COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Tuesday, October 1, 2013

மக்கள் திரள் கல்வி வகுப்பு: ஒரு புதிய அனுபவம்

கோவையில் செப்டம்பர் 22 அன்று இரண்டு கல்வி முகாம்கள் நடைபெற்றன. காலையில் ஒரு முகாமும் மாலையில் ஒரு முகாமும் நடைபெற்றது.

காலையில் நடைபெற்ற முகாம் பெரியநாயக்கன்பாளையத்தில் காலை 11 மணிக்கு மதியம் 1 மணி வரை நடைபெற்றது.  சின்னியம்பாளையம் அருகில் மாலை 4 மணி முதல் 7 மணி வரை கல்வி முகாம் நடைபெற்றது. காலையில் நடைபெற்ற கல்வி முகாமில் பிரிக்கால் தொழிலாளர்கள், எல்.எம்.டபுள்யூ தொழிலாளர்கள், அய்டிசி தொழிலாளர்கள், சுபா பிளாஸ்டிக் தொழிலாளர்கள் மற்றும் எம்.எல் கட்சி உறுப்பினர்கள் உட்பட ஏறத்தாழ 350 பேர்கள் கலந்து கொண்டார்கள்.

சின்னியம்பாளையம் கல்வி முகாமில் சாந்தி கியர்ஸ் தொழிலாளர்கள் 244 பேர் கலந்து கொண்டனர். சாந்தி கியர்சில் மொத்தமுள்ள தொழிலாளர்கள் 285 பேர். இவர்களில் 41 பேர் வகுப்பில் கலந்துகொள்ள முடியாமல் போனதற்கு அவர்கள் முன்னரே நிர்ணயித்த நிகழ்ச்சிகள் பலருக்குக் காரணமாக இருந்தன.
பரந்த தொழிலாளர் வர்க்கம் மத்தியில் மாலெ கட்சியின் 9ஆவது காங்கிரஸ் ஆவணமான ‘தொழிலாளர் வர்க்க இயக்கம்: சூழல், கடமைகள், வாய்ப்புக்கள்’ மீதான தீர்மானத்தை எடுத்துச் செல்வது என்ற முடிவு வெற்றிகரமாக அமலாக்கப்பட்டது. 

தொழிலாளர் ஒருமைப்பாடு இதழில் 3 பக்கங்களுக்கு 16 துணைத் தலைப்புக்களில் வெளியிடப்பட்ட முக்கிய அம்சங்கள் படிப்பதற்கு வசதியாக இருந்தது. பங்கெடுத்தவர்களில் 16 பேர் படிக்க மற்றவர்கள் பின் தொடர்வது பார்ப்பதற்கு அற்புதமாக இருந்தது. இரண்டு முகாம்களிலும் இது நடந்தது. இரண்டு முகாம்களிலும் தோழர் குமாரசாமி ஒவ்வொரு துணைத் தலைப்பிற்கும் விளக்கமளித்தார். படிப்பதற்காக 30 நிமிடங்கள், விளக்குவதற்காக 2 மணி நேரம் என வகுப்புகள் நடைபெற்றன.

வகுப்பில் கோவையில் இருக்கும் கட்சி மாநிலக்கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட கமிட்டி உறுப்பினர்கள், தோழர் சந்திரன் மற்றும் ஏஅய்சிசிடியு மாநில நிர்வாகிகள் உட்பட தொழிற்சங்க நிர்வாகிகள், முன்னணி ஊழியர்கள் பங்கு பெற்றனர்.

மக்கள் திரள் கல்வி வகுப்பு ஒரு புதிய அனுபவமே. அதைக் கற்றுக் கொண்டு செழுமைப் படுத்தினால் பயன் தர பல வாய்ப்புகள் உண்டு.

Search