COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Sunday, August 31, 2014

மார்க்சிய கல்வி முகாம்கள்

இகக (மாலெ) மத்தியக்குழு வழிகாட்டுதல்  அடிப்படையில் தமிழகத்தில் அய்ந்து பகுதிகளில் முதற்கட்ட மார்க்சிய கல்வி முகாம்கள் நடைபெற்றன. இந்த முகாம்களில் மார்க்சியம் கற்போம் எங்கிருந்து துவங்குவது? மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை (இந்தியப் பதிப்பு முன்னுரையுடன்) ஆகிய இரண்டு பாடங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டன.

சேலம்: ஆகஸ்டு 9, 10 தேதிகளில் சேலத்தில் நடைபெற்ற கல்வி வகுப்பில் சேலம், நாமக்கல், ஈரோடு, திண்டுக்கல், கரூர் மாவட்டத் தோழர்கள் 50 பேர் கலந்து கொண்டனர். வகுப்புக்கு சேலம் மாவட்டச் செயலாளர் தோழர் மோகனசுந்தரம் தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் தோழர் அ.கோவிந்தராஜ் வகுப்பைத் துவக்கி வைத்துப் பேசினார். முதல் நாள் வகுப்பில்  மார்க்சியம் கற்போம். இரண்டாம் நாள் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை. மார்க்சியம் கற்போம் பாடம்  பற்றி தோழர் சந்திரமோகன் அறிமுக உரையாற்றினார். மாநிலச் செயலாளர் தோழர் பாலசுந்தரம் மார்க்சிய அடிப்படைகள் மற்றும் ஏகாதிபத்தியம் பற்றி விரிவாக விளக்கினார்.

இரண்டாம் நாள் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை. தோழர் சந்திரமோகன் அறிமுக உரை நிகழ்த்தினார். பின்னர் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் உள்ள அத்தியாயங்களை விரிவாகவும் அதில் சொல்லப்பட்டுள்ளவை தற்போதும் எவ்வாறு பொருத்தப்பாடு உள்ளது என்றும் விளக்கி கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் பாலசுந்தரம் பேசினார்.

கோவை: ஆகஸ்டு 23, 24 தேதிகளில் கோவையில் நடைபெற்ற கல்வி முகாமில் மாநிலக் கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் கோவை மாவட்ட கமிட்டி உறுப்பினர்கள் உட்பட கலந்து 60 தோழர்கள் கலந்து கொண்டனர். வகுப்பிற்கான பாடங்கள் 1. மார்க்சியம்  கற்போம் எங்கிருந்து துவங்குவது 2. கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை இந்தியப்பதிப்பின் முன்னுரை முன்கூட்டியே ஏறத்தாழ 90 பேருக்கு வழங்கப்பட்டிருந்தது. அரங்கில் தொங்கவிடப்பட்டிருந்த கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் முக்கிய வாசகங்கள் அடங்கிய பதாகைள் கற்றலுக்கான சூழலை ஏற்படுத்தியிருந்தன. மாநிலக்குழு உறுப்பினர் தோழர் ஆசைத்தம்பி வகுப்பை துவக்கி வைத்து உரையாற்றினார். முதல்நாள் மார்க்சியம் கற்போம் பாடத்திற்கான வகுப்பில் தோழர்கள் 5 குழுக்களாக பிரிந்து, பாடத்தின் மீதான கேள்விகளுடன் வாசித்தனர். பிறகு ஒரு குழுவிற்கு 3 பேர் வீதம் 15 பேர் பதில்களை முன் வைத்தனர். அதனைத் தொடர்ந்து மாநிலக்குழு உறுப்பினர் தோழர் என்கே.நடராசன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் குமாரசாமி தொகுத்து உரையாற்றினர்.

மறுநாள் கம்யூனிஸ்ட்கட்சி  அறிக்கை வாசிக்கப்பட்டது. அதன் மீது தரப்பட்ட கேள்விகளுக்கான பதில்களை தோழர்கள் 3 குழுக்களாக பிரிந்து விவாதித்து தயார் செய்தனர். தோழர்கள் என்கே நடராஜன், ஆசைத்தம்பி, பாலசுப்பிரமணியன், தாமோதரன், வெங்கடாசலம், மலர்விழி ஆகியோர் அவர்களுக்கு உதவினார்கள். பின்னர் 21 தோழர்கள் கேள்விகளுக்கான பதிலை விளக்கிக் பேசினர். இறுதியில் தோழர் குமாரசாமி கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை, அக்காலத்திற்குப்பின்னால் ஏற்பட்ட மாற்றங்கள் கம்யூனிஸ்ட் அறிக்கையின் சமகால பொருத்தப்பாடு என 2 மணிநேரம் விரிவாக விளக்கிப் பேசினார்.

சென்னை: ஆகஸ்டு 23, 24 தேதிகளில்  சென்னை, திருவள்ளூர், காஞ்சி மாவட்டத் தோழர்கள் 62 பேர் கலந்து கொண்ட வகுப்பு செங்குன்றத்தில் நடத்தப்பட்டது. வகுப்பில் கலந்து  கொண்டவர்களில் 80% பேர் இளைஞர்கள். கட்சியின் சென்னை மாவட்டச் செயலாளர் தோழர் சேகர் வகுப்புக்கு தலைமையேற்று நடத்தினார். மாநிலக் குழு உறுப்பினர் தோழர் எ.எஸ்.குமார் துவக்கவுரையாற்றினார்.

வகுப்பு தொடர்பான தயாரிப்புக் கூட்டம் ஆகஸ்ட் 20 அன்று நடத்தப்பட்டு முன்னரே தயாரிக்கப்பட்ட குறிப்புகள் இறுதி செய்யப்பட்டன.

மார்க்சியம் கற்போம்: எங்கிருந்து தொடங்குவது தலைப்பில், முன்னரே தயாரிக்கப்பட்ட கேள்விகள் மீது, தோழர்கள் அய்ந்து குழுக்களாகப் பிரிந்து விவாதித்தனர். மாநிலக் குழு உறுப்பினர்கள் தோழர்கள் எ.எஸ்.குமார், சேகர், இரணியப்பன், பாரதி ஆகியோர் அவர்களுக்கு உதவினார்கள்.

குழு விவாதத்துக்குப் பின், கொடுக்கப்பட்ட கேள்விகள் மீது வகுப்பில் பங்கேற்ற தோழர்கள் உற்சாகமாக பதிலளித்தனர். மாநிலக்குழு உறுப்பினர் தோழர் ஜவஹர் மொத்த பாடத்தின் மீதும் தொகுப்புரை ஆற்றினார்.

இரண்டாவது நாள் வகுப்பில், கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை இந்தியப் பதிப்பிற்கான முன்னுரையும் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையும் வாசிக்கப்பட்டன. வகுப்பு அரங்கில் ஏற்கனவே கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் இருந்து எடுக்கப்பட்ட முக்கிய குறிப்புகள் கொண்ட 17 பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அந்த 17  பதாகைகளுக்கும் எண் கொடுக்கப்பட்டது. சீட்டு குலுக்கி போட்டு எந்த எண் வருகிறதோ அதை எண்ணில் உள்ள குறிப்பை அந்த தோழர் விளக்கிக் கூற வேண்டும் என்று சொல்லப்பட்டது. தோழர்கள் மிகவும் உற்சாகமாக அதில் பங்கெடுத்தார்கள். பெரும்பாலும் புதிய தோழர்கள் என்ற போதிலும் கூடுமானவரை சரியாகவே விளக்கிக் கூறினார்கள். அதன் பின்னர், மத்தியக்குழு உறுப்பினர் தோழர் புவனா இந்தியப் பதிப்பின் முன்னுரை, கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் சமகால பொருத்தப்பாடு ஆகியவற்றை தொகுத்துப் பேசினார்.

குமரி: கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் ஆகஸ்டு 23, 24 தேதிகளில் நடந்த மார்க்சிய கல்வி முகாமில் நெல்லை, குமரி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களின் முன்னணித் தோழர்கள் 50 பேர் கலந்து கொண்டனர். வகுப்புக்கு மாநிலக்குழு உறுப்பினர்கள் அந்தோணிமுத்து, மேரிஸ்டெல்லா தலைமை தாங்கினார்கள். மாநிலக்குழு உறுப்பினர் தோழர் சங்கரபாண்டியன் துவக்கவுரையாற்றினார். மாநிலக்குழு உறுப்பினர் தோழர் ஜி.ரமேஷ், கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சியத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் பற்றி தோழர்களிடம் கேள்வி பதில் விவாத முறையில் அறிமுகப்படுத்திப் பேசினார். பின்னர், மாநிலச் செயலாளர் தோழர் பாலசுந்தரம் விவரிவாக விளக்கிப் பேசினார்.

மறுநாள் தோழர் ரமேஷ் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை அதன் உள்ளடக்கம் பற்றி அறிமுக உரையாற்றினார். கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் இருந்து தொகுக்கப்பட்ட முக்கிய வாசகங்களை தோழர்களிடம் கொடுத்து படிக்கச் சொல்லி அதை அவர்களே விளக்கிக் கூறச் சொல்லப்பட்டது. பிறகு தோழர் பாலசுந்தரம் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் இந்தியப் பதிப்பிற்கான முன்னுரை பற்றி, கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் சமகால பொருத்தப்பாடு தேவை பற்றி விரிவாக விளக்கப் பேசினார்.

இந்த கல்வி முகாம்களில் கலந்து கொண்ட தோழர்கள் இதுபோல் அடிக்கடி மார்க்சிய கல்வி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். சென்னையில் கலந்து கொண்ட தோழர் குப்பாபாய், ‘எனக்கு 67 வயதாகிறது, இப்போதுதான் எனக்கு இதைப் படித்து புரிந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது, முன்னரே கிடைத்திருந்தால், கட்சி வேலைகளில் எனது பங்களிப்பு இன்னும் மேலானதாக இருந்திருக்கும்’ என்றார். ஏஅய்சிசிடியு நடத்திக் கொண்டிருக்கிற மக்கள் சந்திப்பு இயக்கத்தை வெற்றிகரமாக நடத்துவதன் அவசியத்தை வகுப்பு வலியுறுத்தியுள்ளதாகவும் தோழர்கள் கருத்து தெரிவித்தனர்.


Search