COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Tuesday, October 15, 2013

நிலம் கையகப்படுத்துதல் சட்டம் 2013: நிலப்பறிக்கு மறுவாழ்வு - திபங்கர் பட்டாச்சார்யா

சமீபத்தில் நிறைவுற்ற நாடாளுமன்ற பருவகால கூட்டத் தொடர், காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு இடையிலான சச்சரவை மட்டுமின்றி, இன்னும் கூடுதல் சதித்தன்மையுடன், உணவுப் பாதுகாப்பு, நிலம் கையகப்படுத்துதல், ஓய்வூதிய நிதியை அந்நிய முதலீட்டுக்குத் திறந்துவிடுவது போன்ற முக்கியமான தொடர் சட்டங்களை நிறைவேற்ற அரசாங்கத்துக்கு உதவும் விதத்தில், அதிகப்படியான ரகசியமான ஒத்துழைப்பையும் கண்டது. புதிதாக நிறை வேற்றப்பட்டுள்ள நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தின் முக்கிய சரத்துக்கள் மற்றும் அவை உருவாக்கக்கூடிய விளைவுகள் பற்றி நெருக்க மாகக் காணலாம்.

ஷேக்ஸ்பியரின் பிரபலமான துன்பியல் கதையான ‘ரோமியோ ஜ÷லியட்டில்’, ‘பெயரில் என்ன இருக்கிறது? ரோஜாவை வேறெந்த பெயர் கொண்ட அழைத்தாலும் அதன் வாசம் இனிக்கும்’ என்று ஜ÷லியட் சொல்வார். ஷேக்ஸ்பியரின் வார்த்தைகளை சற்று மாற்றிச் சொன்னால், நிலம் கையகப்படுத்துதல் எந்தப் பெயரில் செய்யப்பட்டாலும் எந்த முறையில் செய்யப்பட்டாலும் நிலம் கையகப்படுத்துதலின் யதார்த்தம் கடுமையானதாகத்தான் இருக்கும்.

ஆயினும் கார்ப்பரேட் நிலப்பறியை நிர்வகிப்பவர்கள் பெயரில் பெரிதாக ஏதோ இருப்பதாக நினைக்கிறார்கள்; அதனால், அவப்புகழ் பெற்ற நிலம் கையகப்படுத்துதல் சட்டம் 1894அய் ரத்து செய்வது என்ற பெயரில், வெளிப்படைத் தன்மை மற்றும் இழப்பீடு மற்றும் மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு போன்ற சொற்களுக்கிடையில் நிலம் கையகப்படுத்துதலின் யதார்த்தத்தை மறைக்க முயற்சிக்கும் கவர்ச்சிகரமான நீளமான பெயர் வைத்து, சாரத்தில், அதை புத்துயிர் பெறச் செய்திருக்கிறார்கள்.

‘நியாயமான இழப்பீடு பெறும் உரிமை மற்றும் நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு, மறுகுடியேற்றத்தில் வெளிப்படைத் தன்மை’ என்ற அதன் புதிய பெயர் ராகுலின் அறிவலை என்று ஜெய்ராம் ரமேஷ் சொல்கிறார். செப்டம்பர் 11க்கு பிறகு புஷ் நிர்வாகம் கொடூரமான பேட்ரியாட் சட்டம் இயற்றியதை ராகுல் காந்தி இந்தப் பின்னணியில் சுட்டிக் காட்டியதாகவும் அவர் சொன்னார்.

மனித உரிமைகள் மற்றும் தனிநபர் சுதந்திரத்தில் தலையீடு செய்த அய்க்கிய அமெரிக்கா, அய்க்கிய அமெரிக்க மக்களின் சுதந்திரத்தை காலில் போட்டு மிதிக்க பேட்ரியாட் என்ற சுருக்கமான பெயரை உருவாக்கியது போலவே, கையகப்படுத்துதலும், இழப்பீடு, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு என்று காட்டப்பட வேண்டும் என்று ராகுல் ஆலோசனை சொன்னார். பாஜக தலைவர் ராஜ்நாத் சிங், நாடாளுமன்றத்தில், உண்மையில் இந்தப் பெயரை பாராட்டினார்; சுஷ்மா ஸ்வராஜ் மேசையைத் தட்டி அமைச்சருக்கு நன்றி சொன்னார்!

புதிய சட்டம் கையகப்படுத்துதலுக்கு பல்வேறு நிபந்தனைகள் முன்வைக்கிறது. ஆனால், இழப்பீட்டுக்கோ, மறுகுடியமர்வுக்கோ எந்த திறன்மிக்க சரத்தும் இல்லாமல், விவசாய நிலம் துரிதமான தடைகளற்ற விதத்தில் கைமாறுவதற்கான களத்தை, திறன்மிக்க விதத்தில் திறந்து விட்டுள்ளது. எப்படி என்று பார்க்கலாம்.

சாரத்தில், சட்டம், நிலம் கையகப்படுத்துதலுக்கு அரசு பொதுவாக என்ன முறைகள் கையாள வேண்டும் என்பது பற்றியது. விதிவிலக்குகள் ‘நன்கு புலப்படுத்தக்கூடிய கடைசி புகலிடமாக’ அனுமதிக்கப்படுகின்றன. ‘தனிப்பட்ட பேச்சுவார்த்தைகள் மூலம் தனிப்பட்ட விதத்தில் நிலம் வாங்குவது’ முற்றிலும் இந்தச் மொத்த சட்டத்துக்கும் அப்பாற்பட்டது. 2011 நகலுக்கு மாறாக, இறுதி வடிவம், அது போன்ற தனிப்பட்ட பேச்சுவார்த்தைகள் மூலம் தனிப் பட்ட விதத்தில் நிலம் வாங்குவதற்கு எந்த வரம்பையும் குறிப்பாகச் சொல்லவில்லை. (என்னவாவது செய்து கார்ப்பரேட் நிலப்பறி செய்வது என்று இதைப் படிக்கவும்). அது ‘பொருத்தமான அரசாங்கத்தின்’ விருப்பத்துக்கு விடப்படுகிறது.

அரசு நிலம் கையகப்படுத்துதல் ‘பொது நோக்கம்’ என்ற பெயரில் சட்டபூர்வமாக்கப் படுகிறது. விவசாயம் தவிர வேறெந்த பயன்பாட்டையும் உள்ளடக்கி, பொது நோக்கம் பற்றிய மிகவும் நெளிவுசுளிவான வரையறையை புதிய சட்டம் உருவாக்கியுள்ளது. ‘கப்பல் படை, ராணுவம், விமானப் படை மற்றும் மத்திய துணை ராணுவப் படைகள் அல்லது,  தேசப் பாதுகாப்பு அல்லது நாட்டின் பாதுகாப்புத்துறை அல்லது மாநில காவல்துறைகள் அல்லது மக்கள் பாதுகாப்பு என எந்த அத்தியாவசியமான வேலை உள்ளிட்ட மத்திய அரசின் ஆயுதப்படைகள் தொடர்பான நோக்கங்கள்’ என, போர்த்தந்திர நோக்கம் இருப்பதாகச் அறிவிக்கப்படுகிற எதுவும் பொது நோக்கம் என்று குறிப்பிடப்படுகிறது.

அனைத்துவிதமான உள்கட்டுமான திட்டங்கள், தொழில் தாழ்வாரங்கள் அல்லது சுரங்க நடவடிக்கைகள் மற்றும் தேசிய உற்பத்தி கொள்கையில் அறிவிக்கப்படுகிற முதலீட்டு அல்லது உற்பத்தி மண்டலங்கள், விளையாட்டு, மருத்துவம் மற்றும் சுற்றுலா திட்டங்கள் ஆகியவையும் ‘பொது நோக்கம்’ என்ற வரையறைக்குள் வருகின்றன. தனியார் மருத்துவமனைகள், தனியார் கல்வி நிறுவனங்கள், தனியார் விடுதிகள் சட்டத்திலிருந்து விலக்கி வைக்கப்படுகின்றன; ஆனால், ‘பொது நோக்கம்’ என்று வரையறுக் கப்பட்ட எந்தச் செயல்பாட்டிலும் அரசாங்கத்திடமோ, தனியாரிடமோ நில பாத்தியதை தொடர்ந்து இருந்துவிடக் கூடிய அரசு - தனியார் கூட்டுத் திட்டங்கள் சட்டத்தின் கீழ் வருகின்றன. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், தனியார் லாபம் தேடுவதும் ‘பொது நோக்கம்’ என்று புனிதப்படுத்தப்படுகிறது.


1894 நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் உள்ள முக்கிய குறைபாடு நிலத்தை கட்டா யமாக கையகப்படுத்துதல் தொடர்பானது. இதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கேள்வி கேட்க இடம் இல்லை. இந்தப் பிரச்சனைக்கு பதில் சொல்லியிருப்பதாக அரசாங்கம் சொல்கிறது. புதிய சட்டத்தின் படி, அரசு - தனியார் கூட்டுத் திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டால் 70% முன்ஒப்புதலும் தனியார் நிறுவனத்துக்கு கையகப்படுத்தப்பட்டால் 80% முன்ஒப்புதலும் அரசு பெற வேண்டும். ஆனால் அரசின் பயன்பாட்டுக்காகவோ பொதுத்துறை நிறுவனங்களுக்கோ நிலம் கையகப்படுத்தப்பட்டால் முன்ஒப்புதல் தேவையில்லை. உண்மையில், ‘ஒப்புதல்’ என்ற சொல், மற்றபடி விரிவாக இருக்கிற இந்தச் சட்டத்தின் பெயரில் இல்லை என்பது பளிச்சென தெரிகிறது.

பாதிக்கப்படும் மக்களின் ஒப்புதலை பெறுவதற்கு பதிலாக, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புக்களுடன் கலந்தாலோசிப்பது, சமூக தாக்க மதிப்பீட்டு ஆய்வு செய்வது, அதை நிபுணர் குழு கொண்டு மதிப்பிடுவது என்பவை பற்றி சட்டம் பேசுகிறது. ஆனால், அந்த நிபுணர் குழுவின் பரிந்துரைகள் கட்டாயமானவை அல்ல; எந்த அரசாங்கமும், ‘காரணங்கள்’ எழுத்துபூர்வமாக பதிவு செய்யப்பட்டால், அவற்றை மீறலாம். மேலும், போர்த்தந்திர நோக்கம் தொடர்பான ‘அவசர’ சரத்தை எந்த அரசாங்கமும் எந்த நேரமும் பயன்படுத்தினால், சமூக அல்லது சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வுக்கான அவசியம் இல்லை.

இழப்பீடு மற்றும் மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு பற்றிய பிரச்சனைகள் அடுத்து வருகின்றன. இங்கும், ‘தனிப்பட்ட விதத்தில் பேசி தனிப்பட்ட விதத்தில் வாங்கப்பட்ட நிலம்’ பற்றி சட்டம் ஏதும் சொல்லவில்லை. ஒரு தனியார் நிறுவனம் தான் ஏற்கனவே வாங்கிய நிலத்துக்கு மேல் அரசும் நிலம் கையகப்படுத்தித் தர வேண்டும் என்று கேட்டால் அந்த தனியார் நிறுவனம் இழப்பீடு மற்றும் மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு தொடர்பான சரத்துக்களை நிறைவேற்ற வேண்டும். நிலம் கையகப்படுத்துதல், சம்பந்தப்பட்ட நிலத்தின் சொந்தக்காரர்கள் தவிர மிகப் பெரும்பான்மையினரை பாதிக்கிறது என்று பரவலாக பார்க்க முடிகிறது.

புதிய சட்டம் ‘பாதிக்கப்பட்ட குடும்பங்கள்’ என்பதை வரையறுக்கும்போது, இந்த யதார்த்தத்தை அங்கீகரிக்கிறது; ஆனால், நிலமற்றவர்களை இழப்பீட்டின் எல்லைக்கு வெளியே நிறுத்துகிறது. வாழும் இடங்களில் இருந்து அகற்றப்படுபவர்களுக்கு மறுவாழ்வு, மறுகுடியமர்வு என்று கொஞ்சம் தரப்படுகிறது; ஆனால், நிலம் கையகப்படுத்துதலால் பாதிக்கப்படும் நிலமற்ற விவசாய தொழிலாளர்கள், சாகுபடியாளர்கள் மற்றும் வாழ்வாதாரத்துக்காக பலவிதமான வேலைகளும் செய்பவர்கள் என இவர்களுக்கு எதுவும் இல்லை.


நிலம் மற்றும் வாழ்வாதாரம் பாதிப்பு என்ற நேரடி பாதிப்புக்கு அப்பால், விவசாய நிலம் கையகப்படுத்தப்படுதல், நடந்ததோ இனி நடக்கவிருப்பதோ, உணவுப் பாதுகாப் பையும் மோசமாக பாதிக்கிறது. ‘உணவுப் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த சிறப்புப் பிரிவு’ என்ற தலைப்பில் சட்டத்தில் ஒரு சிறிய பிரிவு உள்ளது. இது எந்த ஸ்தூலமான உத்தரவாதத்தையும் தரவில்லை. ‘ரயில்வே, நெடுஞ்சாலை, முக்கிய மாவட்ட சாலைகள், பாசன வழிகள், மின்கம்பிகள் போன்றவை’ தொடர்பான நேரடி இயல்பு கொண்ட திட்டங்களுக்கு இந்தப் பிரிவில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

அதிவிரைவுச் சாலைகள், தாழ்வாரங்கள் என்ற பெயரில் பெருமளவிலான விவசாய நிலம் திசை திருப்பி விடப்படுவதை சமீபத்திய உதாரணங்கள் தெளிவாகக் காட்டுகின்றன. இது போன்ற ‘நேர்க்கோட்டுப் பாதையிலான’   திட்டங்களுக்கு விவசாய நிலம் கையகப்படுத்தப்படுவது என்று மட்டும் இது சுருக்கப்படுவதில்லை. ‘பொது நோக்கத்தில்’ இருக்கிற எந்தத் திட்டத்துக்கும், வரம்பு ஏதும் இன்றி, நீர்பாசனம் செய்யப்பட்ட, பல போகம் விளைகிற நிலம் உள்ளிட்ட அனைத்துவிதமான விவசாய நிலமும் கையகப்படுத்தப்படுவதை சட்டம் அனுமதிக்கிறது. 2011 நகலில் சொல்லப்பட்டுள்ள வரம்பு, இப்போது சட்டத்தில் சொல்லப்படவில்லை. சம்பந்தப்பட்ட மாநில அரசாங்கங்கள் மற்றும் மாவட்ட நிர்வாகங்களின் முடிவுக்கும் விருப்பத்துக்கும் அது விடப்படுகிறது.

இறுதியாக, புதிய சட்டத்தின் பிரிவு 106 (1), இந்தச் சட்டத்தின் பிரிவுகள், நான்காவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான சட்டங்களுக்கு பொருந்தாது என்று சொல்லி மொத்த பிரச்சனையையும் கேலிக்குள்ளாக்குகிறது. நான்காவது அட்டவணையில் அது போன்ற 13 சட்டங்கள் உள்ளன. துவக்கத்தில் அரசாங்கம், புதிய சட்டத்தின் பிரிவுகளை பொருத்துவதில் இருந்து, சிறப்புப் பொருளாதார மண்டலச் சட்டம் 2005க்கும் விலக்கு அளிக்க விரும்பியது.  ஆனால், சிறப்புப் பொருளாதார மண்டலச் சட்டம் 2005க்கு எதிராக வளர்ந்து வருகிற வெகுமக்கள் சீற்றத்தின் முன், விலக்கு அளிக்கப்பட்ட சட்டங்களின் பட்டியல் கொண்ட நான்காவது அட்டவணையில் இருந்து சிறப்புப் பொருளாதார மண்டலச் சட்டத்தை அரசாங்கம் விலக்கி வைக்க நேர்ந்தது.

புதிய சட்டத்தை நிறைவேற்றும் முன்பு, ஊரக வளர்ச்சி அமைச்சகம் தேசிய நிலச்சீர் திருத்த கொள்கை ஆவண நகல் ஒன்றை வெளியிட்டது. நில உச்சவரம்பை பிற சீர்திருத்த நடவடிக்கைகளை அமலாக்குவதில் இந்திய அரசு தோற்றுவிட்டது என்று ஆவண நகல் ஒப்புக்கொள்கிறது. உச்சவரம்பு அளவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் பாசன நிலத்தைப் பொறுத்தவரை அது 5 - 10 ஏக்கராக குறைக்கப்பட வேண்டும் என்றும் பாசனத்துக்கு உட்படாத நிலத்தைப் பொறுத்தவரை அது 10 - 15 ஏக்கராக குறைக்கப்பட வேண்டும் என்றும் சொல்கிறது.

கொள்கை நகல், ‘மத, கல்வி, அறக்கட்டளை, ஆய்வு, தொழில் நிறுவனங்கள் மற்றும் தோட்ட தொழில், மீன் வளர்ப்பு ஆகியவற்றுக்கு விலக்கு அளிக்கப்படுவதற்கு’ முடிவு கட்ட வேண்டும் என்றும் சொல்கிறது. இதில் எந்த ஒரு நிறுவனமும் 15 ஏக்கர் என்ற அலகு தாண்டி பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்றும் சொல்கிறது. சொந்த நிலங்களுக்கு விதிக்கப்படுகிற அதே உச்சவரம்பை, ‘பயன் பாட்டில் உள்ள’ நிலத்துக்கும் விதிக்க வேண்டும் என்றும், அப்படி விதிக்கப்பட்டால், எந்த தனிநபரோ அல்லது நிறுவனமோ, அவர்கள் சொந்தமாக வைத்துக் கொள்ளக்கூடிய நிலத்துக்கு மேல், குத்தகைக்கு நிலம் பெற்று, கூடுதலாக வைத்துக் கொள்ள முடியாது என்றும் சொல்கிறது. இதை சிறப்புப் பொருளாதார மண்டல சட்டத்துக்கும் புதிய நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தின் கீழ் பெருமளவில் நிலம் கையகப்படுத்தப்படுவதையும் விவசாய நிலம் திசைதிருப்பி விடப்படுவதையும் அனுமதிக்கும் பிரிவுகளுக்கு எதிராகவும் நிறுத்திப் பார்த்தால் அரசின் போலித்தனம் பட்டவர்த்தனமாகத் தெரியும்.

உணவுப் பாதுகாப்பு பற்றிய அதிகாரபூர்வ போலித்தனமும் பட்டவர்த்தனமாகத்தான் தெரிகிறது. நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தை நிறைவேற்றிய அதே நாடாளுமன்றக் கூட்டத் தொடர், உணவுப்  பாதுகாப்பு மசோதாவையும் நிறைவேற்றியது. மசோதாவில் சொல்லப் பட்டுள்ள அளவு (ஒருவருக்கு, ஒரு மாதத் துக்கு 5 கிலோ உணவு தானியம்), உள்ளடக்கம் (உணவு தானியம் மட்டும்தான்; பருப்பு வகைகள் இல்லை) மற்றும் அது சென்று சேரும் மக்கள் பிரிவு (கிராமப்புறங்கள் 75%, நகர்ப் புறங்களில் 50%) ஆகியவை போதுமானவை அல்ல.

ஆனால், வாக்குறுதி அளிக்கப்பட்டதையாவது உறுதி செய்ய வேண்டுமென்றால், நாடு உணவு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்; சாகுபடி நிலப்பரப்பை அதிகரிக்க வேண்டும். இருப்பினும் உண்மையில், விவசாய நிலம் திறன்மிக்க விதத்தில் கிடைப்பது சீராக சரிவதற்கான வழியை அரசு வகுக்கிறது.  பிறகு, விளைச்சலை அதிகரிப்பது என்ற பெயரில் சந்தேகத்துக்குரிய ஆபத்தான மரபணு மாற்ற பயிர்களை விவசாயிகள் விளைவிக்க வேண்டும் இந்திய விவசாயத்தை அதிகரித்த அளவில் கார்ப்பரேட்மயமாக்க வேண்டும் என்று அரசு சொல்கிறது. இது உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்தாது; மாறாக, மேலும் தீவிரமான விவசாய நெருக்கடிக்கான வழிமுறையாக இது இருக்கும்.

1894 நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தின் காலனிய மரபு ரத்து செய்யப்படவில்லை. அது நீட்டிக்கப்பட்டுள்ளது. மறுஉறுதி செய்யப்பட்டுள்ளது. முதலில் சிறப்புப் பொருளாதார மண்டலச் சட்டம் 2005ன் மூலம். இப்போது நிலம் கையகப்படுத்துதல் சட்டம் 2013ன் மூலம். நாட்டை, அதன் விலைமதிப்பில்லா செல்வாதாரத்தை பாதுகாக்க விரும்பும் ஒவ்வொருவரும் பேரழிவுக்கான இந்த வழி முறையை நிராகரிக்க வேண்டும்; இந்தியாவின் விவசாய நிலங்களை பாதுகாக்க அனைத்து வழிகளிலும் போராட வேண்டும்.

Search