COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Monday, March 31, 2014

திருபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதி

தமிழக நாடாளுமன்றத் தொகுதிகளிலேயே அதிகமாக 18.5 லட்சம் வாக்காளர்களைக் கொண்ட தொகுதி திருபெரும்புதூர். திருபெரும்புதூர், அம்பத்தூர், மதுரவாயல், பல்லாவரம், தாம்பரம், ஆலந்தூர் என 6 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. திருபெரும்புதூர் சட்டமன்றத் தொகுதியில் மட்டும் 2 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இங்கு பன்னாட்டு, இந்நாட்டு நிறுவனங்கள், தொழிலாளர்களின் தொழிற்சங்க உரிமை உட்பட எல்லா அடிப்படை உரிமைகளையும் மறுக்கின்றன.

ஆட்டோமொபைல் தொழிலை பொதுப்பயன்பாட்டு சேவையாக அறிவிக்க திமுக முயற்சித்தது. அது போராட்டங்களுக்கு தடை போடும் முயற்சி. அஇஅதிமுக அதற்கான உத்தரவை பிறப்பித்து, அது காலாவதியான நிலையில் அதை நீட்டிக்க முயற்சிக்கிறது. நீட்டிக்கக் கூடாது என தொழிலாளர்கள் ஏஅய்சிசிடியு தலைமையில் இயக்கம் நடத்துகிறார்கள்.
தொகுதியில் போதிய அரசு பள்ளிகள் கல்லூரிகள் இல்லை. சாலைகள் குண்டும், குழியுமாய் உள்ளன. ஏரி, குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. முறையான, சுகாதாரமான குடிநீர் வசதி இல்லை. அனைத்து வசதிகளும் கொண்ட அரசு மருத்துவமனை கிடையாது. தொழிலாளர்கள் வேலைக்குச் செல்ல போதிய பேருந்து வசதி கிடையாது. ஆனால் மூலை முடுக்கெல்லாம் சாராய கடைகள் உண்டு.

பயிற்சியாளர்களை, ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரத்தன்மை கொண்ட பணியில் அமர்த்தி லாபம் பார்க்கும் தொழிற்சாலை நிர்வாகங்களுக்கு எதிராக தொழிலாளர் மத்தியில் சீற்றம் காணப்படுகிறது. பயிற்சியாளர் முறைக்கு எதிரான தமிழக மசோதா 47/2008 சட்டமாக்கப்படவில்லை. அதற்கு மத்திய, மாநில அரசுகள் தயாரில்லை. சமவேலைக்கு சம ஊதியமில்லை.


இந்தக் கோரிக்கைகள் மீது லட்சம் கையெழுத்துக்கள் பெறும் இயக்கம் திட்டமிட்ட வகையில் தொழிலாளர்களின் உணர்வுபூர்வமான ஈடுபாட்டோடு நடத்தப்பட்டது. இகக(மாலெ), புரட்சிகர இளைஞர் கழகம் மற்றும் ஏஅய்சிசிடியு ஊக்கமுடன் பங்கெடுத்தன. தொகுதியில் உழைக்கும் மக்களின் அபிலாசைகளை பிரதிபலிக்கும் கட்சியாக இகக(மாலெ) வளர்ந்து வருகிறது.

அம்பத்தூர் பகுதியில் டாஸ்மாக் சாராயக் கடையை மூட வலியுறுத்தி நடத்தப்பட்ட தொடர் போராட்டத்துக்கு பொதுமக்களின் பேராதரவு இருந்தது. தொகுதியின் இகக மாலெ வேட்பாளர் தோழர் பாரதி தலைமையில் தலைமைச் செயலகம் முற்றுகை, டாஸ்மாக் தலைமையகம் முற்றுகை, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீடு நோக்கிய பேரணி, கைது என இளைஞர்களின் எழுச்சிமிகு போராட்டமாக அவை அமைந்தன. பிற அரசியல் கட்சிகள் வெறும் ஓட்டுக்காக மக்களை அணுகும் வேளையில் மக்கள் பிரச்சனைகள் மீது மாலெ கட்சி மட்டுமே உயிர்த்துடிப்பான மக்கள் பங்களிப்புடன் கூடிய இயக்கம் கண்டது.

 தோழர் கு.பாரதி (வயது 32) சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர். புரட்சிகர இளைஞர் கழக தேசிய செயலாளர். மாலெ கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர். 1996 அம்பத்தூர் டன்லப் ஆலை மூடப்பட்டபோது அதற்கு எதிரான பள்ளி மாணவர் போராட்டத்தின் மூலம் அகில இந்திய மாணவர் கழகத்திற்கு வந்தவர். 2000ல் இகக(மாலெ) கட்சியில் இணைந்தார். மாணவர், இளைஞர் அமைப்புகளில் பல்வேறு பொறுப்புகள் வகித்தவர்.  சட்டக் கல்லூரி பயிலும்போதும், உயர்நீதிமன்ற வழக்கறிஞராகவும் உரிமைக்கான போராட்டத்தில் ஈடுபட்டு 2 முறை சிறை சென்றவர். ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கத்தின் அமைப்பாளராகவும் உள்ளார்.

Search