COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Friday, August 15, 2014

நாடாளுமன்ற ஜனநாயகமே மக்கள் ஜனநாயகமாகிவிடுமா? பகுதி 5

முதலாளித்துவ அரசு தகர்க்கப்பட வேண்டும், பாட்டாளி வர்க்க அரசும், முதலாளிகளுக்கு முதலாளித்துவ மீட்பிற்கு எதிராகச் சர்வாதிகாரமாகவும், ஏகப்பெரும்பான்மை மக்களுக்கு ஜனநாயகமாகவும் இருக்கும் எனப் பார்த்தோம். சர்வாதிகாரம் என்ற கோணத்தில் அரசாகவும், ஏகப்பெரும்பான்மை மக்கள் பங்கேற்பு ஏகப்பெரும்பான்மை மக்களுக்கு ஜனநாயகம் என்ற விதத்தில் அரசல்லாமலும் இருக்கிற, இந்த அரசுதான் உலர்ந்து விழும் என்பதையும் பார்த்தோம்.

பாட்டாளி வர்க்க அரசு, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் எப்படி செயல்படும் என்பதற்கு மார்க்ஸ் எங்கெல்ஸ் லெனின் மூவருமே பாரிஸ் கம்யூனை உதாரணம் காட்டுகிறார்கள். பாரிஸ் கம்யூனை நிறுவுவதில் எந்த கம்யூனிஸ்ட் கட்சியும் தலைமைப் பங்காற்றவில்லை. பாரிஸ் கம்யூன் நிறுவும் போராட்டத்தில், மார்க்சைப் பின்பற்றியவர்களே பெரும் எண்ணிக்கையில் இருந்தார்கள் எனச் சொல்ல முடியாது. மாறாக, மார்க்சும் எங்கெல்சும் விடாமல் கருத்துப் போர் புரிந்த, புரூத்தோனிய பிளாங்கிய கருத்துக்களைப் பின்பற்றியவர்களே கணிசமான எண்ணிக்கையில் இருந்தனர். எழுச்சிக்கு உரிய தருணமல்ல என்ற மார்க்சின் ஆலோசனை ஏற்கப்படவில்லை.

புரட்சிகர எழுச்சி நிகழ்ந்தது. கம்யூன் நிறுவப்பட்டது. கம்யூனார்டுகள் விண்ணைத் தாக்கினார்கள் என வியந்து பாராட்டிய மார்க்சும், எங்கெல்சும் 1848 கம்யூனிஸ்ட் அறிக்கையில் முதலாளித்துவ அரசு தகர்க்கப்பட வேண்டும் என்ற திருத்தத்தை, இரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்ட பாரிஸ் கம்யூன் அனுபவத்திலிருந்து மேற்கொண்டதாகச் சொன்னார்கள்.

நிலையான படை, காவல்துறை, அதிகாரத்துவ அரசு பொறியமைவு என்பவை இல்லாமல் ஓர் அரசு சாத்தியமா?

அவை பாட்டாளிவர்க்க அரசில் என்னவாகும் எப்படி இருக்கும் என்ற கேள்விகளுக்கு பாரிஸ் கம்யூன் பதில் தந்தது.

எப்படி? எப்படி? எப்படி?

மேற்கோள் 1


‘நிரந்தரச் சேனையை அகற்றிவிட்டு அதற்குப் பதிலாய் ஆயுதமேந்திய மக்களைத் தோற்றுவித்ததே கம்யூனுடைய முதலாவது அரசாணையாகும்..’

‘...அனைத்து மக்களது வாக்குரிமையின் அடிப்படையில் பாரிஸ் நகரின் பல்வேறு தொகுதிகளிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட நகராட்சி மன்ற உறுப்பினர்களைக் கொண்டு கம்யூன் நிறுவப்பட்டது. இந்த உறுப்பினர்கள் பொறுப்புள்ளவர்களாகவும் எந்நேரத்திலும் நீக்கப்படக் கூடியவர்களுமாய் இருந்தனர். இயற்கையாகவே அதன் உறுப்பினர்களில் பெரும்பான்மையோர் தொழிலாளர்களாகவோ, தொழிலாளி வர்க்கத்தின் முழு ஆதரவுக்குரிய பிரதிநிதிகளாகவோதான் இருந்தனர்...

‘...இதுகாறும் அரசாங்கத்தின் கைக்கருவியாய் இருந்து வந்த போலீஸ் இப்பொழுது திடுதிப்பென அதன் அரசியல் செயற்பாடுகள் யாவும் பறிக்கப்பட்டு பொறுப்புள்ள, எக்காலத்திலும் நீக்கப்படக் கூடிய கம்யூன் கைக் கருவியாய் மாற்றப்பட்டது... நிர்வாகத்தின் ஏனைய எல்லாத் துறைகளையும் சேர்ந்த அதிகாரிகளும் இதே போல மாற்றப்பட்டனர்... கம்யூன் உறுப்பினர்கள் முதலாய் எல்லோரும் தொழிலாளருக்குரிய சம்பளங்கள் பெற்றுப் பொதுச் சேவை புரிய வேண்டியதாயிற்று. அரசின் உயர் பதவியாளர்கள் மறைந்ததோடு உயர் பதவியாளர்களது தனியுரிமைகளும் சலுகைகளும் பிரதிநிதித்துவ மான்யத் தொகைகளும் மறைந்துவிட்டன... பழைய அரசாங்கத்தின் பௌதிகப் பலாத்காரக் கருவிகளான நிரந்தரச் சேனையையும் போலீசையும் ஒழித்துக் கட்டியதும் கம்யூனானது உடனே ஆன்மிக அடக்குமுறைக் கருவியையும், அதாவது குருமார்களுடைய அதிகாரத்தையும் தகர்க்க முற்பட்டது. நீதி மன்றத்தினர் போலியான சார்பற்ற நிலையை இழந்துவிட்டனர்... இனி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டியோரும், பொறுப்புடையோரும், நீக்கப்படக் கூடியோரும் ஆயினர்...’

ஆக, கம்யூனானது நொறுக்கப்பட்ட அரசுப் பொறியமைவுக்குப் பதிலாய் நிறைவான ஜனநாயகத்தை நிறுவியதாய் ‘மட்டும்தான்’ தோன்றும். அதாவது, நிரந்தரச் சேனையை ஒழித்தது; எல்லா அதிகாரிகளையும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டியவர்களாக்கி, திருப்பியழைக்கப்படக் கூடியவர்களாக்கியது. ஆனால் உண்மையில் இந்த ‘மட்டும்தான்’ என்பது ஒரு வகை நிறுவனங்களை அகற்றி அவற்றினடத்தில் அடிப்படையிலேயே வேறொரு தன்மையதான பிற நிறுவனங்களைத் தோற்றுவிக்கும் பிரம்மாண்ட மாறுதலைக் குறிப்பதாகும்.

 ‘அளவு பண்பாய் மாறுவதன்’ எடுத்துக்காட்டு இது. அதாவது முடியுமான அளவுக்கு முழுமையாகவும் முரணின்றியும் செயல்படுத்தப்பட்ட ஜனநாயகமானது முதலாளித்துவ ஜனநாயகத்திலிருந்து பாட்டாளி வர்க்க ஜனநாயகமாய் மாற்றமடைந்து விடுகிறது; அதாவது அரசு (குறிப்பிட்ட ஒரு வர்க்கத்தை அடக்குவதற்கான தனிவகை சக்தி) இனி மெய்யான அரசு அல்லாத ஒன்றாய் மாற்றமடைந்து விடுகிறது.

   மேற்கோள் 2

‘...அரசும் அரசின் உறுப்புக்களும் சமுதாயத்தின் பணியாட்கள் என்கிற நிலையிலிருந்து சமுதாயத்தின் எஜமானர்கள் என்கிற நிலைக்கு இவ்விதம் மாற்றப்படுவதற்கு எதிராய் - முந்திய எல்லா அரசுகளிலும் இம்மாற்றம் தவிர்க்க முடியாதது - கம்யூனானது பிசகாத இரு வழிகளைக் கையாண்டது. முதற்கண், அது எல்லாப் பதவிகளுக்கும் - நிர்வாகம், நீதித் துறை, கல்வித் துறை ஆகிய எல்லாப் பதவிகளுக்கும் - அனைத்து மக்கள் வாக்குரிமையின் அடிப்படையிலான தேர்தல் மூலம் ஆட்களை அமர்த்தியதோடு, அவர்களை அதே வாக்காளர்களால் எந்நேரத்திலும் திருப்பியழைக்கப்படக் கூடியவர்களாக்கிற்று. இரண்டாவதாக, அது உயர் அதிகாரிகளாயினும் சரி, கீழ் அதிகாரிகளாயினும் சரி எல்லோருக்கும் பிற தொழிலாளர்களுக்குக் கிடைக்கும் அதே சம்பளங்கள் தான் கொடுத்தது. யாருக்கும் கம்யூன் அளித்த மிக உயர்ந்த சம்பளம் 6000 பிராங்குதான். பிரதிநிதித்துவ உறுப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்குக் கம்யூனால் விதிக்கப்பட்ட மீறமுடியாத ஆணைகளை அன்னியில், இவ்வழியில் பதவி வேட்டைக்கும் தன்னல உயர்வு நாட்டத்துக்கும் சரியானபடி தடை எழுப்பப்பட்டது...’

இங்கே எங்கெல்ஸ் முரணற்ற ஜனநாயகம் ஒருபுறம் சோசலிசமாய் மாற்றப்படுவதையும், மறுபுறம் சோசலிசம் அவசியமெனக் கோருவதையும் குறிக்கும் சுவையான எல்லைக் கோட்டினை நெருங்கி வந்துவிடுகிறார்.

ஏனெனில் அரசை ஒழித்திட அரசு நிர்வாக அலுவல்களை தேச மக்களின் மிகப் பெரும் பகுதியோருடைய - நாளடைவில் ஒவ்வொரு தனியாளுடைய - தகுதிக்கும் ஆற்றலுக்கும் உட்பட்ட எளிய கண்காணிப்பு, கணக்கீடு வேலைகளாய் மாற்றுவது அவசியமாகும். பதவி வேட்டை அடியோடு ஒழிக்கப்பட வேண்டுமாயின், அரசு நிர்வாக அலுவல் துறையில் லாபம் தருவனவாய் இல்லாவிட்டாலும் ‘மதிப்புக்குரியனவாகிய’ பதவிகள், மிகமிக சுதந்திரமான முதலாளித்துவ நாடுகளில் எல்லாம் இடையறாது நடைபெற்று வருவது போல, வங்கிகளின் அல்லது கூட்டுப் பங்குக் கம்பெனிகளில் கொழுத்த ஆதாயத்துக்குரிய பதவிகள் பெறுவதற்கான உந்து தளங்களாய்ப் பயன்பட முடியாதபடி செய்தாக வேண்டும்.

மேற்கோள் 3

‘அமைச்சகங்கள்’ தொடர்ந்து இருக்குமா, அல்லது ‘நிபுணர் குழுக்களோ’, வேறு ஏதோ அமைப்புகளோ நிறுவப்படுமா என்பதல்ல கேள்வி - இது எப்படி இருப்பினும் ஒன்று தான், பழைய அரசுப் பொறியமைவு (முதலாளித்துவ வர்க்கத்துடன் ஆயிரம் ஆயிரம் இழைகளால் பின்னிப் பிணைக்கப்பட்டதும் மாறாத மாமூல்களிலும் மந்தத்திலும் ஊறிவிட்டதுமான இந்தப் பொறியமைவு) தொடர்ந்து இருந்து வருமா, அல்லது அழிக்கப்பட்டு அதனிடத்தில் புதிய ஒன்று அமைக்கப்படுமா என்பதே கேள்வி. புதிய வர்க்கம் பழைய அரசுப் பொறியமைவின் துணை கொண்டு ஆணை செலுத்தி, ஆட்சி புரிவதில் அடங்குவதல்ல புரட்சி; இந்த வர்க்கம் இந்தப் பொறியமைவை நொறுக்கி விட்டு, ஒரு புதிய பொறியமைவின் துணை கொண்டு ஆணை செலுத்தி, ஆட்சி புரிவதில் தான் புரட்சி அடங்கியுள்ளது. மார்க்சியத்தின் இந்த அடிப்படைக் கருத்தை காவுத்ஸ்கி மூடி மெழுகிவிடுகிறார், அல்லது இதைப் புரிந்து கொள்ளத் தவறிவிடுகிறார்.

அதிகாரிகளைப் பற்றி அவர் எழுப்பும் கேள்வி, கம்யூனின் படிப்பினைகளையும் மார்க்சின் போதனைகளையும் அவர் புரிந்து கொள்ள வில்லை என்பதைத் தெளிவாய்ப் புலப்படுத்துகிறது. ‘கட்சியிலும் தொழிற்சங்கங்களிலும் கூட நம்மால் அதிகாரிகள் இல்லாதபடிச் செய்ய முடியாதே...’

முதலாளித்துவத்தில், முதலாளித்துவ வர்க்கத்தின் ஆட்சியில் நம்மால் அதிகாரிகள் இல்லாதபடிச் செய்ய முடியாதுதான். முதலாளித்துவத்தால் பாட்டாளி வர்க்கம் ஒடுக்கப்பட்டு இருக்கிறது. உழைப்பாளி மக்கள் அடிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். முதலாளித்துவத்தில் ஜனநாயகம் கூலி அடிமை முறையின் எல்லா நிலைமைகளாலும் மக்களின் வறுமையாலும் துன்பத்தாலும் கட்டுண்டு, இறுக்கப்பட்டு குறுகலாக்கப்பட்டு, குலைக்கப்பட்டு இருக்கிறது. இக்காரணத்தினால்தான், இது ஒன்றினால்தான், நமது அரசியல் நிறுவனங்கள், தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் முதலாளித்துவ நிலைமைகளால் களங்கப்படுத்தப்படுகிறார்கள் - அல்லது இன்னும் துல்லியமாய்ச் சொல்வதெனில் களங்கமுறுவதற்கான போக்குடையோர் ஆக்கப்படுகிறார்கள் - அதிகாரவர்க்கத்தினராய், அதாவது மக்களிடமிருந்து பிரிந்து மக்களுக்கு மேலானோராய், தனிச் சலுகை படைத்தோராய், மாறிவிடும் போக்குடையோராகின்றனர்.

அதிகாரவர்க்க அமைப்பின் சாராம்சம் இது. முதலாளிகளுடைய உடைமைகள் பறிமுதல் செய்யப்படுகின்றவரை, முதலாளித்துவ வர்க்கம் வீழ்த்தப்படுகிறவரை, பாட்டாளி வர்க்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகளும் கூட தவிர்க்கமுடியாதபடி ஓரளவுக்கு ‘அதிகாரவர்க்க மயமாக்கப்படவே’ செய்வர்.

தேர்ந்தெடுக்கப்படும் நிர்வாகிகள் சோசலிசத்திலும் இருப்பார்களாதலால், காவுத்ஸ்கியின் கூற்றுப்படி அதிகாரிகளும் இருக்கவே செய்வர்.

அதிகாரவர்க்கமும் இருக்கவே செய்யும்! அவருடைய இந்தக் கூற்று முற்றிலும் தவறானது. மார்க்ஸ், கம்யூனின் உதாரணத்தைச் சுட்டிக்காட்டி, நிர்வாகிகள் ‘அதிகாரவர்க்கத்தினராய்’ இருப்பது ‘அதிகாரிகளாய்’ இருப்பது சோசலிசத்தில் முடிவுற்றுவிடும் என்பதைக் காட்டுகிறார்; அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்னும் கோட்பாட்டுடன் கூட, எந்த அளவுக்கு, எந்நேரத்திலும் திருப்பியழைக்கப்படலாமென்ற கோட்பாடும் புகுத்தப்படுகிறதோ, சம்பளங்கள் சராசரித் தொழிலாளியுடைய சம்பளத்தின் நிலைக்குக் குறைக்கப்படுகிறதோ, மற்றும் நாடாளுமன்ற உறுப்புகளுக்குப் பதிலாய் ‘ஒருங்கே நிர்வாக மன்றங்களாகவும் சட்டமன்றங்களாகவும் இயங்கும் செயலாற்றும் உறுப்புகள்’ நிறுவப்படுகின்றனவோ அந்த அளவுக்கு அதிகாரவர்க்கத்தினருக்கும் ‘அதிகாரிகளுக்கும்’ முடிவு ஏற்பட்டுவிடும்.

மேற்கோள் 4

எத்தருணம் முதல் சமுதாயத்தின் எல்லா உறுப்பினர்களும் - அல்லது குறைந்தது மிகப் பெரும்பான்மையோர் - அரசைத் தாமே நிர்வகிக்கக் கற்றுக்கொள்கிறார்களோ, இந்தப் பணியை நேரில் தாமே மேற்கொள்கிறார்களோ, மிகச் சொற்ப தொகையினரே ஆன முதலாளித்துவச் சிறுபான்மையோரையும், தமது முதலாளித் துவப் பழக்கங்களை விட்டொழிக்க விரும்பாத கனவான்களையும், முதலாளித்துவத்தால் அறவே பாழ்படுத்தப் பட்டுவிட்ட தொழிலாளர்களையும் கண்காணிக்க ‘ஏற்பாடு செய்கிறார்களோ’ அத்தருணம் முதல் எவ்வகையான அரசாங்கத்துக்குமுள்ள தேவை அடியோடு மறையத் தொடங்கிவிடும்.

ஜனநாயகம் எவ்வளவுக்கு எவ்வளவு பூரணமானதாகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு அது தேவையற்றதாகும் தருணம் அருகில் வந்துவிடுகிறது. ஆயுதமேந்திய தொழிலாளர்களாலான அரசு, ‘அரசெனும் சொல்லின் சரியான பொருளில் அரசாயில்லாத’ இது, எவ்வளவுக்கு எவ்வளவு ஜனநாயகமுடைத்ததாய் ஆகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு அரசின் ஒவ்வொரு வடிவமும் வேகமாய் உலர்ந்து உதிரத் தொடங்குகிறது.

ஏனென்றால், எல்லோரும் சமூகப் பொருளுற்பத்தியை நிர்வகிக்கக் கற்றுக் கொண்டு சுயேச்சையாய்த் தாமே நடைமுறையில் நிர்வகிக்கும் போது, சுயேச்சையாய்ய்த் தாமே கணக்குகள் பதிவு செய்து கொண்டு சோம்பேறிகளையும் செல்வச் சீமான்களது புதல்வர்களையும் மோசடிக்காரர்களையும் ஏனைய ‘முதலாளித்துவ மரபுகளின் காவலர்களையும்’, கண்காணிப்புச் செய்யும்போது இந்த வெகுஜன அளவிலான கணக்கீட்டிலிருந்தும் கண்காணிப்பிலிருந்தும் தப்புவது  தவிர்க்க முடியாத வகையில், அவ்வளவு கடினமாகி விடுமாதலால், மற்றும் உடனுக்குடன் கடுந்தண்டனைக்கு உரியதாக்கப்படலாமாதலால் (ஏனெனில் ஆயுதமேந்திய தொழிலாளர்கள் காரிய வழிப் பட்டவர்களே அன்றி உணர்ச்சிப் பசப்பாளர்களான அறிவுத் துறையினரல்ல, யாரும் தம்மிடம் வாலாட்ட இடந்தர மாட்டார்கள்), சமூக வாழ்க்கையின் சாதாரண அடிப்படை விதிகளைப் பற்றியொழுக வேண்டியது அவசியமானது விரைவில் நிலையான ஒரு பழக்கமாகிவிடும்.

இனி கம்யூனிச சமுதாயத்தின் முதற் கட்டத்திலிருந்து அதன் உயர் கட்டத்துக்கு மாறிச் செல்லவும், அதனுடன் கூடவே அரசு பூரணமாய் உலர்ந்து உதிரவும் பாதை  விரியத் திறக்கப்பட்டுவிடும்.  

மேற்கோள் 5

பாட்டாளி வர்க்க அரசாங்கம் மிகக் கஷ்ட நிலையில் உள்ள ஒரு குடும்பத்தைப் பணக்காரனுடைய வீட்டில் கட்டாயப்படுத்திக் குடியமர்த்த வேண்டும் என்று வைத்துக் கொள்வோம். நமது தொழிலாளர் மிலீஷியாப் படையில் பதினைந்து பேர்கள் இருப்பதாக வைத்துக் கொள்வோம்; இரண்டு மாலுமிகள், இரண்டு போர்வீரர்கள், வர்க்க உணர்வுள்ள இரண்டு தொழிலாளர்கள் (அவர்களில் ஒருவன் மட்டும் நமது கட்சியைச் சேர்ந்தவனாக அல்லது அதன் அனுதாபியாக இருப்பதாக வைத்துக் கொள்வோம்), ஒரு படிப்பாளர், ஏழை உழைப்பாளிகள் எட்டுப் பேர் அவர்களில் குறைந்தபட்சம் அய்வர் பெண்கள், வீட்டு வேலை செய்பவர்கள், பயிற்சித் திறனற்ற தொழிலாளர்கள் முதலியோர். இப்படை பணக்காரனுடைய மனைக்கு வந்து சேருகிறது; பார்வையிடுகிறது. அதில் இரண்டு ஆண்களும் இரண்டு பெண்களும் வசித்து வருகிற அய்ந்து அறைகள் இருக்கின்றன என்பதைக் கண்டுகொள்கிறது. ‘அய்யா, இந்தக் குளிர்காலத்திற்கு நீங்கள் இரண்டு அறைகளுக்குள் நெருங்கி வசித்துக் கொண்டு, இப்போது நிலவறைகளில் வசித்து வரும் இரண்டு குடும்பங்களுக்கு மற்ற இரண்டு அறைகளைக் காலி செய்து கொடுக்க வேண்டும். இன்சினியர்களின் உதவியால், (நீங்களும் ஓர் இன்சினீயர்தானே?) எல்லோருக்கும் நல்ல வீடுகள் கட்டித்தரும் வரையில் நீங்கள் சிறிது நெருக்கிக் கொண்டுதான் வசித்து வரவேண்டும். உங்கள் டெலிபோனைப் பத்து குடும்பங்கள் உபயோகிக்கும். கடைக்கு ஓடி சாமான்கள் வாங்கி வருவது போன்ற சில்லறைக் காரியங்களுக்குச் செலவாகும் நேரத்தில் இது நூறு மணி வேலை நேரத்தை மிச்சமாக்கிக் கொடுக்கும். உங்களுடைய குடும்பத்தில் எளிய வேலை செய்யக் கூடிய இருவர் - அய்ம்பத்து அய்ந்து வயது மாதும் பதினான்கு வயதுப் பையனும் - இருக்கிறார்கள். அவர்களுக்கு வேலையில்லை. ஆனால் ஏதாகிலும் லேசான வேலை செய்யலாம். இருவரும் நாளொன்றுக்கு மூன்று மணி நேரம் வேலை பார்த்து, இந்தப் பத்துக் குடும்பங்களுக்கும் உணவுப் பண்டங்கள் வினியோகம் சரியாக நடக்கிறதா என்று மேற்பார்வை செய்து அதற்குச் சரியான கணக்குகள் வைத்துக் கொள்ள வேண்டும். எங்கள் படையிலுள்ள மாணவர் இப்பொழுதே இந்த அரசாங்க உத்தரவின் இரண்டு பிரதிகளை எழுதிக் கொடுப்பார். சரியாக அதன்படி நடந்து வருவோம் என்று உறுதிச்சீட்டு தயை செய்து எழுதிக் கையொப்பமிட்டு எங்களிடம் தருவீர்களாக.’

மேற்கோள் 1ல் தோழர் லெனின், மார்க்ஸ் பிரான்சில் உள்நாட்டுப் போர் நூலில் மார்க்ஸ் பாரிஸ் கம்யூன் பற்றி எழுதியதைச் சுட்டிக் காட்டி விளக்கினார்.

    நிரந்தரப் படை அகற்றப்படும். ஆயுதம் ஏந்திய மக்கள் அந்த வேலைகளைச் செய்வார் கள். இந்த வகையில் பொருளுற்பத்தியில் ஈடுபடாத நிரந்தரப் படை மறையும்.

காவல்துறை, கம்யூனின் அதிகாரத்திற்குள் வரும். எப்போதும் நீக்கப்படலாம். மக்களால் தேர்வு செய்யப்படும். மக்களால் திரும்ப அழைக்கப்படவும் வாய்ப்பு உண்டு.

     அனைவர்க்கும் வாக்குரிமை, தேர்ந்தெடுப்பது, பிரதிநிதித்துவ நிறுவனங்கள் ஆகியவை தொடரும். ஆனால் இப்போதுதான் அவை பொருளுள்ளவையாக மாறும்.

    உயர் பதவிகள் தனிச் சலுகைகளுடன் மக்களிடமிருந்து அந்நியமான, சமூகத்திற்கு மேலே நிற்கும் அரசு இனி இருக்காது. தொழிலாளர்களின் சம்பளங்களிலேயே உயர் அதிகாரிகளும் இருப்பார்கள்.

மேற்கோள் 2ல் எங்கெல்ஸ் எழுதியவற்றைச் சுட்டிக்காட்டி, லெனின் விளக்கினார்.

    பதவி வேட்டை, தன்னல உயர்வு நாட்டம்  தடைபடும்.

    ஒட்டுண்ணி, தண்டத்திற்கு பெருந்தீனி தின்னும், அரசாங்கம் ஒழியும். மலிவான அரசாங்கம் கைகூடும்.

    உயர் அதிகாரிகள் வேலைகளை சாமானியர்களும் செய்வதால், அதிகாரத்துவ பொறியமைவு மறையும். முதல் இரண்டு மேற்கோள்களும், தேர்ந்தெடுத்தல் தொடர்வதை மட்டுமின்றி, சட்டமியற்றுபவர்களே, அவற்றை அமலாக்கவும் பொறுப்பாவார்கள் என்பதையும் காட்டுகின்றன.

மக்கள் தமது ஆற்றலுக்கு ஏற்ப வேலை செய்ய எந்த கீழ்ப்படுத்துதலும் தேவை இருக்காது. மனிதர்களின் உற்பத்தித் திறன் பிரும்மாண்டமாய் உயரும்.

ஒவ்வொரு மனிதரும் படைப்பாற்றல் மிக்கவராக இருப்பார். எனக்கு என்ன கிடைக்கிறது அவருக்கு என்ன கிடைத்தது என ஒப்பிட்டு பார்க்கும் மனிதர்கள் இருக்க மாட்டார்கள். சமூகம் மக்களுக்குத் தேவையானதை எல்லாம் வழங்கும் ஆற்றல் கொண்டிருக்கும். மக்கள் முழு ஆற்றலையும் வெளிப்படுத்தி, தேவையானதை எடுத்துக் கொள்வார்கள்.

இது கற்பனாவாத சோசலிசம் அல்ல. அறிவியல்பூர்வமான சோசலிசம். அறிவியல் பூர்வமான கம்யூனிசம். இந்த தொலைநோக்கு பார்வை பற்றிய ஒரு சித்திரம் தீட்டிய தோழர் லெனின், போல்ஷ்விக்குகள் நீடித்து அரசாள முடியுமா நூலில், நடைமுறையில் பாட்டாளி வர்க்க அரசு எப்படிச் செயல்படும் என்பதை 5ஆவது மேற்கோளில் சுட்டிக்காட்டுகிறார்.

    வீட்டுப் பிரச்சனைக்கு நடைமுறைத் தீர்வு சுலபமான தீர்வு காணப்படுகிறது.

    எளிமையான, மலிவான, பக்கத்திலேயே இருக்கும் - மக்கள் அரசாங்கம், மக்களின் வலிமையைத் தன் பின்புலத்தில் கொண்டுள்ள அரசாங்கம் எப்படிச் செயல்படுகிறது என்பது புலப்படுகிறது.

    சமூகத்திற்கு தேவையான பொருட் களை உற்பத்தி செய்வதில் சேவைகளில் ஈடுபடுவதிலிருந்து உடல் வலுவுள்ள எவருக்கும் விலக்கு கிடையாது. எல்லோருக்கும் அந்த வாய்ப்பு அளிக்கப்படும்.
- தொடரும்

Search