COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Friday, August 15, 2014

திருப்பதி காடுகளில் தொலைந்து போன பழங்குடித் தமிழர்கள்

திருப்பதியில் சேஷாசலம் வனப்பகுதியில் மீண்டும் என்கவுண்டர். கடப்பா மாவட்டம் ராஜம்பேட்டை பகுதியில் செம்மரக்கட்டை கும்பலுக்கும் போலீசுக்கும் மோதல். அடையாளம் தெரியாத தமிழக தொழிலாளர் ஒருவர் பலி என்ற செய்தியை ஊடகங்கள் ஆகஸ்ட் முதல் வாரத்தில் தெரிவித்தன.

 ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில், கடப்பா மாவட்டம் ஓகுல வாரி பள்ளி மண்டலம் காதேலு வனப்பகுதியில் மோதல்; இரண்டு தமிழக தொழிலாளர்கள் பலி, யார் என்ற விவரம் தெரியவில்லை. என்ற ஒரு செய்தியையும் செய்தி ஊடகங்கள் தெரிவித்தன. ஜெயா அரசாங்கத்தின் கவனத்திற்கு வராத தமிழக எதிர்க்கட்சிகளின் கரிசனத்திற்கு உள்ளாகாத இந்த தமிழக தொழிலாளர்கள் யார்?

 ஜூன் மாதத்திலும் போலி மோதலில் கொல்லப்பட்டதாக பலர் பற்றிய படங்களும், செய்திகளும் வெளியாயின. திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலைப் பகுதி தானியார் கிராமம் எஸ்.சிவா, எஸ்.விஜயகாந்த், எஸ்.வெங்கடேசன் கொல்லப்பட்ட செய்திதான் செம்மரக் கட்டை வெட்டும் பணியில் தமிழகத் தொழிலாளர்கள் ஈடுபட்டு, ஆயிரக்கணக்கில் ஆந்திராவின் சிறைகளில் சிக்கித் தவிப்பதை வெளியுலகிற்கு கொண்டுவந்தது.

ஜூலை 1 அன்று, திருப்பதி என்டிஆர் விளையாட்டு மைதானத்தில் கடப்பா, நெல்லூர் மாவட்ட சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 346 தமிழக தொழிலாளர்களை, சீமாந்திரா போலீசார் நீதிபதி முன்பு ஆஜர் படுத்தினர். இவர்கள் அனைவரும் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.

 திருப்பதி சேஷாசலம் வனப் பகுதியில், 2013 டிசம்பர் 15 அன்று செம்மரக் கடத்தல் மாஃபியாக்களால் வனத்துறை அதிகாரிகள் டேவிட், ஸ்ரீதர் கொல்லப்பட்டனர்; 16 பேர் காயமுற்றனர். அதைத் தொடர்ந்து ஆந்திரா போலீசார் 3 நாட்கள் சோதனைகள் நடத்தி ரயில் நிலையங்களிலும், பஸ் நிலையங்களிலுமிருந்த தொழிலாளர்களை கைது செய்தனர். அதற்கு பிறகும், செம்மரக் கட்டை வெட்டிக் கடத்துவதாக ஜூன் 1 அன்று ரேணிகுண்டாவில் 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை கைது செய்தனர். திருப்பதி வனப் பகுதியில் போலி மோதல்களில் சுட்டுக் கொல்லப்பட்டவர் பற்றிய தகவல்களும் வெளி உலகிற்கு தெரியாமல் சடலங்களை அவரவருடைய சொந்த ஊரில்/ மலைப்பகுதியில் அடக்கம் செய்யும் செய்திகளும் தொடர்கதையாகி வருகின்றன.

செம்மரக் கட்டை கொள்ளை ஏன்?

சந்தன மரம் போலவே செம்மரமும் (ஆங்கிலத்தில் ரெட் சேன்டர்ஸ், தெலுங்கில் எர்ர சந்தனம்) விலை மதிப்பு மிக்க அரிய வகை மரம். இசைக் கருவிகள், கைவினைப் பொருட்கள் செய்ய இது பயன்படுகிறது. செம்மரம் அரிய மருத்துவ பண்புகள் கொண்டது. சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் அணு உலைகளில் குளிரூட்டியாக பயன்படுத்தப்படுவதாகவும், சொல்லப்படுகிறது. இந்தியாவில் இதன் மதிப்பு டன் ரூ.15 இலட்சம் முதல் ரூ.20 இலட்சம் வரை ஆகும். தெற்கு ஆசிய நாடுகளில் டன் ரூ.60 இலட்சம் வரை விற்பனை ஆகிறது. சீனத்திலோ, ரூ.10 கோடி வரை மதிப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. உலகம் முழுவதும் செம்மரத்தின் ஆண்டுத் தேவை 3000 டன் ஆகும். தமிழ்நாடு மற்றும் கர்நாடகத்தின் சில பகுதிகளில் செம்மரங்கள் வளர்ந்த போதிலும், சீமாந்திரா வின் கடப்பா, சித்தூர் மாவட்டங்களில் உள்ள உயரம் குறைந்த சேஷாசலம் மற்றும் பால கொண்டா மலைப் பகுதிகளில்தான், உலகிலேயே மிக அதிகமாக விளைகின்றன.

அரிய தாவரங்களின் சர்வதேச வர்த்தக ஒப்பந்தத்தின் (சைட்ஸ்) அடிப்படையில், செம்மரங்கள் தக் காண பீடபூமியின் அரிய தாவரம் என பட்டியலிடப் பட்டதால், அதை வெட்டுவது குற்றம். எனவே, ஏற்றும திக்கு தடை விதிக்கப்பட்டது. 2010க்கும் பிறகுதான், ஆந்திர மாநில  அரசு சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் மூலமாக சைட்ஸ் சர்வதேச அமைப்பிற்கு செம்மரம் வெட்ட அனுமதி கோரி விண்ணப்பித்தது.

 செம்மரங்கள் அரிய வகை தாவரமல்ல என்றும் முதிர்ந்த மரங்களை வெட்டுவதற்கும், ஒரு முறை ஏற்றுமதிக்கு அனுமதியும் கோரியது. பறிமுதல் செய்யப்பட்டு கிடங்கு களில் குவிக்கப் பட்டிருந்த செம்மரங்களை ஏற்றுமதி செய்ய, மத்திய வர்த்தக அமைச்சரகம் 2013 அக்டோபரில் அனுமதி அளித்தது. எனவேதான் பல ஆண்டுகளாக சட்டவிரோதமாக, செம்மரங்களை வெட்டி ஏற்றுமதி செய்யும் கடத்தல் தொழில், ஆந்திராவின் அரசியல்  செல்வாக்குமிக்க புள்ளிகள் மாஃபியாக்கள் ஆதரவுடன் கொடிகட்டிப் பறந்தது.

 காங்கிரஸ் முன்னாள் முதல்வர் கிரண்ரெட்டியின் தம்பி கிஷோர் ரெட்டி புங்கனூர் எம்எல்ஏ புட்டிரெட்டி ராம கிருஷ்ணாரெட்டி, கெங்கிரெட்டி வரை செம்மரக் கட்டை கொள்ளையர்களின் வலைப்பின்னல் பரந்து விரிந்ததாகும்.

2010லிருந்து திருப்பதியில்  பதிவு செய்யப்பட்ட செம்மரக்கட்டை கடத்தல் வழக்குக ளின் எண்ணிக்கை 1472 ஆகும். பறிமுதல் செய்யப்பட்ட மரங்கள் 1535 டன்கள், கைப்பற்றப்பட்ட வண்டிகள் 940, கைது செய்யப்பட்டோர் எண்ணிக்கை 3893 எனவும் ஆந்திர அரசாங்கம் தெரிவிக்கிறது.
    
ஜூன் 25 அன்று விசாகப்பட்டினம் தனியார் கண்டெய்னர் முனையத்தில் ஹாங்காங்கிற்கு செல்லும் ரூ.12 கோடி மதிப்புள்ள 26 டன்கள் செம்மரக்கட்டை கண் டெய்னர் போலி கிரானைட் பில்களுடன் பிடிபட்டது. சித்தூரிலிருந்து 830 கி.மீ. தொலைவில் உள்ள விசாகப்பட்டினத்திற்கு, தடைபடாமல் எப்படி செல்ல முடிந்தது? எத்தனை முறைகள், எவ்வளவு நாட்களாக இந்தக் கடத்தல்கள்  நடக்கின்றன? அரசியல் புள்ளிகள், அதிகார வர்க்கத்தினர், காவற் துறையினர் உதவியில்லாமல் மாஃபியாக்கள் செம்மரக் கட்டைகளை வெட்டி எப்படி கடத்த முடியும்? ஆந்திராவின் கடத்தல்காரர்கள், அரசியல் புள்ளிகள், வனத்துறையினர், காவற்துறையினர், அதிகாரவர்க்கத்தினர் கைது செய்யப்படாதது ஏன்?

பிழைப்பிற்காக வாழ்க்கையைத் தொலைக்கும் பழங்குடி இளைஞர்கள்

ஆந்திராவின் சிறைகளில் வாடுகிற 5000க்கும் மேற்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த மரம் வெட்டும் தொழிலாளர்கள், திருவண்ணாமலை, வேலூர், தருமபுரி, சேலம், விழுப்புரம் மாவட்டங்களைச் சார்ந்த ஜவ்வாது மலை, ஏலகிரிமலை, சித்தேரிமலை, சேர்வராயன் மலை, அருநூத்துமலை, கல்ராயன் மலை ஆகிய வற்றைச் சேர்ந்த பழங்குடி இளைஞராவர். தமிழக பழங்குடிகள் பல்லாண்டுகளாக மரம் வெட்டும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். பிரிட்டிஷார் வந்த பின் ரயில்வே உருவாக்கப்பட்டது. பின்னர் நகர்ப்புறங்களின் வளர்ச்சியினால் கட்டுமானங்கள் முதல் கட்டிடங்கள் வரை மரங்களின் தேவை பெரிதாக அதிகரித்தது. மத்திய மாநில அரசாங்கங்களும், வனச் சட்டங்கள், வனத்துறை அமைச்சகத்தின் அனுமதிக்குட்பட்டு, சிலவகை மரங்களை வெட்ட அனுமதித்தன. மரம் வெட்டும் வேலையும் சட்டபூர்வமான தொழிலானது. மலைகளில் மரம் வெட்டுதல், அவற்றை சுமந்து வண்டிகளில் ஏற்றுதல், குறிப்பிட்டதொரு உடற் கட்டமைப்பை, உடல் ஆற்றலைக் கோருகிறது. மலைப் பகுதிகளில் உணவே கிடைக்கவில்லை எனினும் கூட கடினமான வேலைகளை செய்யப் பழக்கப்பட்டவர்கள் தமிழக பழங்குடி இளைஞர்கள் ஆவர்.

தமிழக மலைப் பகுதிகளில் இருந்த பழங்குடி நிலங்கள், அரசியல்வாதிகளால், தொழிலதிபர்களால், நில வியாபார மோசடிப் பேர்வழிகளால் அபகரிக்கப்பட்டு விட்டதால் கணிசமானோர் நிலங்களை இழந்து கூலி களாக்கப்பட்டுவிட்டனர். மரம் வெட்டும் வேலை பிழைக்கக் கை கொடுத்தது. மலைகளில் தோட்டங்கள் இருந்தால், அதில் வேலை கிடைத்தது;  இல்லையெ னில் வேலைத் தேடி அருகமை நகரங்களுக்கு கட்டுமான வேலைகளுக்கு செல்லத் துவங்கினர்.

தமிழகத்தின் மலைப் பகுதிகளில் எஸ்டேட்டுகளில், விவசாய நிலங்களில் வளர்க்கப்படும் மரங்கள் (மனிதன் உருவாக்கிய காடுகள்) வெட்டப்படுவதற்கு மாவட்ட ஆட்சியர்கள் மூலமாக அவ்வப்பொழுது அனுமதியளிக்கப்படுகிறது. பல மலைப் பகுதிகளிலும் மரம் வெட்ட அனுமதி இல்லாததால், பழங்குடி இளைஞர்கள் வேலைத் தேடி கேரளா மற்றும் கர்நாடகத்திற்கு மரம் வெட்டுதல், தோட்ட வேலைகள் என செல்ல துவங்கினர். குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு சம்பாதித்த பணத்துடன் வீடு திரும்புகின்றனர்.

பிழைப்பிற்காக இடம் பெயர்வது தமிழக பழங்குடி இளைஞர்கள் மத்தியில் பொதுவான போக்காக மாறி வருகின்றது. பழங்குடியினப் பெண்கள்/சிறுமிகள் நூற்பாலைகளில் சுமங்கலித் திட்டச் சுரண்டலிலும், பருத்தி தோட்டங்களில் கொத்தடிமை தனத்திலும் சிக்கித் தவிக்கின்றனர். அழைக்கப்படும் வேலைக்கு செல்பவர்களாக பழங்குடியினர் மாறுகின்றனர். மொழி தெரியாத மாநிலத்தில், ஆந்திராவின் சேஷாசலம் மற்றும் பாலகொண்டா மலைப்பகுதிகளில் பிழைப்பிற்காகச் சென்று வாழ்க்கையை தொலைத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஜவ்வாது மலை - ஜமுனாமரத்தூர்
ஆய்வும், அதிர்ச்சிகளும்


இகக(மாலெ) மற்றும் பழங்குடி சங்கத் தலைவர்களைக் கொண்ட உண்மையறியும் குழு தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை - ஜமுனா மரத்தூர் பகுதிக்குச் சென்று ஆய்வு செய்தது; சிறைகளில் உள்ளவர்களின் நெருங்கிய உறவினர்கள், அர சாங்க அதிகாரிகள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோரைச் சந்தித்து பல்வேறு விவரங்கள் திரட்டியது. திருப்பதி சேஷாசலம் காடுகளில் ஜூன் மாதத்தில் கொல்லப்பட்ட மூவரும், மீண்டும் கைது செய்யப்பட்ட பலரும் இப்பகுதியைச் சேர்ந்தவர்கள். இம் மலைப்பகுதியில் 90,000 பேரில் பெரும்பான்மையினர் மலையாளி - பழங்குடி வகுப்பினராவர். இப்பகுதியின் 11 ஊராட்சிகளும் பழங்குடி/எஸ்டி ஊராட்சிகளே ஆகும். இப்பகுதியிலிருந்து 5000 பழங்குடி இளைஞர்கள் வெளி மாநில வேலைகளுக்குச் சென்றிருப்பதாக சொல்லப்படு கிறது; கடந்த 5 ஆண்டுகளில் ஆந்திராவின் காடுகளில் தொலைந்து போனவர்கள் ஏராளம். அடுத்தடுத்த தேர்தல்களின் வாக்காளர் பட்டியல்களை ஒப்பிட்டுப் பார்த்த போது, பல ஆயிரம் பழங்குடி வாக்காளர்கள் குறைவதும் அபாயகரமான நிலைமையை சுட்டிகாட்டுகிறது. திருப்பதி காடுகளுக்கு மரம் வெட்டும் வேலைக்கு பழங்குடி இளைஞர்களை அனுப்பும் முகவராக அஇஅதிமுக துணைத் தலைவர் ராமகிருஷ்ணன் செயல்படுகிறார்; குறுகிய காலத்தில் இவர் கோடீஸ்வரராக உருவெடுத்துள்ளார்.

வீரப்பனூர் (4 பேர்), குறியானூர்(7 பேர்), அரச வள்ளி(4 பேர்), புதுப்பட்டு (7 பேர்), நெமியாம்பட்டு (2 பேர்), விளாங்குப்பம் (4 பேர்) என பாதிக்கப்பட்ட இளைஞர் களின் குடும்பங்களைச் சேர்ந்தோர் பல்வேறு தகவல்களைத் தெரிவித்தனர். கைதான இளைஞர்களின் குடும்பத்தினர் ரேசன் கார்டுகளை, அடையாள அட்டைகளை ஆந்திர வழக்கறிஞர்களிடம் கொடுத்துவிட்டு, கையிலிருந்த பணத்தை எல்லாம் ஜாமீன் எடுப்பதற்கு தந்துவிட்டு, உணவிற்கு வழியில்லாமல் வாடுகின்றனர்.

ஒரு முறை காட்டிற்குள் சென்று மரம் வெட்டி கட்டைகளைச் சுமந்து, வெளியே வந்து வண்டிகளில் ஏற்றுவதற்கு 3 நாட்கள் வரை ஆகிறது. கிலோ 1க்கு ரூ.100 முதல் ரூ.300 வரை கூலி என்றடிப்படையில் 30 கிலோ வரை சுமந்து வரும் தொழிலாளிக்கு ரூ.3000 முதல் ரூ.9000 வரை தருகின்றனர். கூலியின் ஒரு பகுதி உடனே தரப்படும் என்றும், மீதிப் பகுதி முகவர்கள் மூலமாக வீட்டிற்கு வந்து சேரும். ஆனால், கணிசமானத் தொகை முகவர்களிடம் சிக்கிக் கொள்ளும் என்று தெரிவிக்கின்றனர். முகவர்களில் பெரும்பான்மையோர் அதிமுகவைச் சேர்ந்தவர்களாவர்.

மரம் வெட்டும் தொழிலாளர்கள் பெறுகிற கூலி அவரவர் வேலை அனுபவத்தைப் பொறுத்து வேறுபடுகிறது. சில ஊடகங்கள் தெரிவிப்பது கூட இவர்கள் யாரும் லட்சக் கணக்கில் பணம் சம்பாதிப்பதில்லை.

ஜமுனாமரத்தூர் வட்டாரத்தில் 5,000 மோட்டார் சைக்கிள்கள் உள்ளன. டாஸ்மாக் கடையின் திங்கட்கிழமை விற்பனை மட்டும் ரூ.4 லட்சம், பிற நாட்களில் தினசரி விற்பனை ரூ.2.50 லட்சம் ஆகும். ஆந்திராவின் போலீசார் அடிக்கடி இப் பகுதிக்கு வந்து விசாரணை செய்கின்றனர். இளைஞர்களைப் பிடித்துச் செல்கின்றனர். இப்பகுதியைச் சேர்ந்த கலசப்பாக்கம் தொகுதியின் எம்எல்ஏவும், அமைச்சருமான அக்ரி கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட ஆட்சியர் மற்றும் ஜெயா அரசாங்கம் எவற்றையும் கண்டுகொள்ளவில்லை என பலரும் தெரிவித்தனர்.  
 
பழங்குடியினரை வஞ்சிக்கும் அரசாங்கங்கள்

தமிழகத்தின் பல மலைக் கிராமங்களிலும், கொல்லப்பட்ட/தொலைந்துபோன பழங்குடி இளைஞர் கள் பற்றிய செய்திகள் உலாவிக் கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் கடந்த காலத்தில் அதிமுகவினர்  ஆளும் கட்சியினராக இருந்தபோது சந்தன மரங்கள் வெட்டி கொள்ளையடிக்கப்பட்ட பின்னணியில்தான், வாச்சாத்தி பழங்குடியினர் மீதான தாக்குதல் வீரப்பன் வேட்டை போன்றவை தோன்றியது. அன்றைக்கும் வாழ்க்கையைத் தொலைத்தவர்கள் கூலிக்காரர்களாகப் மரம் வெட்டப் போன அப்பாவி பழங்குடி ஏழைகள்தான். இன்றைக்கும் அதிமுகவினர் கொள்ளையர்களாக அல்லது முகவர்களாக இருக்க மரம் வெட்டபோய் அழிந்து கொண்டிருப்பவர்கள் அப்பாவி ஏழைப் பழங்குடியினர்தான்.

பழங்குடியினர் நிலம் அபகரிக்கப்படுதல், வேலையின்மையால் இடம் பெயருதல், வெளி மாநிலங்களில் சிக்கி சீரழிதல் என்ற மிகப் பெரிய சமூகப் பிரச்சனை பற்றி ஜெயா அரசாங்கத்திற்கு சிறிதும் அக்கறை இல்லை. பழங்குடியினர் நிலங்களை மீட்டுத் தருவதற்கோ, மலைப்பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கோ, பழங்குடியினர் வாழ்வாதாரங்களை பாதுகாப்பதற்கோ திட்டங்களும் நடவடிக்கைகளும் இல்லை. சிறப்பு உட்கூறு திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியை பயன்படுத்தவும் இல்லை. தமிழக பழங்குடியினர் அஇஅதிமுகவின் சமூக அடித்தளமாக உள்ளனர். தமிழகத்தில் உள்ள இரண்டு பழங்குடி எம்எல்ஏக்களும் கூட அஇஅ திமுகவின் பக்கம்தான் உள்ளனர். ஆனால், ஜெயா அரசாங்கம் ஆந்திராவில் சிறையிலடைக்கப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும் என்ற குரலைக் கூட எழுப்பவில்லை; ஆந்திராவின்  செம்மரக் கட்டை கடத்தல் கொள்ளையர்களை கைது செய்ய வேண்டும், அப்பாவி தமிழர்களை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் விடுக்கவில்லை.

தமிழக பழங்குடி தொழிலாளர்கள் ஆந்திர வனப்பகுயில் சாவது பற்றியோ ஆந்திராவின் சிறைகளில் வாடுவது பற்றியோ மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசாங்கத்தின் பழங்குடியினர் விவகாரத்திற் கான அமைச்சரகமும் கண்டுகொள்ளவே இல்லை. இந்த பிரச்சனை பற்றி பழங்குடியினருக்கான தேசிய ஆணையத்திடம் பல்வேறு அமைப்புகள் முறையிட்ட போது எதுவுமே தெரியாது என கூருணர்ச்சி இல்லாமல் பதிலளித்தது. தமிழக பழங்குடியினர் அவர்களது நிலங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். கூலித் தொழிலாளர்களாக மாறியவர்கள் குற்றவாளிகள் ஆக்கப் பட்டுள்ளனர். அவர்களை மோடி, ஜெயா அரசாங்கங்கள் கை கழுவிவிட்டனர். தமிழக பழங்குடியினர் வாழ்வுரிமைக்காக வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுவதற்காக, புரட்சிகர இடதுசாரி அமைப்புகள் மற்றும் பழங்குடி/தலித் அமைப்புகள் ஒன்றுபட்டு நிற்க வேண்டும்.

Search