COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Sunday, August 31, 2014

கேட்ஸ் ஃபவுண்டேசன்: மக்கள் சேவை என்ற பெயரில் மார்க்கட் சேவை

பணத்திற்காக நான் ஒன்றும் செய்யவில்லை. இது கடவுளின் செயல்” “ஏழை நாடுகள் அப்படியே ஏழை நாடுகளாக இருக்கின்றன என்பது ஒரு கட்டுக் கதை. 1990ல் இருந்த பரம ஏழைகள் சதவீதம் பாதியாகக் குறைந்துவிட்டது. வெளிநாட்டு உதவிதான் அதை சாத்தியப்படுத்தியது”. “2035ல் உலகத்தில்  அநேகமாக ஏழை நாடுகளே இருக்காது”.

இப்படியெல்லாம் சொல்வது உலகத்தின் முதல் பணக்காரர் பில் கேட்ஸ். அதைச் செயல்படுத்தவே, அதுதான் ஏழை நாடுகளை, வளரும் நாடுகளை பணக்கார நாடுகளாக மாற்ற பில் கேட்ஸும் அவர் மனைவி மெலிண்டா கேட்ஸும் சேர்ந்து (Bill and Melinda Gates Foundation (BMGF) பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை நிறுவனம் நடத்தி வருகிறார்கள். தெற்காசிய நாடுகளில், ஆப்பிரிக்க நாடுகளில் இந்த கேட்ஸ் அறக் கட்டளை நிறுவனத்திற்கு மட்டுமே ஏகப்பட்ட நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார்கள். இந்தியாவில் கேட்ஸ் அறக்கட்டளையை  2003ல் ஆரம்பித்தார்கள். அப்போது முதல் 2012 வரை அவர்கள் அந்நிறுவனத்திற்குள் ஒரு பில்லியன் டாலர் பணம் போட்டுள்ளார்களாம்.

இந்தியாவில் பத்து ஆண்டுகளுக்கு முன்பே, எய்ட்ஸ் பரவாமல் தடுப்பதில் இருந்து எங்கள் பணி ஆரம்பமாகி விட்டது, இந்திய மக்களின் சுகாதாரம், தாய், சேய் நலம், ஊட்டச்சத்து, நோய் தடுப்பு, மக்கள் தொகைக் கட்டுப்பாடு, விவசாய வளர்ச்சி, தொற்று நோய்களைக் கட்டுப்படுத்துவது ஆகியவற்றில் இந்தியாவில் கேட்ஸ் அறக்கட்டளை அதிகமாக அக்கறை செலுத்துகிறது என்கிறார் மெலிண்டா கேட்ஸ். மேலும் அவர், “வறுமையை ஒழித்து வளமான இந்தியாவைப் படைப்பதற்காக, இந்திய அரசாங்கம் அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்கிறது. எங்கள் குறிக்கோளும் இந்திய அரசாங்கத்தின் செயல்திட்டமும் ஒன்று போல் இருப்பதால் அந்தக் குறிக்கோளை நிறைவேற்ற நாங்கள் இணைந்து செயல்பட அர்த்தமுள்ள கூட்டு அமைத்துள்ளோம்” என்கிறார். அதற்காக அரசாங்கத்தின் திட்டங்களுடன், தொண்டு நிறுவனங்களுடன் மட்டுமின்றி மருந்து நிறுவனங்களுடனும் இணைந்து செயல்படுகிறார்கள். பொது மற்றும் தனியார் கூட்டை ஊக்குவித்து இந்தியாவின் எதிர்காலத்தை முன்னேற்றப் போவதாகச் சொல்கிறார்கள் கேட்ஸ் தம்பதிகள்.

மத்திய அரசாங்கத்துடன் மட்டுமின்றி மாநில அரசாங்கங்களோடும் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது கேட்ஸ் அறக்கட்டளை. ஏழை மக்கள் அதிகமாக உள்ள பீகார், உத்தரப்பிரதேச மாநிலங்களில் முக்கியமாக முதலீடு செய்துள்ளது. பீகாரில் அனன்யா என்ற பெயரில் 2010ல் பீகார் அரசாங்கத்துடன் கேட்ஸ் நிறுவனம் கூட்டு ஏற்படுத்திக் கொண்டுள்ளது. இந்திய அரசாங்கம் பொதுச் சுகாதாரத்திற்காகச் செலவு செய்யும் நிதியுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது கேட்ஸ் அறநிறுவனத்தின் ஒதுக்கீடு என்பது மிகக் குறைவு என்று ஒரு ஆய்வு கூறுகிறது. இந்திய அரசாங்கம் பொதுச் சுகாதாரத்திற்காக 2010-11 காலக்கட்டத்தில் மட்டுமே 18.3 பில்லியன் டாலர் செலவு செய்துள்ளது.

பொது மற்றும் தனியார் கூட்டு (Public Private Partnership)என்ற பெயரில், பொருள் வளர்ச்சிக்கான கூட்டுகள் (Product Development
Partnerships) ஏற்படுத்துவதே கேட்ஸின் முக்கிய நோக்கம். மென்பொருள் தொழில் தாண்டி வேறு பொருள்களை உற்பத்தி செய்து விற்பதற்கான வழியை ஏழை மற்றும் வளரும் நாடுகளுக்குள் தான் நுழைவதற்கான தனது திட்டத்தை கேட்ஸ் அறக்கட்டளை மூலம் தீட்டியுள்ளார். மருந்துகள், தடுப்பு ஊசி மருந்துகள், நோய் கண்டறி பொருட்கள், பூச்சிக் கொல்லி மருந்துகள் போன்றவைதான் இவரின் இப்போதைய பிரதான பொருள்கள். ஏழை மக்களின் சுகாதாரம், ஊட்டச்சத்து என்று சொல்லிக் கொண்டு மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் போன்ற வற்றை தங்கு தடையின்றி விற்பனை செய்யவே இந்தியா, ஆப்பிரிக்கா போன்ற வளரும் நாடுகளை கேட்ஸ் நிறுவனம் தேர்ந்தெடுத் துள்ளது. பொருள்களை தான் தயாரிக்காமல் அப்பொருளைத் தயாரிக்கும் நிறுவனங்களுடன் கூட்டு வைத்துக் கொண்டு, அந் நிறுவனங்களுக்கும் அரசாங்கங்களுக்கும் இடையே பாலமாகச் செயல்படுகிறது கேட்ஸ் அறக்கட்டளை.

இந்திய அரசாங்கத்தின் உயிரி தொழில் நுட்பத் துறையும் கேட்ஸ் அறக்கட்டளையும் சேர்ந்து 2013ல் இந்தியாவின் மாபெரும் சவால்கள் (எழ்ஹய்க் இட்ஹப்ப்ங்ய்ஞ்ங்ள் ஐய்க்ண்ஹ) என்ற திட்டத்தை உருவாக்கின. அத்திட்டத்தின்படி இந்தியாவில் கேட்ஸ் அறக்கட்டளையும் இந்தியாவின் உயிரி தொழில்நுட்பத்துறையும் தலா 25 மில்லியன் டாலர் 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்து தடுப் பூசி மருந்துகள், மருந்துகள், விவசாயப் பொருள்கள் கண்டுபிடிப்புகளில் ஈடுபடுவது, ஊட்டச்சத்தின்மை, குழந்தைகள் மற்றும் குடும்ப நலத்தில் தலையீடு செய்வது என்றும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டுள்ளன. புதிய தடுப்பூசி மருந்துகளை கண்டு பிடிப்பது, ஏற்கனவே இருப்பவற்றை மேம்படுத்துவது, மரபு வழி மற்றும் வேதியியல் செயல் திட்டங்களை வளர்த்தெடுத்து நோய்களைக் கட்டுப்படுத்துவது, சத்துமிக்க உணவு தானியங்களை அறிமுகப்படுத்தி ஊட்டச்சத்தை இந்திய மக்களுக்குக் கொடுப்பது ஆகியவைதான் மாபெரும் சவால்கள் திட்டத்தின் முக்கிய நோக்கங்களாம்.

சத்தான உணவை உற்பத்தி செய்து இந்தியக் குழந்தைகளுக்கு ஊட்டி எல்லாரையும் ஹார்லிக்ஸ் விளம்பரக் குழந்தைகள் போல ஆக்கப் போகிற அற்புதமான திட்டம் இது என்று பார்த்த மாத்திரத்தில் கண்டிப்பாகத் தோன்றும். இந்தத் திட்டத்தால் முதலில் அடி வாங்கப்போவது பாரம்பரிய உணவு தானியங்களும் பாரம்பரிய உணவு உற்பத்தியும். ஏனென்றால், கேட்ஸ் அறக்கட்டளை முழுக்க முழுக்க ஆதரிப்பது மரபணு மாற்றுப் பயிர்களையும் உணவு தானியங்களையும்தான். சத்துமிக்க அரிசி என்று தங்க நிற மரபணு மாற்று அரிசியை பரிந்துரைக்கிறது கேட்ஸ் அறக்கட்டளை. காற்றில் இருக்கும் நைட்ரஜனை உறிஞ்சிக் கொண்டு, உரம் போடாமல்  வளரும் மரபணு மாற்று அரிசி, கோதுமையைக் கண்டுபிடித்த இங்கிலாந்து விஞ்ஞானிக்கு 6.4 பில்லியன் பவுன்ட்ஸ் பரிசாகக் கொடுத்திருக்கிறார் பில் கேட்ஸ்.  நம்ம ஊரு எம்.எஸ்.சுவாமிநாதனின் பசுமைப்புரட்சியினால் நம் நாட்டு விவசாயம் எல்லாம் ஏற்கனவே பாழாய்போய், விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.  இப்போது ஊட்டச்சத்து, உரமில்லாப் பயிர் என்று சொல்லி மொத்த விவசாய நிலங்களை யும் தரிசாக்கதலை எடுத்துள்ளார்கள் கேட்ஸ் தம்பதியர். கேட்ஸ் அறக்கட்டளைக்கு மிகவும் நெருக்கமான கூட்டாளி மான்சாண்டோ நிறுவனம்.

இந்த மாபெரும் சவால்கள் திட்டத்தில் தயாரிக்கப்படும் மருந்து மற்றும் தடுப்பூசிகள். எல்லாம் உண்மையிலேயே இந்தியர்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்கச் செய்யும் என்பதற்கு நம்பகமான ஆதாரங்கள் எதுவும் இல்லை. ஒரு மருந்து தயாரிப்பு மற்றும் விற்பனையில், அதை சந்தைக்குக் கொண்டு செல்வதற்கு முன்பு பரிசோதனை செய்து பார்ப்பதும் அடங்கும். அதுமாதிரியான பரிசோதனைகளை பேயர், ஏராஸ், கிளாஸ்கோ ஸ்மித் கிலைன் (சிஎஸ்கே) ஃபைசர், ஷனோபி, க்ருசெல் போன்ற பன்னாட்டு மருந்து நிறுவனங்களுக் காக கேட்ஸ் அறக்கட்டளை இந்தியாவில், ஆப்பிரிக்காவில் உள்ள ஏழை மக்களிடத்தில் நடத்துகிறது. 2011 மார்ச்சில் தங்களுடைய டிபி நோய் தடுப்பூசி பரிசோதனையை பெங்களூரு வில் ஏராஸ் மற்றும் க்ருசெல் நிறுவனங்களுக் காக கேட்ஸ் அறக்கட்டளை கூட்டுடன் நடத் தப்பட்டது. போலியோ ஒழிப்புப் பிரச்சாரமும் சொட்டு மருந்து வழங்கும் நிகழ்ச்சியும்  அடிக்கடி நடப்பதற்குக் காரணம் கேட்ஸ் அறக் கட்டளை, சர்வதேச ரோட்டரி சங்கம் மற்றும் உலகச் சுகாதார நிறுவனம். பில் கேட்ஸøக்கு போலியோ ஒழிப்பு பொதுச் சுகாதாரத்தில் மிக முக்கியமான ஒன்றாம். மேற்கண்ட நிறுவனங்களே போலியோ மருந்துகளை அதிகம் தயாரிக்கின்றன. அதனால், இந்திய அரசிடம் தன் செல்வாக்கைக் காட்டினார். இந்திய அரசும் கேட்ஸ÷க்கு அடிபணிந்து நம் நாட்டின் பொதுச் சுகாதாரத் திட்டத்தில் முன்னுரிமையில்லாத போலியோ ஒழிப்புக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கிறது. போலியோ ஒழிப்பு தேவையில்லை என்பதல்ல. அதைவிட இந்தியாவில் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டியவை தாய்மார்களுக்கு ஊட்டச்சத்தின்மை, நோஞ்ஞான் குழந்தைகள், பச்சிளம் குழந்தைகள்  இறப்பைத் தடுப்பது, கொசு ஒழிப்பு, சுத்தமான சுகாதாரமான குடிநீர் போன்றவையாகும்.

ஹெப்பாடைட்டிஸ் பி என்று சொல்லப்படும் மஞ்சள்காமாலை தடுப்பூசி, மற்றும் சில தடுப்பூசிகளைப் போடுவதற்கு இந்திய அரசாங்கத்தைக் கட்டாயப்படுத்துகிறது கேட்ஸ் அறக்கட்டளை. மருத்துவ நிபுணர்கள் பலர் இந்தியாவின் சூழ்நிலைக்கு, இந்திய மக்களின் வாழ்நிலைக்கு வருமானத்திற்கு இவையெல்லாம் தேவையில்லை. அவை அவ்வளவு பாது காப்பானவையும் இல்லை என்று சொன்னாலும் கேட்ஸ் வகையறாக்களும் இந்திய அரசாங்கமும் அதைக் காதில் போட்டுக் கொள்வதேயில்லை. வியாபாரத்தில் கண்ணும் கருத்துமாக உள்ளனர்.

338 மில்லியன் டாலர் நிதியில் 2003ல் “அவகான்” என்கிற எய்ட்ஸ் தடுப்புத் திட்டத்தை, இந்தியாவில் இருக்கும் எல்லாருக்கும் எய்ட்ஸ் இருப்பதுபோல் ஆரம்பித்தது. பின்னர், அதை பாதியிலேயே திரும்பப்பெற்றுக் கொண்டு அரசாங்கத்தின் தலையில் கட்டிவிட் டது கேட்ஸ் நிறுவனம். காலரா, வயிற்றுப் போக்கு போன்றவை வருவதற்குக் காரணமாக உள்ள அசுத்தமான தண்ணீர் போன்றவற்றைச் சீர் செய்வதற்குப் பதிலாக, அதற்கு தடுப்பூசி கண்டுபிடித்து, பரிசோதனை நடத்தி, விற்பனை செய்து காசு பார்ப்பது இதுதான் கேட்ஸ் அறக் கட்டளையின் அறம். அளிப்பு அதிகமானால் தான் அதிக லாபம் வரும். அளிப்பு அதிகரிக்க அதற்கான தேவையை அதிகரிக்க வேண்டும். அதற்காகவே, சில அமைப்புகளை உருவாக்கி அவற்றின் மூலம் படிப்பு, ஆராய்ச்சி, கண்டு பிடிப்பு, பரிசோதனை, முடிவு, பிரச்சாரம் என்று அரசாங்கங்கள் மூலமே அவற்றைச் செய்ய வைக்கிறார்கள் இந்த பில்கேட்ஸ் போன்ற பெரும் கொடையாளர்கள்.

இந்தியாவில் கேட்ஸ் அறக்கட்டளையும் பிக் பார்மாவும் இணைந்து மருந்துப் பரிசோத னைகளை இந்திய மலைவாழ், ஏழை மக்களிடத்தில் நடத்தினார்கள். பெண்களுக்கு வரும் கர்ப்பப் பை புற்றுநோயை உருவாக்கும் ஹெச்.பி.வி. வைரஸுக்கான தடுப்பூசியை குஜராத் மற்றும் ஆந்திராவில் ஆதிவாசிப் பெண்களுக்குப் போட்டு பரிசோதனை செய்து பார்த்தார்கள். அந்த பரிசோதனையில் 2010ல் ஏழு இளம் வயதுப் பெண்கள் இறந்துபோனார்கள். சிஎஸ்கே மற்றும் மெர்க் மருந்துக் கம்பெனிகளால் தயாரிக்கப்பட்ட இதே மருந்தை 10 முதல் 14 வயதுள்ள 23,000 பெண்கள் மீது பரிசோதனை செய்துள்ளார்கள். அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு மிக மோசமான பக்க விளைவுகள் ஏற்பட்டன. இயற்கையாக உள்ள நோய் எதிர்ப்புத் தன்மையும் குறைந்துபோனது. அந்தப் பெண்களுக்கு தொடர் சிகிச்சை எதுவும் தரப்படவில்லை பரிசோதனை நடத்திய கேட்ஸ் அறக்கட்டளை கனவான்கள். இந்திய நாடாளுமன்றக் குழு ஒன்று, கேட்ஸ் அறக்கட்டளை, மருந்துப் பரிசோதனை செய்வதற்காக உருவாக் கப்பட்டுள்ள சட்டப்படியான வழிமுறைகள் எதையும் கடைபிடிக்கவில்லை என்று கண்டு பிடித்து அறிவித்தது.

போலியான மருந்துகளை இந்திய மக்களின் தலையில் கட்டியது கேட்ஸ் அறக்கட்டளை. “கார்ட்ஸில்” என்கிற கர்ப்பப் பை புற்று தடுப்பூசியை அமெரிக்க, அய்ரோப்பியப் பெண்கள் போட்டுக் கொள்ள மறுத்த பின்னர் இந்தியாவில் அதை விற்பனை செய்ய முயற்சித்தார்கள். 2012ல் கார்ட்ஸில் விற்பனை 35 சதவீதம் அதிகமானது. மேலை நாடுகளில் தோற்றுப்போன, அதிகமான பக்கவிளைவுகளை ஏற்படுத்திய “நார்பிளாண்ட்” என்ற கருத்தடை மாத்திரையை விற்பனை செய்வதற்கு கேட்ஸ் அறக்கட்டளை அதிக அக்கறை எடுத்துக் கொண்டது. இந்த மாத்திரையின் தயாரிப்பு நிறுவனத்திற்கு எதிராக அமெரிக்கப் பெண்கள் 36,000 பேர் வழக்கு தொடுத்தார்கள். ஃபைசர் நிறுவனத்தின் இன்னொரு கருத்தடை மாத்திரையான டெப்போ புரோவேராவை அறிமுகப் படுத்தியது கேட்ஸ் நிறுவனம். அதுவும் பெண் களுக்கு கர்ப்பப்பை பாதிப்பு, மனஅழுத்தம், முடி உதிர்தல் போன்ற பல்வேறு பிரச்சனைகளை உருவாக்கியது.   
   
2009ல் உலகளவில் நிதி நெருக்கடி ஏற்பட்டபோது, பில்கேட்ஸ், வாரன் பப்பெட், டேவிட் ராக்பெல்லர் ஆகியோர் தலைமையில் நியூயார்க்கில் உலகப் பணக்காரர்கள் ஒன்று கூடினார்கள். முதலாளித்துவ நிதி நெருக்கடி, முதலாளித்துவ ஆட்சியாளர்களால் வளரும் நாடுகளில் மக்கள் மத்தியில் ஏற்பட்ட அதிருப்தியைச் சமாளிக்க, குறிப்பாக மக்கள் தொகைப் பெருக்கம் மற்றும் தொற்று நோய் ஆகியவற்றில் தாங்கள் தலையிடுவதன் மூலம், தங்களை பெரும் கொடையாளர்களாகக் காட்டத் தீர்மானித்தார்கள். மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளான மருத்துவம், சுகாதாரம், கல்வி ஆகியவை கண்டுகொள்ளப்படாமல் விடப்பட்டால், பிரச்சினைகள் பெரிதாகி தங்களுக்கு ஆபத்தாகும் என்றுணர்ந்த பெரும் பணக்காரர்கள் ஆள் ஆளுக்கு அறக்கட்டளைகள் ஆரம்பித்தார்கள். இந்த அறக்கட்டளைகள் மூலம் தங்களை பெரும் கொடையாளர்களாகக் காட்டிக் கொள்வது மட்டுமின்றி, தாங்கள் கட்டவேண்டிய சட்டப்படியான வரியில் இருந்தும் தப் பித்துக் கொள்கிறார்கள். இந்தக் கொடையாளர்கள் வேஷம் பெரும் பணக்காரர்களால் இப்போது கண்டுபிடிக்கப்பட்டதல்ல. பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பெரும் முதலாளி களால் அங்கங்கே போடப்பட்டு வரும் வேஷம் என்றாலும் இன்றைய உலகமய காலக்கட்டத்தில் அது ஓர் உலகளாவிய பரிமாணம் எடுக்கிறது.

பில் கேட்ஸ் அறக்கட்டளையின் அடிப்படை நோக்கமே  ஆளும் வர்க்க நலன்களுக்கு ஏற்ப சமூகத்தை மறு சீரமைப்பு செய்வதே. வளரும் நாடுகளின், மேலை நாட்டுக் கலாச்சாரம் இல்லாத நாடுகளின் மக்கள் தொகைப் பெருக்கம் மக்களை கம்யூனிசத்திற்கு இட்டுச் செல்லும் என்று அமெரிக்க ஆட்சியாளர்கள் அஞ்சுகிறார்கள்.  அதற்காக,  மக்கள் தொகைப் பெருக்கத்தையும் கட்டுப்படுத்த வேண்டும் என்கிறார்கள். அதன் காரணமாகவே அதிகமான அளவு கருத்தடை மாத்திரைகளுக்கான பிரச்சாரங்களை மேற்கொள்கிறார்கள். அளவுக் கதிகமான குழந்தைகளே தங்கள் ஏழ்மைக்குக் காரணம் என்று எண்ண வைக்கிறார்கள். அதன் வாயிலாக சமூக உழைப்பின் மூலம் உருவாக்கப்பட்ட செல்வங்கள் ஒரு சிலரிடமே குவிந்து கிடப்பதற்கு எதிரான சிந்தனையில் இருந்து மக்களைத் திசை திருப்ப முயற்சிக்கிறார்கள். இந்த அறக்கட்டளைகள் மூலம் அரசாங்கங்களின் சேவைத் துறைகளை அவசியமற்றவைகள், அர்த்தமற்றவைகள் என்ற சிந்தனையை மக்கள் மத்தியில் பதிய வைக்க முயற்சிக்கிறார்கள். ஆனால், என்னதான் செய்தாலும் இவர்களின் பிரதான நோக்கம் குறிக்கோள் “லாபம், லாபம் லாபம்” என்கிறபோது, இந்த பெரும்கொடையாளர்கள் அம்பலப்படுவது தள்ளிப் போகலாமே தவிர, தவிர்த்துவிட முடியாது.







Search