COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Tuesday, October 1, 2013

சிறுமியை கூட்டுப் பாலியல் வன்முறை செய்த கயவர்களை கைது செய்! தண்டனை வழங்கு!

திருவள்ளூர் மாவட்டம் நல்லூர் ஊராட்சி டாக்டர் அம்பேத்கர் நகரில் செப்டம்பர் 15 அன்று 5ஆம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப் பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி மாலெ கட்சி தலைமையில் பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியலில் ஈடுபட்ட மக்களிடம் கலைந்து செல்லுங்கள் இல்லையென்றால் சுட்டு விடுவோம் என்று மிரட்டிய காவல்துறையினரைப் பார்த்து ‘துணிச்சல் இருந்தால் சுடு’ என்று பெண்கள் சொன்னார்கள். ‘உங்கள் வீட்டில் யாருக்காவது இப்படி நடந்திருந்தால் இப்படித்தான் பேசுவீர்களா’ என்றும் கேள்வி எழுப்பினார்கள். குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப் படுவார்கள் என்று காவல்துறை உயரதிகாரிகள் உறுதியளித்ததன் பேரில் அன்று தற்காலிகமாக சாலை மறியல் போராட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. இரண்டு நாட்களில் குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

இந்தப் பகுதியில் கொலை, கொள்ளை, கஞ்சா விற்பனை, பெண்களை, குழந்தைகளை பாலியல் வன்முறைக்குள்ளாக்குவது போன்ற சட்ட விரோத, சமூக விரோத செயல்கள் தொடர் கதையாக நடந்து கொண்டிருக்கின்றன. இது போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது உரிய கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி டாக்டர் அம்பேத்கர் நகரில் 23.09.2013 அன்று கண்டனப் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழக மாவட்டப் பொறுப்பாளர் தோழர் சாந்தி தலைமையில் நடந்த கூட்டத்தில் சிபிஅய்எம்எல் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் தோழர் ஜானகிராமன், புரட்சிகர இளைஞர் கழக தேசிய செயலாளர் தோழர் பாரதி, மாநிலக்குழு உறுப்பினர் தோழர் எ.எஸ்.குமார், அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழக மாநிலத் தலைவர் தோழர் தேன்மொழி, அகில இந்திய மாணவர் கழக மாவட்ட பொறுப்பாளர் தோழர் சீதா, புரட்சிகர இளைஞர் கழக மாவட்ட பொறுப்பாளர் தோழர் எம்.அன்பு,  சிபிஅய்எம்எல் மாவட்டக் கமிட்டி உறுப்பினர் தோழர் அன்புராஜ், சிபிஅய்எம்எல் உள்ளூர் கமிட்டி செயலாளர் தோழர் எஸ்.வாசு ஆகியோர் கண்டன உரையாற்றினர். தமிழ்நாடு ஜனநாயக கட்டுமானத் தொழிலாளர்கள் சங்க மாவட்டப் பொறுப்பாளர் எஸ். ராஜா நன்றியுரையாற்றினார்.

கூட்டத்தில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 300க்கும் அதிகமானோர் பங்கேற்றனர். கூட்டம் நடைபெறுவதற்கு தொடர்ந்து நான்கு நாட்கள் வீடு வீடாக பிரச்சாரம் செய்யப்பட்டது. 9 பெண் தோழர்களுடன் 15 பேர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். பின்வரும் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

•டாக்டர் அம்பேத்கர் நகரில் 10 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்முறை செய்த சமூக விரோதிகளை கைது செய்! தண்டனை வழங்கு!

•பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உரிய நீதியும், நிவாரணமும், மருத்துவமும் வழங்கு!

•பகுதியில் கஞ்சா விற்பனை உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது  நடவடிக்கை எடு!

Search