COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Sunday, August 31, 2014

நாடாளுமன்ற ஜனநாயகமே மக்கள் ஜனநாயகமாகிவிடுமா? - நிறைவு பகுதி

இதுவரை, நாடாளுமன்றம் தவிர்த்த பாதை, பாட்டாளி வர்க்க அரசை நிறுவுதல், அந்த அரசு அரசாகவும் அரசாக இல்லாமலும் எப்படிச் செயல்படும், அரசு எப்படி உலர்ந்து உதிரும் ஆகியவை பற்றிய அடிப்படையான மார்க்சிய லெனினிய கருத்துக்களைப் பார்த்தோம். நாடாளுமன்ற ஜனநாயகம் மக்கள் ஜனநாயகம் ஆகிவிடாது என்பதை முந்தைய பகுதிகள் தெளிவுபடுத்தின. நாடாளுமன்ற அரங்கில், கட்சியின் அடிப்படையான வழிக்குப் பொருத்தமான உரிய செயல்தந்திரங்களை வளர்த்துக் கொண்டே, நீண்டகாலத்திற்கு ஒரு புரட்சிகர எதிர்க்கட்சி பாத்திரம் ஆற்ற  கட்சி தயாராக வேண்டுமென இகக (மாலெ) திட்டம் குறிப்பிடுவதையும் கவனித்தோம்.

2014 நாடாளுமன்றத் தேர்தல்கள் முடிந்த பிறகு, மே 26, 27 கூடிய கட்சி மத்திய குழு  பின்வரும் முடிவு எடுத்தது. ‘நமது பிரச்சாரம், தேர்தல் செயல்பாடுகள் பற்றி அனைத்துக் கட்சி கமிட்டிகளும் முழுமையான பரிசீலனை மேற்கொள்ள வேண்டும். நாம் 50க்கும் மேற் பட்ட வாக்குகள் பெற்ற வாக்குச்  சாவடிகளை அடையாளம் கண்டு அங்குள்ள கட்சி வெகு மக்கள் அமைப்புக்களில் கட்டமைப்பு மற்றும் நிலைமை பற்றிப் பரிசீலனை செய்ய வேண்டும். குறைவான வாக்குகள் பெற்றுள்ள தொகுதிகளில், 30 அல்லது அதற்கு கூடுதலாக வாக்குகள் பெற்றுள்ள வாக்குச் சாவடிகளை அடையாளம் காண வேண்டும். 30 ஆண்டுகளுக்கு முன் நாம் தேர்தலில் போட்டியிட துவங்கிபோது இருந்ததை விட, தேர்தல் அரசியல், இன்று மிகவும் போட்டி நிறைந்ததாக, சவாலானதாக மாறியிருப்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்த புதிய சூழ்நிலையில், மக்களுக்கு சேவை செய்ய, ஒரு நிரந்தரத் தன்மைகொண்ட வாக்குச் சாவடிமட்ட அமைப்பையும் செயல்பாட்டையும் உருவாக்க, நாம் நமது ஆற்றல்களையும் திறமைகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்’.

அதற்குப் பிறகு ஆகஸ்ட் 16, 17, 2014ல் கூடிய கட்சி மத்திய கமிட்டி பின்வரும் முடிவை எடுத்தது.

கட்சி விரிவாக்கம்
மற்றும் அமைப்பு புத்துருவாக்கம்

அ.    நமது தேர்தல் செயல்பாடு தொடர்பான வாக்குச்சாவடி மட்ட பரிசீலனை, நமது தற்போதைய வேர்க்கால்மட்ட அமைப்பு நிலையை வெளிப்படுத்தியுள்ளது. சக்தி வாய்ந்த மோடி அலையை எதிர்கொண்ட இந்தத் தேர்தல் நமக்கு மிகவும் கடினமான ஒரு தேர்தலாக இருந்தது. இந்தத் தேர்தலில் நாம் பெற்றுள்ள வாக்குகள் நமது பலவீனங்கள் (3 முக்கியமான பலவீனங்கள் என குறிப்பிட்டால், குறைவான உறுப்பினர் பலம், நம்மால் முழுக்க செல்லமுடியாத மிகப் பரந்த பகுதிகள், வெகுமக்கள் அடித்தளம் செயலற்று இருக்கும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள்) பற்றி நமக்கு பல விசயங்கள் சொல்கின்றன; ஆனால், கூடுதல் உறுப்பினர் எண்ணிக்கை, மேலும் பரந்த, மேலும் திறன்மிக்க அமைப்பு வலைப்பின்னல் என்ற பொருளில், விரிவாக்கத்திற்கான முக்கியத்துவம் வாய்ந்த வாய்ப்புக்கள் இருப்பதையும் அவை காட்டுகின்றன. ஒவ்வொரு மாவட்டக் கமிட்டியும் எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக, இந்த அமைப்புப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வேண்டும். நமது வெற்றி வாய்ப்பை உயர்த்த முடியும், வாக்குகளை முக்கியத்துவம் வாய்ந்த விதத்தில் அதிகரிக்க முடியும் என்று நாம் எதிர்பார்க்கிற அனைத்து முக்கிய தொகுதிகளிலும், அது போன்ற திறன்மிக்க விரிவாக்கத்திற்கு தேவையான அரசியல் - அமைப்பு அடிப்படைகளை உருவாக்க, நாம் உடனடியாக கவனம் செலுத்தியாக வேண்டும்.

ஆ.  அனைத்து கட்சி கமிட்டிகளும், அமைப்பு விரிவாக்கத்திற்கான பொருத்தமான இலக்குகளை உடனடியாக நிர்ணயித்துக் கொள்ள வேண்டும்; இந்தத் தேர்தல்களில் கட்சிக்கு வாக்களித்தவர்கள், கட்சிக்காக செயல்பட்டவர்கள் மத்தியில் இருந்து பரிட்சார்த்த உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். சம்பந்தப்பட்ட உள்ளூர் வாக்குச் சாவடிகளுக்கு ஏற்ப கட்சிக் கிளைகளை புனரமைக்க வேண்டும். பரிட்சார்த்த உறுப்பினர்கள் மட்டும் இருக்கும் இடங்களில், அவர்களை செயல்வீரர் குழுக்களில் அமைப்பாக்க வேண்டும். இவ்வாறு புனரமைக்கப்பட்ட கிளைகளுக்கும் செயல்வீரர் குழுக்களுக்கும் பின்வரும் உடனடி கடமைகளை ஒப்படைக்க வேண்டும்; (1) உள்ளூர் கிளர்ச்சிகளில் செயலூக்கமான பாத்திரம். (2) சராசரியாக 100 பேரிடம் இருந்து கட்சி நிதியாக ரூ.1000 திரட்டுவது. (3) கட்சிப் பத்திரிகைகள் மற்றும் கட்சி வெளியிடும் பிற பத்திரிகைகள் (இந்தி பேசும் மாநிலங்களில் ஜன்மத், ஷ்ரமிக் சாலிடாரிட்டி, ஆதி ஜமீன்) சந்தா/விநியோகம் குறைந்தது 2.

இ.  மேலே சொல்லப்பட்டுள்ள கிளைகளும் செயல்வீரர் குழுக்களும் உள்ளூர் கமிட்டிகளும் துணை விதிகளில் சொல்லப்பட்டுள்ள நிபந்தனைகள் அடிப்படையில் மாநாடுகள் மூலம் அமைப்பாக்கப்பட வேண்டும். உறுப்பினர் புதுப்பித்தல் முடிந்த பின்பு அதுபோன்ற உள்ளூர் கமிட்டி மாநாடுகள் நடத்தப்பட வேண்டும். இந்த இயக்கப் போக்கு டிசம்பர் 18, 2014க்குள் முடிவுற வேண்டும்.

ஈ.  ஒவ்வொரு மாவட்ட, மாநில கமிட்டியும் இயக்கம் பற்றிய மாதாந்திர அறிக்கையை மத்தியக் கமிட்டிக்கு அனுப்ப வேண்டும்.

உ.    2014ம் ஆண்டு நடந்த இரு மத்திய கமிட்டி கூட்டங்களுக்கு இடையில், கட்சி, தியாகிகள் தினமான ஜூலை 28 அன்று, மோடி ஆட்சியில் கார்ப்பரேட் மதவெறி தாக்குதலுக்கு எதிராகத் திறன்மிக்க எதிர்ப்பைக் கட்டமைக்க கட்சியை விரிவாக்குவோம்! வலுப்படுத்துவோம்! என அழைப்பு விடுத்தது. அந்த அழைப்பில் பின்வருமாறு குறிப்பிட்டது: ‘அனைத்துக்கும் பிறகு, தேர்தல் போராட்டங்களின் மய்ய தலங்கள் வாக்குச் சாவடிகளே. மேலோங்கிய ஆளும் வர்க்கக் கட்சிகளின் பணபலம், ஆள் பலம், ஊடக பலம் மற்றும் சமூக இயக்க சமன்பாடுகள், வாக்காளர்களை வாக்குச் சாவடி மட்டத்தில் அணிதிரட்டுவது என்பதன் மூலம் செய லாற்றுகின்றன. தேர்தல் களம், சமமான ஆடு களம் அல்ல எனும்போது, தேர்தல் போராட்டங்களில்  அதிகார சமன்பாடு, வறிய மற்றும் உழைக்கும் மக்களுக்கு எதிராகவே சாய்ந்துள்ள போது, வேர்க்கால் மட்டத்தில் தீவிரமான எதிர் அணிதிரட்டலுடன், ஆளும் வர்க்கங்களின் அரசியலுக்கு எதிராக, கம்யூனிஸ்டுகள் திறன் மிக்க வேர்க்கால் மட்ட எதிர்ப்பை கட்டமைக்க வேண்டியது கூடுதல் அவசியமாகிறது’.

ஊ.    ‘நமது கட்சி உருவெடுத்து வந்த காலங்களில், நிலப்பிரபுத்துவ மேலாதிக்கம் மற்றும் அரசு பயங்கரத்துக்கு எதிரான போராட்டங்களில் பெரிய வெற்றிகள் பெற்ற வேர்க்கால் மட்ட அமைப்புதான், தேர்தல் அரங்கிலும் நமது பிரதானமான ஆயுதம் ஆகும். காங்கிரஸ் மற்றும் பல்வேறு அடையாள அடிப்படையிலான கட்சிகள் போலல்லாது, பாஜக ஓர் ஊழியர் அடிப்படை கொண்ட கட்சி; வேர்க் கால் மட்டத்தில் அமைப்பு, பிரச்சாரம் மற்றும் போதனை ஆகியவற்றுக்கு அது காத்திரமான கவனம் செலுத்துகிறது. எனவே, பாஜகவுக்கு எதிரான கம்யூனிஸ்ட் எதிர்ப்பு, வேர்க்கால் மட்டத்தில் அமைப்புரீதியான, கருத்தியல் அரசியல்ரீதியான அணி திரட்டல் என்ற தளத்தில் மிகவும் தீர்மானகரமாக கட்டமைக்கப்பட வேண்டும். கட்சி புனரமைக்கப்பட்டதன் நாற்பதாவது ஆண்டு தினத்தில், வெகுமக்கள் பலம், அரசியல் அணிதிரட்டல், அமைப்பு செயல்பாடு என்ற பொருளில், நமது வேர்க்கால்மட்ட அமைப்பை, இன்னும் கூடுதல் உயரத்துக்கு எடுத்துச் செல்ல நாம் உறுதியேற்போம். உழைக்கும் மக்களின் சக்திவாய்ந்த கம்யூனிஸ்ட் அமைப்பு, மக்கள் போராட்டத்தின் ஒவ்வோர் அரங்கிலும் பரந்த ஜனநாயக சக்திகளுடன் ஒத்திசைவாக செயல்பட்டு, கார்ப்பரேட் - மத வெறி அச்சுறுத்தலுக்கு எதிரான போராட்டத்தில் தீர்மானகரமான வெற்றி பெற வேண்டும்’.

எ.    ஒரு சில தோழர்கள், பூத் மட்ட வேலைகள் பற்றி கட்சி கூடுதல் அழுத்தம் வைப்பதாகத் தெரிவதாகவும், நாமும் கூட இகக, இகக (மா) போல தேர்தலுக்கு கூடுதல் அழுத்தம் வைப்பவர்களாக மாறி வருவதாகத் தாம் கருதுவதாக, ஆழ்ந்த அக்கறையோடும் கரிசனத்தோடும் தெரிவிக்கின்றனர்.

ஏ.    இகக, இகக(மா) சந்திக்கும் சிக்கல்கள் எத்தகையவவை என்பதைச் சரியாகப் பார்க்க வேண்டும். அவர்களது சிக்கல் தேர்தல் பங்கேற்பில் மூழ்கியவர்களின் சிக்கலாக இருக்கும் போது, இகக (மாலெ) விடுதலை சந்திக்கும் பிரச்சனை, தேர்தலில் பங்கேற்கும் புறக்கணிப்பாளர்கள் என்றாகிவிடக் கூடாது என்பதாக உள்ளது.

ஐ.    இகக, இகக(மா) நெருக்கடியை, ஜெர்மனியில் விவசாயப் போர் நூலில் எங்கெல்ஸ் எழுதிய விசயங்களோடு சுலபமாகப் பொருத்திப் பார்க்கமுடியும். ‘தனது ஆதிக்கத்திற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு, இயக்கம் முதிர்ச்சி அடையாத ஒரு சகாப்தத்தின் ஓர் அரசாங்கத்தை நடத்த நேருவதுதான், ஒரு தீவிரக் கட்சியின் தலைவருக்கு நேரக்கூடிய ஆக மோசமான விசயமாக இருக்கும்’. ஒரு தீவிரக் கட்சியின் இத்தகைய தலைவர், ‘அந்நிய வர்க்க நலன்களையே முன்னேற்றுவார்; தமது சொந்த வர்க்கத்திற்கு வெறும் வாய்வீச்சையும் வாக்குறுதிகளையும்  மட்டுமே தருவார்; அந்நிய வர்க்கத்தின் நலன்கள் தமது சொந்த வர்க்கத்தின் நலன்கள் என நம்பிக்கையூட்டுவார்; இத்த கைய ஒரு பொய்யான நிலையில் சிக்குபவர் மீள முடியாதபடி காணாமல் போவார்’ என்கிறார் எங்கெல்ஸ். எங்கெல்ஸ் போதனைகளைப் புறக்கணித்தவர்களின் சங்கடத்தை இகக, இகக (மா) அனுபவிக்கிறார்கள் என்பது புரிகிறது.

ஒ.    இகக (மாலெ) தேர்தல் பங்கேற்பில் ஈடுபடும் போதே புறக்கணிப்பாளர்களாக மாறாமல் இருக்க, கவனம் செலுத்த வேண்டும். ஆக இருவரின் சிக்கலும் வேறு வேறானது. இகக (மாலெ) விடுதலையின் மே, ஆகஸ்ட் 2014 மத்திய கமிட்டி முடிவுகளையும், ஜ÷லை 28 அழைப்பையும் புரிந்து கொள்ள, எங்கெல்ஸ் தேர்தல் பற்றிச் சொல்கிற விசயங்களையும், லெனின் இடதுசாரி கம்யூனிசம் பிள்ளைப் பிராயக் கோளாறு நூலில் சொல்லி உள்ள விசயங்களையும் பார்ப்போம்.

எங்கெல்ஸ்

   ‘தேர்தல்கள் மிகவும் துல்லியமாக நமது சொந்த பலத்தையும், எல்லா பகை சக்திகளின் பலத்தையும் நமக்குப் புலப்படுத்தும். தேர்தல் நம்மை விட்டுத் தள்ளி நிற்கிற மக்கள் திரளோடு நாம் தொடர்பு கொள்வதில் ஒரு சிறந்த சாதனமாகும். எல்லாக் கட்சிகளையும் மக்கள் மத்தி யில் அவர்கள் கருத்துக்கள் மற்றும் நடவடிக்கைகள் பற்றிய நமது தாக்குதல்களுக்குப் பதில் சொல்ல வைக்கும். நாடாளுமன்றம், ஊடகங்களிலோ கூட்டங்களிலோ கருத்து சொல்வதைக் காட்டிலும், கூடுதல் ஆளுமையோடு சுதந்திரத்தோடு, நமது பிரதிநிதிகள், தமது எதிராளிகளுடனும் மக்கள் திரளுடனும் பேசுவதற்கான, ஒரு மேடையை வழங்கும்’.

லெனின்

 ‘ஒரு புரட்சி நடத்த, பின்வருபவை அத்தியாவசியமானவை ஆகும். (1) பெரும்பான்மையான தொழிலாளர்கள் (அல்லது குறைந்தபட் சம் வர்க்க உணர்வுள்ள, சிந்திக்கும் திறன் படைத்த, அரசியல்ரீதியில் செயலூக்கமான தொழிலாளர்களின் பெரும்பான்மையினர்) ஒரு புரட்சி தேவை என முழுமையாக உணர வேண்டும். (2) ஆளும் வர்க்கங்கள் ஓர் அரசாங்க நெருக்கடியின் ஊடே சென்று கொண்டிருக்க வேண்டும்; அந்த நெருக்கடி மிகவும்  பின் தங்கிய மக்களை அரசியலுக்குள் ஈர்க்க வேண்டும்; (இதுவரை அசிரத்தையாக இருந்த உழைக்கும் மக்கள் ஒடுக்கப்பட்ட மக்கள், துரிதமாக பத்து மடங்கு நூறு மடங்கு அதிகமான எண்ணிக்கையில் அரசியல் போராட்டம் நடத்தும் ஆற்றல் பெறுவது, எந்த உண்மையான புரட்சியையும் அடையாளப்படுத்தும்). இந்த நெருக்கடி, அரசாங்கத்தைப் பலவீனப்படுத்தும்; புரட்சியாளர்கள் விரைந்து அரசாங்கத்தைத் தூக்கி எறிவதற்கான சாத்தியப்பாட்டை உருவாக்கும்’.

 ‘நமது விருப்பத்தை, நமது அரசியல் கருத்தியல் அணுகுமுறையை, புறநிலை யதார்த்தமாக, நாம் கருதிவிடக் கூடாது’.

‘நேரடியான வெளிப்படையான உண்மையிலேயே மக்கள் திரள் தன்மையுடைய, உண்மையிலேயே புரட்சிகரப் போராட்டத்திற்கான நிலை இல்லாத போது, புரட்சிகர அமைப்புகளாக இல்லாதவற்றில் பல நேரங்களில் அப்பட்டமான பிற்போக்கு அமைப்புகளில், புரட்சிகர சூழல் இல்லாதபோது, உடனடியாக புரட்சிகரமான நடவடிக்கைகளின் முறைகளின் தேவையை புரிந்துகொள்ளும் ஆற்றல் இல்லாத மக்கள் மத்தியில், பிரச்சாரம் கிளர்ச்சி மற்றும் அமைப்பாக்குதல் மூலம் புரட்சியின் நலன்களை முன்னெடுப்பதுதான் மிகவும் கடினமானதாகும். மிகவும் விலை மதிப்பே இல்லாததாகும். அதுவே ஒரு புரட்சியாளருக்கு உரிய பணியாகும்’.

‘அரசியல் ஒரு கலை ஆகும். அரசியல் ஓர் அறிவியல் ஆகும். அது ஆகாயத்திலிருந்து குதித்து வந்து விடுவதில்லை. அது இலவசமாக எவருக்கும் கை கூடுவதில்லை. முதலாளித்துவத்தை வெல்ல வேண்டுமானால், எவ்விதத்திலும் முதலாளித்துவ அரசியல்வாதிகளுக்குக் குறைவில்லாத விதத்தில், பாட்டாளிவர்க்கம், தனது சொந்த பாட்டாளி வர்க்க அரசியல்வாதிகளுக்குப் பயிற்சி தந்தாக வேண்டும்’.

நமது சூழல் எத்தகையது?

இன்றைய வர்க்க சமூகத்தில், நமது நாட்டில், வர்க்கங்களுக்கு இடையிலான சண்டை, நேருக்கு நேரான ஆயுத மோதல்களாக நிகழ்வதில்லை. முதலாளிகளும் தொழிலாளிகளும், பணக்காரர்களும் ஏழைகளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டால், ஏகப் பெரும்பான்மையாக உள்ள தொழிலாளர்களும் ஏழைகளுமே வெல்வார்கள். ஆனால், சில ஆயிரம் வருடங்களாகச் சிறுபான்மை பெரும்பான்மையை ஆள்கிறது. அது சாத்தியமாக, அரசு ஒடுக்குமுறை நிச்சயம் ஒரு முதன்மையான சாதனம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், கை கால்களுக்குப் போடப்படும் விலங்குகளைவிட, மூளைக்குப் போடப்படும் விலங்குகள் எந்த விதத்திலும் குறைந்தவை அல்ல. வர்க்கங்களுக்கு அரசியல் கட்சிகள் உள்ளன. கட்சிகளுக்கு, தலைவர்கள் தலைமை தாங்குகிறார்கள். முதலாளித்துவக் கட்சிகளும் அவற்றின் தலைவர்களும், உழைக்கும் மக்களுடைய ஏழைகளுடைய வாக்குகளை வாங்கிக்கொண்டு, முதலாளிகளுக்காக பணக்காரர்களுக்காக ஆட்சி நடத்துவதில் கை தேர்ந்தவர்கள்.

அரசியல் சண்டை வெற்று வெளியில் நடப்பதில்லை. முதலாளித்துவ அரசியலை பாட்டாளி வர்க்க அரசியல், எல்லா இடங்களிலும் எல்லா தளங்களிலும் சந்தித்தாக வேண்டும். நாடாளுமன்றம் தவிர்த்த பாதை பலப்பட, பாட்டாளிவர்க்க அரசை நிறுவிட, பாட்டாளி வர்க்கம் அரசியல் வலிமை செல்வாக்கு பெற்றாக வேண்டும். அரசியல் சண்டைகளில் மிகவும் முக்கியமான ஒரு சண்டை தேர்தல் சண்டை. தேர்தல் சண்டையில் ஆர்வத்துடன் முனைப்புடன் திறமையுடன் ஈடுபடாமல் இருப்பது, புறக்கணிப்புக்கு இணையானதாக ஆகிவிடாதா?

அகில இந்திய அளவில் பாஜகவும் தமிழ் நாட்டில் அஇஅதிமுகவும்தான் முதன்மையான முதலாளித்துவ கட்சிகள். இவர்கள் இருவரும் ஊராட்சி பேரூராட்சி நகராட்சி மாநகராட்சி வார்டு வரையில், வார்டு மட்டத்தில், வாக்குச் சாவடியை மய்யப்படுத்திச் செயல்படுகிறார்கள். அவர்களது அரசியலை வேரறுக்க, நமது அரசியலை வேரூன்ற வைக்க, நாமும், வார்டு மட்டத்தில் வாக்குச் சாவடியை மய்யப்படுத்திச் செயல்பட்டாக வேண்டும். நமது திறமைக் குறைவு, கவனம் குவிப்பின்மை என்பவை, நாடாளுமன்றம் தவிர்த்த பாதைக்கு எவ்வித்திலும் உதவாது. நீண்டகாலம் இந்தியாவில் புரட்சியாளர்கள் புரட்சிகர எதிர்க்கட்சிப் பாத்திரம் ஆற்ற வேண்டியிருக்கும் என்பதால், திறன் வாய்ந்த விளைவு தரும் தேர்தல் பங்கேற்பு, நம் தலைமையிலான மக்கள் போராட்டங்களிலிருந்து பலம்பெற்று, அவற்றுக்கு பலம் சேர்க்கும். நாடாளுமன்றம் தவிர்த்த பாதை, பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் என்பவை வெற்று முழக்கங்கள் அல்ல, அவை எந்த விதத் திலும் குறுகியதன்மையோடு பொருந்தாதவை.

இன்றைய இந்தியாவில் தமிழகத்தில், கம்யூனிஸ்ட் கட்சி முன்பு பெரும் சவால்கள் இருப்பது உண்மைதான். அதே நேரம் சந்தர்ப்பங்களும் நிறையவே உள்ளன. கட்சி மற்றும் வெகுமக்கள் அமைப்புக்களின் துணிச்சலான விரிவாக்கம், வேர்க்கால் மட்ட மற்றும் கீழ் மட்ட அமைப்புக்களை வாக்குச் சாவடிகளை மய்யப்படுத்தியும் மக்கள் திரள் நடவடிக்கைகளோடு தொடர்புபடுத்தியும் பலப்படுத்துவது, சுதந்திரமாக சொந்தக் காலில் நின்றுகொண்டு பெருகும் அனைத்து அதிருப்திகளோடும் உறவாடும் அய்க்கிய முன்னணி போன்ற நடவடிக்கைகள் மூலம், போராடும் இடதுசாரிகள் பலப்படுவது சாத்தியமானது, அவசியமானது, தவிர்க்க முடியாதது.


Search