COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Saturday, March 15, 2014

பீகாரில் மாலெ கட்சிப் பேரணிகள்

வேர்க்கால் மட்டத்தில் மூன்றாவது அணி

பீகாரில் மாலெ கட்சி போட்டியிடவுள்ள 14 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான பேரணி பிப்ரவரி 8 அன்று சமஸ்டிபூரில் பெரும் அணி திரட்டலோடு துவங்கியது. பிப்ரவரி 9 அன்று முசாபர்பூரிலும், பிப்ரவரி 10 அன்று வால்மீகி நகர் தொகுதிக்கு உட்பட்ட நர்கடியாகஞ்சிலும், பிப்ரவரி 11 அன்று கோபால்கஞ்சிலும், பிப்ரவரி 12 அன்று சிவானிலும் மிகப் பெரிய பேரணிகள் நடத்தப்பட்டன.

இந்தக் கூட்டங்களுக்கு முன்பு நடைபெற்ற மக்கள் சந்திப்பு பயணங்களில் மக்கள் எழுப்பிய கோரிக்கைகள் பற்றி பேரணிகளில் கலந்து கொண்ட கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் திபங்கர், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் திரேந்திரஜா, மத்திய கமிட்டி உறுப்பினர் நந்த்கிஷோர் பிரசாத் ஆகியோர் உரை நிகழ்த்தினர். இவர்களுடன் அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழக பொதுச் செயலாளர் மீனா திவாரி, சம்கலீன் லோக்யுத் ஆசிரியர் பிரிஜ் பிகாரி பாண்டே ஆகியோரும் கலந்து கொண்டனர். மாவட்ட தலைநகர்களில் நடைபெற்ற இந்தப் பேரணிகளில் நிலமற்ற ஏழைகள், தொழிலாளர்கள், பெண்கள், சிறுபான்மையினர் எனச் சமூகத்தின் பல பிரிவு மக்களும் கலந்து கொண்டனர். சில இடங்களில் அந்தப் பகுதி பிரச்சனைகளுக்காக போராடிவரும் சக்திகளும் இந்தப் பேரணிகளில் இணைந்து கொண்டனர்.

கரும்பு விவசாயிகள், அரசாங்க திட்டங்களால் வலுக்கட்டாயமாக வாழ்விடங்களிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டவர்கள், பயங்கரவாதிகள் என்று சொல்லி தாக்குதலுக்கு உள்ளாகும் இஸ்லாமிய சிறு பான்மையினர் எனப் பலரும் கலந்து கொண்டதை பார்த்த தோழர் திபங்கர் வேர்க்கால் மட்டத்தில் போராடும் அணிகள் ஒன்று சேர்ந்து 3ஆவது அணி உருவாவது வரவேற்கத்தக்கது என்று குறிப்பிட்டார்.

கட்சியின் மக்கள் சந்திப்பு இயக்கத்தின்போது 3000 கிராமசபை கூட்டங்கள் கூட்டபட்டு, 3 லட்சம் மக்கள் மத்தியில் உரையாடல் நடத்தப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளில் தங்கள் பிரச்சனையைக் கேட்க யாரும் வரவில்லை என்று மக்கள் ஆதங்கப்பட்டனர். பாஜகவின் மதவாத சதி, நிதிஷின் தோல்விகள், அரசாங்கங்களின் கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகள் ஆகியவை வரும் நாடாளுமன்றத் தேர்தலின் நிகழ்ச்சிநிரலாக இருக்கும். பீகார் முழுவதும் மின்சாரம் மற்றும் அரசாங்கத்தால் ஊக்குவிக்கப்படும் சாராயம் ஆகிய இரண்டும் முக்கியமான பிரச்சனைகளாகும்.

எல்லா குடியிருப்புகளுக்கும் மின்சாரம் என்று நிதிஷ் உத்தரவாதம் அளித்தார். ஆனால் மின்சாரத்திற்கு பதில் மக்களுக்கு அதிக மின் கட்டணம் கட்டச்சொல்லி தவறான ரசீதுகளே வந்தன. மின் உபயோகிப்பாளர்கள் கைது செய்யப்பட்டு  சிறையில் அடைக்கப்படுவதும் நடந்தது. குடிநீர், கழிப்பிடம் ஆகியவற்றுக்குப் பதிலாக கிராமம் தோறும் சாராயக் கடைகள் வந்தன. குடிசைகள் அனைத்திற்கும் மின் இணைப்பு கொடுக்கப்பட்டு, 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்பட வேண்டும், சுகாதாரமான குடிநீர் மற்றும் கழிப்பிட வசதி வேண்டும், அரசாங்கத்தால் நடத்தப்படும் சாராயக் கடைகள் மூடப்பட வேண்டும் என்பவையே மக்கள் கோரிக்கைகள். ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மிகப்பெரும் கொள்ளை நடைபெறுகிறது.

100 நாள் வேலையும் இல்லை, குறைந்தபட்ச கூலியும் இல்லை என்ற நிலைதான் நிலவுகிறது. மக்கள் பசியால் வாடும்போது உணவு பாதுகாப்பு சட்டத்தில் 75% மக்கள் பயன்பெறுவார்கள் என்று மத்திய அரசும் 85% என்று நிதிஷ் அரசும் கூறி வருகின்றன. வறுமைக் கோட்டு பட்டியலிலும் சதி நடக்கிறது. தலைக்கு மேல் கூரையே இல்லாதவர்களுக்கு இரண்டு மாடி வீடு இருப்பதாக கணக்கு சொல்கிறது. இதன் மூலம் பயன்கள் மறுக்கப்படுகின்றன. இதனால் சீற்ற முற்ற மக்கள், பேரணிகளில் பெரும் எண்ணிக்கையில் அணிதிரண்டு, வரும் தேர்தலை தலைவர்கள் அல்ல கொள்கைகள் தீர்மானிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.

பிப்ரவரி 12 அன்று சிவானில் நடைபெற்ற பேரணியில் 20,000க்கும் மேற்பட்டோர் அணி திரண்டனர். இங்கு நடைபெற்ற கூட்டத்தில் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ அமர்நாத் யாதவ், மாவட்டச் செயலாளர் இந்திரஜித், மாநிலக் குழு உறுப்பினர் நியாமுதீன் அன்சாரி ஆகியோர் உரையாற்றினர். புரட்சிகர இளைஞர் கழக தேசிய தலைவர் அமர்ஜித் குஷ்வாகா மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சத்ய தேவ்ராம் ஆகியோர் மீது பொய் குற்றம் சாட்டி தேர்தல் பிரச்சாரத்திற்கு தடை ஏற்படுத்தும் பாஜக முயற்சிக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

பல்வேறு பேரணிகளில் பேசிய தோழர் திபங்கர், கடும் விலை உயர்விலும், ஊழலிலும் நாடு சிக்கியிருக்கும் போது பிரதமர் யார் என் பதைப் பற்றி மட்டுமே பாஜக பேசி வருகிறது என்றும், மன்மோகன்சிங் பேசாமலேயே இருக்கிறார் என்றால் மோடி தன் புகழைப் பற்றியும், குஜராத் மாதிரி பற்றியும் அதிகமாக பேசி வருகிறார் என்றும் குறிப்பிட்டார். குஜராத்தில் ரூ.10.80 கூலி பெறும் ஒருவர் வறுமைக்கோட்டை கடந்தவர் என்று சொல்கிறார்கள் என்றும், காங்கிரசின் கை எப்போதுமே சாமான்ய மக்களோடு இருந்ததில்லை என்றும், 17 ஆண்டுகளாக பாஜகவோடு பதவியை பகிர்ந்து கொண்ட நிதிஷ், பிரதமர் பொறுப்புக்கு மோடிக்கு பதிலாக அத்வானியை நிறுத்த வேண்டும் என்று கூறி உறவை துண்டித்தார் என்றும், ஆனால் 2002 குஜராத் கலவரங்கள் நடைபெற்றபோது அமைதி  காத்தார் என்றும் குற்றம் சாட்டினார்.

டெல்லி தேர்தல் முடிவுகள், மக்கள் தங்கள் பிரச்சனைகளை முன்னெடுத்துச் செல்ல விழைகிறார்கள் என்பதையே காட்டுகிறது, அதனால் நாடாளுமன்றத் தேர்தல் ராகுலா - மோடியா என்ற தலைவர்களின் அடிப்படையில் இருக்காது, மாறாக கொள்கை, கோட்பாடுகள் அடிப்படையில் அமையும் என்றார். காங்கிரஸ், பாஜக அல்லாத 3ஆவது அணி நிச்சயமாக அவசியம் என்று குறிப்பிட்ட அவர், தற்போது 3ஆவது அணி அமைக்க முயற்சிக்கும் சக்திகள் நம்பகத்தன்மையற்றவை என்றும், அவர்கள் காங்கிரஸ் அல்லது பாஜகவின் பைக்குள் சென்றுவிடக் கூடியவை என்றும் குறிப்பிட்டார்.

இடதுசாரி சக்திகள் ஒரு மேடையில் திரள அழைப்பு விடுத்தார். சமஸ்டிபூரில் நடைபெற்ற பேரணியில் பக்மதி நீர்த்தேக்கத் திட்டத்தை கைவிட வேண்டும் என்றும், இது பற்றி மறு பரிசீலனை செய்ய நிபுணர்கள், செயல்வீரர்கள் கொண்ட கமிட்டி அமைக்கப்பட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அங்கு இன்சாப் மஞ்ச் என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்த, சிறுபான்மை மக்கள் 100 பேர் கலந்து கொண்ட கூட்டத்திலும் தோழர் திபங்கர் உரையாற்றினார்.

வால்மீகி நகர் நாடாளுமன்றத் தொகுதியில் நடைபெற்ற பேரணி சர்க்கரை ஆலை முதலாளிகள் மற்றும் அரசாங்கத்துக்கு எதிரான கரும்பு விவசாயிகள் கலந்து கொண்ட நிகழ்வாக அமைந்தது. கோபால்கஞ்ச் பேரணியில் அறிவுஜீவிகள், ஆசிரியர்கள், தொழிலாளர்கள், வழக்கறிஞர்கள் என பல பிரிவினர் பங்கேற்றனர். தர்பங்காவில் நடைபெற்ற பேரணியில் தோழர் திபங்கர் பேசும்போது லல்லுபிரசாத் கூட்டுச் சேர்ந்திருக்கிற கைதான் நாட்டின் மோசமான நிலைக்குக் காரணம் என்றும், பன்னாட்டு நிறுவனங்களும், கார்ப்பரேட் நிறுவனங்களும் காங்கிரசிடமிருந்து பெற்றதை விட இன்னும் அதிகமாகப் பெற வேண்டும் என்ற பேராசை காரணமாக மோடியை பிரதமர் நாற்காலியில் உட்கார வைக்க தயாராகி வருகிறார்கள் என்றும், இரண்டு கட்சிகளுக்கும் பொருளாதாரக் கொள்கை மற்றும் வெளியுறவுக் கொள்கையில் எவ்வித மாறுபாடும் இல்லை என்றும், வரும் தேர்தலில் போட்டி, கொள்கையை மாற்றுவதற்கானதாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.

பீகார் முதல்வரை அதிகாரத்துவ போக்கு கொண்டவர் என்று குறிப்பிட்டு மின்கட்டண உயர்வு, விலைஉயர்வு, சாராயம் ஆகியவற்றுக்கு எதிராக கிளர்ச்சிகள் கட்டமைக்க அழைப்பு விடுத்தார். கடும் மழையையும் பொருட்படுத்தாமல் புர்ணியா, விக்ரம் கஞ்ச் பேரணிகளில் மக்கள் பங்கெடுத்தனர். பீகாரில் முன்பு 4 அடுக்கு மின் கட்டண முறை இருந்தது. இப்போது எல்லாவற்றையும் இணைத்து கட்டண விகிதம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதனால் யூனிட்டுக்கு ரூ.2.85 கட்டிய ஒருவர் இப்போது ரூ.6.85 கட்ட வேண்டும். குறைந்தபட்ச கட்டணமாக ரூ.120க்குப் பதில் ரூ.980 செலுத்த வேண்டும். மீட்டர் இல்லாத உபயோகிப்பாளர் ரூ.160க்குப் பதில் ரூ.350 செலுத்த வேண்டும். அவர் எவ்வளவு பயன்படுத்துகிறார் என்பது முக்கியமல்ல. குறைந்தபட்ச கட்டணம் செலுத்தியாக வேண்டும். மின் கட்டண உயர்வு மற்றும் சாராயக் கடைகளுக்கு எதிராக பிப்ரவரி 23 அன்று மாநில பந்த் போராட்டத்துக்கு இகக(மாலெ) அழைப்பு விடுத்திருந்தது. பிப்ரவரி 16 அன்று அர்ராவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் 23 பந்த் அன்று பெரும்எண்ணிக்கையில் வீதிக்கு வருமாறு தோழர் திபங்கர் அறைகூவல் விடுத்தார். பிப்ரவரி 23 அன்று பந்த் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

Search