COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Sunday, August 31, 2014

கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதி: 2011 முதல் 2014 வரை

2011 சட்டமன்ற தேர்தல்களில் கந்தர்வ கோட்டை தொகுதியில் போட்டியிட்ட இகக மாலெ, தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதி மக்கள் வாழ்க்கை நிலைமைகளின் அனைத்து அம்சங்கள் பற்றியும் ஒரு சிறுபுத்தகம் வெளியிட்டது.

விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், தலித் பிரிவினர், இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள், சமூக வாழ்வின் வெவ்வேறு அம்சங்கள், வளர்ச்சித் திட்டங்கள் என பல்வேறு அம்சங்கள் பற்றியும் அதில் ஒரு சித்திரம் தரப்பட்டிருந்தது. அந்தச் சித்திரம், பெரும்பான்மை  வாக்காளர்களான வறிய மக்கள் வாழ்வு துன்பத்தில் இருப்பதையே சுட்டிக்காட்டியது.

மூன்றாண்டு ஆட்சி முழுமையான வளர்ச்சி என்று ஜெயலலிதா சொல்வதன் பொருள் கந்தர்வகோட்டை தொகுதியைச் சேர்ந்த மக்களுக்கு என்ன என்பதை தெரிந்துகொள்ள, 2011ல் இருந்த நிலைமைகளை, இன்றைய நிலைமைகளோடு ஒப்பிட்டுப் பார்க்க, இகக மாலெயின் புதுக்கோட்டை மாவட்டக் கமிட்டி ஓர் ஒப்பு நோக்கு ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வின் அடிப்படையில் கந்தர்வகோட்டை தொகுதி மக்களின் இன்றைய வாழ்க்கை நிலைமைகள் பற்றி பின்வரும் புதிய, ஆனால், நிலைமைகளில் பெரிதும் மாற்றம் இல்லாததால், பழைய சித்திரம் முன்வைக்கப்படுகிறது.

விவசாயிகள்

ஓர் ஏழை விவசாயி, 1 ஏக்கர் கடலை பயிர் செய்தால் 2011ல் அவருக்கு மிஞ்சியது ரூ.10,585. அன்று டீசல் ரூ.43. இன்று ரூ.62. இந்த வகையில் கிட்டத்தட்ட ரூ.900 செலவு அதிகரிக்கிறது. உர விலை அன்று ரூ.450. இன்று ரூ.880 முதல் ரூ.1,100. கிட்டத்தட்ட இரண்டு மடங்கு உயர்வு. விவசாயிக்கு கிடைப்பதில் மாற்றம் இல்லை. பாசனத்துக்கு ஆழ்குழாய் கிணறுகளையே நம்பியிருப்பதால், மின்தட்டுப்பாடும் சேர்ந்து கொண்டு டீசல் செலவை இன்னும் அதிகரிக்கிறது. எல்லாமும் சேர்ந்து விவசாயி சாகுபடி செய்கிற நிலப்பரப்பை குறைத்துவிட்டன.

விவசாயத் தொழிலாளர்கள்

2011ல் விவசாயத் தொழிலாளர்களுக்கு ஊரக வேலை உறுதித் திட்டத்தில் சட்டக் கூலி ரூ.119. அப்போது அந்தக் கூலி யாருக்கும் கிடைக்கவில்லை. அளவீட்டு முறையைக் அறி முகப்படுத்தி உழைப்புக்கேற்ற ஊதியம் உழைத்தால்தான் சாத்தியம் என்று அன்றைய துணை முதலமைச்சர் ஸ்டாலின் சொன்னார். இன்று சட்டக்கூலி ரூ.167. இன்று ஸ்டாலின் இல்லை என்றாலும் அளவீட்டு முறை இருக்கிறது. யாரும் சட்டக் கூலி முழுமையாகப் பெறு வதில்லை. மத்தியில் ஆட்சி மாறிய மூன்று மாத காலமாக, மத்தியில் இருந்து நிதி வரவில்லை என்று சொல்லப்பட்டு, மூன்று மாதங்களாக கூலி தரப்படவில்லை. மத்திய நிதி வரவில்லை என்பதை காரணம் காட்டி வேலை மறுக்கப்படு வதால் விவசாயத் தொழிலாளர்களும் நூறு நாள் வேலைக்குச் செல்வதில்லை. வேறுவித மாகச் சொன்னால், வேலை வாய்ப்பு பறி போயுள்ளது. நூறு நாள் வேலைத் திட்டத்தில் புதிதாக யாருக்கும் வேலை அட்டை வழங்கப் படவில்லை. அதாவது, இந்த அரங்கில் புதிய வேலை வாய்ப்பு உருவாகவில்லை.

2011க்குப் பிறகு தொழில்துறையிலும் புதிதாக எந்த மாற்றமும் ஏற்படவில்லை. புதிய ஆலைகள் எதுவும் துவங்கப்படவில்லை.

சாதி ஆதிக்கம்: பொட்டு வைத்த குவளை

கந்தர்வகோட்டை தொகுதியில் வெற்றி பெற்ற அஇஅதிமுக வேட்பாளர் என்.சுப்ரமணி யன் இன்று ஜெயலலிதா அமைச்சரவையில் ஆதி திராவிட நலத்துறை அமைச்சர். 2011ல் இருந்ததை விட இன்று தலித் மக்கள் மீதான தாக்குதல்கள், கவுரவப் படுகொலைகள், சாதி அடிப்படையிலான பாகுபாடான நடவடிக்கை கள் அதிகரித்துள்ளன.

தொகுதிக்குட்பட்ட காட்டாதி, கருக்காக் குறிச்சி ஊராட்சிகளின் தலித் தலைவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. கொத்தனப்பட்டியில் கவுரவக்கொலை, பிசானத்தூரில் தலித் படு கொலை நடந்துள்ளன.

இரட்டைக் குவளை முறை அதிகாரபூர்வமாக ஒழிக்கப்பட்டுவிட்டது. ஆனால், நடை முறையில் வேறு புதிய வடிவங்களில் கிராமப் புறங்களில் நீடிக்கிறது. தேநீர் கடைகளில் தலித் மக்களுக்கு வழங்கப்படும் குவளைகளை வண்ண வண்ண பொட்டுக்கள் அடையாளப்படுத்துகின்றன. எவர்சில்வர் குவளை என்றாலும், பெரிய குவளையில் குறிப்பிட்ட சாதியினருக்கு, சிறிய குவளையில் குறிப்பிட்ட சாதியினருக்கு என்று தரம் பிரித்து தரப்படுகிறது.

22% தலித் மக்கள் வாழும் இந்தத் தொகுதிக்கு புதிதாக ஆதிதிராவிடர் பள்ளிகள் எவை யும் இந்த மூன்று ஆண்டுகளில் துவக்கப்படவில்லை. தலித் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறபோதும், அதற்கேற்ப ஆதி திராவிடர் மாணவர் விடுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவில்லை; இருக்கிற விடுதிகளில் இருப்பிட வசதி  மேம்படுத்தப்படவில்லை.

ஊர் சொத்துக்கள் எவற்றிலும் இன்றும்  தலித் மக்களுக்கு பங்கோ, பாத்தியதையோ இல்லை.

தலித் இளைஞர்கள் விளையாட்டு போட்டிகள் நடத்த முடிவதில்லை. பெரியகோட்டை ஊராட்சிக்குட்பட்ட மோகனூரில், தலித் இளைஞர்கள் விளையாட்டு போட்டி நடத்த முயற்சி செய்தபோது, கள்ளர் பிரிவினர் கலவரம் செய்ய முற்பட்டதால், அதைக் காரணம் காட்டி காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டது. கலவரம் செய்ய முற்பட்டவர்கள் மீது நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை. வீரடிப்பட்டி ஊராட்சியின் இளைஞர்கள் கிரிக்கெட் போட்டி நடத்தியபோதும், கள்ளர்களால் தாக்கப்பட்டனர். இதுபோன்ற சம்பவங்களில் தாக்குதலுக்குக் காரணமானவர்கள் மீது காவல் துறையினர் சட்டப்படியான முறையான நடவடிக்கைகள் எடுப்பதில்லை.

தெம்மாவூரில் முத்தரையர்களுக்கு தனிக் குவளை முறை உள்ளது.

சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகள்

முதியோர் ஓய்வூதியம், கணவனை இழந்த பெண்கள் ஓய்வூதியம் என அனைத்துவிதமான ஓய்வூதியங்களும் நிறுத்தப்பட்டுவிட்டன. இதற்கு முறையான காரணம் ஏதும் அரசு அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படவில்லை.
பொது விநியோகத்திட்டத்தில் 600 குடும்ப அட்டைகள் இருக்கும் ஒரு பகுதியில் 500 குடும்ப அட்டைகளுக்கு மட்டுமே உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. 100% விநி யோகம் இருக்கக் கூடாது என்று பொதுவிநியோக ஊழியர்களுக்கு அதிகாரபூர்வமற்ற விதத்தில் உத்தரவு இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

மருத்துவமனைகள் எண்ணிக்கை, தரம் ஆகியவற்றில் எந்த முன்னேற்றமும் இல்லை. பழைய நிலைமையே தொடர்கிறது.
கால்நடை வளர்ப்பு மக்கள் வாழ்வாதாரம் தொடர்பான முக்கியமான நடவடிக்கையாக இருக்கும் இந்தத் தொகுதியில் கால்நடை மருத்துவமனை புதிதாக ஏதும் இதுவரை அமைக்கப்படவில்லை.

காற்றில் பறக்கும் வாக்குறுதிகள்

தொகுதியில் 40 டாஸ்மாக் சாராயக் கடைகள் உள்ளன. (குடிகாரர்கள் எண்ணிக்கை அதிகரித்திருக்கக் கூடும். இந்த எண்ணிக்கை பற்றிய விவரங்களை அரசுதான் தரவேண்டும்). கந்தர்வகோட்டை தொகுதிக்கு 2011ல் தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்தபோது, கல்லாக்கோட்டை சாராய ஆலையை அங்கிருந்து அகற்றுவதாக, ஜெயலலிதாவே தனது உரையில் நேரடியாக வாக்குறுதி அளித்தார். ஆனால், அந்த ஆலை இப்போதும் எந்த இடையூறும் இல்லாமல் அங்கேயே இயங்கிக் கொண்டிருக்கிறது.
காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் தொகுதிக்கும் வரும் என்றும் தேர்தல் வாக்குறுதி தரப் பட்டது. இந்த விசயத்திலும் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
எங்கும் நிலவுகிற அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் பற்றாக்குறை இங்கும் நிலவுகிறது. இந்த விசயத்திலும் 2011க்குப் பிறகு மாற்றம் எதுவும் இல்லை.

சில அடையாள நடவடிக்கைகள்

வற்றிப் போன குளங்களில் படிக்கட்டுகள் கட்டப்படுகின்றன. பெயருக்கு சில கலையரங் கங்கள், பேருந்து நிழற்குடைகள், கோபுர விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

புதிதாக ஆரம்பப் பள்ளிகள்  திறக்கப்படவில்லை. கல்லாக்கோட்டையில் உள்ள உயர் நிலைப் பள்ளி மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. கரம்பக்குடியில் 2013ல் கலை அறிவியல் கல்லூரி ஒன்றும் கந்தர்வ கோட்டை பாலிடெக்னிக் ஒன்றும் புதிதாக துவங்கப்பட்டுள்ளன.

கந்தர்வகோட்டையில் பேருந்து பணிமனை கட்டுவதற்கான பணிகள் துவங்கியுள்ளன.

மிக்சி, கிரைண்டர் போன்ற விலையில்லா பொருட்களை 50% பயனாளிகள் மட்டுமே பெற்றுள்ளனர். ஆடு, மாடு வளர்ப்பை நம்பியுள்ளமக்கள் நிறைந்த இந்தத் தொகுதியில் ஆடு, மாடுகள் உரியவருக்கு வழங்கப்படவில்லை. 600 பேருக்கு ஆடு, மாடு வழங்க வேண்டிய இடத் தில் 30 பேருக்கு மட்டுமே தரப்பட்டுள்ளன.

ஏழை சொல் அம்பலமேறாது என்ற பழ மொழியை மாற்றி தமிழ்நாட்டில் ஏழை சொல் தான் புனித ஜார்ஜ் கோட்டையில் எதிரொலிக்கும் என்ற புதுமொழியை தனது அரசு நிலை நாட்டியுள்ளதாகச் தனது சுதந்திரதின உரையில் ஜெயலலிதா சொல்லியுள்ளார். ஆனால், கந்தர்வ கோட்டை சட்டமன்ற தொகுதி மக்களின் வாழ்க்கை நிலைமைகள் அவர் சொல்வதற்கு மாறாக அமைந்துள்ளன. அவர் பெருமையாக சொல்லிக் கொள்ளும் விலையில்லா, கட்டண மில்லா பொருட்கள் கூட மக்களுக்கு முழுவதுமாக சென்று சேரவில்லை. மக்கள் வாழ்க்கையை மேம்படுத்தும் திட்டங்கள் என புதிதானவை சொல்லிக்கொள்ளும்படி எவையும் இல்லை. குடிநீர் கூட பெரும்பிரச்சனையாகவே இந்தத் தொகுதி மக்களுக்கு உள்ளது.

ஆட்சிக்கு வந்த மூன்று ஆண்டுகளில் ஒரு தொகுதியைச் சேர்ந்த மக்களின் குறைந்தபட்ச வாழ்வாதாரத்தைக் கூட, ஆதாரங்கள் ஏராளமாக இருந்தும் உறுதி செய்யாத, உறுதி செய்ய முயற்சி செய்யாத அரசு, ஏழை சொல், ஏழையின் சிரிப்பு என்று  பொருத்தமில்லாமல் அவ்வப்போது ஏதாவது சொல்லிக் கொண்டே இருந்தால் தப்பித்து விடலாம் என எதிர்ப்பார்க்கிறது.


Search