COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Tuesday, October 15, 2013

கட்சியை அதன் அடுத்தகட்ட முன்னேற்றத்திற்கு எடுத்துச் செல்ல கத்துக்குட்டித்தனத்துக்கும் தற்காலிகவாதத்திற்கும் விடை கொடுப்போம்! கட்சி முழுவதும் ஆழமான கடினமான புரட்சிகர வேலைநடையை பரவச் செய்வோம்! காம்ரேட்

நிறைவு பகுதி

கட்சியின் ஒன்பதாவது மாநாட்டில் அமைப்பு பற்றிய அறிக்கையின் சில பகுதிகள் மீது கவனம் செலுத்தி இந்தக் கட்டுரைத் தொடரை நிறைவு செய்யலாம்.

“உறுப்பினர் சேர்ப்பு, புதுப்பித்தல், அனைத்து கட்சி நடவடிக்கைகளிலும் உறுப்பினர்களின் தொடர்ச்சியான கட்டமைக்கப்பட்ட பங்கேற்பு, கட்சி ஊழியர்களை வளர்ப்பது, சரியாக கவனிப்பது, கட்சி பத்திரிகை விநியோகம், கட்சி அணிகள் கல்வி, கட்சி கிளைகள் உருவாக்கம், செயல்படுதல், கட்சி கமிட்டிகள் ஸ்திரப்படுதல், தலைமையின் ஆற்றல் மற்றும் பண்பு என்ற அதன் எல்லா பரிமாணங்களிலுமான கட்சி கட்டுதல் கடமையில், நாம் சூழலின் தேவைக்கும், நமது சொந்த முன்முயற்சிகளின் வீச்சு, தாக்கம் ஆகியவற்றுக்கு பின்தங்குகிறோம்.”

“ அமைப்பு விவகாரங்கள் மற்றும் சூழலின் தேவை குறித்த ஓர் ஒட்டுமொத்தமான அணுகுமுறையை வளர்த்துக் கொள்வதில் ஏற்படும் இயலாமை, ஒருவிதமான பிளவுபட்ட தன்மைக்கு வழி வகுக்கிறது. ஒரு பிரிவு தோழர்கள், அமைப்புக் கடமைகளும் வெகு மக்களை திரட்டும் பொறுப்பும் தம் மீது மிகுந்த சுமையாக ஏறியுள்ளதாகக் கருதுகின்றனர்; இவர்கள், காலத்திற்கேற்ற அரசியல் கடமைகள் குறித்து, ஆர்வமின்றி இருக்கின்றனர் என்று சொல்ல முடியாத போதும், ஒரு பழமைவாத அணுகுமுறையை வளர்த்துக் கொண்டுள்ளனர். வேறு பிரிவு தோழர்கள் சிலரோ, அமைப்பு, அணி திரட்டலின்மை பற்றி புகார் சொன்ன வண்ணம் உள்ளனர்.

நமது முன்னுரிமைகள், வழமையான வேலை கலாச்சாரம் கண்காணித்தல் உட்பட பெரும்பாலான விசயங்களில், வெகுமக்கள் அணி திரட்டலுக்கு அழுத்தம் தருவதாகவும் கட்சி கட்டுதலைப் புறக்கணிப்பதாகவுமே உள்ளன. இந்த சமனற்ற நிலை சரி செய்யப்பட்டாக வேண்டும்.”

கட்சியில் உள்ள நிலைமைகள் பற்றிய மேற்கூறிய மதிப்பீட்டிலிருந்துதான், அமைப்பு விவகாரங்களில் தன்னெழுச்சிக்குத் தலை வணங்கும் கலாச்சாரத்திற்கு 9ஆவது கட்சி காங்கிரஸ் உறுதியாக முடிவு கட்ட வேண்டும் என்ற அறைகூவல் விடுத்தது.  தீர்வு நோக்கிய ஓர் அடிப்படை அணுகுமுறையை/பார்வையை, ஆவணம் முன் வைக்கிறது.

“உயர்கமிட்டிகள், பிரச்சாரம் மற்றும் கிளர்ச்சிக்குத் திட்டமிடும்போது, அமைப்பாக்கும் முறைக்கும் அமலாக்குவதற்கான முறைமைக்கும் கவனம் செலுத்தியாக வேண்டும். இந்த அனைத்து விசயங்களிலும் வழிகாட்டுவது, கண்காணிப்பது, அமைப்பு வழிமுறையிலான சாதனைகள் இடைவெளிகள் அல்லது குறைபாடுகள் பற்றிய ஒட்டுமொத்தமான உரிய காலத்திலான பரிசீலனையை மேற்கொள்வது தேவையாகும். இது மட்டுமே, நமது துணிச் சலான உறுதிப்படுத்தப்பட்ட விரிவாக்கத்தைத் துரிதப்படுத்தும்.”
கட்சியின் உறுப்பினர்களோடு வேர்க்கால் மட்டத்தில் தொடர் உறவு, கிளைகள் செயல் பாடு, உள்ளூர் கமிட்டி செயல்பாடு போன்றவை பற்றி ஆவணம் சொல்வதைக் காண்போம்.

கட்சிக் கிளையைச் செயல்படுத்துவதில் புறநிலைச் சிக்கல், புறநிலை வாய்ப்பு, மாற்றத் தேவைப்படுவது என்ன என்ற விசயங்களை ஆவணத்தின் 31ஆவது பத்தி சுட்டிக்காட்டுகிறது.

•    உறுப்பினர்களில் பெரும்பான்மையினர் சிறுவீத உற்பத்தி மற்றும் பின்தங்கிய உற்பத்தி உறவுகளோடு இணைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஓர் ஒழுங்கமைக்கப்பட்ட நவீன ஜனநாயக அமைப்பு முறைக்கு பழக்கப்பட்டவர்கள் அல்ல. இவையே, கிளைகள் இயங்குவதில் உள்ள புறநிலைரீதியான சிக்கல்கள். இதனால் கிளைகளில் ஏற்ற இறக்கங்கள் உள்ளன. கணிசமான தொடர்ச்சியற்ற தன்மை உள்ளது.

•    விடாப்பிடியான முட்டிமோதும் தன்மையும் வைராக்கியமும் பெரும்பான்மை உழைக்கும் மக்களின் இயல்பான குணங்கள். கைக்கும் வாய்க்குமான வாழ்க்கைத் தேவைகளை அடையவே, சளைக்காத போராட்டங்களை நடத்த வேண்டியுள்ள அவர்கள் மாற்றத்திற்கான பெரும் பசியுடன் உள்ளனர். அவர்களது பண்புகளிலும் மாற்றத்திற்கான தேடலிலும், அவர்களையும் கிளைகளையும் செயல்பட வைக்கும் வாய்ப்பு புறநிலையில் உள்ளது.

•    அவர்களை அமைப்பாக்க, அவர்களின் உணர்வு மட்டத்தையும் பங்கேற்பையும் உயர்த்த, ஒரு நிலையான அமைப்பு வலைப் பின்னலை உருவாக்க வாய்ப்புகள் உள்ளன. ஆனால், இது விடாப்பிடியான கருத்தியல் அமைப்புப் பணிகளால் மட்டுமே சாதிக்கப்பட முடியும்.

ஆனால் இந்த கருத்தியல் அரசியல் அமைப்புப் பணிகளை யார் செய்வார்கள்? சாதாரண உறுப்பினர்களும் கிளைகளும் தாமே செய்யுமா? “எங்கெல்லாம் மாவட்டக் கமிட்டி உறுப்பினர்கள் அல்லது ஒன்றியக் கமிட்டி உறுப்பினர்கள் கிளைகளுடன் சீரான தொடர்ச் சியான தொடர்பைப் பராமரிக்கிறார்களோ, அரசியல் ரீதியாகப் பயிற்றுவிக்கிறார்களே, அங்கெல்லாம் கிளைகள் செயல்பாடுள்ளதாகம், அனைத்துக் கட்சி நிகழ்ச்சிகளிலும் பங் கேற்பதைக் காண முடிகிறது.” கிளை தாமாக இயங்கும் என விட்டுவிடாமல், மேல் கமிட்டிகள் அவை செயல்படுவதில் பங்காற்ற வேண்டும்.

நவம்பர் 2012ல் பீகார், பாட்னாவில் கட்சி நடத்திய பேரணி அதற்குச் சில தினங்கள் முன் பீகார் முதல்வர் நிதிஷ் நடத்திய பேரணியைக் காட்டிலும் அனைத்து அம்சங்களிலும் விஞ்சிச் சென்றதாக முதலாளித்துவ ஊடகங்களே எழுதினார்கள். அந்த வெற்றிக்கு, நமது 2300 கிளைகளும் செயல்பட்டது முக்கியக் காரணம். இப்போது, நரேந்திர மோடியை முன் நிறுத்தி பீகாரின் நிலப்பிரபுத்துவ சாதி ஆதிக்க சக்திகள் ‘ஓங்கார்’ பேரணி நடத்த உள்ளன. மேற்கு வங்கம், உத்தரபிரதேசம், ஜார்கண்ட் மாநிலங்களிலிருந்து எல்லாம் வருவதற்கு கட்டணம் கட்டி, ரயில்கள், பேருந்துகள், படகுகள் முன் பதிவு செய்துள்ளனர்.

நாம் அக்டோபர் 30 அன்று ‘கபர்தார்’ (எச்சரிக்கை) பேரணி நடத்த உள்ளோம். இப்போதுள்ள 3000 கிளைகளும், ஒரு கிளைக்கு 50 பேருக்கு குறையாமல் அணி திரட்ட முடிவு செய்துள்ளோம்,

கட்சிக் கிளைக்கு அவசியமான பத்து அம்சங்களை ஆவணத்தின் 33ஆவது பத்தி பின்வருமாறு சொல்கிறது.

33ஆவது பத்தி

ஒரு செயலூக்கமான, துடிப்பான கிளைக்கு அவசியமானவை:

1) மாவட்டக் கமிட்டி உறுப்பினர்/ஒன்றியக் கமிட்டி உறுப்பினர்/உள்ளூர் கமிட்டி ஒரு கிளையை (கிளைகளை) உருவாக்க, கண்காணிக்க, பொறுப்பாக்கப்படுவது; பதில் சொல்லக் கடமைப்பட்டவராக்கப் படுவது;

2) ஒவ்வொரு கிளையிலும் 3ல் இருந்து 5 உறுப்பினர்கள் வரையிலான ஒரு தலைமைக் குழு உருவாக்கப்படுவது;

3) 15 நாட்களுக்கு ஒருமுறை கிளைக்கூட்டங்களை நடத்துவது,கட்சிப் பத்திரிக்கைகள்,பிரசுரங்கள், சுற்றறிக்கைகள் இன்னபிறவற்றை கூட்டாகப் படிப்பது;

4) பொது மக்களின் வாழ்வு, வாழ்நிலையோடு தொடர்புடைய சமூக, அரசியல், பொருளாதார, பண்பாட்டுப் பிரச்சனைகளைப் பற்றி விவாதிக்க, கிராம/குடியிருப்பு  மட்டத்திலான மாதக் கூட்டங்களை நடத்துவதன் மூலம், மக்களுடன் நெருக்கமான பிணைப்புகளை பராமரிப்பது;

 5) தேர்தல் சமயத்தில், வாக்காளர் பட்டியல் திருத்தப்படுவதை கண்காணிப்ப லிருந்து துவங்கி வாக்குச் சாவடி வேலை வரையிலான தொடர்ச்சியான தேர்தல் தயாரிப்பு வேலையை எடுத்துக் கொள்வது;

6) உள்ளூர்மட்ட கிளர்ச்சியானாலும் அல்லது ஒன்றிய, மாவட்ட, மாநில, தேசிய அளவிலான அரசியல் நிகழ்ச்சிகளானாலும், கிளைகள் தங்கள் பகுதியிலிருந்து மக்களை அணி திரட்டுவதற்கு அக்கறை செலுத்துவது.

 7) ஒன்றிய/மாவட்ட மட்டத்திலான கிளைச் செயலாளர்/தலைமைக் குழுக்கள் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கூடுவது;

8) குறைந்த பட்சம் இரண்டு கட்சிப் பத்திரிகை பிரதிகளுக்கு சந்தா சேர்ப்பது

9) கட்சிக்கிளை உறுப்பினர்களைப் புதுப்பிப்பது, புதிய பரிட்சார்த்த உறுப்பினர்களை சேர்ப்பது, ஆகியவற்றை உறுதிப்படுத்துவது;

10) கட்சி உறுப்பினர்களிடமிருந்து மாத/காலாண்டு லெவியை வசூலிக்க, மக்களிடமிருந்து பருவகால தானிய வசூல் மேற்கொள்வதைக் கட்டமைக்க, கிளைகள் முன்முயற்சி எடுப்பது ஆகிய இவை அனைத்தும் அவசியம்.

ஆவணம், மக்களுடன் தொடர்ச்சியான தொடர்புகளைப் பராமரிக்க, கட்சிக் கிளைகள் அல்லது வெகுமக்கள் வர்க்க அமைப்புகளின் உள்ளூர்மட்ட அமைப்புகளை வழி நடத்துவ தற்குத் தகுதி வாய்ந்த, உள்ளூர் அரசியலில் தலையிடவும் பரந்த இயக்கங்களில் பங்கேற்கவும் மக்கள் திரளை அணிதிரட்டுகிற செயலூக்கம் உடையவர்களாக உள்ளூர் கமிட்டி உறுப்பினர்கள் இருக்க வேண்டும் என்கிறது.

கிளைகள் உள்ளூர் கமிட்டிகள் பற்றி எல்லாம் பேசுகின்ற ஆவணம் உறுப்பினர்கள் செயல்பாட்டின் முக்கியத்துவம் பற்றியும் சொல்கிறது. “தற்போதுள்ள கேந்திரமான பிரச்சனை, கட்சி நடவடிக்கைகளில் உறுப்பினர்களின் தொடர்ச்சியான செயல்பாட்டை உறுதிப் படுத்துவதே ஆகும்.

மக்களுடன் நெருங்கிய பிணைப்புக்களை உறுதிப்படுத்துவது, செயல் துடிப்பான கிளைகள், கட்சிப் பத்திரிகைகளின் அதிகரித்த விநியோகம், குறித்த காலத்திலான லெவி வசூல் போன்ற பலவற்றுக்கும், இதுதான் திறவுகோல்.”
ஆவணம் கட்சி உறுப்பினர்கள் எப்படி இருக்க வேண்டும் எனச் சொல்கிறது.

 “கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களின் பாத்திரம், வர்க்க உணர்வு, கட்டமைக்கப்பட்ட செயல்துடிப்பு என்ற இரண்டு வகையிலும் சாதாரண மக்களைக் காட்டிலும் கண்டிப்பாக வித்தியாசப்பட்டிருக்க வேண்டும் என்பது சொல்லாமலே விளங்கும்.”

உறுப்பினர்கள், கிளைகள், உள்ளூர் கமிட்டி உறுப்பினர்கள் எப்படி இருக்க வேண்டும் என்றெல்லாம் வலியுறுத்தும்போது, மாவட்டக் கமிட்டி உறுப்பினர்கள், மாநிலக் கமிட்டி உறுப்பினர்கள், மத்தியக் கமிட்டி உறுப்பினர்கள் பங்கு ஆக மேலானதாக இருந்தாக வேண்டும்.

அமைப்பு விவகாரங்களில் தன்னெழுச்சிக்கும் துண்டு துக்காணி கத்துக் குட்டித்தனத்திற்கும் விடை கொடுக்க ஆவணம் முன்வைக்கும் பல நடவடிக்கைகளில், இரு நடவடிக்கைகளுக்கு குறிப்பான முக்கியத்துவம் உண்டு.

ஆண்டில் நான்கு முறை கிளைச் செயலாளர்கள், தலைமைக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தை மாவட்ட/ஒன்றிய அளவில் மாவட்டக் கமிட்டிகள் ஏற்பாடு செய்ய வேண்டும். அதே போல், ஆண்டில் இருமுறை, மாநில செயலாளர்களும் மாநில அமைப்புத் துறைகளும், அமைப்பு நிலவரம் பற்றி ஆழமாகப் படிக்க, மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை கூட்ட வேண்டும்.

கடைசியாக ஒரு விசயம். அமைப்பு முக்கியமான ஓர் ஆயுதம். அதற்குத் தனிக் கவனம் தேவை. மாலெ கட்சி நிறுவன பொதுச் செயலாளர் தோழர் சாரு மஜøம்தார் “மக்கள் நலனே கட்சியின் நலன்” என்கிறார். இந்திய மக்கள் விடுதலைக்காக, நாம் வலுவாகவும் விரிவாகவும் கட்சி கட்ட வேண்டும். அமைப்பை உறுதிப்படுத்த வேண்டும். இந்த நோக்குநிலையிலிருந்து 9ஆவது காங்கிரசின் 48ஆவது பத்தியை நினைவுபடுத்திக் கொள்வோம். 
          
“நாடெங்கிலும், ஜனநாயகம், நீதி, சமூக மாற்றத்திற்கான மக்கள் போராட்டங்களின் எழுச்சி நிலவுகிறது. நமது அனைத்து சக்தியையும் நம்மால் ஒருமுகப்படுத்த முடிந்தால், முன் முயற்சியைக் கைப்பற்றினால், இடதுசாரி முகாமுக்குள் உள்ள சம நிலையை நாம் நிச்சயம் மாற்ற முடியும். போராடும் இடது, முற்போக்கு ஜனநாயக சக்திகளின் பரந்த பிரிவினர் அணிதிர ளும் மய்யமாக உருவெடுக்க முடியும். இந்த சாத்தியப்பாட்டை அடைய, நமது புரட்சிகர ஆற்றல் மற்றும் உணர்வை ஒன்று திரட்டி, நமது ஆதாரங்கள் அனைத்தையும் ஆகச்சிறந்த விதத்தில் பயன்படுத்த, கட்சி மற்றும் அதனுடன் இணைந்து செயல்படும் வெகுமக்கள் அமைப்புகளின் அமைப்பு வலைப்பின்னல், அதற்கான பொறியமைவாக இருக்கும். நாம் அமைப்பை முறைப்படுத்துவோம்.

அனைத்து கட்சிக் கமிட்டிகளையும் அவற்றின் முழுமையான செயல்பாட்டிற்கு கொண்டு வருவோம். ஒவ்வொரு கட்சிக் கட்டமைப்பின் செயலாற்றலையும் முன்னேற்றுவோம். செயல்துடிப்பான கிளைகள் மற்றும் உயிரோட்டமான உள்ளூர் கமிட்டிகளின் வலைப்பின்னலில் ஒட்டுமொத்த உறுப்பினர்களையும் அமைப்பாக்குவோம். ஒரு வலுவான அய்க்கியப்பட்ட கட்சி மூலம் மட்டுமே மக்களின் வளர்ந்துவரும் எழுச்சியின் மீது திறன் வாய்ந்த தலைமையளிக்க முடியும்.

கட்சியை அதன் அடுத்த கட்ட முன்னேற்றத்திற்கு எடுத்துச் செல்ல கத்துக்குட்டித்தனத்துக்கும் தற்காலிகவாதத்துக்கும் விடை கொடுப்போம்; கட்சி முழுவதும் ஆழமான, கடினமான புரட்சிகர வேலை நடையை பரவச் செய்வோம்”.                     

Search