COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Saturday, March 1, 2014

‘வரி’யில்லா நிதிநிலை அறிக்கை

2014 - 2015 நிதிநிலை அறிக்கை குழந்தைகளுக்கு தரப்படும் பஞ்சு மிட்டாய் அல்ல, தமிழக மக்களுக்கு தலை வாழை இலையில் இடப்பட்டுள்ள விருந்து என்று நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது இறுதி உரையில் சொன்னார். அந்த விருந்தில் பரிமாறப்பட்டுள்ள உணவு வகைகளின் எண்ணிக்கை எப்படியிருந்தாலும் அவை சாமான்ய மக்களின் பசி தீர்க்க பரிமாறப்பட்டவை அல்ல. சாமான்ய மக்கள் பசி தீர்க்கத்தான் அந்த விருந்து என்று சொல்பவர்கள் அப்பட்டமாக பொய் சொல்கிறார்கள். பெயரளவில் அப்படி தோற்றம் தரும் சில வகைகளின் அளவும் சாமான்ய மக்களின் வயிற்றை நிரப்பாது என்பதை நிதிநிலை அறிக்கை சந்தேகத்துக்கு இடமின்றி முன்வைக்கிறது.

2011 மே முதல் ரூ.26,625 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு, ரூ.10,660 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது என்றும் 10,022 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது என்றும் பிப்ரவரி 13 2014 அன்று சமர்ப்பிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கை சொல்கிறது. பிப்ரவரி 21 அன்று சிஅய்அய், ஃபிக்கி தலைவர்கள் முன்னிலையில் கையொப்பமிடப்பட்ட ரூ.5081 கோடி மதிப்பிலான 16 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 16,282 பேருக்கு வேலை வாய்ப்புக்கள் உருவாகும் என்று சொன்னபோது, கடந்த இரண்டரை ஆண்டுகளில் ரூ.31,706 கோடி அளவுக்கு செய்து கொள்ளப்பட்ட 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 1,62,667 பேருக்கு வேலை வாய்ப்புக்கள் ஏற்படுத்தித் தர நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் ஜெயலலிதா சொன்னார்.

பிப்ரவரி 21 அன்றைய தனது அறிவிப்பில் ஜெயலலிதா, அன்று கையொப்பமிடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மதிப்பையும் நிதிநிலை அறிக்கையில் நிதியமைச்சர் சொல்கிற உத்தேச முதலீட்டு மதிப்பையும் சேர்த்துத்தான், இரண்டரை ஆண்டு காலத்தில் ஈர்க்கப்படும் முதலீட்டின் மதிப்பைச் சொன்னார். ஆனால், வேலை வாய்ப்பு பற்றி சொல்லும்போது, பிப்ரவரி 21 அன்று போடப்பட்ட ரூ.5,081 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களால் மட்டும் 16,282 பேருக்கு வேலை வாய்ப்பு என்றார். ஆனால், யதார்த்தத்தில் ரூ.10,660 கோடி முதலீட்டில் 10,022 பேருக்கு மட்டும்தான் வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. இனிவரும் நாட்களில் ரூ.5,081 கோடியில் மூன்று மடங்கு கூடுதலாக எப்படி வேலை வாய்ப்பு உருவாகும் என்றும், ஜெயலலிதா அறிவித்துள்ளபடி இன்னும் 1,36,363 வேலை வாய்ப்புக்கள் எப்படி உருவாக்கப்படும் என்றும் ஜெயலலிதா விளக்க வேண்டும்.

‘துடிப்பான வளர்ச்சி பெறுகிற பொருளாதாரத்தின் நிச்சயமான அறிகுறி அதிகரிக்கிற வேலைவாய்ப்பு. எனது அரசாங்கம் எடுத்த ஆக்க பூர்வமான நடவடிக்கைகளின் விளைவால் 2011 மார்ச்சில் 84 லட்சம் என்று இருந்த வருங்கால வைப்பு நிதிய உறுப்பினர் எண்ணிக்கை, 2013 டிசம்பரில் 1.61 கோடியாக உயர்ந்துள்ளது’ என்று பிப்ரவரி 21 அன்றைய உரையில் ஜெயலலிதா சொல்கிறார். (இந்த உரை தமிழக அரசின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது). இடைப்பட்ட கால கட்டத்திலான ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் வேலை வாய்ப்பு அதிகரித்ததால்தான் இந்த உயர்வு என்று ஜெயலலிதா சொல்கிறார் என இதை வியாக்கியானப்படுத்த முடியும்.

அதாவது, 2011 மார்ச்சுக்குப் பிறகு வருங்கால வைப்பு நிதியத்தில் சேர்ந்ததாக அவர் சொல்லும் 77 லட்சம் பேர் அவரது ஆட்சியில் உருவான வேலை வாய்ப்புக்களால் சேர்ந்துள்ளனர் என்கிறார். வருங்கால வைப்பு நிதியத்தில் சேர வேண்டுமானால், ஒரு நிறுவனத்தில் 20 பேருக்கு மேல் வேலை செய்ய வேண்டும். 100 பேர் வேலை செய்யும் நிறுவனங்கள் என்றால் கூட, ஜெயலலிதா சொல்கிற விவரங்களுக்கு தமிழ்நாட்டில் 77,000 நிறுவனங்கள் இரண்டரை ஆண்டுகளில் உருவாகியிருக்க வேண்டும். உலகம் முழுவதும் வேலையில்லா வளர்ச்சி, உலகமயக் கெடுவிளைவு என்று முதலாளித்துவ பொருளாதார வல்லுநர்கள், சர்வதேச தொழிலாளர் அமைப்பு போன்ற நிறுவனங்கள் சொல்லும்போது தமிழ்நாட்டில் மட்டும் இரண்டரை ஆண்டு காலத்தில் 77 லட்சம் வேலை வாய்ப்பு எப்படி உருவாகும்? இது எந்த பொருளாதார தர்க்கத்துக்கும் பொருந்தவில்லை.

தமிழ்நாட்டின் வேலை வாய்ப்பகங்களில் வேலைக்காக பதிவு செய்து விட்டு காத்திருப்பவர் எண்ணிக்கை 84,38,439. 2011 மே முதல் அரசு நிறுவனங்களில் 1,93,508 பேர் பணிகளில் அமர்த்தப்பட்டுள்ளதாக 2013 - 2014 நிதியறிக்கை சொன்னது. இதையும் இப்போது ஜெயலலிதா சொல்லியுள்ள வருங்கால வைப்பு நிதிய உறுப்பினர் எண்ணிக்கையும் சேர்த்துப் பார்த்தால், வேலை வாய்ப்பகங்களில் பதிவு செய்துள்ள 78,93,508 பேருக்கு வேலை கிடைத்துவிட்டது என்று பொருள்.

அப்படியானால், தமிழ்நாட்டில் இன்றும் 5,44,931 பேருக்குத்தான் வேலை தர வேண்டும் என்று ஜெயலலிதா சொல்கிறாரா? 2013 - 2014 மற்றும் 2014 - 2015 நிதிநிலை அறிக்கைகள் சொல்கிற வேலை வாய்ப்பு விவரங்களை சேர்த்துப் பார்த்தால் கூட, ஜெயலலிதா சொல்கிற வருங்கால வைப்பு நிதியத்தில் சேர்ந்தவர்கள் கணக்குக்கு பக்கத்தில் கூட வரவில்லை. எந்த விவரம் உண்மை? எந்த அளவுக்கு உண்மை?  பொய்கள்... மாபெரும் பொய்கள்... புள்ளிவிவரங்கள் என்பதுதான் உண்மை. யாரை ஏமாற்ற இந்த புள்ளிவிவரங்கள்?

இது தவிர, தொழிற் கொள்கை 2014 அமலானால் 20 லட்சம் வேலை வாய்ப்புக்கள், புதிய வாகனங்கள் மற்றும் வாகன உதிரி பாகங்கள் கொள்கையால் 5 லட்சம் வேலை வாய்ப்புக்கள் உருவாகும் என ஜெயலலிதா சொல்கிறார். அவை எந்தவிதமான வேலை வாய்ப்புக்களாக இருக்கும்? தற்போது சொல்லப்படும் வளர்ச்சியில் நிரந்தரமற்ற தொழிலாளர்கள் தான் மிகப் பெரிய பிரிவாக வளர்ந்து நிற்கின்றனர். 20 லட்சமும் 5 லட்சமும், 1,62,667 போல் தான் இருக்கும். 77 லட்சம் போல் புரிந்து கொள்ள முடியாததாகவும் இருக்கும்.

2014 - 2015 நிதிநிலை அறிக்கையில் தொழிலாளர் நலன் என்ற தலைப்பு கொண்ட பத்தியில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு வாரியங்கள் மூலம் கடந்த மூன்று ஆண்டுகளில் 12,07,731 பயனாளிகளுக்கு ரூ.284.45 கோடி அளவுக்கு நலப்பயன்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஒரு செய்தி மட்டும் சொல்லப்படுகிறது. தொழிலாளர் நலன் என்றால் அவ்வளவுதானா? அவர்கள் உரிமைகள், நலன்கள், நல்வாழ்வு, கவுரவம் ஆகியவற்றுக்கும் தமிழகத்தின் அஇஅதிமுக ஆட்சிக்கும் தூரம் மிகமிக அதிகம் என்பதை இது சொல்கிறதல்லவா? மட்டுமின்றி, அமைப்புசாரா தொழிலாளர்கள் என்று தமிழக அரசின் வாரியங்களில் பதிவு செய்திருக்கிற மிகச்சிறு பகுதி தொழிலாளர்கள் தவிர எங்கேயும் எப்போதும் உழைப்பில் ஈடுபடுகிற, ஆனால், அரசு நிறுவனம் எதிலும் தொழிலாளர் என்று பதிவு செய்யும் வழியில்லாத பெரும்பான்மை தொழிலாளர்களை தொழிலாளர்கள் என்றே அஇஅதிமுக கணக்கில் கொள்வதில்லை என்பதும் அவர்களுக்கான அரசு அல்ல இது என்பதும் தெளிவாகி விடுகிறதல்லவா? மட்டுமின்றி, கட்டுமான தொழிலாளர் வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு பயன்கள் கிடைப் பதில், முட்டுக்கட்டைகள் பல போடப்பட்டுள்ளபோது, கட்டுமான தொழிலாளர் வாரிய நிதியில் இருந்து ரூ.50 கோடி, அரசின் தொழில் நுட்ப பயிற்சி நிறுவனங்களை நவீனப்படுத்த செலவிடப்படும் என்று அறிக்கை சொல்கிறது.

 வாரிய நலப்பயன் தரப்பட்டுள்ளதாக அறிக்கை சொல்லும் விவரத்தையும் கூட்டிக்கழித்துப் பார்த்தால், மூன்று ஆண்டுகளில் சராசரியாக ஒரு தொழிலாளிக்கு ரூ.2,356 அளவுக்கு நலப்பயன் தரப்பட்டுள்ளது. இன்னும் சுருக்கிக் கணக்குப்போட்டால் ஆண்டுக்கு ரூ.800க்கும் குறைவு. ஜெயலலிதா வேண்டுமானால் ரூ.1 சம்பளத்தில் சகல வசதிகளுடன் வாழ முடியும். இந்த ரூ.800 தொழிலாளியின் எந்த நலனை உறுதிப்படுத்தும்?

வேளாண் தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ளதாக அறிக்கை சொல்கிறது. அதைச் சமாளிக்கவும் வேளாண் பணிகளுக்கான செலவைக் குறைக்கவும் வேளாண் எந்திரமயமாக்கல் திட்டத்துக்கு ரூ.100 கோடி ஒதுக்கப்படுகிறது. விவசாயத் தொழிலாளர்கள் வேலை கிடைக்காமல் அல்லலுறுவது ஜெயலலிதாவுக்கும் பன்னீர் செல்வத்துக்கும் தெரியவில்லை என்றால் அவர்கள் ஆளத் தகுதியற்றவர்கள் என்று பொருள். இருக்கிற வேலையையும் பறிப்பதற்கு இந்தத் திட்டம் பயன்படுத்தப்படும்.

ஜெயலலிதா நடத்துகிற கல்விப் புரட்சியில் 2014 - 2015 நிதியாண்டில் 5.5 லட்சம் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி தர ரூ.1100 கோடி ஒதுக்கப்படுகிறது. இதன்படி ஒரு மடிக்கணினி விலை ரூ.20,000 என்றாகிறது.

 அரசு தரும் மடிக்கணினிகளின் கட்டமைப்பு கூறுகள் கொண்ட ஒரு மடிக்கணினி சந்தையில் ரூ.6700க்கு கிடைக்கிறது. ரூ.8000 கொடுத்தால் கூட இதைவிட சிறந்த உட்கூறுகள் கொண்ட கணினியை சந்தையில் வாங்க முடியும். ஒரு கணக்குக்காக, அரசு ஒரு மடிக்கணினி வாங்க அதிகபட்சம் ரூ.7000 செலவிடுகிறது என்றால் கூட, ஒரு மடிக்கணினிக்கு மீதம் ரூ.13,000, 5.5 லட்சம் மடிக்கணினிகளுக்கு மீதம் ரூ.715 கோடி எங்கே, யாருக்குப் போகிறது?

எம்ஜிஆரின் புரட்சிகரத் திட்டங்களில் ஒன்றாக தமிழக மக்கள் மத்தியில் சொல்லப்படுவது சத்துணவுத் திட்டம். இதில் அய்ந்து முதல் பதினைந்து வயதுக்கு உட்பட்ட 53.52 லட்சம் குழந்தைகள் பயன் பெறுகின்றனர். இதற்கான ஒதுக்கீடு ரூ.1412.88 கோடி. இது ஒரு குழந்தைக்கு ஆண்டுக்கு ரூ.2,640. விற்கிற விலையில் ஒரு குழந்தைக்கு ரூ.2,640ல், நாளொன்றுக்கு ரூ.10 என ஒரு வருடத்துக்கு சத்துணவு தர முடியும் என்று ஜெயலலிதா சொல்கிறார்.
 ஓ.பன்னீர்செல்வம் செய்கிறார். சத்துணவுத் திட்டத்தில்தான் உணவு கிடைக்கும் என்ற நிலையில் உள்ள குழந்தைகளுக்கு, அந்த ஒரு வேளை உணவு தவிர, மற்ற இரண்டு வேளைகளில், சத்துணவு இருக்கட்டும், சாதாரண உணவுக்கு அநேகமாக வழியிருக்காது. தமிழகத்தின் எதிர் காலம், பெருமளவு பட்டினியில் வாடுகிறது.

2014 - 2015ல் மின்மானியமான ரூ.5,400 கோடி ஒதுக்கப்படுகிறது என்று அறிக்கை சொல்கிறது. ஜெயலலிதா ஆட்சி அமைத்தவுடனேயே, நட்டம், செலவு என காரணங்கள் சொல்லப்பட்டு மக்கள் தலை மீது மின்கட்டண  உயர்வுச் சுமை ஏற்றப்பட்டது. தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து உற்பத்திச் செலவை விட கூடுதல் விலைக்கு மின்சாரத்தை வாங்குவதால் ஏற்படும் செலவுதான் மாநில மின்விநியோகம் பொறுத்தவரை பெரிய செலவு. 2001 முதல் மின்உற்பத்தி செய்யும் பிபிஎன் மின்உற்பத்தி நிறுவனம் பத்தாண்டுகளுக்கும் மேலாக, அதாவது கடந்த ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் இருந்து, தமிழக மின்வாரியத்துக்கு மின்சாரம் அளிப்பதாக தனது இணையதளத்தில் சொல்கிறது. ஓபிஜி பவர் வென்ச்சர்ஸ் என்ற மின்உற்பத்தி நிறுவனம் 2014, ஜனவரி 28 அன்று தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துடன் 15 ஆண்டுகளுக்கான ஒப்பந்தம் போட்டுள்ளது.

 2014 - 2015ல் தூத்துக்குடியிலும், கடலூரிலும் உள்ள இரண்டு மின்உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து மின்சாரம் வாங்கப்படும் என்றும், மேலும் ஒரிசா, சட்டிஸ்கர், ஜார்க்கண்ட் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் உள்ள மின்உற்பத்தி நிறுவனங்களுடன் மின்சாரம் வாங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாகவும் பிப்ரவரி 3 அன்று ஆளுநர் உரைக்கான தனது பதிலுரையில் ஜெயலலிதா சொன்னார். இப்போது, நிதிநிலை அறிக்கையில் மின்சாரத்துக்காக ஒதுக்கப்படுகிற ரூ.5,400 கோடியில் தனியார் மின்உற்பத்தி நிறுவனங்கள் தான் பெரிதும் பயன் பெறுமே தவிர தமிழக மக்கள் அல்ல.

2013 - 2014  நிதிநிலை அறிக்கையில் கூவம் நதியை சுத்தப்படுத்த நிதி கோர உத்தேசிக்கப் பட்டதாகச் சொல்லப்பட்டது. இப்போது அந்த உத்தேசம் முடிவாகியுள்ளது. தமிழக அரசு ரூ.3833 கோடி கடன் வாங்கப் போகிறது. அரசு ஒதுக்குகிறது என்று புரிந்துகொள்ளக் கூடாது. இந்த நிதியில் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு ரூ.2077.29 கோடி செலவிடப்படும் என்று சொல்லப்படுகிறது. அப்படியானால், எத்தனை குடும்பங்கள் பாதிக்கப்படப் போகின்றன? அறிக்கை ஏதும் சொல்லவில்லை.

தொழில் வளர்ச்சிக்கு 53,000 ஏக்கர் நிலம் மேம்படுத்தப்படும் என்று 2014 - 2015 நிதிநிலை அறிக்கை சொல்கிறது. சென்ற ஆண்டு 25000 ஏக்கர் நிலம் கொண்ட நில வங்கி உருவாக்கப்படும் என்று சொல்லப்பட்டது. இரண்டு ஆண்டுகளாக சொல்லப்படும் இந்த மேம்பாட்டிலும் உருவாக்கத்திலும் எவ்வளவு பேர் நிலமிழப்பார்கள்? அவர்கள் மறுவாழ்வுக்கு என்ன திட்டம்? அறிக்கையில் அது பற்றிய பார்வை இருப்பதாகவே தெரியவில்லை.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன்களுக்கு ரூ.7603 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தற்போதைய நிதிநிலை அறிக்கை சொல்கிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள 1342 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர் விடுதிகளில் 1,00,021 மாணவர்கள் தங்கி கல்வி பயில்கின்றனர் என்றும் அந்த விடுதிகள் பராமரிப்பு மற்றும் உணவுச் செலவுக்காக வருகிற நிதியாண்டுக்கு ரூ.107.25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கை சொல்கிறது. அதன்படி ஒரு மாணவருக்கு மாதமொன்றுக்கு உணவு மற்றும் இருப்பிட பராமரிப்புக்கு ரூ.900 செலவிடப்படுகிறது.

இது கவுரவமானதாக இருக்க நிச்சயம் வாய்ப்பில்லை. தமிழக அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும், தங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு மாதச் செலவுக்கு ரூ.900 தரலாம் என்று யோசிக்கவாவது முடியுமா? அது அவர்களைப் பொறுத்தவரை நொடியில் பறந்து விடும் தொகையல்லவா? ஆதிதிராவிட பழங்குடியின மாணவர்களை எவ்வளவு மோசமான நிலையில் தமிழக அரசு வைத்திருக்கிறது என்பதற்கு இந்த ஒதுக்கீடு சான்று சொல்கிறது.

 சமூக நீதி வீராங்கனை என்று பட்டம் சூட்டப்பட்டவர் ஆட்சியில் சமூகநீதிக்கு இடமில்லை எனத் தெளிவாகத் தெரிகிறது. குறைந்தபட்சம், தலித் மற்றும் பழங்குடியின மாணவர் கல்வி உதவித் தொகை தொடர்பான அரசாணை 92அய் அமலாக்கத் தேவையான கூடுதல் நிதியை ஒதுக்கவாவது தமிழக அரசு முன்வர வேண்டும். அரசாணை 92ம் மத்திய அரசின் திட்டத்தை அமல்படுத்த போடப்பட்டதுதானே தவிர, தமிழக அரசின் திட்டம் அல்ல.

சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனையில் நோயாளிகளின் உறவினர்கள் பயன்படுத்துவதற்காக இருக்கும் கழிவறைகளில் தண்ணீர் வருவதில்லை. முறையாக பராமரிப்பு செய்யப்படுவதில்லை. தமிழ்நாட்டின் லட்சக்கணக்கான வறிய மக்கள் உயிர் காக்கும் மருத்துவத்துக்காக நம்பியிருக்கும் பொது மருத்துவமனை இந்த நிலையில் இருக்கும்போது, மருத்துவ காப்பீட்டு திட்டத்துக்கு ஒதுக்கப்படவுள்ள ரூ.757.50 கோடியில் பெரும்பகுதி தனியார் மருத்துவமனைகளுக்குச் செல்லும்.

சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் உள்ளிட்ட அரசு சேவைகள் வழங்க கிராமப் புறங்களில், 2100க்கும் மேற்பட்ட பொது சேவை மய்யங்கள் இப்போது இயங்கி வருகின்றன என்றும் இன்னும் 2000 பொது சேவை மய்யங்கள் தனியார் பொது பங்கேற்பில் அமைக்கப்படும் என்றும் சென்னையில்,  200 பொது சேவை மய்யங்கள் அமைக்கப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது. இதற்கான நிதி ஒதுக்கீடு என்ன என்று  சொல்லப்படவில்லை. தனியாருக்குப் போகப்போகும் தங்கள் வரிப் பணம் எவ்வளவு என்று தெரிந்து கொள்ள தமிழக மக்களுக்கு உரிமை இல்லையா?

சென்னையில் வெளிவட்ட சாலை அமைக்க ரூ.1,075 கோடி ஒதுக்கப்படுகிறது. இந்தத் திட்டம் அரசு தனியார் பங்கேற்பில் நடக்கும். இந்தத் திட்டத்திலும் மக்கள் வரிப் பணத்தை தனியார் கொண்டு போவார்கள்.

மதுபான உற்பத்தி, விற்பனை வரி மூலம் 2013 - 2014ல் ரூ.23,401 கோடி வருமானம் இருந்ததாகவும் வரும் ஆண்டில் அது ரூ.26,295 கோடியாக உயரும் என்றும் நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்படாத முக்கியமான செய்தியை தமிழக அரசின் நிதிச்செயலர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தமிழக மக்கள் இன்னும் அதிகமாகக் குடிப்பார்கள். இன்னும் அதிகமாக துன்புறுவார்கள். செத்துப் போவார்கள்.

நிதிநிலை அறிக்கையில் நல்ல விசயம் ஏதும் உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா என்று கேட்பவர்களுக்கு நிச்சயம் இல்லை என்று பதில் சொல்ல முடியும். ஏனென்றால் அப்படி எதுவும் அதில் இல்லை. உழவர் பாதுகாப்புத் திட்டம் உள்ளிட்ட சமூக நலத்திட்டங்களில், 31.12.2013 அன்றைய நிலவரப்படி உள்ள 36.41 லட்சம் பயனாளிகளுக்கு வரும் நிதியாண்டில் ரூ.4200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டங்களில் உள்ள பயனாளிகள் மாதமொன்றுக்கு ரூ.1000 பெறுவார்கள். இதுவும், விலையில்லா அரிசியும் ஜெயலலிதாவின் சாதனை என்று யாராவது சொன்னார்கள் என்றாலும் இல்லை என்று நிச்சயமாக சொல்ல முடியும். இந்த இரண்டு திட்டங்களுக்கும் மொத்த செலவினத்தில் ஒதுக்கப்பட்டுள்ள நிதி 10%க்கும் குறைவு. இந்தத் திட்டங்களும் மக்கள் வரிப்பணத்தில் நிறைவேற்றப்படுபவையேயன்றி அதிமுககாரர்களின் சொந்தப் பணத்தில் நிறைவேற்றப்படுபவை அல்ல. ஆடுகளும் மாடுகளும் பயனாளிகளுக்கு ஆதாரங்கள் அல்ல.

இவை தவிர, மத்திய அரசு எதிர்ப்புப் போராளியாக எப்போதும் தன்னை முன்னிறுத்திக் கொள்ளப் பார்க்கும் ஜெயலலிதாவின் அறிவுரை, ஆசி ஆகியவற்றுடன் சமர்ப்பிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கை, மத்திய அரசு திட்டங்கள், அவற்றுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஆகியவற்றையும் சேர்த்து தமிழ்நாட்டின் திட்டங்களாக, நிதி ஒதுக்கீடாக முன்வைக்கிறது. நபார்டு, உலக வங்கி, ஜப்பான் கூட்டுறவு வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி, ஜெர்மனியைச் சேர்ந்த வங்கி என கடன் வாங்கி நிறைவேற்றப் போகும் திட்டங்களையும் சாதனை செய்யப் போகும் திட்டங்களாக அறிக்கை சொல்கிறது.

   மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ.9,09,861.75 கோடி இருக்கும் என நிதிநிலை அறிக்கை கணிக்கிறது. இதை உருவாக்கப் போகும் உழைக்கும் மக்களுக்கு தங்குதடை யற்ற சாராய ஓட்டத்தைத் தவிர வேறெந்த வளர்ச்சியையும் ஏற்படுத்தித் தர தமிழக அரசு திட்டமிடவில்லை.

  81 பக்க நிதிநிலை அறிக்கையில் ஒவ்வொரு பிரிவினர் பெயரிலும் தலைப்பிட்டு சில வரிகள் சொல்லப்பட்டுள்ளனவே தவிர, அந்த வரிகளில் உள்ளடக்கம் என்று ஏதும் இல்லை. அவை வெற்று வரிகள். அந்த வரிகளால் தமிழ்நாட்டின் வறிய மக்கள் வாழ்வில் எந்த அமைதியும் வளர்ச்சியும் வளமையும் ஏற்படப் போவதில்லை. ‘வரி’யில்லா நிதிநிலை அறிக்கை என்று சொல்லி அஇஅதிமுககாரர்களும் அவர்கள் ஆதரவாளர்களும் இதை ஒப்புக்கொள்கிறார்கள்.

Search