22.04.2020 லெனின் 150ஆவது ஆண்டு பிறந்த தினம்
நாம் கனவு காண வேண்டும்
‘நாம் கனவு காண வேண்டும்’ என்று எழுதினேன், எழுதிவிட்டு பயந்து போனேன். நான் ஓர் ‘ஒற்றுமை மாநாட்டில்’ உட்கார்ந்திருப்பது போலவும் எதிரே ரபோச்சியே தேலோ ஆசிரியர்களும் கட்டுரையாளர்களும் உட்கார்ந்திருப்பது போலவும் கற்பனை செய்தேன். தோழர் மார்தீனவ் எழுந்து என் பக்கம் திரும்பி கடுங்கண்டிப்புடன் ‘கட்சி கமிட்டிகளின் கருத்தை முதலில் கேட்டுத் தெரிந்துகொள்ளாமல் சுயேச்சையுள்ள ஓர் ஆசிரியர் குழுவுக்குக் கனவு காண உரிமையுண்டா?’ என்று சொல்கிறார். அவரைத் தொடர்ந்து தோழர் கிரிச்சேவ்ஸ்கி வருகிறார். (வெகு காலத்திற்கு முன்பே தோழர் பிளெஹானவை விட ஆழமாகப் பார்த்த தோழர் மார்தீனவை மெய்யறிவு விசயத்தில் மிஞ்சி ஆழமாகப் பார்க்கும்) இவர் மேலும் கடுங்கண்டிப்புடன் ‘நான் இன்னும் மேலே போய் கேட்கிறேன்: மார்க்சின் கருத்துப்படி தன்னால் நிறைவேற்றக்கூடிய பணிகளைத்தான் எப்போதும் மனிதகுலம் எடுத்துக் கொள்கிறது என்பதை அறிந்திருந்தும், கட்சியோடு கூடவே வளர்கிற கட்சிப் பணிகளின் வளர்ச்சியை சேர்ந்த நிகழ்வுப்போக்குதான் போர்த்தந்திரம் என்பதையும் அறிந்திருந்தும் ஒரு மார்க்சியவாதிக்குக் கனவு உரிமையுண்டா?’ என்கிறார்.
இந்தக் கடுங்கண்டிப்புள்ள கேள்விகளை நினைத்துப் பார்த்தாலே எனக்குப் பயமாயிருக்கிறது, எங்காவது போய் ஒளிந்து கொள்ளலாம் போலிருக்கிறது. நான் பீசரெவிடம் தஞ்சம் புகலாம் என்று நினைக்கிறேன்.
கனவுகளுக்கும், எதார்த்தத்துக்குமுள்ள வேற்றுமை பற்றி பீசரெவ் எழுதியதாவது: ‘வேற்றுமைகளில் பலவகை உண்டு. நிகழ்ச்சிகளின் இயல்பான தடையைத் தாண்டி என் கனவு முன்னே ஓடக்கூடும். அல்லது நிகழ்ச்சிகளின் எந்த இயல்பான நடையும் என்றைக்கும் போகாத ஒரு திசையில் அது பாய்தோடலாம். முதலில் சொன்ன வழக்கில் என் கனவு தீங்கெதுவும் செய்யாது. அது தொழிலாளியின் ஆற்றலை ஆதரித்து அதிகப்படுத்தவும் கூடும்... உழைப்பு சக்தியை உருக்குலைக்கவோ முடமாக்கவோ செய்கிற வகையில் இக்கனவுகளில் ஏதுமில்லை. மாறாக இவ்வடிவில் கனவு காணும் திறமை மனிதனிடமிருந்து முற்றாகப் பறிக்கப்பட்டால், தன் கைகள் உருவங்கொடுக்கத் தொடங்கியிருக்கும் பொருளைப் பற்றி மனிதன் அவ்வப்பொழுது முன்னே ஓடி ஒரு முழுமையான முடிவுற்ற சித்திரத்தை மனதில் உருவாக்கிக் கொள்ள முடியாமற்போனால், அவன் கலைத் துறையிலோ விஞ்ஞானத் துறையிலோ நடைமுறை செயல்துறையிலோ விரிவான, கடுமையான பணியை மேற்கொள்ளும் படி செய்யக்கூடிய தூண்டுகோல் வேறெது என்று என்னால் சிந்தித்துப் பார்க்க முடியவில்லை... கனவு காண்பவர் காரியப்பற்றோடு தன் கனவை நம்பினால் போதும், வாழ்க்கையை அவர் உன்னிப்புடன் கவனித்துத் தன் ஆகாயக் கோட்டைகளுடன் தன் கூர்நோக்குகளை ஒப்பிட்டுப் பார்த்து, பொதுவாகவே தன் கற்பனைகளை ஸ்தாபித்துக் கொள்ள உண்மையாக உழைத்தால் போதும், கனவுக்கும் எதார்த்தத்திற்குமுள்ள வேற்றுமையினால் எந்தத் தீங்கும் விளையாது. கனவுக்கும் வாழ்க்கைக்கும் இடையே கொஞ்சம் தொடர்பிருந்தால் எல்லாம் சரி’.
துரதிருஷ்டவசமாக, இப்படிக் கனவு காண்பது நம் இயக்கத்தில் அரிதாகவே உள்ளது. நிதானப் புத்தியுள்ள கருத்துகள் உள்ளவரென்றும் ‘ஸ்தூலமான அம்சத்தோடு’ நெருக்கமான பிணைப்புள்ளவரென்றும் பெருமையடித்துக் கொள்கிறவர்கள்தான், சட்டபூர்வமான விமர்சனத்திற்கும் சட்டவிரோதமான வால்பிடிக்கும் போக்குக்கும் பிரதிநிதிகளாக இருப்பவர்கள்தான் இதற்குப் பெரிதும் பொறுப்பாளிகளாவர்.
- லெனின், என்ன செய்ய வேண்டும்?