COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Saturday, March 15, 2014

உக்ரேன் நெருக்கடி - ஏகாதிபத்திய தலையீடுகள் உடனடியாக நிற்க வேண்டும்.

அய்க்கிய அமெரிக்காவின் 58.5% மக்கள் தங்கள் வாழ்நாளில் 25 வயது முதல் 75 வயது வரை ஓராண்டாவது வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருப்பார்கள்.

அய்க்கிய அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்கள்படி 2012ல் 4 கோடியே 36 லட்சம் குழந்தைகள் வறுமையில் இருக்கிறார்கள். 2009ல் இருந்ததை விட இது 14.3% அதிகம்.

அய்க்கிய அமெரிக்காவில் நாளொன்றுக்கு 2 டாலருக்கும் குறைவான செலவில் வாழும் குடும்பங்கள் ஒன்றரை கோடி. இது 1996ல் இருந்ததை விட இரண்டு மடங்கு அதிகம்.

2009ல் அய்க்கிய அமெரிக்காவில் வீடற்ற மக்களின் எண்ணிக்கை 6,43,000.

மருத்துவ காப்பீடு இல்லாமல் செத்துப்போகும் அய்க்கிய அமெரிக்கர்கள் எண்ணிக்கை ஆண்டு ஒன்றுக்கு 44,789.

400 பணக்கார அய்க்கிய அமெரிக்கர்களின் சொத்து மதிப்பு 15 கோடி அய்க்கிய அமெரிக்க மக்களிடம் உள்ள சொத்தின் மொத்த மதிப்பை விடக் கூடுதல்.

வளங்களின், வாய்ப்புக்களின் பூமி என்று சொல்லப்படுகிற அய்க்கிய அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையான 31.3 கோடியில் இங்கு சொல்லப்பட்டுள்ள எண்ணிக்கையில் வறிய மக்கள் இருப்பது சாதாரணமாக கடந்து சென்றுவிடக் கூடிய பிரச்சனை அல்ல.

சொந்த நாட்டு மக்களின் துன்பம் தீர்க்க முடியாத அய்க்கிய அமெரிக்க ஆட்சியாளர்கள் மற்ற நாடுகளின் ஜனநாயகம் காக்க புறப்பட்டு விடுகிறார்கள். ஜனநாயகத்தின்பால் பெருவிருப்பம் கொண்ட அய்க்கிய அமெரிக்காவின் ஆட்சி மாற்ற நிகழ்ச்சிநிரலில், உக்ரேனில் ஓர் ஆட்சி மாற்றம் நிகழ்ந்துவிட்டது.

ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்த ரஷ்யாவுக்கு எதிராக அன்று முஜாஹிதீனை வளர்த்தது அய்க்கிய அமெரிக்கா. ரஷ்யா பின்வாங்க நேரிட்டது. அய்க்கிய அமெரிக்கா ஊட்டி வளர்த்த அதே முஜாஹிதீன் பல ஆண்டுகளுக்குப் பின் அல்கொய்தாவாக மாறி, அய்க்கிய அமெரிக்க ஆணவத்துக்கு அடிகொடுக்க இரட்டை கோபுரத்தை தகர்த்தது. ஆப்கானிஸ்தான் அனுபவத்தில் இருந்து ரஷ்யாவும் அய்க்கிய அமெரிக்காவும் பாடம் எடுத்துக்கொள்ளவில்லை என்றே உக்ரேன் நிகழ்வுகள் காட்டுகின்றன.

ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான போட்டியில் உக்ரேன் மக்கள் அலைகழிக்கப் படுகிறார்கள். ரஷ்ய எல்லையில் உக்ரேனில் நேட்டோ படைகள் நிறுத்தப்படுவது அய்க்கிய அமெரிக்காவுக்கு அவசியம். அதற்கு உக்ரேனில் தனது செல்வாக்கிலான அரசாங்கம் அமைவதும் அது அய்ரோப்பிய யூனியனுடன் இணைவதும் அவசியம். அய்க்கிய அமெரிக்காவும் அய்ரோப்பிய யூனியனும் இதற்காக செய்த ஏற்பாடுகளில் உக்ரேன் உள்நாட்டு கலவரங்களைச் சந்தித்து ஆட்சி மாற்றத்தையும் கண்டுவிட்டது.

யானுகோவிச் நல்லாட்சியாளர் அல்ல. அவரும் நவதாராளவாத கொள்கையாளரே. ஊழல், ஒடுக்குமுறை ஆகியவற்றுக்குச் சொந்தக்காரரே. ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருக்கும் உக்ரேனுக்கு 2014ல் மட்டும், செலவினங்களுக்கு 24 பில்லியன் டாலர் தேவை. ரஷ்யா 15 பில்லியன் டாலர் தர முன் வருகிறது. இந்த சமயத்தில் அய்ரோப்பிய ஒன்றியத்துடன் ஒப்பந்தம் போட யானுகோவிச் மறுக்கிறார்.

யானுகோவிச்சின் இந்த மறுப்புக்கு எதிராகவும் ஊழல் மற்றும் ஒடுக்குமுறைக்கு எதிராகவும் உக்ரேனின் அதிதீவிர வலதுசாரி சக்திகள் மற்றும் சில தாராளவாத சக்திகள் தலைமையில் போராட்டங்கள் எழுகின்றன. உக்ரேன் தலைநகர் கீவ், போராட்டக்காரர்களால் ஆக்கிரமிக்கப்படுகிறது. யானுகோவிச், வேறு வழியின்றி, தேர்தல்கள் உடனடியாக நடத்தப்படும் என்றும், அதுவரை காபந்து அரசு அமைக்கப்படும் என்றும், 2004 அரசியல் சாசனம் மீண்டும் செயல்பாட்டுக்கு வரும் என்றும் அறிவிக்கிறார். ஆயினும், புதிய அரசாங்கம் அமைந்த பிறகு யானுகோவிச் உக்ரேனில் இருக்க முடியாமல் ரஷ்யாவில் தஞ்சம் புகுந்துள்ளார். புதிய பிரதமர் ஆர்சனி யாட்சனிக் ஆட்சிக்கு வந்தவுடன் உக்ரேனில் ரஷ்ய மொழி அதிகார பூர்வ மொழியல்ல என அறிவிக்கப்பட்டது.

உக்ரேனின் தன்னாட்சி பகுதியான கிரிமியாவில் ரஷ்யப் படைகள் நுழைந்துள்ளன. அய்க்கிய அமெரிக்கா, ரஷ்யாவை இது நல்லதற்கல்ல என்று எச்சரிக்கிறது. ரஷ்ய படையை திரும்பப் பெறச் சொல்கிறது. உக்ரேனில் இருந்து பிரிந்து ரஷ்யாவுடன் இணைவதற்கான பொது வாக்கெடுப்பு எடுக்கும் முடிவை ரஷ்ய மக்கள் தொகை அதிகம் உள்ள பகுதியான கிரிமியா நாடாளுமன்றம் எடுத்துள்ளது. கிரிமியாவில் உள்ள ராணுவம் உக்ரேனில் இப்போது உருவாகியுள்ள புதிய அரசை அங்கீகரிக்கவில்லை என்றும் அதன் ஆணையை ஏற்று போரிட முடியாது என்றும் சொல்கிறது.

கீவ் வலதுசாரி சக்திகளின் பிடியில் வந்த பிறகு, கிரிமியாவில் அவர்களுக்கு எதிரான சக்திகள், யானுகோவிச் ஆதரவு இல்லை என்றாலும் வலதுசாரிகள் கையில் நாடு சிக்கி விடக்கூடாது என்பதற்காக கிரிமியாவில் அரசு கட்டிடங்களை ஆக்கிரமித்தனர். அரசு கட்டிடங்களை ஆக்கிரமிப்பது, வன்முறையை தூண்டுவது, பயங்கரத்தை பரப்புவது என்று கீவ் நகரத்தில் பின்பற்றப்பட்ட அதே நடைமுறை கிரிமியாவிலும் பின்பற்றப்படும் என்று தெரியவந்தது. ஊடுருவப்பட்ட மின்னஞ்சல்கள் இந்த விவரங்களை வெளிப்படுத்தின. ஒரு வகையில் கிரிமியாவுக்குள் வலதுசாரி சக்திகள் கலவரத்தை தூண்டும் முன் அது தடுக்கப்பட்டுவிட்டது.

இப்போது ரஷ்யாதான் ஆக்கிரமிப்பாளர் என்ற பிம்பத்தை மேற்கத்திய ஊடகங்கள் வெற்றிகரமாக கட்டமைத்துவிட்டன. சுதந்திர சதுக்கத்தில் நடந்த கலவரங்களை தூண்டிய அய்க்கிய அமெரிக்கா, நியாயம் கேட்கும் உக்ரேனுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதாக சித்தரிக்கப்பட்டுவிட்டது.

இன்று உக்ரேனில் நடந்த ஆட்சி மாற்றத்துக்குப் பின் இருந்த சக்திகளின் வேர்கள் ஹிட்லர் ஆதரவு சிறப்புப் பாதுகாப்புப் படைகளில் உள்ளன. இரண்டாம் உலகப் போரின்போது, யூதர் படுகொலைகளை நடத்திய உக்ரேன் படைப் பிரிவுகளை பாராட்டிய ரைட் செக்டர் மிலிஷியா மற்றும் ஸ்வோபோதா கட்சிகள் இந்தப் போராட்டத்தில் தலைமை ஏற்றிருந்தன. யூதர்களை, கருப்பர்களை, ரஷ்யர்களை கண்ட இடத்தில் கொல்ல வேண்டும் என்று வெளிப்படையாக பிரச்சாரம் செய்பவர்கள் அவர்கள்.

பிரிட்டனின் சேனல் 4 தொலைக்காட்சி, ரைட் செக்டர், காமன் காஸ் போன்ற அதிதீவிர வலதுசாரி அமைப்புகள் இந்த கிளர்ச்சிகளை கட்டமைப்பதில் தலைமை பாத்திரம் வகித்தன என்று சொல்லியுள்ளது. இந்த அமைப்புகளுக்கு அய்க்கிய அமெரிக்க ஆதரவு பெருமளவில் இருந்தது. டிசம்பர் மாதம் விக்டோரியா நியூலான்ட், ஜான் மெக்கெய்ன் ஆகியோரை போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக மைதானில் பார்க்க முடிந்தது.

போராட்டக்காரர்கள் மீதும் காவல்துறையினர் மீதும் துப்பாக்கியால் சுட்டவர்கள் மைதான் தலைவர்களால் அமர்த்தப்பட்டவர்கள் என்று யானுகோவிச்சுக்கு விசுவாசமான உக்ரேன் பாதுகாப்புப்படை அதிகாரிகள், ஒரு தொலைபேசி உரையாடலை ஒட்டுக்கேட்டதில் தெரிய வந்தது என்ற தகவலை வெளியிட்டுள்ளனர். இந்தத் தகவல் இணையதளத்திலும் உள்ளது. அய்ரோப்பிய யூனியன் அயலுறவு விவகாரத்துறை தலைவர் கேதரின் ஆஷ்டன் மற்றும் எஸ்டோனியா அயலுறவு அமைச்சர் உர்மாஸ் பேட் ஆகியோருக்கு இடையில் நடந்த இந்த உரையாடல் பிப்ரவரி 25 அன்று பேட், கீவ் சென்று திரும்பிய பிறகு நடந்தது.

காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் ஒருவரும் இதை உறுதிப்படுத்தியுள் ளார். போராட்டக்காரர்களும் காவல்துறையினரும் ஒரே நபர்களால்தான் சுடப்பட்டார்கள், அந்த தோட்டாக்கள் ஒரே விதமான தோட்டாக்கள்தான், புதிய அரசாங்கம் இதை விசாரணைக்கு உட்படுத்தாது என்று அவர் சொல்கிறார். புதிய அரசாங்கம் அவருக்கு அளித்த உக்ரேன் மானுட விவகார துணை பிரதமர் பதவியை அவர் ஏற்க மறுத்துவிட்டார்.

உக்ரேனில் உள்ள அய்க்கிய அமெரிக்க தூதரக அதிகாரி மற்றும் அய்ரோப்பிய விவகாரங்களுக்கான அய்க்கிய அமெரிக்க செயலாளர் விக்டோரியா நியுலான்ட் ஆகியோருக்கு இடையில் நடந்த தொலைபேசி உரையாடல்கள் ஊடுருவப்பட்டன. (அய்க்கிய அமெரிக்கா மட்டும்தான் செய்யுமா, மற்றவர்களும் செய்வார்கள்). அதில், புதிய அரசாங்கத்தில் அதிபர் யாராக இருக்க வேண்டும் என்று நியுலான்ட் சொன்னது தெரியவந்துள்ளது.

இப்போது பிரச்சனை கிரிமியாவை மய்யங்கொண்டுவிட்டது. கிரிமியா நாடாளுமன்றம் அறிவித்துள்ள பொது வாக்கெடுப்பு உக்ரேன் அரசியல் சாசனம் மற்றும் சர்வதேச சட்டங்களை மீறுவது என்றும் ரஷ்யா தனது படைகளை திரும்பப் பெறாவிட்டால் தங்கள் கூட்டாளிகளும் தங்களுடன் சேர்ந்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்றும் அனைத்து ராணுவ உறவுகளும் நிறுத்தப்படுவதாகவும் பென்டகன் அறிவித்தது.

கிழக்கு உக்ரேன் மக்கள் ரஷ்ய உதவியை நாடினாலோ, அராஜக நிகழ்வுகள் நடந்தாலோ அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் ரஷ்யப் படைகள் உக்ரேனுக்குள் செல்லவில்லை என்றும் கிரிமியாவில் இருப்பது உள்ளூர் தற்காப்புப் படைகள்தான் என்றும் புதின் சொல்கிறார். மட்டுமின்றி, ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்கும் ஏற்கனவே உள்ள ஒப்பந்தப்படி ரஷ்யா செவஸ்டபோலில் ரஷ்ய கருங்கடல் படையை நிறுத்திக் கொள்ள முடியும். இங்கு 25,000 படைத் துருப்புக்களை நிறுத்த ஒப்பந்தம் உள்ளது. ஆனால், 16,000 துருப்புக்கள் நுழைந்து விட்டதாக அய்க்கிய அமெரிக்க ஊடகங்கள் குற்றம் சாட்டுகின்றன.

2011ல், 2012 அய்க்கிய அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய, குடியரசு கட்சியின் ரான் பால், அய்க்கிய அமெரிக்காவுக்கு உலகெங்கும் உள்ள 130 நாடுகளில் ராணுவ ஊழியர்கள் இருப்பதாகவும் 900 ராணுவ தளங்கள் இருப்பதாகவும் சொன்னார். அந்த அய்க்கிய அமெரிக்கா, கிரிமியாவில் ரஷ்யப் படைகள் நிறுத்தப்பட்டிருப்பது அய்க்கிய அமெரிக்காவின் தேசப் பாதுகாப்பு மற்றும் அயலுறவு கொள்கைக்கு வழமையற்ற, அதீத அச்சுறுத்தல் அதனால் ரஷ்யா மீது தடைகள் விதிக்கப்படுவதாகச் சொல்கிறது.

அய்க்கிய அமெரிக்கா விதிக்கும் தடைகள் திருப்பித் தாக்கும் என்று ரஷ்யாவும் எச்சரித்துள்ளது. இது உக்ரேனுக்கே பெரிய பாதிப்பை உருவாக்கும். மலிவான எரிவாயுவுக்கு உக்ரேன் ரஷ்யாவையே நம்பியுள்ளது. உக்ரேனில் ஏற்கனவே ரஷ்ய எதிர்ப்பு ஆட்சி அமைந்துள்ளதால் உக்ரேன் மக்கள் அடுத்தடுத்து பல பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

உக்ரேனின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க, ரஷ்யா 15 பில்லியன் டாலர் பணமாகவும் உடனடியாக 3 மில்லியன் டாலரும் தருவதாக சொல்லியிருந்தது. இந்தக் கடன் இனி உக்ரேனுக்கு கிடைப்பது சந்தேகம்.

அய்ரோப்பிய யூனியன் 2.2 பில்லியன் டாலர் கடன் தருவதாக சொல்லியுள்ளது. மேலும் அடுத்த 7 ஆண்டுகளில் 11 பில்லியன் டாலர் தருவதாகச் சொல்லியுள்ளது. இது தவிர மார்ச் 4 அன்று ஜான் கெர்ரி, கீவ் வந்தபோது 1 பில்லியன் டாலர் மதிப்புக்கு கடன் பத்திரங்கள் தருவதாகச் சொல்லியுள்ளார். அய்ரோப்பிய யூனியன் தருவதாகச் சொல்கிற நெருக்கடிகால நிதி, சர்வதேச நிதியத்துடன், உக்ரேன் கடன் ஒப்பந்தம் செய்து கொண்டால்தான் கிடைக்கும்.

இந்த ஒப்பந்தம் உக்ரேனின் பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதாக நிச்சயம் இருக்காது. அது வெறும் நிதி மட்டும் கொண்டு வராது. கூடவே நிபந்தனைகளையும் கொண்டுவரும். உக்ரேனுக்கு கடன் கொடுத்துள்ள அய்ரோப்பிய வங்கிகளுக்கு வட்டி கட்டுவதற்காக, உக்ரேன் மக்களின் ஓய்வூதியம் 160 டாலரில் இருந்து 80 டாலராக குறைக்கப்படும் திட்டத்தை புதிய அரசாங்கம் தயார் செய்து விட்டது. சர்வதேச நிதியத்தின் நிபந்தனைகளை ஏற்று சிக்கன நடவடிக்கைகளை அமலாக்கும்போது, சமூக பாதுகாப்பு நடவடிக்கைகள் வெட்டப்படும்.

கல்விக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்படும். (குடிமக்கள், குழந்தைகள் படித்தால் என்ன படிக்காவிட்டால் என்ன எனக்கு வட்டி வேண்டும் என்கிறது நிதி மூலதனம்). அரசு ஊழியர்கள் எண்ணிக்கை குறைக்கப்படும். விவசாய நிலங்கள் அய்க்கிய அமெரிக்க விவசாய வர்த்தகத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும். எரிவாயு மான்யம் வெட்டப்படும். நாணய மதிப்பு சரிந்து ரஷ்யாவில் இருந்து இறக்குமதியாகும் எரிவாயு உட்பட இறக்குமதிப் பொருட்கள் விலை அதிகரிக்கும். அய்ரோப்பிய மற்றும் அய்க்கிய அமெரிக்க கார்ப்பரேட் நிறுவனங்கள் வர்த்தகம் செய்ய நாட்டுக்குள் கட்டின்றி நுழையும்.

அடுத்த அய்ந்து ஆண்டுகளில், ஆண்டுக்கு 160 மில்லியன் டாலர் தருவதாக அய்ரோப்பிய யூனியன் சொன்னது என்றும் சர்வதேச நிதியத்துக்கு தர வேண்டிய கடன் தொகை மட்டும் அதையும் தாண்டும் என்றும் பிசினஸ் நியுஸ் அய்ரோப்பா பத்திரிகை ஆசிரியர் பென் ஆரிஸ் சொல்கிறார்.

ரஷ்யாவுக்கு எதிராக உக்ரேன் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்று சொல்லி புதிய அரசாங் கத்தின் சிக்கன நடவடிக்கைகள் உருவாக்கும் எதிர்ப்புக்களை கட்டுப்படுத்த முடியும். யார் போராடினாலும் ரஷ்ய தலையீடு என்று குற்றம் சாட்ட முடியும். ஒடுக்க முடியும். ஆக, உக்ரேன் மக்கள் அனைத்தும் தழுவிய ஏகாதிபத்திய தாக்குதல்களுக்கு நாளும் ஆளாக்கப்படுவார்கள்.

உக்ரேன் நெருக்கடிக்கு காரணம் அய்க்கிய அமெரிக்காதான் என்றும் அதனால் அய்க்கிய அமெரிக்காவுடன் பேச வேண்டும் என்றும் புவி அரசியல் காரணங்களுக்காக இந்த நெருக்கடி செயற்கையாக உருவாக்கப்பட்டது என்றும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் சொல்கிறார்.அய்க்கிய அமெரிக்க ராணுவ தொழில் கட்டமைப்பை செயலூக்கமாக வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் ஒபாமாவுக்கு உள்ளது. அதற்கு, உலகில் மாறி மாறி பதட்டப் பகுதிகள் இருப்பது அவசியம். இது தவிர அய்க்கிய அமெரிக்காவின் ஒரு துருவ உலக கனவுக்கு, விரிவாக்கவாத திட்டத்துக்கு ரஷ்யா தடையாகவே உள்ளது.

ஈரானுக்கு எதிரான அய்க்கிய அமெரிக்க முயற்சிகளுக்கு துணை போகாதது, சிரியா மீதான அய்க்கிய அமெரிக்க தாக்குதலை எதிர்த்து தடுத்தது, ஸ்னோடனுக்கு புகலிடம் கொடுத்தது என அய்க்கிய அமெரிக்க திட்டங்களுக்கு ரஷ்யா தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டுள்ளது. சிரியா மீதான போர் அச்சுறுத்தல் இருந்தபோது ரஷ்ய படைகள் உக்ரேனில் செவஸ்டபோல் தளத்தில் தான் நிறுத்தப்பட்டிருந்தன.

சோவியத் ரஷ்யா சரிந்தபோது, ரஷ்ய எல்லை நாடுகளில் நேட்டோ விரிவுபடுத்தப்படாது என்று கார்ப்பசேவுக்கு உறுதியளிக்கப்பட்டது. ஆனால், வார்சா ஒப்பந்த உறுப்பு நாடுகள் பலவும் இன்று நேட்டோ உறுப்பு நாடுகளாக உள்ளன. ரஷ்யாவுக்கு எதிரான போர்ப் பிரச்சாரம் நடப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஜார்ஜியாவைவும் மோல்டோவாவையும் ரஷ்ய எதிர்ப்பு நிலை எடுக்க வைக்கவும் அய்க்கிய அமெரிக்க தரப்பில் தொடர் முயற்சி நடந்து வருகிறது. ஜார்ஜியா நேட்டோவிலும் மோல்டோவா அய்ரோப்பிய யூனியனிலும் சேர விருப்பம் தெரிவித்துள்ளன.

ட்ரோன் தாக்குதல்கள், ஈராக், ஆப்கானிஸ் தான் ஆக்கிரமிப்பு, சிரியாவிலும் லிபியாவிலும் கலகங்களை தூண்டுவது, கியூபாவிலும் வெனிசூலாவிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிகளின் ஸ்திரத்தன்மையை குலைப்பது போன்ற அய்க்கிய அமெரிக்காவின் தலையீட்டு நடவடிக்கைகள் தொடரும்போது ரஷ்யாவைப் பற்றிப் பேச அய்க்கிய அமெரிக்காவுக்கு தகுதி இல்லை.

அய்க்கிய அமெரிக்க விரிவாக்கவாத நடவடிக்கைகள் ரஷ்யாவின் விரிவாக்கவாத நடவடிக்கைகளை ஒருபோதும் நியாயப்படுத்தாது. உக்ரேனில் வலதுசாரி பிரிவினரே குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்திருந்தாலும், அதை அய்க்கிய அமெரிக்கா மேலும் தூண்டியது தவறு என்றால், அதை எதிர்ப்பது என்ற பெயரில் ரஷ்யா எடுக்கும் நடவடிக்கைகளும் தவறு. ரஷ்ய ராணுவம் உக்ரேனில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும். புதின் எடுக்கும் மாரஷ்ய விரிவாக்க முயற்சிகளையும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

உக்ரேன் மக்கள் தங்கள் ஜனநாயக விருப்பங்களை நிறைவேற்றுவதற்கான போராட்டங்களில் எழுந்ததாலேயே யானுகோவிச் தனது ஆட்சியை தொடர முடியாமல் போனது. வலதுசாரி ஆட்சியாளர்களையும் இதே வழியில் உக்ரேன் மக்கள் பார்த்துக் கொள்வார்கள். இதற்கு எந்த அந்நிய சக்தியின் தலையீடும் அவசியமில்லை.

யானுகோவிச் நடத்திய நவதாராளவாத ஆட்சி, நாசி ஆதரவு, ரஷ்ய எதிர்ப்பு, வலதுசாரி சக்திகள் வலுப்பெறுவதற்குத்தான் இட்டுச் சென்றுள்ளது. உக்ரேன் இந்தியாவுக்கும் பாடம் சொல்கிறது. (மார்ச் 09, 2014)

Search