COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Saturday, March 1, 2014

தனியார்மய கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளை பின்னோக்கித் திருப்பாமல் ஊழலையும் விலைஉயர்வையும் கட்டுப்படுத்த முடியாது

ஜன்லோக்பால் மசோதாவை எதிர்ப்பதில் காங்கிரசும் பாஜகவும் ஒன்று சேர்ந்தன என்றால், கார்ப்பரேட் நிறுவனங்கள் தொடர்பான ஆம் ஆத்மி கட்சி தலைவர்களின் சமீபத்திய அறிவிப்புக்கள், நவதாராளவாத பொருளாதார கொள்கைகள் விசயத்தில், ஆம் ஆத்மி கட்சியையும் காங்கிரஸ், பாஜக முகாமுக்குள்தான் பொருத்துகின்றன.

உண்மையில், ஜன்லோக்பால் மசோதா தொடர்பான சச்சரவில், விவாதத்தின் மிக முக்கியமான அம்சம் கண்ணுக்கு தெரியாமல் போனது. நாடாளுமன்றம் நிறைவேற்றிய லோக்பால் சட்டமும், டில்லி அரசாங்கத்தின் ஜன்லோக்பால் முன்வரைவும், லோக்பால் சட்ட எல்லைகளுக்குள் கார்ப்பரேட் ஊழலை கொண்டு வருவது பற்றி மவுனம் சாதிக்கின்றன.

கடந்த இருபது ஆண்டுகளில் நடந்த மெகா ஊழல்கள், யாரையும் விட கார்ப்பரேட் நிறுவனங்களுக்கே கூடுதல் ஆதாயம் தந்திருக்கின்றன எனும்போது, அது விடுபட்டிருப்பது பளிச்செனத் தெரிகிறது.

எரிவாயு விலைநிர்ணயம் இதை மிகத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. எரிவாயு விலை நிர்ணய ஊழல், மிரட்டல், விருப்பப்படி எரிவாயு விலையை உயர்த்துவது ஆகியவை தொடர்பானது மட்டும் அல்ல. விலை மதிப்பற்ற இயற்கை வளங்களை தனியார் லாபத்துக்கும் கொள்ளைக்கும் ஒப்படைக்கும் கொள்கையில் இருந்துதான் இந்த ஊழல் உருவாகிறது. 2000ல், தேஜமு ஆட்சியில்தான், ரிலையன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையொப்பமானது.

விலைமதிப்பற்ற, கிருஷ்ணா கோதாவரி ஆற்றுப்படுகையில் உள்ள எரிவாயு இருப்புகள் ரிலையன்ஸ் வசமாயின. அப்போது முதல், தேஜமுவும் அய்முகூவும் மீண்டும் மீண்டும் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் சேர்ந்து சதிசெய்ததால், ரிலையன்ஸ் நிறுவனம் ஆதாயமடைந்தது; இந்த இயக்கப்போக்கில் அரசின் மான்யச் சுமை அதிகரித்தது; விவசாயிகள் கூடுதல் உரவிலை மற்றும் மின் கட்டணச் சுமையை சுமக்க வேண்டியதாயிற்று.

2009ல் கூட, அப்போதைய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, ரிலையன்ஸ் நிறுவனம் மட்டும் ஆதாயம் அடையும்விதம் வரிவிலக்கு அறிவிப்பதை, பாஜக தலைவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் இருப்பதை, முகேஷ் அம்பானி எப்படி உறுதி செய்தார் என்பதை ராடியா ஒலி நாடாக்கள் எடுத்துக்காட்டின. ஒத்துப்போகிற பெட்ரோலிய அமைச்சர்களை அரசு நியமிப்பதையும் ஓரளவு ஒத்துப்போகாதவர்கள் பதவி நீக்கம் செய்வதையும், அம்பானி எப்படி உறுதி செய்தார் என்பதையும் எரிவாயு விலை நிர்ணயம் தொடர்பான பிரச்சனையில் நாடாளுமன்றத்தில், எதிர்க்கட்சியின் ஒத்துப்போகிற தலைவர்கள் மட்டுமே பேசுவார்கள் என்பதையும் அந்த ஒலிநாடாக்கள் காட்டின.

விலை உயர்வும் ஊழலும் கார்ப்பரேட் ஆதரவு தனியார்மய கொள்கை ஆட்சிக்கு, ஒட்டிப்பிறந்த இரட்டைப் பிறவிகள் என்பதை எரிவாயு விலை நிர்ணய ஊழல் தெளிவாக விளக்குகிறது. இந்த கொள்கை ஆட்சியால் ஆளுகையும் ஜனநாயகமும் கார்ப்பரேட் நிறுவனங்களின் கிடுக்கிப்பிடிக்குள் உள்ளன. இயற்கை வளங்களை கொள்ளையடிக்க, பொதுவில் இருக்க வேண்டிய மக்கள் உரிமைகளான அடிப்படை சேவைகளில் இருந்து லாபம் பார்க்க, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சுதந்திரம் இருக்கிறது.

இந்தப் பின்னணியில், இந்த கொள்ளை கொள்கை ஆட்சியை நியாயப்படுத்தித்தான், மிக மோசமான ஊழல்கள் நடந்தேறின; மட்டுமின்றி, நாட்டின் வறியவர் வாழ்கிற வனப்பகுதிகளில் மிகவும் மோசமான அரசு ஒடுக்குமுறை நடந்தது. பலலட்சம் கோடிகள் மதிப்பில், வரி தள்ளுபடிகளும், விலை மதிப்பற்ற இயற்கை வளங்கள் ஒப்படைக்கப்படுவதும் மான்யங்கள் என்று சொல்லப்படுவதில்லை; ஆனால், வறியவர்களுக்கு அளிக்கப்படும் மானியங்கள் கருவூலத்தின் மீதான சுமை என்று சொல்லி, நவதாராளவாத ஆட்சி, உணவு ஒதுக்கீடு போன்ற உரிமைகளைக் கூட மறுக்க முனைகிறது.

இப்படி இருக்கும்போது,  மெகா ஊழல்களால் மிகப்பெரும் ஆதாயம் அடையும் கார்ப்பரேட் நிறுவனங்களை, லோக்பால் எல்லைகளுக்கு வெளியே எப்படி நிறுத்த முடியும்? விலை உயர்வு அல்லது ஊழலை உருவாக்கும்  கொள்கை ஆட்சியை பின்னோக்கித் திருப்பாமல், விலை உயர்வையோ, ஊழலையோ எப்படி தடுக்க முடியும்? இயற்கை வளங்கள் மீது, கார்ப்பரேட் நிறுவனங்கள் அல்லாமல், மக்கள் கட்டுப்பாட்டை உறுதி செய்யாமல் எப்படி ஜனநாயகத்தை உருவாக்க முடியும்?

காங்கிரசும் பாஜகவும், தாராளமயம் மற்றும் கார்ப்பரேட் கொள்ளை கொள்கை ஆட்சிபால் கொண்டுள்ள தங்கள் அசைக்க முடியாத விசுவாசத்தை மீண்டும் மீண்டும் நிகழ்த்திக் காட்டியுள்ளன. எரிவாயு விலை நிர்ணய வழக்கில் முகேஷ் அம்பானி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது போன்ற ஆம் ஆத்மி கட்சியின் அடையாள நடவடிக்கைகள், அவர்கள் உண்மையில் இந்த கொள்ளை ஆட்சிக்கு சவால் விடுப்பார்கள் என்ற நம்பிக்கையை உருவாக்கியுள்ளது.

ஆனால், பொருளாதாரக் கொள்கைகள் தொடர்பான ஆம் ஆத்மி கட்சி தலைவர்களின் அறிவிப்புகள், இந்த அடையாளவாதத்துடன் ஒத்துப்போகவில்லை. இந்திய வர்த்தக கூட்டமைப்பில் பேசிய அர்விந்த் கேஜ்ரிவால், அரசாங்கம் தொழிலில் தலையிட வேண்டிய அவசியம் இல்லை என்றும், தொழில் தனியாரிடம் விடப்பட வேண்டும் என்றும், வேலை வாய்ப்பு உருவாக்குவது அரசாங்கத்தின் வேலை அல்ல, தொழில் நிறுவனங்களின் வேலை என்றும், பாதுகாப்பு, சட்டத்தின் ஆட்சி, உள்கட்டுமானம் மற்றும் ஊழலற்ற அரசாளுகை ஆகியவற்றை தருவதுடன் அரசாங்கம் நின்று கொள்ள வேண்டும் என்றும் பிரகடனம் செய்துள்ளார். இது கலப்படமில்லாத நவதாராளவாத கோட்பாடு.

‘அரசாங்கம் தொழிலில் தலையிட வேண்டிய அவசியம் இல்லை’ என்றால், நிலம், கனிம வளம், நீர், கல்வி, மருத்துவம், பிற இயற்கை வளங்கள் மற்றும் பொது சேவைகள் ஏன் ‘தொழிலாக’ இருக்க வேண்டும்? மேலும், உலகம் முழுவதும், அரசாங்கங்களின் முழுமையான ஆசிகள், செயலூக்கமான ஆதரவு ஆகியவற்றுடன்தான் முதலாளித்துவத்தார் செயல்படுகின்றனர்.

மும்பையில் நடந்த முதலீட்டாளர் மாநாட்டிலும் ஒரு தொலைக்காட்சி அலைவரிசையிலும் பேசிய யோகேந்திர யாதவ், ‘உணவு மானியங்கள் தரப்படக் கூடாது. சம்பந்தப்பட்டவருக்கு நேரடியாக உணவு தருவது வறியவர்களுக்கு சேவை செய்வதில், முற்றிலும் திறனற்ற கூடுதல் செலவாகிற முறை. வறியவர்களுக்கு சேவை செய்யும் வழி வறுமையை ஒழிப்பது அல்ல. வளர்ச்சியை கட்டவிழ்த்து விடுவது, உற்பத்தியை நல்ல தொழில் நடைமுறைகளை ஊக்கப்படுத்துவது, ஊழல் செய்பவர்களை பிடிப்பது ஆகியவற்றின் மூலம் ஒவ்வொருவரையும் உயர்த்துவதுதான் சமூக நீதி’ என்றார்.

வறுமை  திறமை குறைவால் ஏற்படுகிறது, ‘வளர்ச்சியை’ கட்டவிழ்த்துவிடுவது அல்லது ஊழலை தடுப்பது வறுமைக்கு தீர்வு, உணவு வழங்குவதும் பிற மறுவிநியோக நீதி வடிவங்களும் ‘விலை உயர்ந்தவை’ அல்லது ‘திறனற்றவை’ என்று சொல்வதும் தரமான நவதாராளவாத கோட்பாடு.

மன்மோகன், மோடி இருவரும் இதற்கு ஒப்புக்கொள்வார்கள். மோடி உண்மையில் மான்யங்களை திறமைகளுக்கு எதிராக நிறுத்தியுள்ளார்; மான்யங்கள் மக்களை சார்புத்தன்மை கொண்டவர்களாக வைத்திருக்கிறது என்றும், மக்கள் தங்களுக்கு தாங்களே உதவும் விதம் அவர்களுக்கு திறன் வளர்ப்பை உறுதிசெய்ய அவர் கடப்பாடு கொண்டுள்ளதாகவும் சொல்கிறார்.

தனது கட்சி முதலாளித்துவத்துக்கு எதிரானது அல்லது என்றும் கூடாநட்பு முதலாளித்துவத்துக்குத்தான் எதிரானது என்றும் கேஜ்ரிவால் சொல்கிறார். இது கபடத்தன்மை கொண்ட கூற்று. இந்தியாவில் உள்ள கூடாநட்பு முதலாளித்துவம் தாராளமய யுகத்தின் படைப்பு. இயற்கை வளங்களின் புராதன குவிப்புக்கு கார்ப்பரேட்டுகளுக்கு உதவும் நிறுவனங்களாக அரசாங்கங்களை பணித்திருக்கிற கொள்கை ஆட்சியின் விளைபொருள்.

‘சுரங்கங்கள், கனிம வளங்கள், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு, நிலம், அலைக்கற்றை மற்றும் பிற இயற்கை வளங்கள் பொதுத்துறையிடம் இருக்க வேண்டும், விமான நிலையங்கள் மின்உற்பத்தியும் தேசியமயமாக்கப்பட வேண்டும்’ என்று ஆம் ஆத்மி கட்சி தலைவர் பிரஷாந்த் பூஷண் சொன்னார்; அவர் சொன்னதில் இருந்து, கட்சியின் நிலைப்பாட்டை விலக்கி வைக்கிறார் கேஜ்ரிவால். ‘இயற்கை வளங்களையும் சேவைகளையும் தேசியமயமாக்குவது என்பது கேலிக்குரியது’ என்று யோகேந்திர யாதவும் சொல்கிறார். ‘தனியார் ஏகபோகங்களைத்தான்’ ஆம் ஆத்மி கட்சி எதிர்க்கிறது என்று அவர் சொல்கிறார்.

தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் சேர்ந்து இருப்பது மற்றும் போட்டியிடுவது என்ற மாதிரி, அரசு தனியார் கூட்டு என்ற மாதிரி, அரசு செலவில் தனியாரை முன்னேற்றும் முகமூடிதான். பொது வளங்களும் சேவைகளும் தனியார் லாபம் நாடுபவர்களிடம் ஒப்படைக்கப்படக் கூடாது; நிலம், நீர், வனங்கள், கனிமங்கள் போன்ற பொது வளங்கள் மக்கள் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.

விலை உயர்வு, ஊழல், அரசு ஒடுக்குமுறை மற்றும் ஜனநாயகத்தின் மீதான் கார்ப்பரேட் கிடுக்கிப்பிடி ஆகியவற்றின் வேர்கள், தாராளமயம் மற்றும் கார்ப்பரேட் கொள்ளை கொள்கை ஆட்சியில்தான் உள்ளன.

2014 தேர்தல்கள் தனிநபர்கள் தொடர்பானவையாக அல்லாமல், கொள்கைகள் பற்றியதாக இருக்க வேண்டும்; ஜனநாயக சக்திகளின் முதல் முன்னுரிமை கொள்ளை கொள்கை ஆட்சியை பின்னோக்கித் திருப்புவது பற்றியதாக இருக்க வேண்டும்.

Search