COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Monday, March 31, 2014

பாரதீய ஜனதா கட்சியும் கழகங்களும், கழகங்களும் சந்தர்ப்பவாத இடதுகளும்

தமிழ்நாட்டில் 2014 நாடாளுமன்றத் தேர்தல்களில் வெளிப்படையாக எந்த எதிர்ப்பு அலையையும் காண முடியவில்லை. ஜெயலலிதா பிரச்சாரத்தில் இருந்த அந்த ஆரம்ப வேகம் தணிந்து சுருதி குறைந்து வருகிறது.

மு.க.ஸ்டாலின் முனைப்பான பிரச்சாரம் செய்வதாக, ஊடக கவனம் பெற்றுள்ளார். கருணாநிதி, காங்கிரசை மன்னிக்கவும் அதன் தவறுகளை மறுக்கவும் தயார் என்கிறார். தமிழ் நாட்டு மக்கள் காங்கிரசின் மெகா ஊழல்களையும் விலை உயர்வையும் பெரும் தொழில் குழும ஆதரவு மக்கள் விரோத ஆட்சியையும், அதற்குத் துணை நின்ற கூட்டாளிகளையும் மறக்கவும் மன்னிக்கவும் மாட்டார்கள் என்று கருணாநிதிக்கு தமிழிலோ இந்தியிலோ சொல்லப்பட வேண்டும். (கருணாநிதி இந்தி பாட்டு பாடுகிறார்; இந்தி சுவரொட்டி ஒட்ட வைக்கிறார்).

தமிழ்நாட்டில், பாஜக தேமுதிக பாமக மதிமுக அணியை 3ஆவது அணி எனச் சொல்ல முடியுமா என்பது சந்தேகமே. ஏனெனில் தேர்தல் முடிந்த பிறகு, ஜெயலலிதாவோ கருணாநிதியோ, நரேந்திர மோடியோடு சேர மாட்டார்கள் எனச் சொல்ல முடியாது.


தமிழ்நாட்டில் பாஜக வருகையும் வாய்ப்பும்

சமூக நீதி, பகுத்தறிவு, கடவுள் மறுப்பு, பார்ப்பனீய எதிர்ப்பு போன்ற விஷயங்களில், இந்தியாவிலேயே முதன்மையான வரலாறு கொண்ட தமிழ்நாட்டில், இன்று, இரு பெரும் தேசிய கட்சிகளில், மதச்சார்பற்றது என பல நேரங்களில் அழைக்கப்படும் காங்கிரஸ் சீந்து வாரில்லாமல் போயிருப்பதும், பாஜகவின் மவுசு கூடியிருப்பதும் விசித்திரமாகத் தோன்றினாலும், உண்மையான விஷயம்தானே! தமிழ் நாட்டில் பாஜக தானாக வந்ததா அல்லது திராவிட கட்சிகளால் அழைத்து வரப்பட்டதா?

காங்கிரஸ் பந்தயத்தில் கடைசியில் ஓடிக் கொண்டிருந்தாலும், அஇஅதிமுக மற்றும் திமுக விடம், நாளை பாஜகவை ஆதரிப்பீர்களா எனக் கேள்வி எழுப்புகிறது. காங்கிரஸ் திமுக தவிர திடீர் ஞானோதயம் பெற்ற இகக இகக(மா) வரை, அஇஅதிமுக மோடியை பாஜகவை விமர்சிக்காதது ஏன் எனக் கேட்டுள்ளனர்.

கர சேவைக்கு ஜெயலலிதா ஆள் அனுப்பினார் என கருணாநிதி சொல்ல, ஜெயலலிதா இல்லவே இல்லை என மறுத்தார். வண்டவாளத்தை தண்டவாளம் ஏற்றாமல் விடுவேனா என கருணாநிதி, 1992ல் தேசிய ஒருமைப்பாடு கவுன்சிலில் ஜெயலலிதா பேசிய விஷயத்தை அம்பலப்படுத்தினார்: ‘கர சேவைக்கு அனுமதிக்கும்படி நீதிமன்றங்களை அணுகத் தேவையான எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும். உத்தரப்பிரதேச அரசு கையகப்படுத்தியுள்ள இடத்தில் கரசேவை நடத்தத் தேவையான சூழ்நிலைகளை உருவாக்க வேண்டும்’. ஜெயலலிதா தன் பங்கிற்கு, கருணாநிதி பாஜகவுடன் கூட்டு வைத்தவர்தானே எனக் கேட்டார்.

 கருணாநிதி, ஜெயலலிதாவால்தான் தாம் பாஜகவை ஆதரிக்க நேர்ந்தது என்றார். ‘1998ல், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி ஆட்சியில் மத்தியில் இடம் பெற்றிருந்த ஜெயலலிதா, திமுகவின் மாநில அரசை கலைக்குமாறு பாஜகவை வற்புறுத்தினார். அதனை, பாஜக நிறைவேற்றாததால் மத்திய அரசைக் கவிழ்த்தார். அதனால்தான் 1999ல் திமுக பாஜகவோடு கூட்டணி வைக்கும் சூழல் உருவானது’ என்றார் கருணாநிதி.

கவனிக்கத்தக்க விஷயம், கரசேவை விசயத்தில் ஜெயலலிதா தற்காப்பு நிலைக்கு சென்றதும், மத்தியில் பாஜகவுடன் கூட்டணி அமைத்த விஷயத்தில் கருணாநிதி தற்காப்பு நிலைக்கு சென்றதும் ஆகும். தமிழ்நாட்டில் மதவெறிக்கு எதிராக உள்ள உணர்வு, சிறுபான்மையினர் வாக்குகள் பற்றிய கவலை காரணமாகவும், பாஜகவுக்கு கூடுதல் இடங்கள் தரத் தேவை இல்லை என்பதாலும், தத்தம் கட்சிகளுக்கு ஆகக் கூடுதலான இடங்கள் வேண்டும் என்பதாலும், அஇஅதிமுக, திமுக இம்முறை பாஜகவுடன் சேர்ந்து களம் காணவில்லை. ஆனால் பாஜக தமிழ்நாட்டில் கால் பதிக்க, கழகங்களே காரணம் என்பதுதான் உண்மை.

ஈயமும் பித்தளையும்
ஒன்றைப் பார்த்து ஒன்று சிரித்தாலும்
இரண்டையும் பார்த்து மக்கள் சிரிப்பார்கள்


16.05.1996 முதல் 28.05.1996 வரை, மத்தி யில் முதல்முறையாக பாஜக வாஜ்பாய் தலைமையில் 13 நாட்கள் மட்டுமே ஆட்சியில் இருந்தது. அப்போது பாஜக 154 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக இருந்தது. காங்கிரஸ் 140 இடங்கள் வைத்திருந்தது. 28.05.1996 முதல் 11.04.1997 வரை, 10 மாதங்கள் 11 நாட்கள் தேவ கவுடா தலைமையிலான அய்க்கிய முன்னணி அரசும், 21.04.1997 முதல் 8 மாதங்கள் குஜ்ரால் தலைமையிலான அய்க்கிய முன்னணி அரசும் அமைந்தன. (அது முதலாளித்துவ மத்திய அரசில் இகக நேரடியாகவும், இககமா வழி நடத்தும் குழு (ஸ்டியரிங் கமிட்டி) மூலமும் பங்கு பெற்ற காலம்). அதற்குப் பிறகுதான், கழகம் காவி உறவு சகாப்தம் தமிழ்நாட்டில் துவங்கியது.

16.02.1998 மற்றும் 28.02.1998 தேதிகளில் நாடாளுமன்றத் தேர்தல்கள் நடந்தன. பிப்ரவரி 14ல் கோவையில் அத்வானி பேச இருந்த ஒரு கூட்டத்தில் வெடிகுண்டு வெடித்தது. தமிழகச் சூழலில் மதவெறி நஞ்சு பரந்து பரவியது.

 பாஜகவுடன், அஇஅதிமுக தலைமையில் மதிமுக, பாமக, வாழப்பாடியார், சுப்பரமணியம் சாமி கூட்டணி அமைத்தனர். போட்டியிட்ட 23 இடங்களில் அஇஅதிமுக 18, பாஜக 5ல் 3, பாமக 5ல் 4, மதிமுக 5ல் 3, வாழப்பாடி ராமமூர்த்தி, சுப்பரமணியம் சாமி தலா 1 வென்றனர். பாஜக 13 மாதங்கள் ஆண்டது. ஜெ முயற்சியும் சேர, அந்த ஆட்சி கவிழ்ந்தது. 1998ல் காங்கிரசுக்கு 142 இடங்களும், பாஜகவுக்கு 179 இடங்களும் இருந்தன. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பாஜக கூட்டணிக்கு 30/40.

1999ல் திரும்பவும் தேர்தல்கள். இம்முறை, திமுக தலைமையில் மதிமுக பாமக எம்ஜிஆர் அதிமுக திருநாவுக்கரசர் பாஜகவுடன் கூட்டு சேர்ந்தனர். அஇஅதிமுக காங்கிரஸ் இகக இகக (மா) கூட்டணி அமைத்தன. பாஜக கூட்டணி 25 இடங்கள் பெற்றது. பாஜக 182 இடங்களும் காங்கிரஸ் 114 இடங்களும் பெற்றன.

1998 மற்றும் 1999ல் பாஜக ஆட்சி அமைந்த போது, இரு முறையும் அவர்களுக்கு 179, 182 இடங்கள் மட்டுமே கிடைத்தன. தமிழ்நாட்டில் அக்கூட்டணி ஒரு முறை 30 இடங்களும் மறுமுறை 25 இடங்களும் பெற்றது, அரசு அமைக்க மட்டுமின்றி, ஒரு மதவாதக் கட்சி நாட்டின் பிரதான நீரோட்ட அரசியலில் ஓர் ஏற்புடைத் தன்மையைப் பெறவும் உதவியது. மு.க.ஸ்டாலின் மொழியில், புண்ணியவதி ஜெயலலிதாவும், புண்ணியவான் கருணாநிதியும், பாஜக என்ற நச்சு மரம் வேரூன்ற, வளர, பெரும் தொழில் குழும/மதவெறி பாசிசம் பலப்பட போட்டி போட்டு உதவியவர்கள்தான்.

2004 மற்றும் 2009 தேர்தல்கள்

இந்தியா ஒளி வீசுகிறது எனப் பொய் பேசிய பாஜக, 2004ல் இருளால் சூழப்பட்டது. கூட்டாளிகளிடமிருந்து தனிமைப்பட்டது. கருணாநிதி ‘சாணக்கியம்’, தோல்வி அடையும் குதிரையிலிருந்து கடைசி நேரம் விலகி, வெற்றி பெறும் குதிரை மீது பந்தயம் கட்ட உதவியது. கருணாநிதி மதச்சார்பின்மைக்கு மாறினார். திமுக காங்கிரஸ் பாமக மதிமுக கூட்டணி 40க்கு 40 பெற்றது. ஜெயலலிதா பாஜகவுடன் கூட்டு சேர்ந்து படுதோல்வி அடைந்தார். பாஜக தமிழகத்தில் கால் பதிக்க கழகங்கள் மாறி மாறி இடம் தந்த போது, 2004ல் தமிழ் நாட்டில் பாஜகவுக்கு இடமே இல்லை எனத் தமிழக மக்கள் முடிவெடுத்தனர்.

2009 தேர்தலில் ஒரு மாற்றம் நடந்தது. அய்முகூ அதாவது காங்கிரஸ் திமுக கூட்டணியிலிருந்து வெளியேறிய மதிமுக, பாமக, இகக, இககமா, பாஜக விலிருந்து தனித்து போட்டியிட்ட அஇஅதிமுக வுடன் சேர்ந்து கொண்டனர். இகக, இககமா, தமிழகத்திலும் இந்தியாவிலும், காங்கிரஸ், பாஜக அல்லாத மூன்றாவது அணி அமைந்து விட்டதாக ஆனந்தக் கூத்தாடினர்.

பாஜகவுக்கு தமிழ்நாட்டில் ஓரிடம் கூடக் கிடைக்கவில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்த வரை எதிர்பாராத வகையில் திமுக காங்கிரஸ் கூட்டணி புதுச்சேரி சேர்ந்து 28 இடங்கள் வென்று முதல் அணி ஆனது. மூன்றாவது அணி, தமிழகத்தில் இரண்டாவது அணியாகி அதிமுக 9 இடங்களும் இகக, இகக(மா) மதிமுக  தலா ஓரிடமும் வென்றன. பாமகவுக்கு பூஜ்ஜியம்.

தொகுத்துச் சொன்னால்

    தமிழ்நாட்டில் அதிமுக திமுக பாமக அனைவருமே, காங்கிரஸ் அல்லது பாஜக என்ற இரண்டு அகில இந்திய துருவங்களில் ஏதாவது ஒன்றோடு சேர்ந்து கொள்வார்கள்.

    தமிழ்நாட்டின் இருபெரும் துருவங்களான  அதிமுக திமுகவோடு கூட்டு சேர்ந்தே, பாஜக, தமிழ்நாட்டில் வெற்றி பெற முடியும்.

    2004, 2009 இரு தேர்தல்களிலும், தமிழ்நாட்டில் பாஜகவுக்கு ஓரிடம் கூடக் கிடைக்கவில்லை.

    தமிழ்நாட்டில் 1998 முதல் 2014 வரை (2009 நீங்கலாக), பாஜக எந்தக் கூட்டணியிலும், இளநிலைக் கூட்டாளியாகவே இருந்துள்ளது. இந்த முறை நரேந்திர மோடி அலையில், காங்கிரஸ் கழகங்கள் எதிர்ப்பில் கரை சேரும் நப்பாசையுடன், கூட்டணிக் கட்சிகளின் கூட்டு வாக்கு சதவீதம் தொடர்பான எண் கணித நம்பிக்கையுடன் விஜயகாந்த்துக்கு முதலிடம் தந்து ஓர் அணி எப்படியோ அமைய, அதில் பாஜகவும் இடம் பெற்றுள்ளது. மோடி மந்திரம் தமிழகத்திலும் ஒலிக்கிறது.

    2014 நாடாளுமன்றத் தேர்தலில், அதிமுக திமுக இரண்டுமே, 2016 சட்டமன்றத் தேர்தலுக்கு அஇஅதிமுக - திமுக என இரு துருவ அரசியலே நல்லது எனத் தெளிவாக இருக்கிறார்கள்.

    தமிழ்நாட்டில் அதிமுக, திமுக, மதிமுக, பாமக கட்சிகளிலிருந்து புதிதாகப் புற்றிலிருந்து புறப்பட்டுள்ள தேமுதிக வரை, எந்த கட்சியையும், விடாப்பிடியான காங்கிரஸ் எதிர்ப்பு பாஜக எதிர்ப்பு அல்லது காங்கிரஸ் பாஜக அல்லாத மாற்றணி, மதச்சார்பற்ற அணி, அல்லது உலகமய தாராளமய தனியார்மய எதிர்ப்பணி என, செங்கொடி பிடிக்கும் எவர் சொன்னாலும் அவர் தன்னையும் ஏமாற்றிக் கொண்டு மற்றவர்களையும் ஏமாற்றுகிறார் என்பது தெளிவு.

2009 மற்றும் 2014: மூன்றாவது அணி
அல்லது மாற்றணியின் கதை


2009ல் இகக, இகக(மா), மாயா - ஜெயா போன்றவர்களுடன் மூன்றாவது அணி அமைத்தனர். காங்கிரசுக்கு பாஜகவுக்கு மாற்று நாங்களே எனச் சொன்ன இந்த மூன்றாவது அணியை மக்கள் நம்பவில்லை. 2009 தேர்தலில் மூன்றாம் அணி கட்சிகள் 2009ல் வென்ற இடங்களும், 2009க்கு முன் அவர்களுக்கு நாடாளுமன்றத்தில் இருந்த இடங்களும் அட்டவணையில் தரப்பட்டுள்ளது.



மூன்றாவது அணி கட்சிகள் 108 இடங்களில் இருந்து 77 இடங்களாகக் குறைந்தனர். இடது முன்னணி 35 இடங்களை இழந்தது. எந்த அணியிலும் இல்லாத சமாஜ்வாதி கட்சி 36லிருந்து 23, லாலு கட்சி 24லிருந்து 4, பஸ்வான் கட்சி 4லிருந்து பூஜ்யம் இடங்களை வென்றனர். இவர்கள் தயவில்தான் (அல்லது இவர்களை சிபிஅய் மூலம் மிரட்டியே) அய்முகூ - 2 அரசாங்கம் காலம் தள்ளியது.

காங்கிரசும் பாஜகவுமாக 1996ல் 294 இடங்களும் 1998ல் 321 இடங்களும் 1999ல் 296 இடங்களும் 2004ல் 283 இடங்களும் 2009ல் 322 இடங்களும் பெற்றன. இகக இககமா சொல்லும் மூன்றாவது அணி - மாற்று அணி  - மதச்சார்பற்ற அணி கட்சிகளில் ஒன்று கூட ஒரே நேரத்தில் காங்கிரஸ் - பாஜக எதிர்ப்பு அல்லது காங்கிரஸ் பாஜக அல்லாத கட்சிகள் என்ற வரையறையில் வரவில்லை.

காங்கிரஸ் பாஜக இரண்டும் சேர்த்தே, ஆட்சி அமைக்கத் தேவைப்படும் 273க்கு மேல் 50 இடங்கள் தாண்டிக் கூட வென்றதில்லை. பிராந்திய அல்லது சமூக நீதி அல்லது மதச்சார்பற்ற வேடம் புனையும் கட்சிகளின் ஆதரவு இல்லாமல் பாஜகவோ காங்கிரசோ 1999லிருந்து நாடாளவில்லை.

தமிழ்நாட்டு சறுக்கலுக்கு
இகக இகக(மா) விளக்கங்கள் ஏற்புடையவையா?


தமிழ்நாட்டில், இந்தத் தேர்தலில், உண்மையில் மகிழ்ச்சியோடு வேலை செய்வது இடதுசாரி தோழர்களே. சூரியனுக்கு, இரட்டை இலைக்கு, டாக்டர் கலைஞர்க்கு புரட்சி தலைவிக்கு வாக்கு கேட்கும் அவமானம் தலை குனிவு நமக்கில்லை, நமக்கும் முதுகெலும்பும் சொந்தக் காலும் உண்டு எனக் காட்ட முடிகிறதே என்ற நியாயமான மகிழ்ச்சி அவர்களுக்கு இருக்கிறது. ஆனால் இகக, இகக(மா) தலைமைகள், ஜெயலலிதா தங்களைச் சிறுமைப்படுத் தியதற்கான சரியான அரசியல் காரணங்களைக் கண்டறிந்தனரா?

நாடாளுமன்ற முடக்குவாத, வால்பிடிக்கும் சந்தர்ப்பவாத அரசியல் வழியே, தங்களை அவமானப்படுத்தியது என உணர்ந்தனரா? அல்லது, வழக்கம்போல் தோல்விக்கான காரணங்களை வெளியில் தேடுகின்றனரா? தோல்வியை மறைக்கின்றனரா? மறுக்கின்றனரா?

தினமலரில் வெளிவந்து பின்னர் தீக்கதிர் வெளியிட்ட, இகக(மா)வின் தோழர் ராம கிருஷ்ணன், இககவின் தோழர் மகேந்திரன், டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்ட தோழர் தா.பாண்டியன் பேட்டிகள் சொல்லும் செய்திகளை ஆராய்வோம்.
                 
தோழர் ராமகிருஷ்ணன் பேட்டியிலிருந்து

மூன்றாவது மாற்று என்ற முழக்கத்தை வைப்பதாலேயே இரு கட்சி ஆட்சி முறை தடுக்கப்படுகிறது. மூன்றாவது மாற்று இரு முறை நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த ஆட்சியை காங்கிரசும் பாஜகவும் இணைந்து கவிழ்த்தனர். அக்டோபர் 30, 2013 வகுப்புவாத எதிர்ப்பு சிறப்பு மாநாட்டில், பிப்ரவரி 25, 2014  கூட்டத்தில், 11 கட்சிகள் கலந்து கொண்டனர். காங்கிரஸ் அல்லாத பாஜக அல்லாத மாற்று அரசை, அதிமுக தலைமை ஏற்றுக் கொண்டது என்ற நம்பிக்கையில் முயற்சித்தோம். இதில் தவறு இல்லை.

கேள்வி: அதிமுகவின் மூன்றாண்டு கால ஆட்சி திருப்தி அளிக்கிறதா?

பதில்:   மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்துப் போராடி வருகிறோம். மக்களுக்குச் சாதகமான நடவடிக்கைகளை ஆதரிக்கிறோம்.

தோழர் மகேந்திரன் பேட்டியிலிருந்து

மம்தா கார்ப்பரேட்டுகளுடன் கை கோர்த்துள்ளார். அவர்களின் ஆதரவுடன் லோக்சபா தேர்தலைச் சந்திக்கிறார். தேர்தலுக்குப் பின் கார்ப்பரேட்டுகள் உதவியுடன் நாட்டை ஆட்சி செய்ய விரும்புகிறார். இந்தப் பின்னணியில்தான் ஜெயலலிதா மம்தாவுடன் பேசினார். அதற்கு ஜெயலலிதா ஒத்துப்போவதற்கு கம்யூனிஸ்ட்கள் இடைஞ்சலாக இருப்பார்கள் என, கூட்டணியை முறித்துள்ளார். கம்யூனிஸ்ட்களை அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேற்ற பெரும் சதி நடந்துள்ளது. தேசிய அளவில், கம்யூனிஸ்ட்களை தவிர்க்க முடியாத சக்தி ஆக்கி விடக்கூடாது என்பதற்காக, எங்களுடனான கூட்டணியை அஇஅதிமுக முறித்துக் கொண்டுள்ளது.

மூன்றாவது அணி என நாங்கள் எப்போதும் சொல்வதில்லை. மாற்று அணி என்றுதான் சொல்கிறோம். மாற்று அணியால்தான் வி.பி.சிங், தேவகவுடா, குஜ்ரால் போன்றவர்கள் பிரதமராக இருந்தார்கள். காங்கிரஸ் பாஜக அல்லாத மாற்று அரசுகள் நாட்டை ஆள முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.

 1964ல் கட்சி பிரிந்து, இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் உருவானதிலிருந்து, அதிமுக - திமுக கட்சிகளுடன் கூட்டணி வைத்திருக்கிறோம். அப்போதெல்லாம் சுதந்திரமாகச் செயல்பட முடியாது. இப்போது தனித்து நிற்கிறோம். எங்கள் கொள்கையை தன்னிச்சையாக மக்களிடம் எடுத்துச் சொல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.

தோழர் தா.பாண்டியன் பேட்டியிலிருந்து   அஇஅதிமுகவுக்கு பாஜக மேல் புதிதாக ஏற்பட்டுள்ள அன்பை புரிந்து கொள்ளவும் முடியாது. ஏற்கவும் முடியாது. அதிமுக, காங்கிரஸ் அல்லாத பாஜக அல்லாத என்ற கொள்கைத் தளத்தை கைவிட்டுவிட்டது. ஜெயலலிதா அவரது பிரச்சாரத்தில் காங்கிரஸ், திமுகவை விமர்சிக்கிறார். பாஜக பற்றிப் பேசுவதில்லை. அவர் பாஜகவுக்காக நிற்கிறார் என்பது சொல்லாமலே புரியும். ஜெயலலிதா தவிர, மொத்த உலகமும் மோடி பற்றிப் பேசுகிறது. நிச்சயமாக, நாங்கள் மோடி பற்றி மதவாத ஆபத்து பற்றி பேசுவோம் என்பதால்தான் அவர் எங்களைத் தவிர்த்தார்.

மத்திய அரசு உருவாக்கமும்
இடதுசாரி அணுகுமுறையும்


இன்றைய நிலைமைகளில், சமூகப் பொருளாதார அரசியல் சக்திகளின் சமநிலையில், கம்யூனிஸ்டுகள், தேர்தல்கள் மூலம், இந்தியாவில் அதிகாரத்தைக் கைப்பற்ற முடியாது. நாடாளுமன்ற பெரும்பான்மை பெற்று, மக்களாட்சி அமைக்க முடியாது. நாடாளுமன்றம் தவிர்த்த பாதை என்பது, சக்திகளின் சம நிலையை தலைகீழாகப் புரட்டிப் போடுவதில் மக்கள் போராட்டங்களே முதன்மையானவை என்றும், அவற்றின் தொடர்ச்சியாகவும் அவற்றுக்குத் துணையாகவுமே நாடாளுமன்றத் தேர்தல் போராட்டங்கள் அமையும் என்றும் நம்புகிறது. அதாவது முதலாளித்துவ நாடாளுமன்றத்தில் புரட்சிகர எதிர்க்கட்சியாக செயல்படுவதே கம்யூனிஸ்ட் பணியாகும்.

புரட்சிக்கான தயாரிப்பு காலத்தில் புரட்சிகர எதிர்க்கட்சிப் பாத்திரம் என்பதே பொருத்தமானதாகும். இங்கேதான், இகக, இககமா செயல்தந்திரம், மத்தியில் வேறுவேறு அரசாங்கங்கள் அமைக்கும் கடமையை வலிந்து எடுத்துக் கொள்கின்றது. வி.பி.சிங் அரசாங்கம் அமைவதில் பங்கு, அய்மு அரசாங்கத்தில் நேரடி மற்றும் ஸ்டியரிங் கமிட்டி மூலம் பங்கு என்ற நிலை வரை சென்றுவிட்டனர். இப்போது, அதையே, காங்கிரஸ், பாஜக அல்லாத மாற்றணி/மூன்றாவது அணி/மதச்சார்பற்ற அணி என்கிறார்கள்.

நீடிக்கும் இந்த செயல்தந்திரம் நாடாளுமன்றப் பாதை என்ற போர்த்தந்திர நிலையை எட்டிவிட்டது. அதிலிருந்து உருவான ஒட்டிப்பிறந்த இரட்டை நோய்கள்தான் நாடாளுமன்ற முடக்குவாதமும் வால்பிடிக்கும் சந்தர்ப்பவாதமும்.

இககமா சிலாகிக்கும் மூன்றாவது மாற்று, இகக ஏற்றிப்போற்றும் மாற்றணி ஆகியவை முதலாளித்துவ மாற்றணிகளே. அவை அரசில் இருந்தும் பொதுவாழ்வில் இருந்தும் மதத்தை விலக்கி நிறுத்தி வைக்கும் மூலச்சிறப்பு மிக்க மதச்சார்பற்ற அரசாக இருக்க முடியாது. ஏகாதிபத்திய எதிர்ப்பின் ஜனநாயகப் போராட்டங்களின் பிரிக்க முடியாத பகுதியான மதச்சார்பின்மைக்கும், இந்தத் தோழர்கள் சொல்லும் மாற்றணிக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.

இந்த அணிகளின் அரசுகள், உலகமய, தாராளமய, தனியார்மய பிணிகளையே பரப்பும். இந்த அரசுகளுக்காகத்தான் சிதம்பரம் அய்மு காலத்தில் கனவு பட்ஜெட் தாக்கல் செய்தார். பெயரளவிலான ஒப்பனை மாற்றங்கள் தவிர, இந்த அரசுகளுக்கும் மக்கள் சார்பு வளர்ச்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

2014க்கான இககமா தேர்தல் அறிக்கை முதலாளித்துவ சமூகத்தின் அனைத்தும் தழுவிய நெருக்கடி எதிரிகளின் பலவீனங்கள் ஆகியவற்றின் மீது குறிவைக்காமல் நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு ஆபத்து என, அரசனைக் காட்டிலும் அரச விசுவாசத்துடன் கூப்பாடு போடுகிறது.

மாலெ கட்சி, மூன்றாவது அணி, காங்கிரஸ், பாஜக அல்லாத, பிராந்திய, கூட்டாட்சி, சமூக நீதிக் கட்சிகளின் கதம்பக் கூட்டணியாக இருக்காது என்கிறது.

இகக மாலெ 2014 தேர்தல் அறிக்கை சொல்கிறது.

 ‘அனைத்திலும் பரவியிருக்கிற நெருக்கடியில் இருந்து விடுதலை பெறுவதற்கான நம்பிக்கை, ஒரு மாற்றுக்கான மக்கள் போராட்டங்களில் தான் இருக்கிறது! முன்கூட்டியே தயார் செய்யப்பட்ட மாற்று எதுவும் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. மக்களின் நீடித்த ஜனநாயக அறுதியிடல் மூலம் இதை நாம் கட்டியெழுப்ப வேண்டும்’.

மூன்றாவது அணி தொடர்பான இகக, இககமா தேர்தல் செயல்தந்திரம் என்ன ஆனது? அக்டோபர் 23 மதவாத எதிர்ப்பு சிறப்பு கருத்தரங்கம், பிப்ரவரி 25 அன்று நடந்த 11 கட்சிகள் கூட்டம் ஆகியவற்றில் கலந்து கொண்ட இடது முன்னணியின் நான்கு கட்சிகள் போக, இவர்களோடு, எந்த மதச்சார்பற்ற கூட்டாளி தேர்தல் உடன்பாடு கண்டுள்ளார்?

பீகாரில் நிதிஷ் இரண்டு இடம் இககவுக்கு தந்துள்ளார். மொத்தமாய் இதுபோல் நாடெங்கும் 5 இடங்களில் அத்தகைய ஆதரவு கிடைத்தாலே பெரிய விசயம். எல்லா மாநிலங்களிலும், தோழர்கள், ஜெயலலிதா பின்பற்றியது போன்ற வேறுவேறு அணுகுமுறைகளால் அலைகழிக்கப்பட்டுள்ளனர். 2004ல் இருந்த 59 இடங்கள் 2009ல் 35 குறைந்து 24 இடங்களானது. 2014ல் என்ன ஆகுமோ?

இவ்வளவுக்கும் பிறகு, இககமா 2014 தேர்தல் அறிக்கை சொல்கிறது. மக்கள் முன்பு காங்கிரஸ், பாஜக அல்லாத ஒரு மாற்றை உறுதிசெய்ய, இககமாவும் பிற இடதுசாரி கட்சிகளும் பிற மதச்சார்பற்ற காங்கிரஸ் அல்லாத கட்சிகளோடு ஒத்துழைக்கும். என்ன அசாத்திய நம்பிக்கை!

தமிழகத்தில்

இன்னமும் இந்த நம்பிக்கையில் தளராமல் சளைக்காமல் முயற்சிக்கும் தோழர்கள், ஜெயலலிதாவின் மனமாற்றத்தில் நப்பாசை கொண்டுள்ளனர். ஜெயலலிதா மோடி பற்றி, பாஜக பற்றி விமர்சிப்பதில்லை என்று சொல்வதோடு நின்றுவிடுகிறார்கள். இககமா ஜெயலலிதாவின் மூன்றாண்டு ஆட்சி திருப்தியளிக்கிறதா என்ற கேள்விக்கு நேரடியாக இல்லை என பதிலளிக்க முடியாமல் தடுமாறுகிறது. இகக நல்லதும் உண்டு, அல்லாததும் உண்டு என்கிறது. மேலே சொன்ன விசயங்களை விட, ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கு பற்றிய கேள்விக்கு நேரடி பதில் சொல்ல முடியாத அவர்கள் தயக்கத்தில், போயஸ் தோட்டத்துக் கதவுகள் நிரந்தரமாக மூடிவிடக் கூடாது என்ற கவலை வெளிப்படுகிறது.

கருணாநிதி 2ஜி ஊழல் கசக்கிறது அம்மையாரின் சொத்துக் குவிப்பு மற்றும் இதர ஊழல்கள் இனிக்கிறதா என்று கேள்வி கேட்கும்போது, பாவம், நமது தோழர்கள் பம்மிப் பதுங்குகிறார்கள்.

3 சென்ட் நிலம், தொழிற்சங்க அங்கீகாரச் சட்டம், பயிற்சியாளர் நலன் காக்கும் சட்டத் திருத்தத்துக்கு ஒப்புதல் பெற வலியுறுத்துதல், மாநில அரசு ஊழியர்க்கு  அகவிலைப்படி வழங்காதது, ஆட்டோமொபைல் தொழிலை பொது பயன்பாட்டு சேவையாக அறிவித்தது போன்ற அடிப்படை விசயங்களில் கூட, இது வரை விமர்சனங்கள் வைக்கவில்லை.

மாலெ தீப்பொறி ‘இகக இககமா ஜெயலலிதாவுக்கு வாக்கு கேட்கும்போது, அது மறைமுகமாக மோடிக்கு வாக்கு கேட்பது’ என பிப்ரவரி 16 - 28 இதழில் எழுதியதை, இப்போதாவது இகக, இககமா தலைவர்கள் உணர்ந்துள்ளனர்.

 மாலெ தீப்பொறி, தனது பிப்ரவரி 16 - 28 இதழில் ‘தமிழ்நாட்டில் மோடியின் திருப்பணியை ஜெயலலிதாவே மேற்கொள்வதால், கம்யூனிஸ்டுகளின் முதன்மையான கடமை ஜெயலலிதாவை எதிர்ப்பதே ஆகும். அதற்காக போராடுகிற இடதுசாரி ஜனநாயக தேசபக்த சக்திகளிடம் உழைக்கும் மக்களிடம் துணிந்து ஆதரவு கேட்க வேண்டும். பாட்டாளி வர்க்க அரசியலின், செங்கொடியின் சுதந்திரத்தை உறுதி செய்வதன் மூலம், வருங்காலத் தமிழகத்துக்கு நம்பிக்கை ஊட்ட வேண்டும்’ என எழுதியது. இதே விருப்பத்தை இகக, இககமா தொண்டர்கள் கொண்டுள்ளனர். அவர்கள் தலைமை என்ன செய்யப் போகிறது?


Search