COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Tuesday, October 1, 2013

நரேந்திர தபோல்கர்கள் தோன்றிக் கொண்டே இருப்பார்கள்! - பாலசுந்தரம்

மத்திய, மாநில அரசுகள் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தைக் கொண்டு வரவேண்டுமென்று கருணாநிதியும் வீரமணியும் கூறியுள்ளனர். மகாராஷ்ட்ராவின் நரேந்திர தபோல்கரது நெடிய போராட்டத்தின் விளைவாக மகாராஷ்டிரா அரசாங்கம் மூடநம்பிக்கை ஒழிப்பு அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்திருப்பதையும் கருணாநிதி சுட்டிக்காட்டியுள்ளார்.

மூடநம்பிக்கை ஒழிப்பில் முப்பது ஆண்டுகளுக்கு மேலான நரேந்திர தபோல்கரது போராட்டங்களைப் பாராட்டி வீரவணக்கம் செலுத்தியுள்ளார். இந்தக் கருத்துக்களை சொல்லும்போது தமிழ்நாட்டில் நடந்துள்ள நரபலி போன்ற சில மூடநம்பிக்கைச் சம்பவங்களையும் பட்டியலிட்டுள்ளார். ஆனால் அவரது ஆட்சிக் காலத்தில், மதுரைக்குப் பக்கத்தில், திமுக பிரமுகர் கட்டி வந்த கல்லூரியில் புகுந்துள்ள கெட்ட ஆவியை விரட்டுவதாகக் கூறி கச்சைக்கட்டியைச் சேர்ந்த 5 வயது தலித் ஏழைச் சிறுமி ராஜலட்சுமியை நரபலியிட்ட சம்பவத்தை ஏனோ சுட்டிக்காட்டவில்லை!

திராவிட இயக்கத்தின் நூறாவது ஆண்டை கருணாநிதி கொண்டாடி முடித்துவிட்டார். நீதிக்கட்சி தமிழ்நாட்டை 13 ஆண்டுகள் ஆண்டது. திமுக, அதிமுக 46 ஆண்டுகளாக ஆண்டு வருகின்றன. கருணாநிதி அய்ந்து முறை மாநிலத்தின் முதல்வராக ஆட்சி புரிந்துள்ளார். ஆனபோதும் இப்போது கருணாநிதியும் வீரமணியும் மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டம் வேண்டுமென்று கேட்பது வியப்பாக இருக்கிறது.

மாநிலத்தின் முதல்வராக மட்டுமின்றி மத்திய ஆட்சி அதிகாரத்தில் நீண்ட காலமாக பங்கு வகித்துள்ள திமுக, முரசொலி மாறன் போன்ற திராவிட இயக்க பெருந்தலைவர்களை செல்வாக்குமிக்க அமைச்சர்களாக கொண்டிருந்த திமுக, மத்திய அரசை வற்புறுத்தி இது போன்றதொரு சட்டத்தைக் கொண்டு வருவதற்கு முயற்சி எடுத்திருக்கலாம். தமிழை செம்மொழியாக அறிவிக்கச் செய்த, சேது சமுத்திரத் திட்டத்தை அறிவித்து செயல்படுத்த வைத்த கருணாநிதி மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் ஒன்று கொண்டு வர முயற்சி எடுத்திருக்கலாம். இந்திய அரசியல் சட்டத்தின் பிரிவு, 51(அ)(ஏ) குடிமக்களின் அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பது பற்றி பேசுகிறது. இதை சுட்டிக் காட்டி அறிவியல் மனப்பான்மைக்கு எதிரான மூடநம்பிக்கைகளை ஒழிக்க சட்டம் கொண்டு வர முயற்சி எடுத்திருந்தால் மகாராஷ்ட்ரா போல் மத்திய அளவிலே சட்டம் கொண்டு வந்திருக்கலாம்.

கருணாநிதி, தபோல்கருக்கு வீரவணக்கம் செலுத்தி திராவிட இயக்கத்தின் தோல்வியையும் பெரியாரின் கொள்கைகளுக்கு துரோகமிழைத்ததையும் மறைத்துக் கொள்ளப்பார்க்கிறார். கச்சைகட்டி நரபலிக் குற்றவாளிகளை பாதுகாத்த குற்றத்தையும் மறைத்துக் கொள்ளப்பார்க்கிறார்.

கடவுள் இல்லை. கடவுளை கற்பித்தவன் முட்டாள் என்று சொன்ன பெரியாரின் சீடர் அண்ணா ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்று சொன்னார். ஓடாமல் கிடந்த திருவாரூர் தேரை ஓட்டிக்காட்டியதற்காக கருணாநிதி தன்னைத்தானே பாராட்டிக் கொண்டார். பெரியாரது நாத்திகக் கொள்கைகளிலிருந்து துண்டித்துக் கொள்வதற்கு அண்ணா முதலான திராவிட இயக்கத் தலைவர்கள் அரும்பாடுபட்டு வெளியே வந்தனர்.

ஆட்சியதிகாரத்தைப் பிடிக்க ஆத்திகர்களின் ஆதரவும் தேவை என்பதற்காக பெரியாரது நாத்திக கொள்கைகளை விலக்கி வைத்தனர். கடவுள் மறுப்பு, பெண்ணடிமை ஒழிப்பு, சாதி ஒழிப்பு, மூடநம்பிக்கைகள் எதிர்ப்பு என்பதெல்லாம் தூக்கியெறியப்பட்டன. திராவிட இயக்கத் தலைவர்கள் நிலப்பிரபுக்களாகவும் முதலாளித்துவப் பண்ணையார்களாகவும் உயர்ந்தனர்.

இதன் தொடர்ச்சியாக, கடவுள் பக்தர்களாக, கோவில் தர்மகர்த்தாக்களாக, பிற்போக்கு கொள்கைகளின் பிரதிநிதிகளாக தங்களை உயர்த்திக் கொண்டனர். திமுகவிலிருந்து பிரிந்த எம்ஜிஆர் மூகாம்பிகை பக்தரானார். அவரது வாரிசு ஜெயலலிதாவின் போயஸ் தோட்டம் ஜோதிடர், சாமியார்களின் விருந்து மண்டபமாகிவிட் டது. பெரியார் மரபிலிருந்து கிளைத்தவர்கள் ஆத்திக பூக்களாக பூத்துக் குலுங்குகின்றனர்.

சமூக சீர்திருத்த இயக்கத்துக்காக இந்தியா முழுவதும் அறியப்பட்ட தமிழ்நாட்டில் நரபலி, பில்லி சூனியம், மாந்திரிகம், ஜோதிடம், வாஸ்து என அனைத்து வகை மூட நம்பிக்கைகளும் எழுச்சி பெற்றுள்ளதற்கு திராவிடக் கட்சிகள் பதில் சொல்லியாக வேண்டும். பழைய வகை மூடநம்பிக்கைகள் மட்டுமின்றி புதிய வகை மூடநம்பிக்கைகளையும் கொண்டு வந்துள்ளன. திராவிட ஆட்சிகளும் கட்சிகளும், பெரியார் கொள்கைகளை உலகமயமாக்கியதற்காக தன்னை பாராட்டிக் கொள்ளும் வீரமணி, சொந்த புத்தி தேவையில்லை, அய்யா தந்த புத்தி போதும் என்று கூறுகிறார்.

பெரியாரோடு அறிவின் வளர்ச்சி முற்றுப் பெற்றுவிட்டது என்று கூறுவதும் மூடநம்பிக்கைதான். கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, ராமதாஸ், வைகோ தங்களை மனிதக் கடவுள்களாக படைத்துக் கொண்டு தொண்டர்களை பக்தர்களாக மாற்றி அரசியல் மூடநம்பிக்கைகளை வளர்த்து விட்டனர். அவர்களது பிறந்த நாட்களுக்காக ஆளுயர கட்அவுட் கட்டுவது, போட்டி போட்டுக் கொண்டு விழா நடத்துவது மலர் கிரீடம் சூட்டுவது, பணமாலை அணிவிப்பது, காவடி எடுப்பது, பால் குடம் தூக்குவது, மண்சோறு சாப்பிடுவது போன்ற மூடநம்பிக்கை செயல்களை அரசியல் நடவடிக்கைகளாக ஆக்கிவிட்டனர். இவைதான் பெரியார் வாரிசுகளின் பகுத்தறிவு இயக்கமாகிவிட்டது. நாட்டின் வேறெந்த மாநிலத்திலும் காணமுடியாத காட்சிகள் இவை.

மாபெரும் ஊடக பலத்தைக் கொண்டிருக்கும் கருணாநிதியின் குடும்பத் தொலைக் காட்சிகள் அனைத்துவகை மூடநம்பிக்கை கருத்துகளைப் பரப்புவதில், வளர்ப்பதில் மிருக பலத்துடன் செயல்படுகின்றன. கருணாநிதியின் சன், கலைஞர், தொலைக் காட்சிகளும் பெரியாரால் பாராட்டப்பட்ட ஜெயலலிதாவின் புகழ்பாடும் ஜெயா தொலைக்காட்சியும் மூட நம்பிக்கை எதிர்ப்பு பகுத்தறிவு கருத்துகளை பிரச்சாரம் செய்தாலே மக்கள் மத்தியில் பெரிய அளவில் அறிவியல் மனப்பான்மையை தூண்டி விட முடியும். இன்று போல் ஊடக பலமில்லாத அந்த நாட்களில் பெரியார் செய்த சாதனைகளை இன்று இவர்கள் செய்ய முடியாதா?

பூலே, அம்பேத்கர் பகுத்தறிவு இயக்க மரபின் தொடர்ச்சியாக நரேந்திர தபோல்கர் தனது உயிரைக் கொடுத்து மூடநம்பிக்கைகளுக்கு எதிரான சட்டத்தைக் கொண்டு வருவதில் வெற்றி பெற்றிருக்கிறார். பெரியார் பாரம்பரியத்துக்கு உரிமை கொண்டாடும் அண்ணாதுரை, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, வீரமணி, வைகோ, ராமதாஸ் போன்றோர் இருந்தும் தமிழ்நாட்டில் இதுவரை மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் ஒன்று கொண்டு வரப்படவில்லை என்பது வியப்புகளுக்கெல்லாம் வியப்பாகவே உள்ளது.

பெரியார் ஒரு பிள்ளையார் சிலையை உடைத்தார். அதற்கு பழிவாங்குவது போல் இன்று தமிழ்நாட்டின் மக்கள் தொகைக்கு இணையாக பிள்ளையார்கள் பிறந்து வருகின்றனர். பெரியார் ராமனை செருப்பால் அடித்ததற்கு பழிவாங்குவதுபோல கருணாநிதியின் கனவுத் திட்டம் ராமன் பெயரால் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இது மிகப் பெரிய வரலாற்று முரண். இந்த முரணை உருவாக்குவதில் பெரியார் சீடர்களுக்கு பெரும் பங்குண்டு.
ஜெயலலிதாவுடன் அறிக்கைப்போர் நடத்தி ஓய்ந்துபோன கருணாநிதி, ஜெயலலிதா பதில் அறிக்கை விடமாட்டார் என்ற நம்பிக்கையில் மூட நம்பிக்கை ஒழிப்புச் சட்டம் ஒன்று வேண்டுமென்று கேட்டுள்ளதைத் தவிர வேறு முக்கியத்துவம் கருணாநிதியின் அறிக்கையில் இருப்பதாக கொள்ளமுடியுமா?

செப்டம்பர் 17 அன்று ஜெயலலிதா உள்ளிட்ட அனைத்து திராவிடக் கட்சித் தலைவர்களும் பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பார்கள். அந்த நாளிலும் தமிழ்நாட்டின் ஏதாவதொரு மூலையில் கடவுளின் பேரால், மதத்தின் பேரால், சாதியின் பேரால், அரசியலின் பேரால் மூடநம்பிக்கைகள் அரங்கேறிக் கொண்டிருக்கும்.

அதே சமயம், மூடநம்பிக்கைகளுக்கு எதிராக நரேந்திர தபோல்கர்களும் தோன்றிக் கொண்டே இருப்பார்கள். நரேந்திர தபோல்கர் படுகொலை சொல்லும் செய்தி, பார்ப்பனியம் உள்ளிட்ட பழமைக் கருத்துகள், அனைத்து வகை மூட நம்பிக்கைகளுக்கு எதிராக போராடிய நரேந்திர தபோல்கர் உள்ளிட்ட இந்தியாவின், தமிழ்நாட்டின் மிகச் சிறந்த பகுத்தறிவுவாதிகள், அறிவியல் சிந்தனையாளர்களின் உயரிய மரபின் தொடர்ச்சியாக கம்யூனிஸ்ட்கள், முற்போக்காளர்கள்,  இளம் தலைமுறையினர் முன்வந்தாக வேண்டும். அந்தப் போராட்டத்தில் பெரியாரை தண்டித்த கருணாநிதி, ஜெயலலிதாக்களும் தண்டிக்கப்பட வேண்டும்.

Search