பாரதம் ஒளிர தமிழகம் மிளிர அஇஅதிமுகவுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என ஜெயலலிதா தனது பரப்புரைகளில் சொல்லி வருகிறார். இந்தியா ஒளிர்கிறது என்று சொன்னவர்கள் அடுத்த பத்து ஆண்டுகள் மத்தியில் ஆட்சிக்கு வரமுடியவில்லை. தமிழ்நாட்டில் கருணாநிதியின் மக்கள் விரோத நடவடிக்கைகள் ஜெயலலிதாவை கொண்டுவந்து, மக்கள் வாழ்வை மேலும் துன்பத்தில் தள்ளியுள்ளது போல், பத்தாண்டு கால அய்முகூவின் மக்கள் விரோத ஆட்சி பாஜகவை ஆட்சியில் அமர்த்தி நாட்டை கார்ப்பரேட் பாசிச பிடியில் சிக்க வைத்துவிடுவதை மக்கள் தடுக்க வேண்டியுள்ளது.
பாரதம் ஒளிரும் என்று சொல்லும் ஜெயலலிதாவால் தமிழகம் ஒளிரும் என்று சொல்ல முடியவில்லை. மின்மிகை மாநிலமாக தமிழ்நாடு மாறும் என்று சொல்லிக் கொண்டிருந்த ஜெயலலிதாவை அவரது நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் விரட்டுகின்றன. கூட்டணி கட்சிகளை சம்பிரதாய மரியாதை கூட இல்லாமல் தூக்கியெறிந்து விட்டு பிரச்சாரத்தைத் துவக்கியபோது இருந்த அதீத தன்னம்பிக்கை, வேறுவேறு கூட்டணிகள் வடிவெடுத்த பிறகு வடிந்து வருகிறது.
அனைத்து முதலாளித்துவ கட்சிகளும் கூட்டணி குழப்பத்தில் ஆழ்ந்திருந்த நேரத்திலேயே, தேர்தல் தெளிவு பெற்ற ஒரே கட்சி அஇஅதிமுக என்ற தோற்றத்துடன், ஜெயலலிதா தாக்குதல் தன்மையுடன் துவங்கிய பிரச்சாரத்தில் இன்று சிதம்பரம், இடதுசாரிகள், திமுக, தேமுதிக என அனைவரது கேள்விகளுக்கும் விளக்கம் சொல்வது என்பதாக, பெருமளவில் தற்காப்பு வாதங்கள் இடம் பிடித்துவிட்டன. மூன்று சென்ட் நிலம், கொடநாட்டில் 900 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு என சில அடிப்படை கேள்விகளை ஜெயலலிதா தவிர்த்துவிட்டு கடந்து செல்ல முயற்சி செய்தாலும் கட்சி செலவில் நடப்பதாகச் சொல்லப்படும் வான்வெளி பிரச்சாரத்துக்குக் கூட விரிவான பதில் சொல்ல வேண்டியிருக்கிறது.
மாநிலத்தில் ஆட்சியில் இருக்கிற ஜெயலலிதா, மத்தியில் ஆட்சியில் இருக்கிற காங்கிரஸ் மட்டுமின்றி, எதிர்க்கட்சிகளாக இருந்த கட்சிகள் உட்பட எந்த முதலாளித்துவ கட்சியும் தாக்குதல் தன்மையுடனான பரப்புரை மேற்கொள்ள முடியவில்லை. கடந்த கால துரோகங்களும் நிகழ்கால சந்தர்ப்பவாத உடன்பாடுகளும் கூட்டணி பேர கட்சிகளை தற்காப்பு வாதங்களுக்கு தள்ளியிருக்கின்றன. இந்தக் கட்சிகளால் வறிய மக்களை மட்டுமின்றி, புதிய வாக்காளர்களை, நடுத்தரப் பிரிவு வாக்காளர்களையும் நேரடியாக எதிர்கொள்வதில் கிட்டத்தட்ட சாத்தியமற்ற நிலை இருக்கிறது. நவதாராளவாதக் கொள்கைகளுக்கு அப்பாற்பட்ட மாற்று பொருளாதாரக் கொள்கைகள் இல்லாததால் மக்கள் முன்வைக்கிற வாழ்வாதாரக் கேள்விகளுக்கு, அவர்கள் சீற்றத்தைத் தணிக்கக்கூடிய விதத்தில் பதில் சொல்ல முடியாத நிலை இருக்கிறது.
அதிகாரபூர்வ இடதுசாரி கட்சிகளும் மக்கள் பிரச்சனைகளை முன்னிறுத்துவதைவிட கூடுதல் சிரத்தையுடனும் சிரமத்துடனும் இத்தனை ஆண்டுகால சந்தர்ப்பவாத அரசியல் நிலைப்பாடுகளுக்கு விளக்கம் சொல்வதில் நேரம் செலவிட நேர்ந்துள்ளது. துணிச்சலுடன் ஜெயலலிதாவை எதிர்கொள்ள இன்னும் முன்வராததால் மக்களை துணிச்சலுடன் இன்னும் சந்தித்தபாடில்லை. இந்த நிலையிலும் இல்லாத மூன்றாவது அணியின் இருப்பதாக அறியப்படும் அய்க்கிய ஜனதா தளத்துக்கு தமிழ்நாட்டில் ஆதரவு அறிவித்தும், புரட்சிகர இடதுசாரி கட்சியான இகக மாலெவுக்கு ஆதரவு என அறிவிக்க முன்வரவில்லை.
தேர்தல் பரபரப்பு பற்றிக்கொண்ட நிலையிலும், தேர்தல் வேலைகளுக்கு கவனம் செலுத்துவதைக் காட்டிலும், புரட்சிகர தொழிற்சங்கம் இன்று வரை, சவால்கள் பல எதிர்கொண்டு முன்னுதாரணமிக்க தொழிலாளர் வர்க்க, தொழிற்சங்க போராட்ட நடைமுறையை பின்பற்றி வருகிற பிரிக்காலில், போட்டி சங்கம் நடத்த முனைப்பு இருக்கிறது. இவற்றுக்கும் சேர்த்துத்தான் தேர்தல் களத்தில் பதில் சொல்ல வேண்டியிருக்கும் என்ற உணர்வுக்கு பஞ்சம் காணப்படுகிறது.
மறப்பது மக்கள் இயல்பு, அதனால் இதுவும் கடந்துபோகும் என்று இந்தக் கட்சிகள் எதிர்ப் பார்ப்பார்களானால், லெனின் சொன்ன சதுப்பு குழி காத்திருக்கிறது. இசுலாமிய மக்கள் மோடியின் துரோகத்தை, இசுலாமியர்கள் உடலும் மனமும் ரணப்பட்டதை மறக்கவில்லை என்ற யதார்த்த நிலையை தேமுதிகவின் நட்சத்திர வேட்பாளர் சுதிஷ் சேலத்தில் சந்தித்தார். தவறு தான் என்றாலும், காங்கிரஸ்காரரே என்றாலும், மோடியை கூறுபோடுவேன் என்று சொல்லும் அளவு இசுலாமியர் மத்தியில் கொதிப்பு இருப்பதை காசி காட்டியுள்ளது.
பெருந்துறையில் கழிவுநீர்த் தொட்டியில் உயிர்விட்ட தொழிலாளர்கள் குடும்பங்கள், என்எல்சியில் பேச்சுரிமையை வெளிப்படுத்தியதற்காக கொல்லப்பட்ட ஒப்பந்தத் தொழிலாளி யின் குடும்பம், வண்ணக்கனவுகள் பொய்யாய் போவதை சகிக்க முடியாமல் தகித்துக் கொண் டிருக்கும் நிரந்தர தற்காலிக, ஒப்பந்த இளைய தொழிலாளர்களின் குடும்பங்கள், வாழ எந்த வழியும் கண்ணுக்குப் புலப்படாத கிராமப்புற வறிய மக்கள் குடும்பங்கள் என யாரும், நாளும் தங்களை விரட்டும் துன்ப நிலைமைகள் விலகாத, மாறாத சூழலில் ஜெயலலிதாவின் துரோகத்தையும் மறக்கப் போவதில்லை.
ஜெயலலிதா தமது கட்சி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும்போது, உங்களுடனேயே இருப்பார், உங்களையே சுற்றிச்சுற்றி வருவார், அதற்கு நான் உத்தரவாதம் தருறேன் என்கிறார். 2011 முதல் அவர் அளித்த உத்தரவாதங்களும் வாக்குறுதிகளும் சொல்லளவில்தான் இருக்கின்றன.
கொலை, கொள்ளைச் சம்பவங்களில் இருந்து கூட மக்களை பாதுகாக்க முடியாதவர் ஜெயலலிதா என்பதைத்தான், அவர் மக்களை சுற்றிச்சுற்றி அடித்ததைத்தான் இன்றுவரை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்.
தற்காப்பு நிலையில் உள்ள முதலாளித்துவ கட்சிகளை முன்னேறித் தாக்க, அவர்களை இருக்க வேண்டிய இடத்தில் நிறுத்த, உழைக்கும் மக்களுக்கு 2014 தேர்தல், தவறவிட்டுவிட முடியாத வாய்ப்பைத் தந்திருக்கிறது.