COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Saturday, March 15, 2014

குஜராத் வளர்ச்சி எனும் மோடி வித்தை

இசுலாமியர்களுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள் என்று கேட்டபோது இசுலாமியர்களுக்கு நான் ஒன்றுமே செய்யவில்லை, நான் குஜராத் மக்களுக்குத்தான் பல விசயங்கள் செய்தேன், இந்துக்கள், இசுலாமியர்கள் என்று பேதம் பாராட்டவில்லை என்று மோடி சொன்னதாக பாஜக தலைவர்கள் பெருமிதத்துடன் சொல்லிக் கொள்கிறார்கள்.

இன்னும் 50,000 இசுலாமியர்கள் கலவரத்தால் பாதிக்கப்பட்ட இசுலாமியர்களுக்காக உருவாக்கப்பட்ட காலனிகளில் வசிக்கிறார்கள் என்றும் அவர்களுக்கு குஜராத் அரசாங்கம் எந்த வசதியும் செய்து தருவதில்லை என்றும் செய்திகள் உள்ளன. இருக்கட்டும். மோடி குஜராத் மக்களுக்கு என்னதான் செய்தார் என்பது பற்றி சில விவரங்கள் இங்கு தரப்படுகின்றன.

அவற்றை விளக்குவதும் வியாக்கியானப்படுத்துவதும் வாசகர்கள் பொறுப்பு. நாட்டில் 100 ஸ்மார்ட் சிட்டிக்கள் அமைப்பது மோடியின் திட்டங்களில் ஒன்று. குஜராத் நிலைமைகள் பற்றி இங்கு தரப்படும் விவரங்களில் இருந்து, அந்த ஸ்மார்ட் சிட்டிக்கள் வந்தால் நாடு என்ன ஆகும் என்றும் வாசகர்கள் விளக்கலாம்.

    2013 டிசம்பரில் குஜராத் அரசாங்கத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஒரு சுற்றறிக்கை, நாளொன்றுக்கு ரூ.10.80க்கு குறைவாக ஊதியம் பெறுபவர்கள் மட்டுமே மான்ய விலையிலான உணவு தானியங்கள் பெற முடியும் என்று சொல்கிறது. அதாவது, குஜராத் அரசாங்கம் நிர்ணயிக்கிற வறுமைக் கோடு நாளொன்றுக்கு ரூ.10.80.

    மத்திய அரசு தரும் உணவு மான்யம் கொண்டு 21 லட்சம் குடும்பங்களுக்கும் மாநில அரசின் மான்யம் கொண்டு 11 லட்சம் குடும்பங்களுக்கும் மான்ய விலையில் உணவுப் பொருட்கள் வழங்குவதாக குஜராத் அரசாங்கம் சொல்கிறது.

    குஜராத்தில் விளைநிலங்கள் கார்ப்பரேட் நிறுவனங்களால் பறித்துவிடப்படுவதால் உணவு உற்பத்தி குறைந்துள்ளதாக குஜராத் அரசாங்க விவரங்கள் சொல்கின்றன. 2010 - 2011ல் இருந்ததை விட 2011 - 2012ல் உணவு தானிய உற்பத்தி 1,00,71,000 டன்னில் இருந்து, 92,57,000 டன்னாக குறைந்துள்ளது.

    விளைநிலங்கள் தொழிற்சாலைகளுக்காக கையகப்படுத்தப்பட்டுவிட்டதால் உணவு தானிய உற்பத்தி குறைவுடன் கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது என்று பர்யவரன் மித்ரா என்ற தொண்டு நிறுவனம் சொல்கிறது.

    சர்வதேச உணவு கொள்கை ஆய்வு மய்யம் குஜராத்தில் மிகவும் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மை நிலவுகிறது என்கிறது.

    குஜராத்தின் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களுக்கு மின்இணைப்பே இல்லை. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்கள்படி குஜராத்தின் 11 லட்சம் குடும்பங்களுக்கு மின்இணைப்பு இல்லை.

    கல்வியைப் பொறுத்தவரை ஒன்பதாவது இடத்தில் இருந்த குஜராத் 18ஆவது இடத்துக்கு சரிந்துவிட்டது. ஆரம்ப கல்வியில் 12ஆவது இடத்தில் இருந்து 28ஆவது இடத்துக்கு சரிந்துவிட்டது.

    குஜராத்தில் கல்வி கற்று வேலை வாய்ப்பு கிடைக்காமல் இருப்பவர்கள் 8,25,488.
    45% குழந்தைகள் ஊட்டச்சத்தின்மையாலும் 74% பெண்கள் ரத்தசோகையாலும் பாதிக்கப்பட்டுள்ளனர் .

    மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதை முடிவு செய்ய, மாநிலங்களின் தேவை பற்றி ஆய்வு செய்த ரிசர்வ் வங்கி கவர்னர் தலைமையிலான குழுவின் வளர்ச்சி குறியீடு தொடர்பான அறிக்கை, குஜராத்தை வளர்ச்சி குறைந்த மாநிலம் என பட்டியலிடுகிறது. இதற்கான மாநிலங்கள் பட்டியலில் குஜராத் 12ஆவது இடத்தில் இருக்கிறது.

    துடிப்பான குஜராத் மாநாடுகளில் 2009ல் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிட்ட லார்சன் அண்டு ட்யூப்ரோ, அஸ்மி சால்ட், கின்டேஷ் சினர்ஜி, குஜராத் பவர் கார்ப்பரேசன் லிமிடெட், ஜெய்ஹிந்த ப்ராஜக்ட்ஸ், சவுராஷ்டிரா அயன் ஃபோர்ஜிங் போன்ற நிறுவனங்களுக்கு 66.5 லட்சம் ஏக்கர் நிலம் தரப்பட்டுள்ளது.

    நிலம் வேண்டும் என்று விண்ணப்பித்திருந்த 129 நிறுவனங்களில் 16 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு விற்பனை அடிப்படையிலோ, நீண்ட கால லீஸ் அடிப்படையிலோ நிலம் வழங்கப்பட்டுள்ளதாக அரசு விவரம் தந்துள்ளது. அதானி பவர் லிமிடெட், மோசர் பேயர், லேன்கோ சோலார், மாடஸ்ட் இன்ஃப்ரா, சிசிஎல் ஆட்டோ எலக்ட்ரிக் போன்ற நிறுவனங்களின் விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன.

    மண்டல் - பேசாரஜி சிறப்பு முதலீட்டு மண்டலம் அமைக்க குஜராத் அரசாங்கம் முன்வந்துள்ளது. 44 கிராமங்களின் 51,000 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்படும். இங்குதான் மாருதியும் தனது புதிய ஆலையை நிறுவப்போகிறது. 2012ல் இங்கு மாருதிக்கு 700 ஏக்கர் நிலம் தரப்பட்டுள்ளது.

    2009ல் 920 சதுர கி.மீ பரப்பளவில், தோலேரா சிறப்பு முதலீட்டு மண்டலம் அறிவிக்கப்பட்டுள்ளது. (சிறப்பு முதலீட்டு மண்டலம்.... இது மோடி ஸ்டைல் நிலப்பறி).

    தொழில் நிறுவனங்களுக்கு நிலம் தர விவசாய நிலம், மேய்ச்சல் நிலம், கிராம பொது நிலம், வன நிலத்தைக் கூட தரிசு என்று அரசு ஆவணங்களில் காட்டி அவற்றை விரைவாக தாரை வார்ப்பது குஜராத் அரசாங்க அதிகாரிகளின் சிறப்பு என்று சொல்லப்படுகிறது.

    2012 தேர்தல்களில் டாடாவுக்கு நிலம் தரப்பட்ட சனந்த் மற்றும் அருகில் உள்ள விரம்காம் தொகுதிகளில் பாஜக தோற்றது.

    ரிலையன்ஸ் நிறுவனம் சிறப்பு முதலீட்டு மண்டலம் உருவாக்க ஜாம்நகரில் 610 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.

    பெரிய தொழில்நிறுவனங்களுக்கும் உள்கட்டுமான திட்டங்களுக்கும் தரப்படும் மானியம் மொத்த மாநில வரவு செலவு திட்டத்தில் 40%.

    பெட்ரோலிய சுத்திகரிப்பு தொழிலில் மட்டும் 2000 - 2001ல் 4% என இருந்த உற்பத்தி மதிப்பு 2010 - 2011ல் 25% என உயர்ந்துள்ளது. இந்த உற்பத்தி உயர்வு இரண்டே இரண்டு நிறுவனங்கள் மூலம் வந்தது. அவை ரிலையன்ஸ் மற்றும் எஸ்ஸார்.

    2013ல் சட்டமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த வருவாய் துறை அமைச்சர் ஆனந்திபென் படேல் அதானி குழுமத்துக்கு ரூ.60 கோடிக்கு 5,465 ஹெக்டேர் நிலம் தந்துள்ளதாகச் சொன்னார்.

    குஜராத் அரசாங்கம் தொழிலுக்காக நிலம் கையகப்படுத்தும்போது, மொத்த நிலத்தையும் இழந்து, வாழ்வாதாரத்தை முற்றிலுமாக இழக்க நேரிடும் விவசாயிக்கு நிலத்துக்கான இழப்பீட்டுடன் கூடுதலாக ரூ.75,000 தரப்படும். நிலத்தின் ஒரு பகுதி பறிக்கப்பட்டுவிடுகிறது என்றால் ரூ.50,000 கூடுதலாக தரப்படும்.

    குறைந்தபட்சம் 100 ஹெக்டேர் நிலத்தில் தொழில்பூங்கா அமைக்க ஒரு தனியார் நிறுவனம் தயாராக இருந்தால் அரசு - தனியார் பங்கேற்பில் நிலத்தை ‘வளர்க்க’ அரசு உதவும்.

    விவசாயி பறிகொடுத்த நிலத்தில் அவரோ, அவரது பிள்ளைகளோ தொழிலாயாக வேலை செய்ய குடும்பத்தில் ஒருவருக்கு அய்டிஅய் பயிற்சி அளிக்கப்படும்.

    சூரத்தில் உள்ள 4000க்கும் மேற்பட்ட வைரம் பட்டை தீட்டும் நிறுவனங்களில் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலை செய்கின்றனர். 2013ல் ரூபாய் மதிப்பு கடுமையான வீழ்ச்சியை சந்தித்தபோது இவர்களில் பெரும்பாலானோர் வேலை இழந்தனர்.

    வெளிமாநிலத் தொழிலாளர்கள் 10 லட்சம் பேர் ஆயத்த ஆடை மற்றும் வைரம் பட்டை தீட்டும் நிறுவனங்களில் வேலை செய்கின்றனர். இவர்களுக்கு 12 மணி நேர வேலைக்கு ரூ.2000 ஊதியம். ரூ.3000 வேண்டும் என்றால் மிகைநேரப்பணி செய்ய வேண்டும்.

    2012ல் நரோடா தொழிற்பேட்டையில் உள்ள ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 5000 ஆயத்த ஆடை தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கேட்டு வேலை நிறுத்தம் செய்தபோது, சங்கத் தலைவர்கள் மூன்று பேர் இரண்டு நாட்களில் சிபிசி பிரிவு 151ன் கீழ் இரண்டு முறை கைது செய்யப்பட்டனர். குற்றம் புரிவதை தடுக்க ஒருவர் கைது செய்யப்படலாம் என்று அந்தப் பிரிவு சொல்கிறது.

    2012ல் அர்விந்த் மில் தொழிலாளர்கள் 8000 பேர் ஊதிய உயர்வு கேட்டு வேலை நிறுத்தம் செய்தனர். இவர்களின் சராசரி மாதச் சம்பளம் ரூ.4000. ஒப்பந்தத் தொழிலாளர்களின் நாள் கூலி ரூ.90.

    50 தொழில்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள, அக்டோபர் 1 2013 முதல் மார்ச் 31 2014 வரையிலான மாறுகிற பஞ்சப்படியுடன் சேர்ந்த குறைந்தபட்ச ஊதியத்தின் அதிகபட்சம் நாளொன்றுக்கு ரூ.253.25.

Search