COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Sunday, August 31, 2014

குற்றவாளிக் கூண்டில் நிறுத்திய பெண்கள் நீதிமன்றம்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் லக்னோவில் நடத்திய பெண்கள் நீதிமன்றத்தில், மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிருந்தும் 700 பெண்கள் கலந்து கொண்டனர். மாநிலத்தில் தொடர்ந்து நடைபெற்றுவரும்  பெண்கள் மீதான வன்முறைக்கு மத்திய, மாநில அரசுகளே பொறுப்பு என்று நீதிமன்றம் அவற்றை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியது.
உயிர் பிழைத்தவர்கள், வன்முறைக்கு ஆளானவர்களின் உறவினர்கள் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டனர். லக்கிம்பூர் கேரியிலிருந்து வந்திருந்த ஒரு பெண், தவறான குற்றச் சாட்டில் தனது கணவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதைத் தொடர்ந்து, தான் காவலர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டது பற்றி விவரித்தார்.

இன்னொரு பெண் 2011ல் தன் 11 வயது மகள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டு மரத்தில்  தொங்கவிடப்பட்டதையும், இன்று வரை யாரும் தண்டனை பெறவில்லை என்பதையும் குறிப்பிட்டார்.
பிலிபிட்டிலிருந்து வந்திருந்த பெண், தனது மகள் வரதட்சணைக் கொடுமையால் கொல் லப்பட்டதாகவும், கொலையாளிகளும், காவல் துறையினரும் ஒன்றாக இனிப்பு சாப்பிட்டதாகவும், முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்யப்படவில்லை என்றும் சொன்னார்.

பிலிபிட்டிலிருந்து வந்த பல்வேறு பெண்கள், தாங்கள் காட்டில் சுள்ளி பொறுக்க, சிறு காட்டுப் பொருட்களை சேகரிக்கச் செல்லும் போது புலிகள் சரணாலயம் என்ற பெயரில் வனக் காவலர்கள் தங்களை பாலியல்ரீதியாக சீண்டுவதாக, அடிப்பதாகக் குறிப்பிட்டனர். இது சம்பந்தமாக புகார் செய்தால், இனி காட்டுக்குள் வராதே என்கிறார்கள். இந்த காட்டு விறகுகள் இல்லாமல் நாங்கள் எப்படி  உயிர்வாழ முடியும்? என்று  கேட்டார்கள்.

காசியாபூரின் பெண்கள் கழக செயல்வீரர் சரோஜ் பேசும்போது குற்றக் கும்பல்களுக்கும், காவல்துறையினருக்கும் உள்ள தொடர்பைப் பற்றிக் குறிப்பிட்டார். ஜீராதேவி என்பவர் சஞ்சய்சிங் என்ற குற்றவாளியால் தாக்கப்பட்டதையும், காவல்துறை இதுவரை அவரைக் கைது செய்யாததையும், கம்ருன்னிசா என்ற பெண்ணும் அவர் மகனும் குற்றக்கும்பலால் தாக்கப்பட்டபோது அவர்கள் யாரிடமும் புகார் தரக் கூடாது என்று காவல்துறையினர் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதையும் குறிப்பிட்டார்.

பெண்கள் கழக செயல்வீரர்கள் மிர்சாபூரி லிருந்து அனிதாவும், சிதாபூரிலிருந்து சரோஜினியும் இன்னும் நிறைய சம்பவங்கள் பற்றி குறிப்பிட்டுப் பேசினார்கள். சிதாபூரிலிருந்து பேசிய ஒரு பெண் தனது 14 வயது மகள் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டதாகவும், ஆனால் அதன் பின்பு 2 நாட்களாக காவலர்கள் புகாரைப் பதிவு செய்யவில்லை என்றும், பிறகு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய ரூ.8000 லஞ்சமாக கேட்டதாகவும், ரூ.4000 கொடுத்துத் தான் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்ட தென்றும் அதிலும் அந்தக் குடும்பத்தினருக்கு கடும் நெருக்கடி கொடுத்ததால் அவர்கள் பாலியல் வன்புணர்ச்சி என்று புகாரில் குறிப்பிட வில்லை என்றும், எனவே முதல் தகவல் அறிக்கையில் பாலியல் வன்புணர்ச்சி என்பது இடம் பெறவில்லை என்று குறிப்பிட்டார். இப்போது முற்போக்கு பெண்கள் கழகமும், இகக(மாலெ)யும் நீதிக்கான போராட்டத்தை முன்னெடுத் திருக்கின்றன. உயிர்பிழைத்த அந்த 14 வயது பெண்ணும் உறுதியாக  நிற்கிறார்.

முற்போக்கு பெண்கள் கழக மாநில துணைத் தலைவர் ஆர்த்தி ராய், மத்திய பாஜக அரசும், மாநில சமாஜ்வாதி அரசும் பெண்கள் உரி மையைப் பாதுகாப்பதற்கு பதிலாக, பெண்கள் மீது ஒழுக்க கண்காணிப்பு  செலுத்துவதில்தான் அதிக ஆர்வம் காட்டுகின்றன என்றார்.

பதாயூன், மோகன்லால் கஞ்ச்  ஆகிய இடங்களில் நடைபெற்ற பாலியல் வன்புணர்ச்சி கொலைகள் பற்றி விவாதிக்கப்பட்டது. உத்தர பிரதேச காவல்துறையும், மத்திய புலனாய்வுத் துறையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கச் செய்வதில், ஆர்வம் காட்டவில்லை. மாறாக, இந்த வழக்குகள் பரபரப்பு செய்திகளாக்கப்பட்டு சீர்குலைக்கப்படுகின்றன.

மீரட்டிலும், முசாபர்நகரிலும் பாலியல் வன்புணர்ச்சி புகார்கள் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் ஸால் வகுப்புவாதமயமாக்கப்பட்டு பாஜகவின் அரசியல் நிகழ்ச்சிநிரலுக்கு சேவை செய்கின்றன.

கருத்தரங்கில் முற்போக்கு பெண்கள் கழக தேசிய செயலாளர் தோழர் கவிதா கிருஷ்ணன் உரையாற்றினார். மத்திய, மாநில அரசுகள் பெண்களுக்கு அதிகரித்த அளவில் நீதிமன்றங் கள் ஏற்படுத்த ஆர்வம் காட்டுவதில்லை. தவறு செய்யும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுப்பதுமில்லை, காவல்துறையினர் பொறுப்பை உத்தரவாதப்படுத்துவதுமில்லை என்ற அவர், உத்தரபிரதேச அரசாங்கம் மோசமான பாலியல்ரீதியான கருத்துக்களைச் சொல்லி பாலியல் வன்புணர்ச்சி சாதாரணமானது என்ற தோற்றத்தை ஏற்படுத்தப் பார்க்கிறது, உடனடி யாக செய்ய வேண்டியவற்றை செய்யாமல் செயலற்று இருக்கும் மோடி அரசாங்கம், மறுபுறம் வரதட்சணை மற்றும் குடும்ப வன்முறை சட்டத்தைத் திருத்துவதன் மூலம் பெண்கள் நீதியும், பாதுகாப்பும் பெறுவதை சிக்கலாக்கியிருக்கிறது என்றார்.

சிறார் நீதி சட்டத்தை திருத்தும் அரசாங்கத்தின் முயற்சியை சாடிய அவர் சிறுவர்களை சிறைக்கு அனுப்பினால் அவர்கள் புடம் போட்ட குற்றவாளிகளாகத்தான் மாறுவார்கள், அதனால் மட்டும் பெண்கள் பாதுகாப்பை உத்தர வாதப்படுத்த முடியாது என்றார். சிறார்கள் சம்பந்தப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான பாலியல் வன்புணர்ச்சி வழக்குகள் உண்மையிலேயே இருவரும் சேர்ந்து வீட்டை விட்டு சென்ற சம்பவங்களே என்றும், இசைவு தெரிவிக்கும் வயது வரம்பை உயர்த்துவதன் மூலம் இது குற்றமயமாக்கப்படுகிறது என்றும் குறிப்பிட்டார். சிறார் நீதி சட்டம் திருத்தப்பட்டால், தனது ஒத்த வயது பெண் பிள்ளைகளுடன் பாசம் வைத்திருக்கும் அந்த இளைய பையன்கள் பாலியல் வன்புணர்ச்சி குற்றச்சாட்டில் பதிவு செய்யப்படுவதோடு சிறையிலும் அடைக்கப்படுவார்கள்.

ஆர்எஸ்எஸ்ஸ÷ம், மற்ற குழுக்களும் ‘காதல் ஜிகாத்’ என்ற பூதத்தைக் கிளப்பி, பெண்கள் தங்கள் விருப்பப்படி திருமண துணையை தேர்ந்தெடுக்கும் உரிமையை பறிப்பது பற்றியும் எச்சரிக்கை விடுத்தார். வகுப்புவாத வெறியூட்டப்பட்ட சூழலில், வேறு மதத்திலிருந்து தனது துணையை தேர்ந்தெடுப்பது பெண்களுக்கு சிரமம், வகுப்புவாதமயமாகிவிடுமோ என்ற அச்சத்தால் பாலியல் வன்புணர்ச்சிக்கு எதிராக புகார் அளிப்பதும் சிரமம் என்று குறிப்பிட்டார்.

முற்போக்கு பெண்கள் கழக மாநிலத் தலைவர் தோழர் தஹிரா ஹாசன், செயலாளர் தோழர் கீதா பாண்டே, தேசிய செயற்குழு உறுப்பினர் தோழர் வித்யா ராஜ்வர், இகக (மாலெ) மத்திய கமிட்டி உறுப்பினர் தோழர் கிருஷ்ணா அதிகாரி ஆகியோர் கருத்தரங்கில் உரை நிகழ்த்தினர்.

பெண்ணுரிமை செயல்வீரரான பேராசிரியர் ரூப்ரேகா வர்மா, இந்திய தேசிய பெண்கள் சம்மேளனத்தின் நிவேதிதா, ஹம்சாபரின் சுதா, பெண்களை காப்போம் அமைப்பின் அனுபமா, பாஹின் அமைப்பின் நாஸ், வீட்டுவேலை செய்யும் பெண்கள் அமைப்பின் கீதாசிங் ஆகியோரும் உரையாற்றினர். 

தமிழில்: தேசிகன்




Search