COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Monday, March 31, 2014

கொடும்தீமையின் பொதுப்படையான தன்மை

(மார்ச் 23 இந்து நாளேட்டில் நிஸ்ஸிம் மன்னத்துக்கரேன் எழுதியதில் இருந்து)

பாசிசம் என்பது ஆளும் வர்க்கங்களின், ஆகப்பிற்போக்கான பிரிவின், ஆகக்கொடூரமான ஒடுக்குமுறை ஆட்சியாகும். அதே நேரம், அது, சில பிரிவினரை குறி வைத்துத் தாக்குகிறது. தேச, இன, மத பெருமிதம் பேசி தன் கொடும்தீய செயல்களுக்கு பெரும்பான்மை பிரிவின் ஆதரவைத் திரட்டுகிறது. கணிசமானவர்களை தன் நடவடிக்கைகளில் செயலூக்கமாக பங்கேற்க வைக்கிறது. மக்கள் திரளை எதிர்ப்பற்ற மவுன சாட்சிகளாக மாற்றுகிறது. ஒத்துப் போ, கேட்காதே, எதுவும் பேசாதே என்ற நிலையை உருவாக்குகிறது.

    ஹன்னா ஆரன்டட் என்ற மெய்ஞானி, கொடும்தீமையின் பொதுப்படையான தன்மை (Banality of Evil) என்ற சொற்றொடரை உலகுக்கு தந்தார். யூதப் படுகொலை போன்ற கொடூரமான குற்றங்கள் ஆபத்தான மனப்பிறழ்வு கொண்டவர்களாலோ, பிறர் துன்பத்தில் இன்பம் காண்பவர்களாலோ இழைக்கப்படவில்லை. தங்களின் கடமைகளை, உத்தரவுகளை கவனமாகச் செயல்படுத்தும், சாதாரணமான மற்றும் இயல்பான மனநலம் உள்ளவர்களாலேயே செய்யப்பட்டன.

    2002 குஜராத் கலவரங்களில் 95 பேரை படுகொலை செய்தார் என 28 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட பாஜகவின் நரோடா சட்டமன்ற உறுப்பினர் மாயா கோத்னானி, ஒரு பெண். அவர், மகப்பேறு மருத்துவமனை நடத்திய மருத்துவர். அவர், மோடி அரசில், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் அமைச்சர்.

    1984 சீக்கிய படுகொலையில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஜகதீஷ் டைட்லர், சீக்கிய தாய்க்குப் பிறந்தவர். நன்கறியப்பட்ட ஒரு கல்வியாளரால் கிறித்துவரால் வளர்க்கப்பட்டவர்.

    கொடும்தீமை, சாமான்ய மக்கள் அதில் பங்கேற்கும்போது, அதில் இருந்து சற்று விலகி நின்று அதனை நியாயப்படுத்தும்போது, பொதுப்படையானதாகிறது. யோசிக்காமலே முறைசார்ந்த விதத்தில் இந்தச் செயல்களில் சாமான்யர்களும் ஈடுபடும்போது, அது, பொதுப் படையானதாகிறது. அறம் சார்ந்த கேள்விகள், வெறுப்புக்கள் இல்லாமல் போய், கொடும் தீமை, கொடும்தீமையாய் காட்சியளிக்காமல் முகமற்றதாகிவிடுகிறது. இந்தத் தேர்தலில் குஜராத் படுகொலை ஒரு விசயமே இல்லை என்றாக்கப்படுகிறது. ‘வளர்ச்சியின் நாயகனுக்கு’ முடிசூட்ட வழிவிடச் சொல்கிறார்கள். நேற்று வரை, மோடி பிரதமர் ஆவது அறச்சீற்றத்தோடு கூடவே கூடாது என பார்க்கப்பட்டது என்றால், இன்று கருத்துக் கணிப்புக்கள், ஊடகக் கருத்துரைகள், அறிவாளிகளின் அபிப்ராயங்கள், அரசியல் தாவல்கள் மற்றும் அய்க்கிய அமெரிக்காவின் ஒப்புதல் என்ற பிரம்மாண்டமான அலை, அந்தக் குற்றங்களை கழுவி அகற்றிவிடுகிறது.

    குஜராத் படுகொலையின்போது, இந்துக்களும் கூட கொல்லப்பட்டார்கள், எனவே, அது ஒரு மதக்கலவரம் என சில அறிவாளிகள் அதற்கு முலாம் பூசும்போது, குற்றத்தின் தீவிரத்தை, மானுடத் துயரத்தின் வீச்சை, குறைக்கப் பார்க்கின்றனர்.

    மோடி குற்றம் நடந்த இடத்தில் இல்லை, சட்டப்படி எடுபடும் சாட்சியம் இல்லையே, பின் எப்படி அவரை குற்றவாளி என்பது என சாமான்யரும் பேச வைக்கப்படுகின்றனர். 2002, 1984 நடந்த படுகொலைகளில் பிரம்மாண்டமான அரசு எந்திரம் உண்மை சாட்சியங்களை அழிக்க, பொய் சாட்சியங்களை உருவாக்க, பயன்படுத்தப்பட்டுள்ள பின்னணியில், சட்ட பூர்வ சாட்சியம் மட்டுமே, அரசியல் தீர்ப்புக்களுக்கு போதுமானதா?

    காங்கிரஸ் ஆட்சியில் 1984ல் பல ஆயிரம் சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். மோடி ஆட்சியில் 2002ல் பல ஆயிரம் இசுலாமியர்கள் கொல்லப்பட்டனர். அதற்கு இது எண்ணிக்கை ரீதியாக சரியாகிப் போய்விட்டது என்ற  பொருள்படவும் பேசப்படுகிறது. உண்மை மனிதர்களும் மானுடத் துயரங்களும், எண்ணிக்கைக் கணக்குகளாக மாற்றப்படுகின்றன.

    இந்தப் பொதுப்படையாக்குதலில் மிகப்பெரிய கருவி வளர்ச்சி என்பதே ஆகும். நாகரிகமான, கல்வியறிவு உடைய, கவுரவமான மனிதர்கள் கூட ‘வளர்ச்சி நாயகன்’ என்பதால் மோடியை சகஜமாக்கப் பார்க்கின்றனர். கலவரங்களுக்கு அவருக்கு தார்மீகப் பொறுப்பு இருக்கலாம்தான்; ஆனால், குஜராத்தின் சாலைகளைப் பாருங்கள் என்கின்றனர்.

    சாக்கியா ஜாஃப்ரி மற்றும் பிற பாதிக்கப்பட்டோரின் வலியை, சாலைகளோடு சமப்படுத்தி பேசும் அறம் எத்தகைய அறம்? இது எத்தகைய தர்ம நியாயம்?

    கொடும்தீமைக்கு அக்கம்பக்கமாக, வளர்ச்சியும் பொதுப்படையானதாக்கப் பட்டுவிட்டது.

    அது வெறும் பொருளாதார வளர்ச்சி என்பதாக சுருக்கப்பட்டுவிட்டது. இங்கு மக்களோ, சுற்றுச்சூழலோ, ஒரு பொருட்டே அல்ல. வளர்ச்சிக்கான தேடலில், மீறப்பட முடியாத அறநெறி கோட்பாடுகள் எவையும் இல்லை. தேசிய ஆளுகையில் நுழைய, முன்பு, அடல் பிஹாரி வாஜ்பாய் பாஜகவின் முகமூடியாக இருந்தார் என்றால், மோடி தலைமையிலான பாஜகவின் தற்போதைய முயற்சியில், வளர்ச்சியே  முகமூடியாக இருக்கிறது.

    ஆனால், வளர்ச்சி பற்றிய அதுபோன்ற, பொதுப்படையான புரிதல் பொதுமக்கள் கற்பனையை கவர்ந்துள்ளது. குஜராத் மாதிரியின் மிகவும் பளிச்சென தெரிகிற அம்சம், வளருகிற அதன் பொருளாதாரத்தில் இருந்து விலகிச் செல்லும் மனித வளர்ச்சி குறியீட்டின் சரிவுதான். உதாரணமாக, அய்க்கிய நாடுகள் வளர்ச்சி திட்டத்தின், சமத்துவமின்மை சரிசெய்யப்பட்ட மனித வளர்ச்சி குறியீட்டின்படி, 19 மாநிலங்களில், குஜராத், கல்வியில் ஒன்பதாவது இடத்திலும், சுகாதாரத்தில் பத்தாவது இடத்திலும் உள்ளது. 1998 - 2008 காலத்துக்கான மனித வளர்ச்சி குறியீட்டின் ஆதாயங்கள் பொறுத்தவரை, 23 மாநிலங்களில், குஜராத், 18ஆவது இடத்தில் உள்ளது. 2009 வருடத்திய முதல் இந்திய அரசு பட்டினிக் குறியீட்டில் 17 மாநிலங்களில், குஜராத், 13ஆவது இடத்தில் உள்ளது. சட்டிஸ்கர், பீகார், ஜார்க்கண்ட் மற்றும் மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்கள் மட்டுமே குஜராத்துக்கு பிந்தைய நிலையில் உள்ளன. ஆயினும், பகவதி போன்ற பிரபலமான பொருளாதார அறிஞர்கள், அதன் பொருளாதாரத்தை புகழ்மிக்கதாகக் காட்டுவதன் மூலம், அதிர்ச்சிதரும் வகையில், வளர்ச்சியை பொதுப்படையானதாக்குகிறார்கள்.

    இந்த விவரங்களும், அனைத்து விதங்களிலும் மனிதர்கள் ஏதுமற்றவர்களாக்கப்பட்டுள்ளது பற்றிய பிற விவரங்களும், தேர்தல் விவாதங்களில் ஒரு பொருட்டாகவே இல்லை என்பதும் அதிர்ச்சி தருகிறது. ஆனால், அப்படி ஏதாவது இருந்தாலும், வளர்ச்சியின் நாயகனின் பிம்பத்தில் அது எந்த பாதிப்பையும் உருவாக்காமல் போகலாம். பொதுப்படையாக்குதலின் சக்தி அப்படிப்பட்டது. ஏனென்றால், யதார்த்த விவரங்களுடன் அதற்கு சம்பந்தமே இல்லை.

    நகர்ப்புற தொழில்கள் அடிப்படையிலான எல்லையற்ற பொருளாதார வளர்ச்சி மாதிரிகளுக்கு, பேரழிவுமிக்க, மானுட - சுற்றுச் சூழல் விலை என்ன என்பதை, வளர்ச்சியடைந்த நாடுகள் உணரும்போது, நாம், நகைமுரணாக, அதே படுபாதாளத்தை நோக்கி வேகமாக விரைகிறோம். சர்வதேச சுற்றுச்சூழல் செயல்பாட்டு குறியீட்டில் இந்தியா 32 இடங்கள் சரிந்துள்ளது. கார்ப்பரேட் தலைமையிலான குஜராத்தில், மனம்போன போக்கில், காடுகளையும் மேய்ச்சல் நிலங்களையும் அழிப்பது அதற்கு இணையான கதைகள்தான்.

    தேர்தல்கள் பற்றிய ஊடக விவாதப் போக்குகள், மனிதர்களின் நல்வாழ்க்கை, சுற்றுச்சூழல் அழிவு, அறநெறிகள் ஆகியவை பற்றியதாக இல்லாமல், ஆளுமைகளுக்கு இடையிலான மோதலின் ஒரு மேம்போக்கான நாடகமாக சுருக்கப்பட்டு விட்டது.

    பொருளாதாரமும் வளர்ச்சியும் அற நெறியில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளபோது, மனித நல்லியல்பு, சிறுபான்மையினர் மீதான வன்முறை அனைத்தும் தழுவிய விதத்தில் பொதுப்படையான அம்சமாகும்போது, பாசிசம் உருவாகிக் கொண்டிருக்கிறது. தார்மீக தேர்வுகள் எப்போதும் கருப்பு வெள்ளையில் இருப்பதில்லை. ஆனால், அவை செய்தாகப்பட வேண்டும். இந்தத் தேர்தல் உண்மையிலேயே ஒரு தார்மீக இருமனது நிலையாக இருக்கும் என்று இந்தியா நம்புமானால், புத்தர் மற்றும் காந்தி பூமியின் மனசாட்சி வெடிப்பின் விளிம்பில் உள்ளது.

Search