COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Sunday, August 31, 2014

ஆலை மூடலுக்கு எதிராக பட்டினிப் போராட்டம்

அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள டால்புரோஸ் ஆலை மூடப்பட்டு 113 தொழிலாளர்கள் வீதியில் நிற்கிறார்கள். டோபஸ்டூல் ஆலை கதவடைப்பால் 36 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுபோல் 5 ஆலைகள் மூடப்பட்டு 215 தொழிலாளர்கள் குடும்பங்கள் தெருவில் நிற்கின்றன. கதவடைப்பு செய்யப்பட்டுள்ள, மூடப்பட்டுள்ள ஆலைகளை உடனடியாகத் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும், அது வரை வேலையின்றி நிற்கும் தொழிலாளர்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி 27.08.2014 அன்று பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் AICCTU தலைமையில் குடும்பத்துடன் பட்டினிப் போராட்டம் நடத்தினார்கள். இதில் 300 பேர் கலந்து கொண்டார்கள்.

பட்டினிப் போராட்டத்திற்கு ஏஅய்சிசிடியு மாநிலச் செயலாளர் தோழர் பழனிவேல் தலைமை தாங்கினார். இகக(மாலெ) சென்னை மாவட்டச் செயலாளர் தோழர் சேகர் துவக்கி வைத்துப் பேசினார். புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் தோழர் முரளிதரன், தோழர்கள் தேன்மொழி, முனுசாமி, மோகன், தேவகி ஆகியோர் வாழ்த்திப் பேசினார்கள். தொழிலாளர்கள் 20 பேர் பட்டினிப் போராட்டத்தில் தங்கள் கருத்தை முன் வைத்தார்கள். பட்டினிப் போராட்டத்தை புரட்சிகர இளைஞர் கழகத்தின் தேசியச் செயலாளர் தோழர் பாரதி முடித்து வைத்துப் பேசினார். முன்னதாக, பட்டினிப் போராட்டத்தை நடத்தவிடாமல் செய்வதற்காகவும், ஆலைகளைத் திறப்பதற்குப் பதிலாக தொழிலாளர்களைக் கணக்கு முடித்துக் கொண்டு போக வைப்பதற்காகவும் மாநில ஆளுங்கட்சியான அதிமுக, மத்திய ஆளுங்கட்சியான பாஜகவைச் சேர்ந்தவர்கள் கடும் முயற்சி எடுத்தார்கள்.

குறிப்பாக, மாநில பிற்பட்டோர் நலம் மற்றும் கைத்தறித் துறை அமைச்சரான அப்துல் ரஹீமின் மைத்துனர் மிரட்டல் நடவடிக்கைகளில் வெளிப்படையாகவே ஈடுபட்டார். மூடப்பட்ட ஆலை ஒன்றை அவர்கள் நேரடியாக எடுத்து நடத்தப் போவதாகவும் அதற்கு வாய்ப்பாக தொழிலாளர்கள் கணக்கு முடித்துப் போய் விட வேண்டும் என்று மிரட்டினார். தொழிலாளர் துறை அதிகாரிகளும் அவருக்கும் நிர்வாகத்தினருக்கும் பல வழிகளில் ஆதரவாகச் செயல்பட்டு தங்கள் விசுவாசத்தைக் காட்டிக் கொண்டார்கள்.

Search