COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Friday, August 15, 2014

கும்பகோணம் மீண்டும் நிகழாமல் இருக்க கல்வி வியாபாரம் ஒழிக்கப்பட வேண்டும்

2004 ஜூலை 16 அன்று கும்பகோணம் ஸ்ரீ கிருஷ்ணா பள்ளியில் தீ பிடித்து 94 குழந்தைகள்  கொடூரமாய் கொல்லப்பட்டனர். 18 குழந்தைகள் மோசமாக படுகாயமுற்றார்கள். அந்த அநியாயத்திற்குக் காரணமான குற்றவாளிகள் என்று அரசு தரப்பில் 24 பேர் மீது வழக்கு தொடுக்கப்பட்டு, பின்னர் 3 பேரை வழக்கில் இருந்து விடுவித்துவிட்டது தமிழக அரசு.

பத்து ஆண்டுகள் கழித்து இப்போது ஜூலை 30 அன்று தஞ்சாவூர் அமர்வு நீதிமன்றம், 10 பேர் குற்றவாளிகள் என்று தண்டனை வழங்கியும் 11 பேரை விடுதலை செய்தும் தீர்ப்பு வழங்கியுள்ளது. பள்ளி நிறுவனர் பழனிச்சாமிக்கு ஆயுள் தண்டனை. அவர் மனைவியும் பள்ளித் தாளருமான சரஸ்வதி(!)க்கு 5 ஆண்டுகள் சிறை. மற்ற குற்றவாளிகள் பள்ளி தலைமை ஆசிரியை சாந்தலட்சுமி, சத்துணவு அமைப்பாளர் விஜயலட்சுமி, சமையலர் வசந்தி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலாஜி, அவரின் நேர்முக உதவியாளர் துரைராஜ், மாவட்ட கல்வி அதிகாரி அலுவலக கண்காணிப்பாளர் தாண்டவன், உதவியாளர் சிவப்பிரகாசம் மற்றும் பொறியாளர் ஜெயச்சந்திரன் ஆவர். இவர்களில் ஜெயச்சந்திரன் தவிர மற்றவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறை. இவர்கள் அனைவருக்கும் சேர்த்து ரூ.52.57 லட்சம் அபராதம். இந்தப் பணத்தில் இறந்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு தலா ரூ.50,000. படுகாயமுற்ற 15 குழந்தைகளுக்கு தலா ரூ.25,000. லேசான காயமுற்ற குழந்தைகள் மூவருக்குத் தலா ரூ.10,000.

இந்த விபத்து நடந்தபோது ஆட்சியில் இருந்தது கும்பகோண மகாமகம் புகழ் ஜெயலலிதாதான். தன் பெயரைக் காப்பாற்றிக்கொள்ள பாதிக்கப்பட்டவர்களுக்கு பெயரளவுக்கு நிவாரணம் அறிவித்தார். பெற்ற ஒன்றிரண்டு குழந்தைகளையும் பறி கொடுத்த பெற்றோர்க்கு வெறும் லட்ச ரூபாய் நிவாரணத்தால் என்ன பயன்? அந்த நிவாரணம் போதுமானதல்ல, உருக்குலைந்து காயத் தழும்புகளுடன் நடமாடும் குழந்தைகளுக்கு முழு சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்று வீதியிலும் நீதி மன்றத்திலும் போராடினார்கள் மக்கள். வேறு வழியின்றி ஓய்வு பெற்ற நீதிபதி சம்பத் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. நீதிபதி சம்பத் தலைமையிலான குழு, முடுக்கு போன்ற இடத்திற்குள் மூன்று பள்ளிகூடங்களை, அதிலும் 900 மாணவர்களை அடைத்து வைத்து நடத்தியது அநியாயம், இதற்கு முழுக் காரணம் பேராசை பிடித்த பள்ளி நிர்வாகமும் அரசு அதிகாரிகளும்தான் என்றது.

நிவாரணம் போதாது என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் பாதிக்கப்பட்டவர்கள் வழக்குத் தொடுத்ததில், கூடுதல் நிவாரணம் வழங்குவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் ஓய்வு பெற்ற நீதிபதி சண்முகம் தலைமையில் ஒரு குழுவை நியமித்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு உச்சநீதிமன்றம் சென்றது. உச்சநீதி மன்றத்தில், பாதிக்கப்பட்டவர்களுக்கு போதிய நிவாரணம் தமிழக அரசு கொடுத்து விட்டது, அதனால், மேலும் நிவாரணம் தொடர்பாக ஆய்வு செய்ய குழு அமைத்தது தேவையற்றது என்று வாதாடியது தாயுள்ளம் கொண்ட(!) அம்மாவின் தமிழக அரசு. ஆனால், உச்சநீதிமன்றம் தமிழக அரசின் மனுவைத் தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கியது. இந்த நிலையில்தான், தஞ்சாவூர் அமர்வு நீதிமன்றத்தின் தீர்ப்பும் வந்துள்ளது. ‘வந்த தீர்ப்பு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிறது.

ஆசிரியர்கள் உட்பட 11 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதும், தண்டிக்கப்பட்டுள்ள குற்றவாளிகளுக்கு தரப்பட்டுள்ள தண்டனையும் ஏமாற்றமளிக்கிறது. ஏற்க முடியாதது. ஆசிரியர்கள் விபத்து நடந்தபோது வெளியில் ஓடிவிட்டார்கள், அதுவும் குழந்தைகளை வகுப்புக்குள் உள்ளேயே இருக்கச் சொல்லிவிட்டுப் போய்விட்டார்கள். குழந்தைகளைக் காப்பாற்ற நினைக்காத அவர்களை விடுவித்தது சரியல்ல’ என்று பாதிக்கப்பட்ட பெற்றோர்களும் குழந்தைகளும் குமுறுகிறார்கள். அன்று காயம்பட்டுத் தப்பிய குழந்தைகள் இன்று கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மனித உயிரின் விலை வெறும் ரூ.50,000. உயிர் பிழைத்து கோர உருவத்துடன், நடந்த கொடூரச் சம்பவத்தை மறக்க முடியாமல் நித்தம் நித்தம் வேதனையில் வாழ்ந்து கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு வெறும் ரூ.25,000, ரூ.10,000. 
நகராட்சி விதிகளுக்குப் புறம்பாக கட்டிடம் கட்டிய தற்காக அபதாரம் ரூ.100. தமிழ்நாடு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளி ஒழுங்குமுறைச் சட்டத்தை பின்பற்றாத தற்கான அபராதம் ரூ.500. சாலையோரக் கடை போட்டு பிழைப்பு நடத்துபவர்களிடம், விதி மீறல் என்று சொல்லி ரூ.500 வசூலிக்கும் இன்றைய நிலையில், குழந்தைகள் வாழ்க்கையில் பெரும்பகுதியை கழிக்கும் பள்ளிகூடம் நடத்துவதற்குத் தேவையான எந்தவிதிமுறைகளையும் பின்பற்றாததற்கு அபராதம் நூறும் அய்நூறும். தொழிலாளர் நலச் சட்டங்களை, தொழிற்சாலைச் சட்டங்களை அமல்படுத்தாத முதலாளிகளுக்கு விதிக்கப்படும் அபராதங்கள் போல் இந்த லட்சணத்தில் சட்டங்கள் இருந்தால் யார்தான் விதியை மீறமாட்டார்கள்.

தற்போது நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளவர்கள் 3 பெண் ஆசிரியர்களும் கல்வி, நகராட்சி அதிகாரிகளும். இவர்கள் குற்றம் செய்தார்கள் என்பதற்குச் சரியான ஆதாரம் இல்லை என்று நீதிமன்றம் இவர்களை விடுவித்துள்ளது.

 இவர்களுக்கு தண்டனை கொடுத்துவிட்டால் மட்டும் எல்லாம் சரியாகிவிடுமா? சத்துணவு அமைப்பாளரும் சமையலரும் ஆசிரியர்களும் கல்வித்துறை, நகராட்சி அலுவலர்கள் மட்டுமா இதற்குக் காரணம். இந்தத் தீர்ப்புக்கு முன்பே இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 24 பேர்களில் குற்றப்பத்திரிகை தாக்கலின் போது தமிழக அரசால்  விடுவிக்கப்பட்டவர்கள் மூவர்.

அப்போதைய முதன்மைக் கல்வி அலுவலர் பழனிச்சாமி, கும்பகோணம் வட்டாட்சியர் பரமசிவன், தொடக்கக் கல்வி இயக்குநர் கண்ணன். இயக்குநர், தாசில்தார் மட்டத்தில் இருப்பவர்கள் குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுவிட்டாலே அது அரசையும் குற்றவாளி என்றாக்கிவிடும். அதனால், உயர்மட்ட அதிகாரிகளை முதலில் விடுவித்துவிட்டது அரசு. சமீபத்திய மவுலிவாக்கம் சம்பவத்தில் ஜெயலலிதா எடுத்த நிலைப்பாட்டில் இருந்து இதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும்.

இந்தத் தீர்ப்பை வரவேற்றுள்ள தினமணி, அரசாங்கப் பள்ளிகளில் ஆசிரியர்கள் ஒழுங்காக வருவதில்லை, அப்படியே வந்தாலும் முறையாகப் பாடம் சொல்லித் தருவதில்லை. எங்கள் கிராமத்தில் இருந்து பிள்ளைகள் இந்தப் பள்ளிக்கு வந்துபோக இலவசமாக பேருந்து வசதி செய்து கொடுத்தார்கள், அதனால்தான் எங்கள்  குழந்தைகளை இங்கு அனுப்பினோம் என்று குழந்தைகளைப் பறிகொடுத்த கும்பகோணம் பெற்றோர்கள் சொன்னார்கள், அரசாங்கப் பள்ளிகளுக்கு ஆசிரியர்களை ஒழுங்காக வர வைப்பதற்கு இப்போது உள்ளாட்சிகளிடம் அதிகாரம் இல்லை, அதுதான் காரணம் என்று தலையங்கம் எழுதியது. ஒரு வாரம் கழித்து ஆபத்தான நிலையில் அரசுப் பள்ளிகள் என்று இன்னொரு கட்டுரையை அது வெளியிட்டது.

அதில், ‘அரசு கோடிக் கணக்கில் அரசுப் பள்ளிகளுக்குக் கொட்டிக் கொட்டிக் கொடுத்தாலும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது. மடிக் கணினி, இலவச பஸ் பாஸ் எல்லாம் கொடுத்தும் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை உயரவில்லை.

 அதற்குக் காரணம் பட்டி தொட்டிகளில்கூட தொடங்கப்பட்டுள்ள தனியார் பள்ளிகளும், அரசுப் பேருந்து நுழையாத கிராமங்களுக்குக் கூட தனியார் பள்ளிப் பேருந்துகள் சென்று வருவதும்தான். இன்னொரு பக்கம் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் நன்றாகப் படிக்க வேண்டும் என்பதற்காக தங்கள் வீட்டை இடமாற்றம் செய்யவும், எவ்வளவு செலவு செய்யவும் தயாராக இருக்கிறார்கள். அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கூட தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளியில்தான் சேர்க்கிறார்கள். அவர்களுக்கே அவர்கள் பள்ளி மீது நம்பிக்கை இல்லை.... சில கிராமங்களில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் வீடுவீடாகச் சென்று பிள்ளைகளைச் சேர்க்குமாறு கேட்கத் தொடங்கியுள்ளார்கள்.

இது நல்ல விசயம். அதைவிட பயனளிக்கக் கூடியது என்னவென்றால், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை கண்டிப்பாக அரசுப் பள்ளி அல்லது அரசு நிதி உதவி பெறும் பள்ளியில்தான் சேர்க்க வேண்டும் என்று அரசு உத்தரவிட வேண்டும்...’ என்று அரசுப் பள்ளிகளுக்கு குழந்தைகள் வராமல் தனியார் பள்ளிகள் நோக்கிச் செல்வதற்கு ஆசிரியர்கள்தான் காரணம் என்று சொல்லி உண்மையை மூடி மறைக்கப் பார்க்கிறது.

அரசாங்கப் பள்ளிகளில் ஆசிரியர்களை நியமனம் செய்வது, அவர்களை இடமாற்றம் செய்வது  என அனைத்திற்கும் லட்சக்கணக்கில் பணத்தைப் பிடுங்கும் ஆட்சியாளர்கள் பற்றி இவர்கள் வாய் திறப்பதேயில்லை.

கிராமப்புறங்களில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் கட்டிடங்கள் எப்போது விழுமோ என்கிற நிலையில் உள்ளது பற்றி, அங்குள்ள உள்கட்டுமான வசதிகள் பற்றி ஆட்சியாளர் எவருக்கும் அக்கறையில்லை. அரசுப் பள்ளிகள் உள்கட்டுமானம் இல்லாமல் இருந்தால்தான் தாங்கள் நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கு பிள்ளைகள் வருவார்கள் என்று திட்டமிட்டுச் செயல்படும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பற்றி மென்மையான கேள்விகள்தான் எழுப்பப்படுகிறது.

தனியார் பள்ளிகளை, மழலையர் பள்ளிகள் முதல் கல்லூரிகள் வரை கல்வி வியாபாரிகள் கணக்கில்லாமல் திறப்பதற்கு அனுமதி அளிப்பது யார்? அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி கட்டாயம் என்று சொல்லும் அரசு, அரசாங்கப் பள்ளிகளை மேம்படுத்துவதற்குப் பதிலாக புற்றீசல்கள் போல தனியார் கல்வி நிறுவனங்களை பழனிச்சாமி போன்ற வியாபாரிகள் நடத்துவதற்கு அனுமதி அளிப்பது ஏன்?

தமிழ்நாட்டில் 2005-2006 புள்ளிவிவரக் கணக்குப் படி அரசுத் தொடக்கப்பள்ளிகள் எண்ணிக்கை 24,208, அரசு உதவி பெறும் பள்ளிகள் 5,018, தனியார் பள்ளிகள் 4,683. உயர் நிலைப்பள்ளிகளில் அரசு பள்ளிகள் 2,143, அரசு உதவி பெறும் பள்ளிகள் 636, தனியார் பள்ளிகள் 1,657. மேல்நிலைப் பள்ளிகள் அரசுப் பள்ளிகள் எண்ணிக்கை 1,856, அரசு உதவி பெறும் பள்ளிகள் 1099, தனியார் மேல்நிலைப் பள்ளிகள் 1,677. இந்த எண்ணிக்கை இப்போது உயர்ந்து கொண்டே போகிறது. குறிப்பாக உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளை தனியார் அதிகம் அதிகம் நடத்துகிறார்கள் அதில்தான் அதிகம் காசு பார்க்க முடியும் என்பதால்.

இதற்குக் காரணம் யார்? தனியார் பள்ளிகளை துவங்கு வதற்கு அனுமதி அளிப்பது யார்? வியாபாரிகள் பள்ளிக் கூடங்களையும் கல்லூரிகளையும் துவங்குவதற்கு அனுமதி அளிக்க வேண்டிய அவசியம் என்ன? பல அடுக்கு மாடிகளில் குறுகலான படிகளோடு பள்ளிகளைக் கட்டிக் கொண்டு, பள்ளிக் குழந்தைகளுக்கு விளையாடுவதற்கு கூட மைதானம் இல்லாமல், ஏன் விளையாட்டு வகுப்பே இல்லாமல் குழந்தைகளை எந்திரம் போல் நடத்தும் பணம் பிடுங்கும் பகற்கொள்ளை தனியார் பள்ளிகளை இல்லாமல் செய்வதற்கு இவர்களுக்கு ஏன் மனம் இல்லை? ஏனென்றால். இன்று பணம் கொழிக்கும் பெரும் வியாபாரமாக பள்ளிக்கூடங்களை ஆக்கி வைத்துள்ளார்கள் ஆட்சியாளர்கள். அதனால்தான் தனியார்களால் நடத்தப்படும் ஊடகங்களும் பத்திரிகைக ளும் கல்வி நிறுவனங்களை தனியார் நடத்தக் கூடாது என வெளிப்படையாக அறிவிக்கத் தயாராக இல்லை. 

இன்றும் கிராமப்புற ஏழை உழைக்கும் மக்களுக்கு அரசுப் பள்ளிகளே ஆதாரம். அவர்களுக்குக் கிடைக்கும் வருமானத்தில் தனியார் பள்ளிளை நினைத்துப் பார்க்கவே முடியாது. ஆனால், தனியார் பள்ளிகளை ஊக்கு விக்கும் நோக்குடன் அருகமைப் பள்ளி, கட்டாயக் கல்வி, சமச்சீர் கல்வி என எல்லா திட்டங்களையும் திட்டமிட்டு அரசு ஒப்புக்குச் செயல்படுத்துகிறது.

 திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 20 அரசு தொடக்கப் பள்ளிகள் மாணவர் வருகை இல்லாததால் மூடப்படவிருப்பதாக கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை மாநகராட்சியில் ஓட்டேரியில் அரசுப் பள்ளி கட்டிடத்தை இடித்துவிட்டு அங்கு வேறு அரசு அலுவலகம் கட்டப்படவுள்ளதாகச் சொல்கின்றனர்.

எழிலகத்தில் தீப்பிடித்த பிறகு அங்கு செயல்பட்டு வந்த சில அரசு அலுவலகங்கள் சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் செயல்படுகின்றன. மதுரவாயலில் உள்ள அரசுப் பள்ளி இருக்கும் இடத்திலும் வேறு அரசு அலுவலகங்கள் கட்ட அரசு திட்டமிடுகிறது. இன்றைய நிலைமைகளில் தமிழ் நாட்டின் 15% அரசுப் பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லை. தமிழ்நாட்டின் வறிய குடும்பங்களின் குழந்தைகளுக்கு கல்வியே தேவையே இல்லை என்று அரசு முடிவு செய்துள்ளதைத்தான் இந்தச் செய்திகள் சொல்கின்றன. தமிழக மக்களின் பொழுதுபோக்குக்காக ரூ.25 கட்டணம் பெறும் அம்மா திரையரங்குகள் கட்டத் தயாராகிற, அதற்கான உள்கட்டுமான செலவுகளுக்கு நிதி ஒதுக்கியிருக்கிற ஜெயலலிதா அரசு, புதிதாக அம்மா பள்ளிக் கூடங்கள் கட்டினால், நடத்தினால், (அல்லது இருக்கிற அரசுப் பள்ளிகளுக்கு எல்லாம் அம்மா அரசுப் பள்ளி என்று பெயர் மாற்றினால் அரசு கவனம் செலுத்துமா?) வறிய மக்கள் கல்வி உறுதி செய்யப்படும்.

மீண்டும் கும்பகோணம் நிகழாமல் இருக்க வேண்டும் என்றால், கும்பகோணம் பள்ளிக் கூட விபத்திற்கு அரசு பொறுப்பாக்கப்பட வேண்டும். பழனிச்சாமிக்கு ஆதரவாகச் செயல்பட்ட அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், உயரதிகாரிகள் அனைவரையும் குற்றவாளிகளாக்கி தண்டிக்க வேண்டும். இறந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் அரசு வழங்க வேண்டும்.

 படுகாயமுற்று இன்றும் மன உளைச்சலுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு தலா ரூ.10 லட்சமும் முழுச் சிகிச்சையும் அரசாங்கத்தால் அளிக்கப்படவும் வேண்டும். இதற்கெல்லாம் மேலாக, கல்வி வியாபாரம் தடுக்கப்பட வேண்டும். தனியார் பள்ளிகள் அறவே ஒழிக்கப்பட வேண்டும். அரசுப் பள்ளிகளுக்கு தரமான கட்டிடம், போக்குவரத்து வசதிகள் உட்பட அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட வேண்டும். தேவையான ஆசிரியர்கள் (லஞ்சம் வாங்காமல்) நியமிக்கப்பட வேண்டும்

Search