COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Tuesday, October 1, 2013

இராணுவம் தொடர்பான சர்ச்சைகள் - எஸ்.குமாரசாமி


“…புல்லுருவியாய் வளர்ந்த வேண்டாத தசைப் பிண்டமானது, சமுதாயச் செலவில் உண்டு கொழுத்து சமுதாயத்தின் தங்கு தடையற்ற இயக்கத்தைக் தடுத்திடும் ‘அரசானது’ இதுகாறும் உறிஞ்சியிழுத்துக் கொண்ட சக்திகள் அனைத்தையும் கம்யூன் அரசியல் அமைப்பு சமுதாய உடலுக்கு மீட்டளித்திருக்கும். இந்த ஒரு செயலாலேயே பிரெஞ்சு நாட்டின் புத்தெழுச்சி துவக்கி வைக்கப்பட்டிருக்கும்...

தேச பக்தி.... நாட்டுப்பற்று... அதன் மொத்த உருவமே இந்திய இராணுவம் என்கிறார்கள். இப்போது இராணுவத்தின் தலைமைத் தளபதி வி.கே.சிங் மீது சேறு வாரி இறைக்கப்படுகிறது. அவரும் பதில் சொல்லும் விதத்தில் இதுவரை வெளிவராத இரகசியங் களை வெளிப்படுத்துகிறார். தினமணி ராணுவ இரகசியங்கள் வெளி வரலாமா எனக் கவலைப் படுகிறது.

மோடி, வழக்கம்போல், பாகிஸ்தான் மீது பகைமை நஞ்சு உமிழ, எல்லையில் இராணுவ வீரர்கள் தலைகள் துண்டிக்கப்படும்போது, மன்மோகன் அமெரிக்காவில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்போடு சிக்கன் பிரியாணி சாப்பிடலாமா என திருச்சியில் பேசுகிறார். எல்லையில் உயிரிழக்கும் இராணுவ வீரர்களுக்கும், கென்யாவில் உயிரிழந்தவர்களுக்கும் அஞ்சலி செலுத்தி உரையைத் துவக்குகிறார். புனிதப் பசுக்கள் மீது (இராணுவம் என்ற புனிதப் பசு உட்பட), சங் பரிவாருக்கு எப்போதுமே மிகுந்த அக்கறை உண்டு!.

இராணுவம் புனிதமானதா?
போற்றிப் பாடப்பட வேண்டியதா?

11 லட்சத்து 30 ஆயிரம் பேர் உள்ள இந்திய இராணுவத்தின் சாதாரண படை வீரர்கள், கீழ் மட்டங்களில் உள்ளவர்கள், சாமான்ய உழைக்கும் மக்கள் குடும்பங்களிலிருந்து வருபவர்கள். அவர்களுக்கு, இராணுவத்தில்  இருப்பது, ஒரு வேலை. ஆனால், இராணுவத்தின் உயர் நிலை யில் இருப்பவர்களில் ஒரு பிரிவினர், போர் சார்ந்த பொருளாதாரம் பலப்படுவதில் அக்கறை கொண்டவர்கள். மாபெரும் ஊழல்களுக்கான ஊற்றுக்கண், இராணுவம் வாங்கும் விற்கும் விசயங்களில் இருக்கிறது. இவை அவ்வப்போது வெளியே வந்தாலும், தேச நலன் தேச பக்தி என்ற பெயரில், முதலாளித்துவ அரசியல்வாதிகளும் முதலாளித்துவ ஊடகங்களும், அவற்றை எப்படியோ மூடி மறைத்து விடுகிறார்கள். போபர்ஸ் பீரங்கி, ஜீப், ஹெலிகாப்டர், நீர்மூழ்கி, சவப்பெட்டி, ஆதர்ஷ், சுக்னா நில ஊழல் எனப் பட்டியல் நீளும்.

இராணுவ இரகசியம்...
ஆகப் பெரிய பொய் இல்லையா?

அமெரிக்க உளவு நிறுவனமான தேசிய பாதுகாப்பு முகாமை (என்எஸ்ஏ), இந்தியாவில் விண்வெளி ஆய்வுகள், இராணுவ விசயங்கள், தகவல் தொழில் நுட்பத்துறைப் பணிகள், தொழில்துறை இலக்குகள் ஆகியவை பற்றிய 1350 கோடி தகவல் துளிகளை ஒரு மாதத்தில் மட்டும் வேவு பார்த்து அறிந்துள்ளது. பிரேசில் அதிபர் தில்மா ரூசுப்,  “அமெரிக்கா, பயங்கர வாதத்தைத் தடுப்பதற்காக உளவு பார்ப்பதாகச் சொல்கிறது. உண்மையில், தனது நாட்டின் பெருநிறுவன லாபங்களுக்காக, அவர்கள் சந்தைக்காக, அவர்களது தேவைகளுக்கேற்ப தகவல்களை வழங்கவே, உளவு பார்க்கிறது” என்று கடுமையாகச் சாடி, தம் எதிர்ப்பைப் பதிவு செய்ய அமெரிக்கப் பயணத்தை ரத்து செய்தார். அமெரிக்காவின் கண் பார்வையில் இந்திய இராணுவ பொருளாதார இரகசியங்கள் இருப்பது பற்றி, மன்மோகனுக்கோ நரேந்திர மோடிக்கோ கவலை இல்லை.

பையை விட்டு வெளியே குதித்த பூனை

வி.கே.சிங் இந்திய இராணுவத் தலைமைத் தளபதியாய் இருந்தவர். ஓய்வு வயது தவறு என வழக்குப் போட்டு, கூடுதல் வருடங்கள் வேலை பார்க்க முயன்றவர். அந்த முயற்சியில் தோற்றவர். இந்திய இராணுவத்திடம் போதுமான வெடி பொருட்கள் இல்லை, ஒரு போர் வெடித்தால், இரு நாட்களுக்கு மேல் வெடிபொருட்கள் இருக்காது என்றவர்தான் வி.கே.சிங். தமக்கு, ஒரு கோப்பை சாதகமாக முடிக்க லஞ்சம் தர முன் வந்தார் எனவும், அந்த விசயத்தைத் தாம் இராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணியிடம் தெரிவித்துவிட்டதாகவும் சொல்லி பரபரப்பு ஏற்படுத்தியவர்.

முன்னாள் தலைமை தளபதி வி.கே.சிங், பிரதமர் கனவு காணும் மோடியுடன், முன்னாள் இராணுவ வீரர்கள் பேரணி ஒன்றில் செப்டம்பர் 2013ல் அரியானாவில் கலந்து கொண்டார். மார்ச் 2013 தேசிய இராணுவ விசாரணை அறிக்கை ஒன்று, வசதியாக செப்டம்பர் 2013ல் கசிய விடப்பட்டது.

•    தலைமை தளபதி வி.கே.சிங் டெக்னிக்கல் சப்போர்ட் டிவிசன் என்ற இராணுவ நுண்ணறிவுப் பிரிவு ஒன்றை மனம் போன போக்கில் நடத்தினார்.

•    இந்தப் பிரிவு காஷ்மீரின் ஓமர் அப்துல்லா அரசைக் கவிழ்க்க முயன்றது.

•    இந்தப் பிரிவு கணக்கில் வராத ஊழல்களில் ஈடுபட்டது.

•    ஒரு தொண்டு நிறுவனம் மூலம், தமக்கு அடுத்து தலைமை தளபதியான பிக்ரம் சிங், காஷ்மீரில் போலி மோதல் படுகொலைகள் செய்ததால் பதவியில் அமரத் தகுதி இல்லாதவர் என வழக்குப் போட வைத்த, வி.கே.சிங் டெக்னிக்கல் சப்போர்ட் டிவிசன் பணத்தைத் தந்தார்.

மேலே குறிப்பிட்டவை, வி.கே.சிங் மீது சொல்லப்பட்ட குற்றச்சாட்டுக்கள்.
வி.கே.சிங், டெக்னிக்கல் சப்போர்ட் டிவிசன் தொடர்பாக எந்த அறிக்கை வெளியிடுவதும் தேசத் துரோகம் என்றார். இந்த டிவிசன் கலைக்கப்படாமல் இருந்திருந்தால், எல்லையில் இராணுவ வீரர்கள் சமீபத்தில் பலியானது நடந்திருக்காது என்றார். மாநிலத்தில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தவும், மக்கள் மனங்களை வெல்லவும், அவர்களைப் பிரிவினைப் பாதையில் இருந்து திசை திருப்பி நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும், டெக்னிக்கல் சப்போர்ட் டிவிசன் மூலம் பணம் தரப்பட்டுள்ளது எனவும், இதில் வியப்பதற்கு எதுவும் இல்லை என்றும், இது 1947 முதலே நடப்பதாகவும் சொன்னார். 2011ல் கிராமப் பஞ்சாயத்து தேர்தல்கள் வெற்றிகரமாக நடத்தப்படுவதற்கு தாம் உருவாக்கிய டெக்னிக்கல் சப்போர்ட் டிவிசனே காரணம் என்றார்.

ஒரு புறம், ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரங்கள் சட்டம், தன் பூட்ஸ் கால்களால் காஷ்மீர் மக்கள் மீது தொடர்ந்து  ஒடுக்குமுறை ஏவுகிறது. மறுபுறம், தேசபக்தி  நாட்டுப் பற்று, பணம் கொடுத்து வாங்கப்படுகிறது!

மார்க்ஸ் முதலாளித்துவ சமூகத்தில், திடமானவை காற்றில் கலந்து கரைவதும், புனிதமானவை மரியாதை இழப்பதும் நடக்கும் என்கிறார். இந்திய ஆளும் வர்க்கங்கள், அரசியல் கட்சிகள் எல்லோருக்கும் மக்கள் நம்பிக்கையை இழந்து வருகின்றனர். நல்ல
அறிகுறிதான்!                                                               

Search