COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Saturday, March 15, 2014

மக்கள் சார்பு வளர்ச்சிக்காக மாலெ கட்சிக்கு வாக்களியுங்கள்

காவல்துறை ஆய்வு மற்றும் வளர்ச்சி கழகம் சமீபத்தில் நடத்திய ஆய்வொன்றில், 2012ல் தமிழ்நாட்டில்தான் கூடுதல் எண்ணிக்கையில் போராட்டங்கள் நடந்துள்ளதாக சொல்லப் பட்டுள்ளது. இது 2011ல் நடந்ததைவிடக் கூடுதல். 2011ல் இந்த எண்ணிக்கை 15,746. 2012ல் 21,232. இதில் அரசு ஊழியர்களும் பிற தொழிலாளர்களும் நடத்திய போராட்டங்கள் மட்டும் 4,112. இந்த எண்ணிக்கையிலும் தமிழ்நாடுதான் முதலிடம் பெற்றுள்ளது.

தொழிலாளர் போராட்டங்கள் பொறுத்தவரை, கணக்கில் வராதவை, கண்டுகொள்ளப்படாதவை எண்ணிக்கை இன்னும் கூடுதலாக இருக்க வாய்ப்புக்கள் உள்ளன. மாநிலத்தில் நடக்கும் போராட்டங்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது என்றால், மாநில மக்கள் கொந்தளித்துப் போய் இருக்கிறார்கள், அரசின் உரிமை பறிப்பு மற்றும் ஒடுக்குமுறை நடவடிக்கைகளுக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்று பொருள். தமிழக அரசுக்கு சட்டமன்றத்துக்குள்தான் எதிர்ப்பில்லையே தவிர, மக்கள் மன்றத்தில் தொடர்ச்சியான தீவிரமான எதிர்ப்புக்கள் இருந்து வருகின்றன என்று பொருள்.

2011ல் ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, தமிழ் நாட்டு மக்கள் வளம் பல பெற்று மகிழ்ச்சியுடன் இருப்பதாக ஜெயலலிதா தொடர்ந்து சொல்லி வருகிறார். ஜெயலலிதாவின் இந்தக் கூற்றை இந்த ஆய்வு தரும் விவரங்கள் பொய்யென தெளிவாகக் காட்டியுள்ளன.

ஜெயலலிதா வெளியிட்ட தேர்தல் அறிக்கைக்கு போட்டி அறிக்கையை கருணாநிதி வெளியிட்டுவிட்டார். சொன்னதைச் செய்யப் போகிறார்களா என்ன? சொல்வதில் சொல் செலவு தவிர வேறு செலவுதான் என்ன ? ஜெயலலிதா ரூ.5 லட்சம் வருமான வரி விலக்கு என்றால், கருணாநிதி ரூ.6 லட்சம், ஜெயலலிதா 10 கோடி வேலை வாய்ப்பு என்றால், கருணாநிதி 20 கோடி வேலை வாய்ப்பு. இரண்டு பேரையுமே தமிழக மக்கள் போதுமான அளவுக்கு பார்த்து விட்டார்கள். நிச்சயம் இந்த வெற்று வீச்சு அறிக்கைகளை நம்ப மாட்டார்கள் என்று ஜெயலலிதாவுக்கும் கருணாநிதிக்குமே தெரியும்.

இரண்டு தேர்தல் அறிக்கைகளும் கச்சத்தீவு மீட்பு பற்றி பேசுகின்றன. இன்னும் கூட கச்சத்தீவு மீட்கப்படாததுதான் தமிழக மீனவர் பிரச்சனைகளுக்குக் காரணம் என்றும் கச்சத்தீவு மீட்கப்பட்டுவிட்டால் தமிழக மீனவர் பிரச்சனை தீர்ந்துவிடும், அதுவரை தீராது என்றும் ஜெயலலிதா, கருணாநிதி இருவருமே வலிந்து சொல்லப் பார்க்கின்றனர். நிரந்தர ஏமாற்று அரசியலுக்கு வழிசெய்து கொள்ளப் பார்க்கின்றனர்.

ஆனால், கச்சத்தீவு பிரச்சனைக்கு அப்பால் தமிழகத்துக்கு உள்ளேயே தீர்க்கப்பட வேண்டிய ஏராளமான பிரச்சனைகளை மீனவர்கள் எதிர்கொள்கிறார்கள் என்பதை சமீபத்திய நாட்டுப் படகு மீனவர் போராட்டங்கள் சொல்கின்றன.

தமிழ்நாட்டின் விசைப்படகு மீனவர்கள் அந்நிய மீன்பிடி கலன்களுடன் சமனற்ற போட்டியில் ஈடுபட வேண்டியிருப்பதுபோல், தமிழ் நாட்டின் நாட்டுப்படகு மீனவர்கள் விசைப் படகு மீனவர்களுடன் போட்டியில் இறங்கும் நிலை உள்ளது. சமீப நாட்களில் இந்தப் போட்டி வலுத்து இரு பிரிவு மீனவர்கள் தங்களுக்குள் போரிட்டுக் கொண்டிருக்கிறார்கள். நாட்டுப் படகு மீனவர்கள் நடத்திக் கொண்டிருக்கிற போராட்டம் பற்றி ஜெயலலிதா தனது தேர்தல் பிரச்சாரத்தில் பேசவில்லை. அவர்களுக்கு எந்த ஆறுதலும் சொல்லவில்லை. எந்த உறுதியும் அளிக்கவில்லை.

விசைப்படகு மீனவர்கள் இரட்டை மடி, சுருக்கு மடி போன்ற தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன் பிடிப்பதாகவும் இதனால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் பாம்பன் பகுதி நாட்டுப் படகு மீனவர்கள் புகார் எழுப்புகின்றனர். ஒருமாத காலமாக போராட்டங்கள் நடத்துகின்றனர். விசைப்படகு மீனவர்கள் தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துவதால்தான் இலங்கை மீனவர்களுக்கும் தமிழக மீனவர்களுக்கும் பிரச்சனை ஏற்படுகிறது என்று சொல்லும் அளவுக்குச் சென்றுள்ளனர். இதில் உண்மை இருக்கவும் வாய்ப்புள்ளது. நாட்டுப் படகு மீனவர்கள் மூன்று கடல் மைல் தொலைவுக்குள்தான் மீன் பிடிக்க வேண்டும் என்று அதிகாரிகள் வலியுறுத்துவதும் நாட்டுப் படகு மீனவர்கள் தொழிலை முடக்குகிறது.

நாட்டுப்படகு மீனவர்களின் தொடர் எதிர்ப்பு மற்றும் வலியுறுத்தல் காரணமாக 41 விசைப்படகுகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், விசைப்படகு மீனவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

விசைப்படகில் மீன்பிடிக்க விசைப்படகு உரிமையாளர்களே கடலுக்குள் செல்வதில்லை. மீன்பிடி தொழிலாளர்கள்தான் செல்கிறார்கள். இலங்கை, இந்திய கடற்படை முதல் இருநாடுகளின், பிற மாநிலங்களின் சக மீனவர்களால் ஏற்படும் பிரச்சனைகள்வரை எல்லா பாதிப்புக்களையும் அவர்கள்தான் எதிர்கொள்கிறார்கள். அவர்களை தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்த வற்புறுத்துவது விசைப்படகு உரிமையாளர்களே. மீன்பிடியில் லாபம் கிடைத்தால் விசைப்படகு உரிமையாளருக்கு. பிரச்சனை வந்தால் அது அந்த விசைப்படகில் ஏறி உயிரை பணயம் வைத்து மீன் பிடிக்கச் செல்லும் தொழிலாளிக்கு.

கூடங்குளம் அணுஉலை அந்தப் பகுதி மீனவர் வாழ்க்கையை முழுவதுமாக அழித்து விடும். தமிழகத்தின் கடலோரங்களில் அமைக்கப்படுகிற தனியார் மின்உற்பத்தி நிலையங்கள் வெளியேற்றுகிற கழிவு அங்குள்ள மீன்வளத்தை அழித்துவிடும். கடலோரப் பகுதிகளில் அமைக்கப்படும் கேளிக்கை விடுதிகள் மீனவ மக்களை வாழ்விடங்களில் இருந்து அகற்றிவிடும். இவற்றுக்கும் கச்சத்தீவுக்கும் என்ன சம்பந்தம்?

கடல்வளத்தை நம்பியிருக்கும் மீனவர் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் அனைத்துவிதமான நடவடிக்கைகளுக்கும் துணையிருந்துவிட்டு, அவர்கள் வாழ்வாதாரத்தை காக்கும் எந்த முயற்சியும் எடுக்காமல் இருந்துவிட்டு கச்சத்தீவு வேண்டும் என்று கண்ணீர் வடிப்பது அஇஅதிமுகவும் திமுகவும் தமிழ்நாட்டில் பல பத்தாண்டுகளாக நடத்திக் கொண்டிருக்கிற நாடகம். தமிழ்நாட்டின் அனைத்துபிரிவு உழைக்கும் மக்கள் பிரச்சனைகளிலும் அஇஅதிமுக, திமுக கட்சிகளின் அணுகுமுறை இப்படியே தான் இருந்துள்ளது.

இத்தனை ஆண்டுகளாக தமிழ்நாட்டின் திராவிடக் கட்சிகள் நடத்திக் கொண்டிருந்த நாடகங்களின் உச்சபட்ச காட்சிகள் அடுத்த 40 நாட்களுக்கு அரங்கேறப் போகின்றன. தேர்தல் அறிவித்த பிறகும் கூட்டணிகள் முடிவாகாமல் கூட்டணி பேர கட்சிகள் திணறுகின்றன. மக்கள் மட்டுமின்றி, எண்ணிக்கை பேரத்தில் இருக்கும் முதலாளித்துவ அரசியல் கட்சிகளும் தேர்தல் நடக்கும் முன்பே காங்கிரசை புறக்கணித்து விட்டன. பெரியார் மண்ணில் மதவெறி பாஜகவை பலப்படுத்தும் பணியை இந்த முறை வைகோ, ராமதாசுடன் சேர்ந்து விஜயகாந்த் எடுத்துக் கொண்டுள்ளார்.

அதிகாரபூர்வ இடதுசாரிகள் தனித்துப் போட்டியிடும் முடிவுக்கு தள்ளப்பட்டுவிட்டனர். இப்போது வேறுவழியின்றி நடந்தது, இதன் பிறகு, கொள்கைரீதியாக தொடர்வது தமிழக மக்கள் மத்தியில் நிச்சயம் வரவேற்பை உருவாக்கும்.

 தமிழ்நாட்டில் மக்கள் போராட்டங்களை எதிர்க்கட்சிப் பாத்திரம் ஆற்ற வைத்துக் கொண்டிருக்கும் மாலெ கட்சி, திருபெரும்புதூர், கோயம்புத்தூர், திருச்சி, கன்னியாகுமரி மற்றும் விழுப்புரம் தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஊழல், கார்ப்பரேட் கொள்ளை, மதவெறி ஆகியவற்றுக்கு எதிராக, மக்கள் சார்பு வளர்ச்சிப் பாதைக்காக மாலெ கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் எனக் கோருகிறது.

Search