COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Sunday, August 31, 2014

நரிக் கதையும் நாட்டு நடப்பும்

ம்ம்ம்ம்... முன்பு ஒரு காலத்துல
முருங்கமரக் காட்டுக்குள்ள
முன்பு ஒரு காலத்துல
முருங்கமரக் காட்டுக்குள்ள
தந்திரம் மிகுந்த நரி வாழ்ந்து வந்தது.
அது காடு விட்டு நாடு தேடி ஓடி வந்தது.
என்ன பண்ணிச்சி...? ஓடி வந்துச்சி....
ஓடி வந்த குள்ள நரி
ஹையையோ ஹையையோ
கால்தவறி விழுந்ததடி 

ஓடி வந்த குள்ள நரி கால்தவறி விழுந்ததடி.
நீல நிறம் சாயம் கொண்ட தொட்டி ஒன்றிலே
அது நிறம்மாறி போனதடி சின்ன பொம்பளே....
ஹஹஹஹஹ
நரி கலர் மாறிப் போச்சு பிறகு காடு தேடி போச்சு
நரி.....?
நரி காடு மாறிப்போச்சு.... கலர் தேடிப் போச்சு...
ஹஹஹ....
நான் ஆண்டவன் அனுப்பிய புருஷன்
ஹஹஹ ஹஹஹ...
உங்கள ஆள வந்திருக்கும் அரசன்
மிருகங்களெல்லாம் பயந்தன.
அங்கு நரியின் ராஜ்ஜியம் நடந்தது.

ஒரு நாள்....
மேகம் இடித்தது மின்னல் வெடித்தது காற்று அடித்தது.
காடு துடித்தது நிலம் அசைந்தது மழை பொழிந்தது
ஆஆஆ...........
காட்டு விலங்குகள் கலங்கின... கொஞ்சம் பயந்தன...
உடல் நடுங்கின ஆவி ஒடுங்கின
நீல நரியின் வாசல் வந்து ஓலமிட்டு அழுதன.
நரியும் வெளியில் வந்தது...
மழையில் கொஞ்சம் நனைந்தது....
நீல சாயம் கரஞ்சது.... நரியின் வேஷம் கலஞ்சது.....
ஹஹஹ   ஹஹஹ

நீல சாயம் வெளுத்துப் போச்சு
டும் டும் டும் டும்
ராஜா வேஷம் கலஞ்சு போச்சு
டும் டும் டும் டும்
நீல சாயம் வெளுத்துப் போச்சு
டும் டும் டும் டும்
ராஜா வேஷம் கலஞ்சு போச்சு
டும் டும் டும் டும்
காட்டை விட்டே ஓடிப் போச்சு
டும் டும் டும் டும்
டும் டும் டும் டும்
டும் டும் டும் டும்

தமிழ்த் திரைப்பாடலில், தீயவை அம்பல மாவதும், அவை ஓடி வெளியேறுவதும் சுகமான கற்பனையாக வந்துள்ளன.
அவ்வளவு சுலபமாக நரேந்திர மோடி அரசு அம்பலமாகி வெளியேறாது என்பது நமக்குத் தெரியும்.

வாக்குறுதிகளுக்கும் நடவடிக்கைகளுக்கும் இடையிலான வேறுபாடு அதிகரிக்கும் என்பதும், பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட எதிர்பார்ப்புகள் நிறைவேறாதபோது, மக்கள் போராட்ட மின்னல்கள் இடி மழை வலுத்தால், நரேந்திர மோடி அரசும் வேஷம் கலைந்து வெளியேறித்தான் ஆக வேண்டும் என்பதும், வரலாறு நமக்குச் சொல்லித் தருகிற பாடம்.

‘நல்ல காலங்கள் வருகின்றன’, ‘எல்லோருக்குமான வளர்ச்சி’, - இவைதான் நரேந்திர மோடி அரசு போட்டுக் கொண்ட வேஷம். சாயம் வெளுத்து வேஷம் கலைய ஆரம்பிக்க வில்லையா? ரயில் கட்டண உயர்வு, மக்கள் தலையில் விழுந்த முதல் பெரிய இடி. காங்கிரசிடமிருந்து நாட்டை விடுவிப்பதாகச் சொல்லி பதவியை பிடித்த மோடி, காங்கிரஸ் கொள்கைகளை தீவிரமாகவும் தயக்கமின்றியும் துணிச்சலாகவும் அமுல்படுத்துவதை, நாடு கண்டு வருகிறது.

கார்ப்பரேட்டுகளுக்கு வரிச்சலுகை, கஜானாவை திறந்து விடுவது என்பதில், மோடி அரசும் சளைக்கவில்லை. மோடியின் சுதந்திர தின உரையில், பன்னாட்டு நிறுவனங்களை, come, make in india என, அதாவது, இந்தியா திறந்திருக்கிறது, வாருங்கள், வந்து அனுபவியுங்கள், ஆதாயம் அடையுங்கள் என்கிறார். இந்திய இளைஞர்கள் மேட் இன் இந்தியா எனத் தயாராகும் விஷயங்களில் பெருமைப்பட வேண்டும் என்கிறார். உலகம் தழுவிய உற்பத்தியில் ஈடுபடும் நிறுவனங்கள், வியத்நாம் பங்களாதேஷ், தாய்வான், ஹோண்ட்ருவாஸ், மெக்சிகோ, சீனாவில், அந்தந்த நாட்டு அடையாளத்துடன் உற்பத்தி செய்கின்றன என்றால், குறைந்த கூலி  ஆகக்கூடுதல் சுரண்டல்தான் அதற்கு காரணம் என, மோடிக்குத் தெரியாதா?

ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே பாணியில் மோடி அரசு தொழிலாளர் சட்டங்கள் மீது தாக்குதல் தொடுக்கத் தயாராகிறது. ஜெயலலிதா அரசு போல, பயிற்சியாளர்களைப் பெரும் எண்ணிக்கையில்  வேலைக்கு வைக்கும் முறைக்கு, மோடி அரசும் மும்மரமாகவும் முனைப்பாகவும் முயற்சிக்கிறது. இந்நியாவின் நலன்புரி - கலப்பு பொருளாதாரத்தின் கடைசி அடையாளச் சின்னங்களில் ஒன்றான திட்ட கமிஷனை ஒழிப்பதின் மூலம், இனி எல்லாம் முதலாளித்துவ சந்தை வழிகளின் படியே என, மோடி அரசு பிரகடனம் செய்துள்ளது. அந்நிய முதலீடு,  பாதுகாப்பு காப்பீடு போன்ற துறைகளில் கூடுதலாய் நுழைய அனுமதி,  பொதுத்துறை நிறுவனங்கள் பங்கு விற்பனை, பப்ளிக் பிரைவேட் பார்ட்னர்ஷிப் அதிகரிப்பு என, அய்முகூ அரசு பின்பற்றிய பெருமுதலாளித்துவ ஆதரவு வளர்ச்சிப் பாதை, இப்போதும் தொடர்கிறது.

நிதி தீண்டாமையை முடிவுக்குத் கொண்டு வர, நிதிரீதியான விடுதலையைக் கோடிக்கணக்கானவர்களுக்கு பெற்றுத்தர, அனைவருக்கும் வங்கிக்கணக்கு என்கிறார் மோடி. எவ்வளவு மோசமான மோசடி வாய்ஜாலம்! சிற்சில உடனடிப் பயன்கள் தாண்டி, இந்த வங்கிக் கணக்குகள் அடிமடியிலேயே கைவைக்க வாய்ப்பு உள்ளது. மான்யங்கள் இல்லை, இனி எல்லாமே ரொக்கப் பட்டுவாடா (cash transfer) என்று சொல்ல பாதை அமைக்கப்பட்டுள்ளது.

பா.ஜ.க தலைவர் அமித்ஷா, ‘அதிகாரம் பெறுதல்’ ‘நல் ஆளுகை’ பற்றி மட்டுமே கவலைப்படுங்கள், உரிமைகள் பற்றி யோசிக்காதீர்கள் என்கிறார். ‘சரியான நிலைமைகளில்’ ‘தாமாகவே’ எதுவும் நடக்க வேண்டுமே தவிர, சட்டம் போடுதல் கிளர்ச்சிகள் போன்றவற்றால் எதுவும் நடக்காது என்கிறார். ஜாடிக்கு ஏற்ற மூடி, மோடிக்கேற்ற ஜோடி இந்துக்களின் இந்துஸ்தான் என  ஆர்எஸ்எஸ் விஷம் கக்குகிறது. உத்தரப்பிரதேசத்தில் மதவெறி நெருப்பில் சங்பரிவார் எண்ணெய் ஊற்றுகிறது. முஸ்லிம்களுக்கு பாகிஸ்தான் அல்லது கபிர்ஸ்தான் (இடுகாடு) என்ற இரண்டு இடங்கள்தானாம்!

மோடி அரசின் நூறு நாட்கள் ஆட்சி, நம்பிக்கை ஏற்படுத்தவில்லை. ஆதரித்த பலர் இன்று தயங்குகிறார்கள். அழிவு துவங்கிவிட்டது என்ற அளவுக்கு சொல்ல முடியாவிட்டாலும், அதிருப்திகள் குவியத் துவங்கிவிட்டன எனச் சொல்ல முடியும்.
 
2014 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, மோடியின் கட்சி உத்தர்கண்ட் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் தோற்றுப் போனது. இப்போது நடந்த கர்நாடகா, மத்தியப் பிரதேசம், பஞ்சாப், பீகார் சட்டமன்ற இடைத் தேர்தல்களில் மோடி அலை ஏதும் இருந்ததாகத் தெரியவில்லை.

பீகாரில், இப்போது இடைத் தேர்தல் நடந்த 10 தொகுதிகளில், பாஜக கூட்டணி, ஏப்ரல் - மே  2014ல் நடந்த தேர்தலில் 45.3%  வாக்குகள் பெற்றது. ஆனால் இப்போது 10ல் 6 தோற்று 37.3% வாக்குகள் பெற்று, 8% வாக்குகளை இழந்துள்ளது. கர்நாடகாவில் மூன்று தொகுதிகளில் இரண்டில் தோற்று, ஒன்றில் எடியூரப்பாவின் மகன் தப்பிப்பிழைத்து வென்றுள்ளார்.

நாட்டு மக்களுக்கு நல்ல காலங்கள் வராத போது, பாஜகவுக்கு மட்டும் நல்ல காலம் எப்படி வரும்? பாஜகவின் கதை முடிகிறது, நரேந்திர மோடி அடுத்தடுத்து தோற்பார் என்றெல்லாம் சுலபமாகப் பகல் கனவு காண முடியாது என்றாலும், நிச்சயமாக, மோடி அரசுக்கு அடுத்தடுத்து  அடி கொடுக்க  முடியும் என்பதும் அதனைப் பலவீனப்படுத்த முடியும் என்பதும் தெளிவாகிறது.






Search