COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Saturday, March 15, 2014

வால் பிடிக்கும் அரசியல் வேண்டாம் சுதந்திர இடதுசாரி அரசியலே வேண்டும்

என்ன சொன்னாலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட்டிலும் கணிசமான தோழர்கள், ஓர் அடிப்படையான சமூக மாற்றத்தை, செங்கொடியின் கவுரவத்தை, பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் சுதந்திரத்தை விரும்புகிறார்கள் என்பது மறுக்கப்பட முடியாத உண்மையாகும்.

தமிழ் இந்து நாளேடு, இககமா நடத்திய வெண்மணி தியாகிகள் நினைவிட திறப்பு விழா தொடர்பாக, அதன் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் சொன்னதாக 11.03.2014 அன்று பின்வருமாறு செய்தி வெளியிட்டது. “தோழர்களின் பெருந்திரள் வருகைக்கு முக்கியக் காரணமே அதிமுகதான். அகில இந்திய அளவில், ஜெயலலிதாவை முன்னிறுத்த, இங்கே எந்த நிபந்தனையும் இல்லாமல், எங்கள் கட்சியின் தலைவர்கள் போயஸ் கார்டனுக்கே வந்து தங்கள் ஆதரவை அளித்துவிட்டுப் போனார்கள். எங்கள் கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகளும் இருக்கின்றன என்று தேர்தல் அறிக்கை மற்றும் வேட்பாளர் பட்டியல் ஆகியவற்றை வெளியிடும்வரை சொல்லிவிட்டு, திடீரென வெளியேற்றும் விதமாக நடந்து கொண்ட அவருக்கு எதிரான மன உணர்வுகளை வெளிப்படுத்தத்தான் இத்தனை ஆயிரம் பேர் கலந்து கொண்டிருக்கிறார்கள். வந்திருந்த அத்தனை பேருக்கும் அதிமுகவின் துரோகம்தான் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. தோழர்களிடம் ஏற்பட்டிருக்கிற இத்தனை பெரிய எழுச்சிக்கு அதிமுக தலைவியின் நடவடிக்கையே காரணம்.”

இகக(மா) செயலாளர் தோழர் ராமகிருஷ்ணனின் பேட்டி 07.03.2014 தினமணியில் வெளியாகியுள்ளது. அவர் தேதிவாரியாக வரிசையாக கோர்வையாக தமக்கு இழைக்கப்பட்ட அவமரியாதையை விளக்கமாகச் சொல்லியுள்ளார். அதில் இரண்டு பகுதிகள் மிகவும் கவனிக்கத்தக்கவை:

“2009 தேர்தலில் மதிமுக பாமகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டபோதும், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்தத் தேர்தலில் வேறு கட்சிகள் எதுவும் இல்லாததால் எங்களுக்கு கூடுதல் தொகுதிகள் ஒதுக்க வேண்டுமென வலியுறுத்தினோம். ஆனால் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் தலா ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்க முடியும் என்றனர்”.

“ஆறு முறை பேசியபோதும் தலா ஒரு தொகுதி என்று மட்டுமே கூறினீர்கள். எங்கள் பலத்திற்கு ஏற்ப தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். அதற்கு அவர்கள் சந்தோசமாகச் சேர்ந்தோம், சந்தோசமாகப் பிரிவோம் என்று சொல்லிச் சென்றுவிட்டனர்”.
தோழர் பாலகிருஷ்ணன், அவமானப்படுத்தப்பட்டதால் தொண்டர்கள் குமுறுகிறார்கள் என்ற ஓர் எதிர்மறை உணர்வை மட்டுமே காண்கிறார். தொண்டர்கள் இடதுசாரிகளின் சுதந்திரமான அரசியல் நிலைப்பாட்டை விரும்புகிறார்கள் என்ற நேர்மறையான விசயம் அவருக்கு புலப்படவே இல்லை. இககமா தொண்டர்களுக்கு வெகுஇயல்பாக அதிமுக, திமுக கூட்டு தொடர்பாக வருத்தமும் கோபமும் இருக்கிறது. தலைமை வேறுவேறு காரணம் சொல்லி வேறுவேறு நேரங்களில் நியாயப்படுத்துவதால், சங்கடத்துடன் ஏற்றுக் கொள்கிறார்கள். பிறகு மனம் புழுங்குகிறார்கள்.

தோழர் ராமகிருஷ்ணன் தமது தினமணி பேட்டியில், கூட்டணியில் இருந்து தம்மை அஇஅதிமுக வெளியேற்றியது என்பதை சொல்லும்போது கூட அஇஅதிமுக மீது எந்த அரசியல் விமர்சனமும் வைக்கவில்லை. அதிமுக தலைமை மீது கோபத்தோடு ஆயிரமாயிரம் தொண்டர்கள் திரண்டுவந்தபோதும், வெண்மனியில் பேசிய தோழர் பிரகாஷ் காரத், ஜெயலலிதா பற்றியோ, அஇஅதிமுக பற்றியோ எந்த விமர்சனமும் முன்வைக்கவில்லை. கூட்டணி உடைந்துபோன பிறகு, சரியாகச் சொல்வதென்றால், கூட்டணி கலைக்கப்பட்டு இககமா வெளியேற்றப்பட்ட பிறகு, கூட்டணி தர்மம் என்ற சாக்கு சொல்லக்கூட ஏதும் இல்லையே!

பிரச்சனை, இகக, இககமாவின் வால் பிடிக்கும் அரசியல் வழியில், நாடாளுமன்ற முடக்குவாதத்தில் வேர்கொண்டுள்ளது. ஊழல் எதிர்ப்பு என்ற தளத்தில் திமுகவுடன் உறவு இல்லை எனவும் தனித்துப் போட்டியிடப் போவதாகவும் சொல்லியுள்ளார்கள். ஆனால், கற்பனையான, கவைக்குதவாத, அற்ப ஆயுசில் முடிந்த மூன்றாம் அணி என்ற மாயமான் தேடி, மதவெறி எதிர்ப்பு, மாற்றுக் கொள்கை அணிவகுப்பு என்பவற்றில் இருந்து வெகுதூரம் விலகி வந்ததுதான் தோழர்களின் பிரச்சனை. நேற்று வந்த அர்விந்த் கேஜ்ரிவால் அய்முகூ ஊழல் பற்றி மட்டும் பேசாமல் குஜராத்துக்கு நேரில் சென்று மோடி கார்ப்பரேட்டுகளை அம்பானிகளை அதானிகளை கொழுக்க வைத்தவர் எனச் சாடுகிறார். அவர் அய்முகூ எதிர்ப்பு மற்றும் மோடி எதிர்ப்பு என்ற வெளியில், நடமாட வாய்ப்புத் தேடிக்கொண்டு விட்டார்.

இககமா, இகக ஜெயலலிதாவின் நடவடிக்கைகள் முன்பு முன்முயற்சியின்றி முடங்கிக்கிடந்தனர். மமதா பானர்ஜி, அவர்களது வெந்த புண்களில் வேல் பாய்ச்சினார். ஜெயலலிதா கதவைத் திறந்து அவர்களை வெளியே போகச் சொன்னது தெரிந்தவுடன், மமதா, ஜெயலலிதா பிரதமர் ஆவதில் தமக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை எனச் சொன்னார். மறுநாளே, ஜெயலலிதா மமதா வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார். அதாவது, இகக, இககமா தோல்விக்கு வரவேற்பு தந்தார். இதற்கும் கட்டுரை அச்சேறும் வரை தோழர்கள் அதிகாரபூர்வமாக எதிர்வினையாற்றவில்லை.

ஜெயலலிதா, நரேந்திர மோடியை நேரடியாக விமர்சிக்காதது, மோடி ஜெயலலிதாவை விமர்சிக்காதது என்ற ஒன்றுக்கொன்று தொடர்புடைய இரண்டு விசயங்களும் தமிழ்நாட்டில் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் பளிச்சென புலப்பட்டது. ஆனால், வீட்டின் நடு அறையில் இருந்த யானை தோழர்கள் கண்களுக்குத் தெரியாமல் போனது. பிரச்சனை, வெறும் மானப் பிரச்சனை, கவுரவப் பிரச்சனை அல்ல; முதலாளித்துவ கட்சிகளோடு உறவுக்கு முன்னுரிமை தருகிற சந்தர்ப்பவாத அரசியல் வழியோடு தொடர்புடையது. இகக, இககமா, வேறுவேறு நேரங்களில் இணைந்தோ, தனித் தனியாகவோ, அரசியல்ரீதியாக உறவாடிய வைகோவும் விஜயகாந்தும் இப்போது மோடி முகாமில் உள்ளனர்.

இகக, இககமா, டில்லியில் பிரகடனப்படுத்திய மூன்றாவது அணி என்ன ஆனது? அங்கே, இப்போது அசாம் கன பரிசத் இல்லை. ஒடிஷாவின் பிஜூ ஜனதா தளம் இல்லை. இககமா ஒடிஷா செயலாளர் ஜனதாபதி, “இந்த முறை பிஜூ ஜனதா தளம் எங்களை தொகுதிப் பங்கீட்டிற்கு அழைக்காததால் நாங்கள் மாநிலத்தில் தனித்துப் போட்டியிடுவோம் என 10.03.2014 அன்று சொல்கிறார். இப்போது, மூன்றாவது அணியில் இகக, இககமா, பார்வர்டு பிளாக், ஆர்எஸ்பி போக முலாயம் இருக்கிறார். நிதிஷ் இருக்கிறார். ஜார்க்கண்டின் பாஜக பி டீம் என செயல்படுகிற, ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா இருக்கிறது. நிதிஷ், இககவிற்கு இரண்டு இடங்கள் தந்துவிட்டு, இககமாவுக்கு ஓரிடம் அல்லது அங்கேயும் நட்புரீதியான போட்டி எனச் சொல்லியுள்ளார். முலாயம் ஏதாவது தருவாரா அல்லது வெறும்கையை மட்டுமே காட்டுவாரா என்பது சில தினங்களில் தெரிந்து விடும். தெலுங்கானாவில் ஆந்திராவில் இகக, இககமா இருவருமே எதிரெதிர் முகாம்களில் நிற்கின்றனர். இவ்வளவும் நடந்த பிறகு கண் முன்னே ஊரே பார்க்க மூன்றாவது அணி மணல் கோபுரம் சரிந்த பிறகும், மூன்றாவது அணியில் நம்பிக்கை தெரிவிப்பதோடு, புதிய அரசு அமைவதில் தமக்கு ஒரு முக்கிய பங்கும் இருக்கும் என தோழர் பிரகாஷ் காரத் சொல்கிறார்.

இகக, இககமா இருவரும் இதுவரை ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைத்தது அரசியல் தவறு எனச் சொல்லவில்லை. அம்பானி, அதானி வகைப்பட்ட கார்ப்பரேட்டுகளின் விசுவாசிகளான பிராந்திய கட்சிகளைக் கொண்டு, நேற்று வரை மோடியோடு உறவாடிய, நாளை மோடியோடு கைகோர்க்க தயாராக இருக்கிற சக்திகளோடு சேர்ந்து மூன்றாவது அணி  எனப் பேசியது தவறு எனச் சொல்லவில்லை.

இகக, இககமா, சுதந்திரமான இடதுசாரி அரசியல் அறுதியிடல் அடிப்படையில் தனித்து போட்டியிடவில்லை. ஜெயலலிதா, கதவு திறந்துள்ளது, சந்தோசமாக வெளியே போங்கள் என்று சொன்ன பிறகுதான், வேறு வழியில்லாமல், வெளியே வந்தனர். கருணாநிதியோடு சேர்வது கேவலம்; வைகோவும் விஜயகாந்தும் இல்லை என்ற சூழலில்தான் காங்கிரசைப் போல அரசியல் அனாதைகள் ஆன பிறகுதான் தனித்துப் போட்டியிட முடிவு எடுத்துள்ளனர். தேர்தல்களை அரசியலகற்றப்பட்டவையாக மாற்றி, வெறும் எண்ணிக்கை தொடர்பானவை யாக சுருக்கிவிட்டனர்.

ஜெயலலிதா, ஜெயலலிதா போல் நடந்து கொண்டதில் வியப்படைய ஏதும் இல்லை. ‘இடதுசாரிகள்’ சொந்தக் காலில் நெஞ்சுநிமிர்த்தி அரசியல் பயணம் மேற்கொள்ளாததால்தான் ஜெயலலிதா இகக, இககமாவை சிறுமைப் படுத்தினார். தனித்துப் போட்டியிடும் சரியான முடிவை தாமதமாக வேறு வழியின்றி எடுத்துள்ள தோழர்கள் இனியாவது செங்கொடியின் கவுரவத்தை சுதந்திரமான இடதுசாரி அரசியல் அறுதியிடல் மூலம் உயர்த்திப் பிடிக்க வேண்டும் என விரும்புகிறோம்.
“எங்கும் முதலாளித்துவ - ஜனநாயக வேட்பாளர்களுக்கு அக்கம்பக்கமாக தொழிலாளர் வேட்பாளர்களை நாம் நிறுத்த வேண்டும்; அவர்கள் முடிந்த வரை கம்யூனிஸ்ட் லீகின் உறுப்பினர்களாக இருக்க வேண்டும். நாம் அவர்கள் தேர்தல்களில் எல்லா விதங்களிலும் பாடுபட வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட எந்த சாத்தியப்பாடும் இல்லாத இடங்களிலும், நமது சுதந்திரத்தைப் பாதுகாக்க, நமது சக்திகளை சரியாக மதிப்பிட, பொது மக்கள் முனபு புரட்சிகர அணுகுமுறையையும் கட்சியின் நிலைப்பாட்டையும் வெளிப்படுத்த, தொழிலாளர்கள் தமது சொந்த வேட்பாளர்களை நிறுத்தியாக வேண்டும். ஜனநாயக கட்சியின் வாக்குகளைப் பிரித்து பிற்போக்காளர் வெற்றியை சாத்தியமாக்க உதவுகிறோம் என்ற கவர்ச்சிகரமான வாதங்களால் ஏமாந்து விடக்கூடாது. இந்தச் சொற்றொடர்களின் இறுதி நோக்கம், பாட்டாளி வர்க்கத்தை ஏமாற்றுவதே ஆகும். பிரதிநிதித்துவ அவையில் சில பிற்போக்காளர்கள் இடம்பெறும் பாதகமான வாய்ப்பைக் காட்டிலும், இத்தகைய சுதந்திரமான நடவடிக்கையால் பாட்டாளி வர்க்க கட்சி அடையும் முன்னேற்றம், முடிவில்லாத முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.”
- கம்யூனிஸ்ட் லீக் மத்தியக் கமிட்டியில் காரல் மார்க்ஸ்
"இந்தத் தருணத்தில் ஒரு மூன்றாவது அணிக்கான தேடுதல், பரந்த விவாதத்திற்கான ஒரு நிகழ்ச்சிநிரலை முன்வைப்பதைக் கோருகிறது. பொதுவாக இடதுசாரிகளும், குறிப்பாக புரட்சிகர இடதுசாரிகளும், தேர்தல் சேர்க்கைகள் மற்றும் எண்ணிக்கை விளையாட்டுக்களில் இருந்து விலகியே நிற்க வேண்டும்; தங்கள் செயல்திட்டத்துடன் தலையிட்டு தங்கள் நிகழ்ச்சிநிரலை முன்நிறுத்துவதில் முக்கியப் பங்காற்ற வேண்டும். அதன் தொடர்ச்சியாக மட்டுமே அரசியல் அணிசேர்க்கைகள் வரும்".
- தோழர் வினோத் மிஸ்ரா

Search