங்கீகரிக்க வேண்டும் என்றும் பேசப்படுகிறது. சிவப்புச் சந்தை வெற்றிகரமாக செயல்படுகிறது.

அரசே நடத்தும் அங்கங்கள் வியாபாரம்

டிட்மஸின் வாதங்களான தானே முன்வந்து திரும்ப இட்டு நிரப்ப முடியாத உடல் உறுப்புகளையும் திசுக்களையும் வணிக நோக்கத்தில் இல்லாமல் தானம் செய்வது என்பது தோல்வியடைந்துவிட்டது. ஏனென்றால், உலகத்தில் எந்த சமுதாயமும் பரிசுத்தமாக தானாகவே முன்வந்து செயல்படுவதில்லை. எது இரத்த தானத்திற்கு நல்லதோ அது கருமுட்டை மற்றும் சிறுநீரகம் போன்ற மற்ற உறுப்புகளின் தானத்திற்கு சிறந்ததாக இல்லை. ஏனென்றால், அது தானம் செய்பவருக்கு நிரந்தர நஷ்டத்தினை ஏற்படுத்துகிறது என்பது மட்டுமல்ல; நடைமுறையும் கூட தாறுமாறாக உள்ளது என்பதால் பல நேரங்களில் உறுப்புகள் செயலற்றுப் போவதும், தானம் கொடுத்தவரே மரணித்துப் போவதும் கூட நடக்கிறது. ஆகையால், தானே முன் வந்து தானம் செய்வதுதான் நியாயமானது. பாதுகாப்பானது.

பணம் கிடைக்கிறது என்பதற்காக குழந்தைகளை ஒப்பந்தத்தில் உருவாக்குவது சரியா என்று குடிமைச் சமூகம் தன்னைத் தானே கேள்வி கேட்டுக் கொள்ள வேண்டும். முக்கியமாக சட்டப்பூர்வமான தத்தெடுத்தல் என்பது நீதியாகவும் முறையானதாகவும் இருக்கும்போது அதுவே ஒரு மாற்றாக ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும்போது இந்தியப் பெண்களை வாடகைக்கு அடைகாக்கும் கருவியாக ஆக்கக் கூடாது. சோகம் என்னவென்றால், மறுஉற்பத்தி தொழில் நுட்ப ஒழுங்குமுறைச் சட்டம் 2010, வாடகைத்தாய் முறையை தடை செய்வது என்பதற்குப் பதிலாக அதை சட்டமாக்க முயற்சிக்கிறது.

கருப்பையை வாடகைக்கு விட முடியுமென்றால் மற்ற உடல் உறுப்புகளின் விற்பனை ஒருபடி மேலேதான் செல்லும். வாடகைக்கு விடுவதும் விற்பதும் ஒரே நிலைதான். அதன் மூலம் உயிரியல் திசுக்கள் வணிகமயமாக்கப்படுகின்றன. இன்று மறுபடியும் இட்டு நிரப்பப்பட முடியாத கருமுட்டையை விற்பது சட்டபூர்வமாக உள்ளது. நாளை, அதுவே இரத்தத்தையும் மூளை மரணமடைந்தவரின் மற்ற உடல் உறுப்புகளையும் தானம் செய்வது என்பதற்குப் பதிலாக விற்பது நடக்கலாம்

இந்தியா போன்ற நாடுகளில் தானம் என்பது அரசே நடத்தும் உடல் உறுப்பு வியாபாரத்திற்கு மற்றொரு பெயர். கார்னே கூறுவது போல், முழு வெளிப்படைத் தன்மை மட்டுமே சிவப்புச் சந்தையை முழுவதுமாக ஒழிக்காவிட்டாலும் கட்டுக்குள் வைக்கும். இந்தத் திறனாய்வு ஏற்றுக் கொள்ளக் கூடியதாக உள்ளது. அதிகாரம் வழங்கும் குழுக்களும் (இவை உணர்ச்சிப்பூர்வமாக உறுப்புகள் தானம் செய்வதை அனுமதிக்கிறது) பல்வேறு உரிமம் வழங்கக்கூடிய அமைப்புகளும் வெளிப்படையாகவும் பொதுமக்களின் கருத்தைக் கேட்டும் செயல்பட வேண்டும். அதுதான் சிவப்புச் சந்தைகளைக் குறைக்கும். மனித முடி மற்றும் ஸ்டெம் செல் சிகிச்சை போன்றவற்றின் வியாபாரம் இங்கு இல்லை. அப்படியே இருந்தாலும் அவை சிறு விசயங்களே.

(இபிடபிள்யு, ஜனவரி 7, 2012 இதழில் வெளியாகியுள்ள ஸ்காட் கார்னி எழுதியுள்ள தி ரெட் மார்க்கட் நூல் பற்றிய விமர்சனம்)

தமிழில்: ஜி.ரமேஷ்

Search