COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Friday, August 15, 2014

உண்மையின் கதவுகளை திறந்துவிட்டுள்ள பொய்கள்

பொய்மையும் வாய்மையிடத்து புரை தீர்த்த
நன்மை பயக்கு மெனில்


ஜெயலலிதா இந்தக் குறளை வாசிக்கவில்லை என்பது மட்டும்தான் குறை. மற்றபடி, முழுமையான பொய்யை அழகான முடிப்பில் ஜெயலலிதா முன்வைத்தார். நன்மை பயக்கும் என்று எதிர்ப்பார்த்திருக்கிறார். மாறாக, அந்தப் பொய்கள், பெண்கள், தலித்துகள் மீதான வன்முறைச் சம்பவங்கள், கொலை, கொள்ளைக் குற்றங்கள் அதிகரித்து இயல்பு வாழ்க்கையை பாதித்திருக்கிற தமிழ்நாட்டில், பெரிய எதிர்ப்பை தூண்டிவிட்டன. தமிழ்நாடு ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான வன்முறை பூமியாகி வருகிறது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மிகச் சிறப்பு, காவல் துறையினரின் சேவை சிறப்போ சிறப்பு என்று ஜெயலலிதா சொல்லும்போது, நடக்கிற ஒடுக்குமுறை, வன்முறைச் சம்பவங்கள் அவர் சொல்வதற்குக் கொஞ்சமும் பொருந்தாத விதத்தில் அதிகரித்துள்ளன. நடக்கிற குற்றங்களில் டாஸ்மாக் சாராயத்தால் விளையும் குற்றங்கள் இலவச இணைப்புகள்.

பெண்கள் மீதான வன்முறைக் குற்றங்கள் தமிழ்நாட்டில் பாதியாகக் குறைந்துவிட்டதாக முதலமைச்சர் சட்டமன்றத்தில் அறிவித்த செய்தி வெளியான அதே நாளிதழில் அதே நாளில் (06 ஆகஸ்ட் 2014) பின்வரும் செய்திகளும் வெளியாகியிருந்தன.

கன்னியாகுமரியில் அலகன்விளை கிராமத்தில் வாழைத் தோப்பொன்றில் 15 வயது சிறுமி உடல் எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அந்தச் சிறுமி மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்தப்பட்டிருக்கிறார். காலை 5 முதல் 7 மணிக்குள் நடந்திருக்கிறது. அந்தச் சிறுமியின் தந்தைக்குச் சொந்தமான தோப்பில் நடந்திருக்கிறது. காவல்துறையினர் இன்னும் சாவுக்கான காரணம் தொடர்பாக எந்த விவரத்தையும் கண்டறியவில்லை. பிரேத பரிசோதனை அறிக்கையிலும் ஒரு துப்பும் கிடைக்கவில்லை.

ஜூலை 8 அன்று திட்டக்குடியில் இரண்டு சிறுமிகள் (12 மற்றும் 14 வயது) காணாமல் போனதாக ஜூ லை 11 அன்று புகார் தரப்பட்டது. அந்தச் சிறுமிகள் அதே பகுதியைச் சேர்ந்த பாதிரியார் மற்றும் அவரது கூட்டாளி ஒருவரால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றனர். பிறகு மூன்று பெண்களின் உதவியுடன் அந்தச் சிறுமிகளை பாலியல் தொழில் முகவர்களிடம் விற்றிருக்கின்றனர். எல்லாம் ஒரு மாத காலம் நடந்திருக்கிறது. காவல்துறை தூங்கிக் கொண்டிருந்ததா? ஜெயலலிதா சொல்கிற 13 அம்ச செயல்திட்டம் அமலில் இருக்கும் போதுதான் இந்தக் குற்றங்கள் நடந்துள்ளன.

இந்த தேதிக்கு முந்தைய நாளிதழ்கள், மொழி பேதமின்றி, தமிழ்நாட்டில் பெண்கள் வன்முறைக்கு உள்ளாக்கப்படும் சம்பவங்கள் பற்றிய செய்திகளை தாங்கியிருந்தன.  தமிழ் நாட்டில் நடக்கும் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதாகச் சொல்லும் புள்ளிவிவரங் களுடனும் செய்திகள் வெளியாகியிருந்தன.

ஆகஸ்ட் 7 அன்று முதலமைச்சரின் தொகுதியான ஸ்ரீரங்கத்தில் வீட்டுக்குள் புகுந்து பெண்ணை பாலியல் வன்முறைக்கு உட்படுத்த முயன்றபோது, அந்தப் பெண் எதிர்த்துப் போராடியதால், அந்தக் குற்றவாளி அந்தப் பெண்ணை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பியிருக்கிறார். அந்தப் பெண்ணின் கை விரல்கள் மூன்று துண்டிக்கப்பட்டுள்ளன. தனது வீட்டிற்குள் அந்தப் பெண்ணுக்கு பாதுகாப்பு இல்லாமல் போனது. பெண் மாணவர்களுக்கு தற்காப்புப் பயிற்சிகள் நடத்த திட்டமிட்டுள் ளது சென்னை மாநகராட்சி. என்ன தற்காப்புக் கலை தெரிந்தாலும், அந்தப் பெண்ணுக்கு நடந் ததுபோல் நடந்தால் என்ன செய்ய முடியும்?

இந்தப் பின்னணியில்தான் ஜெயலலிதா குற்றங்கள் குறைந்திருக்கின்றன என்கிறார். பேருந்து கட்டணம், மின் கட்டணம், பால் கட்டணம் ஆகியவை உயர்த்தப்படும்போது மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் கட்டணங்கள் குறைவு என்று வாதிடும் முறையை தமிழ்நாட்டில் கருணாநிதி துவக்கி வைத்தார். தனது பிரதான அரசியல் எதிரியான கருணாநிதியின் இந்த முறையை ஜெயலலிதா தனது எதிரியாகக் கருதுவதில்லை. இருவருமே, அவர்களை தமிழக மக்கள்தான் தேர்ந்தெடுத்தார்கள், தமிழ்நாட்டுக்குத்தான் முதலமைச்சர்கள், தமிழக மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டிய பதவியில் இருப்பவர்கள், அவர்கள் ஒப்பிட்டுச் சொல்லும் பிற மாநிலங்களில் அவர்கள் செய்ய ஏதும் இல்லை என்ற யதார்த்தத்தை மறைக்க முயற்சி செய்பவர்கள். கருணாநிதி கடந்த கால ஜெயலலிதா ஆட்சியுடன் ஒப்பிடுவதுபோல் ஜெயலலிதாவும் கடந்த கால கருணாநிதி ஆட்சியை விட தனது ஆட்சியில் நடக்கும் அவலங்கள் ஒப்பீட்டுரீதியில் குறைவு என்று சொல்கிறார். ஜெயலலிதா இன்னும் ஒரு படி மேலே போய், கேள்வி எழுப்பும் சட்டமன்ற உறுப்பினர்கள், அவர்கள் கட்சியினர் குற்றச் செயல்களில் ஈடுபடுவதாகச் சுட்டிக் காட்டி கேள்வி எழுப்பும் அவர்கள் தகுதியை கேள்விக்கு உள்ளாக்குகிறார்.

சட்டமன்றத்தில் லாவணிக் கச்சேரி நடப்பதைப் பார்த்துப் பழகி சலித்து   போயிருக்கிற தமிழக மக்கள் மீது அது மேலும் மேலும் தொடர்ந்து திணிக்கப்படுகிறது. தமிழக மக்களின் எல்லையில்லா சகிப்புத் தன்மைக்கு இந்த லாவணிக் கச்சேரிகள் தொடர்வது எடுத்துக்காட்டு.

பெண்கள் மீதான வன்முறை கவலைதரும் அளவை எட்டியுள்ளது. பாலியல் வன்முறை மட்டுமல்லாது சர்வசாதாரணமாக பெண்களை, முதியவர்களைக் கொன்றுவிடுவது தடைகள் இல்லாமல் நடக்கிறது. இந்தச் சூழலில் பெண்கள் மீதான குற்றங்கள் குறைந்து வருவதாக எடுத்துச் சொல்ல ஜெயலலிதா எடுத்துள்ள முயற்சி அவரது அசாத்திய துணிச்சலின் வெளிப்பாடு. ஒரு பொய்யை திரும்பத் திரும்பச் சொல்லி உண்மையாக்குவது கோயபல்ஸ் பாணி என்றால், ஒரு பொய்யை வெவ்வேறு கோணங்களில் நியாயப்படுத்தி உண்மையாக்குவது ஜெயலலிதா பாணி. ஆனால், இந்தப் பொய்கள் உண்மைக்கான சாளரங்களை திறந்துவிட்டுள்ளன.

அவர் முன்வைக்கிற வாதங்களில் மிகவும் சகித்துக் கொள்ள முடியாதது பெண்கள் மீதான குற்றங்கள், முந்தைய மாநில அரசில் நடந்தவற்றைக் காட்டிலும் பிற மாநிலங்களில் நடப்பதைக் காட்டிலும் குறைவு என்பது. மின் கட்டணம், பேருந்து கட்டணம், பால் கட்டணம் போல், பெண்கள் மீதான குற்றங்களை ஒப்பிடுவது கொடூரமானது. யார் ஆட்சி என்றாலும், எந்த மாநிலம் என்றாலும், ஆட்சியில் இருப்பவர்கள் குற்றங்கள் நடப்பதை தடுக்க வேண்டும். இதற்கு ஒப்பீட்டு அடிப்படையில் சலுகை, விலக்கு ஏற்புடைத் தன்மை ஏதும் இருக்க முடியாது. பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகிற, அந்தக் குற்றங்களுக்கு எதிரான தீவிரமான பேராட்டங்கள் அதிகரித்து வருகிற இன்றைய நிலைமைகளில் ஜெயலலிதாவின் இந்த வாதம் தமிழ்நாடு பற்றியெரியும் போது அவர் பிடில் வாசிப்பதைப் போன்றது.

குற்றங்கள் அதிகரிக்கவில்லை, பதிவு செய்யப்படும் குற்றங்களின் எண்ணிக்கைதான் அதிகரித்திருக்கிறது என்கிறார் முதலமைச்சர். காரணம், பெண்கள் அச்சமின்றி காவல்நிலையத்துக்கு வந்து புகார் தருகிறார்கள் என்கிறார். ஜெயலலிதா ஆட்சியின் காவல்துறை எப்படிப்பட்டது என்று சிதம்பரம் பத்மினியையும், வாச்சாத்தி பெண்களையும் கேட்டால் சொல்வார்கள். சந்தனக் கட்டை வீரப்பனைப் பிடிப்பதாகச் சொல்லி காவல்துறையினர் நடத்திய அத்துமீறல்கள், தமிழக காவல்துறையினர் பற்றி கதைகள் பல சொல்லும். கண்காணிப்பு காமிராக்கள் பொருத்துவது பற்றி ஜெயலலிதா அறிவிக்கிறார். தமிழ்நாட்டின் காவல்நிலையங்களில் தான் முதலில் அவற்றைப் பொருத்த வேண்டும்.

2013ல் காவல் பாதுகாப்பில் 15 மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது என்று ஜெயலலிதா வாசித்த கொள்கை விளக்கக் குறிப்பு சொல்கிறது. இந்த விவரம் யார் சொன்னார்கள் என்று சொல்லாத அறிக்கை, இந்த விவரத்தை மறுக்கவும் இல்லை. மறுக்கவில்லை என்றால் ஒப்புக்கொள்வதாகத்தான் பொருள். காவல் பாதுகாப்பில் ஓராண்டில் 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர், அல்லது ஜெயலலிதா சொல்வதுபோல், மரணமடைந்துள்ளனர் என்றால் தமிழக மக்களுக்கு காவல்நிலையத்துக்குச் செல்லத் துணிவு பிறக்குமா?

கரூர் சிறுமி பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில் இரண்டு மாதங்களாகியும் இன்னும் குற்றவாளிகள் கண்டுபிடிக் கப்படவில்லை. எங்கும் இல்லாத வழக்கமாய், காவல்துறையினர் மக்கள் மத்தியில் 1,500 தபால் அட்டை விநியோகித்து இருக்கிறார்களாம். குற்றவாளிகள் பற்றி தகவல் தெரிவிக்க அச்சமிருந்தால் அந்த தபால் அட்டையில் எழுதி காவல்துறையினருக்கு அனுப்ப வேண்டுமாம். பெண்கள் அச்சமின்றி காவல்நிலையத்துக்கு வந்து புகார் கொடுக்கிறார்கள் என்று முதலமைச்சர் சொல்வது உண்மையானால் மக்கள் ஏன் தபால் மூலம் தகவல் தர வேண்டும்?

காவல்துறைக்கு தகவல் தரக்கூட தமிழக மக்கள் அஞ்சுகின்றனர் என்பதை காவல்துறையினரே ஒப்புக்கொண்டுள்ளனர். அதனால்தான் தபால் அட்டை தருகின்றனர். ஜெயலலிதா சட்டமன்றத்தில் பொய்களை தூவி விட்டு தப்ப முடியாது.

பெங்களூருவில் வெடித்த குண்டுக்கு ஆந்திராவுக்குப் போய் மேலப்பாளையத்தைச் சேர்ந்தவர்களைப் பிடித்த காவல்துறை, கரூரில் ஏன் சில உள்ளூர் சமூக விரோத சக்திகளைப் பிடிக்க முடியவில்லை? தபால் அட்டை தரவா மக்கள் வரிப்பணத்தில் கோடிகோடியாக அவர்களுக்கு செலவிடப்படுகிறது?

பெண்கள் மீதான வன்முறைக் குற்றங்கள் பெருகி வருவது போல் தோற்றம் உருவாவதற்கு ஜெயலலிதா சொல்கிற இன்னொரு காரணம், பாலியல் வன்முறைக் புகார்கள் எல்லாம் பாலியல் வன்முறைக் குற்றங்கள் அல்ல என்பது. சமீபத்தில் இந்து பத்திரிகை வெளியிட்ட செய்தியை அவர் பயன்படுத்திக் கொள்கிறார். 2010, 2013 பற்றிய புள்ளி விவரங்கள் கொடுத்த முதலமைச்சர் பாலியல் வன்முறைக் குற்றங்கள் அல்லாத பாலியல் வன்முறை புகார்கள் எத்தனை என்ற புள்ளி விவரம் தரவில்லை. ஆண் நண்பருடன் சென்றுவிடுவது, காதலித்தவர் ஏமாற்றிவிடுவது போன்ற சம்பவங்களில் பாலியல் வன்முறைப் புகார்கள் தரப்படுவதாகவும் அதனால்தான் அந்த எண்ணிக்கை அதிகமாகக் காட்டப்படுவதாகவும் ஜெயலலிதா சொல்கிறார்.

அவர் சொல்வதில் உண்மை, பொய் ஆகியவற்றுக்கு அப்பால், பெண்களை ஏமாற்றும் குற்றங்கள் அதிகரிப்பது யதார்த்தம் என்பது தெரிகிறது. அஇஅதிமுக துணை மேயர், அமைச்சர் ஆகியோர் கூட இதுபோன்ற பட்டியலில் வருவார் கள். பிரச்சனை, இது போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு தண்டனை பற்றிய அச்சம் இல்லாத சூழல் தமிழ்நாட்டில் நிலவுவதுதான். பாலியல் வன்முறையோ, ஒப்புதலுடனான பாலுறவு பின் ஏமாற்றப்படுவது என்ற பிரச்சனையிலோ, குற்றவாளிகள் சட்டப்படி கைது செய்யப்பட்டு, விசாரணக்கு உட்படுத்தப்பட்டு கறாராக தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டால் தான் குற்றங்கள் குறையும்.  இல்லையென்றால் அதிகரிக்கும். உண்மையில், தமிழ்நாட்டில் குற்றவாளிகளை வளர்க்க சிறப்பு முயற்சி எடுக்கப்படுகிறதா என கேள்வி எழும் அளவுக்கு குற்றச் செயல்கள் மிதமிஞ்சிச் சென்றுவிட்டன. குற்றம் செய்தவர்கள், அடுத்த குற்றத்துக்கு தயக்கம் எதுவுமின்றி தயாராகிறார்கள்.

ஜூலை 18 அன்று வேலூர் அருகில் நடந்த பாலியல் வன்முறை சம்பவம் இதற்கு சான்று. ராயக்கோட்டையில், நான்கு பேர் கொண்ட கும்பல், 20 வயது பெண்ணை கூட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கி, அந்தக் குற்றத்தை செல்போனில் படமும் எடுத்துள்ளனர். குற்ற வாளிகள், தங்கள் பெயர், முகவரி, அலைபேசி எண் அனைத்தையும் பாதிக்கப்பட்ட பெண்ணி டம் கொடுத்து, தாங்கள் அழைக்கும் போதெல்லாம் வர வேண்டும் என்றும் இல்லையென்றால், அந்தக் காட்சியை இணையதளத்தில் வெளியிட்டுவிடுவதாகவும் மிரட்டியுள்ளனர்.

இந்த வாதத்தின் மறுபகுதி பாலியல் வன்முறைக் குற்றங்கள் ஜெயலலிதா ஆட்சியில் நடக்கின்றன என்று அவரே ஒப்புக்கொள்வது. எண்ணிக்கை அதிகரிப்பதற்கு காரணம் கண்டுபிடித்துச் சொன்ன ஜெயலலிதா, எண்ணிக்கை என்ற ஒன்று இருப்பதே பாலியல் குற்றங்கள் நடப்பதன் வெளிப்பாடுதான் என்பதை ஒப்புக்கொள்கிறார்.

நடக்கிற குற்றங்களின் எண்ணிக்கையைப் பார்க்கக் கூடாது, குற்ற விகிதத்தைப் பார்க்க வேண்டும் என்று சொல்கிறார் ஜெயலலிதா.  அதாவது 1 லட்சம் மக்கள் தொகைக்கு எத்தனை குற்றங்கள் என்று பார்த்தால் தமிழ்நாட்டில் பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் அந்த விகிதம் மிகக்குறைவு என்கிறார். அவரிடம் எத்தனை சேலைகள், எத்தனை செருப்புகள், எவ்வளவு வெள்ளி, தங்க நகைகள், பாத்திரங்கள் என்று பெங்களூரு நீதிமன்றம் கணக்குப் போடுவது போன்ற விசயமல்ல இது.

இன்றைய நிலைமைகளில், பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்ணின், அந்தப் பெண்ணைச் சேர்ந்தவர்களின் வாழ்க்கை, புகார் தந்து, விசாரணையை எதிர்கொண்டு, நீதி மன்றம் சென்று, நீதி கிடைத்து, பிறகு சாதாரண நிலைக்குத் திரும்புவதற்குள் விதவிதமான பரீட்சைகளுக்கு உட்பட்டுவிடுகிறது. காவல் நிலையத்தில் புகார் தருவதில் இருந்து நீதி கோரும் அடுத்தடுத்த கட்டங்களில் மீண்டும் மீண்டும் அந்தப் பெண்ணுக்கு வன்முறை நேருகிறது. தமிழ்நாட்டில் வாச்சாத்தி பெண்கள் இந்த நிலைமைகளுக்கு வாழும் உதாரணங்கள். இது அந்தப் பெண்களின் வாழ்வா, சாவா பிரச்சனை. வெறும் எண்ணிக்கையோ, விகிதமோ, புள்ளிவிவரமோ அல்ல. குற்றமே நிகழக்கூடாது.

தமிழக காவல்துறையின் செயல்பாடு பற்றி ஜெயலலிதா எப்போதும் பெருமிதம் கொள்கிறார். சென்னையில் இருந்து இரண்டு பேர், சில மாதங்களாக, வாரத்தில் மூன்று நாட்கள் திருநெல்வேலி சென்று சங்கிலிப் பறிப்பு செய்து விட்டு, சென்னைக்குத் திரும்பி சென்னையில் ஆடம்பரமாக இருந்திருக்கிறார்கள். காவல் துறை அவர்களைப் பிடிக்கவில்லை. சங்கிலிப் பறிப்பு தொல்லை தாங்காமல், காவல்துறையில் புகார் செய்தும் பலனில்லாமல், பகுதி மக்களே கண்காணிப்பு குழு அமைத்து, அந்த குழு அவர்களைப் பிடித்து காவல்துறையில் ஒப்படைத் திருக்கிறது.

காவல்துறையின் செயல்திறன் பற்றி இந்தச் சம்பவம் நமக்கு தெளிவாகச் சொல்கிறது. இன்னொரு சாத்தியப்பாடும் இருக்கிறது. பறிமுதல் செய்யப்பட்டு காவல்நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த திருட்டு நகைகளை காவலர் ஒருவர் திருடி பிடிபட்டிருக்கிறார். அந்தப் பகுதியில், அந்தத் திருடர்களுக்கு இப்படி ஏதாவது உதவி கிடைத்திருக்கலாம்.

திருடப்பட்ட சொத்து தொடர்பாக அந்த அறிக்கை தருகிற கணக்குப்படி 2012ல் திருடப் பட்ட சொத்தின் மதிப்பை விட 2013ல் திருடப் பட்ட சொத்தின் மதிப்பு கூடுதல். இதைத்தான் சாமான்ய மக்கள் தமிழ்நாட்டில் குற்றங்கள் அதிகரித்துவிட்டதாகச் சொல்கிறார்கள். முதலமைச்சர் புள்ளி விவரங்களுடன் சொல்கிறார். மீட்கப்பட்ட சொத்தின் மதிப்பும் கூடுதல். கூடுதலாக திருடு போவதால் கூடுதலாக மீட்க வேண்டியுள்ளது. தேடித் தேடிப் பார்த்து ஜெயலலிதா முன்வைக்கிற விவரங்கள் அவரது வாதங்களுக்கு எதிரான உண்மைகளைத்தான் வெளிப்படுத்துகின்றன.

தமிழ்நாட்டின் காவல்துறையைச் சேர்ந்த பெண் காவலர் வள்ளி, பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக உயர்நீதிமன்றம் வரை சென்றாரே, அவர் தொடர்ந்த வழக்கு என்ன ஆனது என்று அதற்குப் பிறகு செய்தி எதுவும் இல்லை. இவ்வளவு விவரம், விளக்கம் தரும் முதலமைச்சர், வள்ளியின் வழக்கு என்ன ஆனது என்றும் மக்களுக்குச் சொல்ல வேண்டும்.

உங்களுக்கு இதைத் தவிர வேறு செய்தியே இல்லையா என்று பத்திரிகையாளரிடம் கேட்ட சித்தராமையா, பையன்கள் தப்பு செய்வார்கள் என்று சொன்ன முலாயம், எனது அரசாங்கத்துக்கு எதிராக சதி செய்கிறார்கள் எனச் சொல்லும் மம்தா, கடவுளாலும் பாலியல் வன்முறையைத் தடுத்து நிறுத்த முடியாது என்று சொல்லும் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ஆளுநர்.... இவர்கள் சொல்வதற்கும், ஜெயலலிதா சொல்வதற்கும் பெரிய வேறுபாடு ஏதுமில்லை.

முதலமைச்சர் ஒரு பெண். துணிச்சலானவர் என்று சொல்லப்படுபவர். உள்துறை அவர் பொறுப்பில் இருக்கிறது. காவல்துறை, புலனாய்வுப் பிரிவு எல்லாம் அவர் கையில், கட்டுப்பாட்டில், கட்டளையின் கீழ் உள்ளன. அடுத்த மாநிலத்தில் ஒளிந்திருப்பதாகச் சொல்லப்படும் தீவிரவாதிகளை பிடித்துவிடுகிறார்கள். ஒரு பெரிய மக்கள் கூட்டத்தை சுற்றி வளைத்து அவர்கள் வாழ்விடத்திலேயே சிறை வைத்து விடுகிறார்கள். ஆனால், பெண்கள் வன்முறைக்கு உள்ளாக்கப்படும் சம்பவங்களில் முறையான நடவடிக்கைகள் எடுப்பதை விட்டு விட்டு சப்பைக்கட்டு கட்டுகிறார்கள். வெட்கக் கேடு.

Search