COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Sunday, April 5, 2020

தலையங்கம்
ஏப்ரல் 3, 2020

திசைதிருப்பும் முயற்சிகள் நிறுத்தப்பட்டு 

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும்

நிலவுகிற இக்கட்டான நாட்களில் கூட பிரதமர் மோடி ஊடகங்களைச் சந்திப்பதில்லை. கைதட்டு, விளக்கு ஏற்று என்று சிரிப்பு பிரதமர் ஆகிவிட்டார்.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஊடகங்களைச் சந்திக்கிறார். தொலைபேசியிலும் அலைபேசியிலும் நேரடியாக அழைத்து நம்மை எச்சரிக்கையாக பாதுகாப்பாக இருக்கச் சொல்லி சொல்கிறார். இதற்காக மகிழ்ச்சி அடைய முடியவில்லை. ரஜினிகாந்த், குருமூர்த்தி எழுதித் தருவதை மனப்பாடம் செய்து ஒப்பிப்பதுபோல், மோடி எழுதித் தந்ததை சாரம் பிசகாமல் தமிழ்நாட்டுக்கு ஏற்றாற்போல் சற்று மாற்றிச் சொல்கிறார் என்பது டில்லி சென்று திரும்பியவர்கள் பற்றி அவர் பேசியதில் தெரிய வந்தது.
ஏப்ரல் 14க்குப் பிறகு ஊரடங்கு நீடிக்குமா என்று ஒரு பத்திரிகையாளர் கேட்க அது பற்றி மத்திய அரசுதான் முடிவு எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் சொன்னது மோடியின் திரைக்கதைத்தான் இந்த சமயத்தில் கூட தமிழ்நாட்டில் ஓடிக் கொண்டிருக்கிறது என்பதற்கு இன்னுமொரு சான்று.
தேர்வுகள் ரத்து, பள்ளிகள் மூடல், திறப்பு, திறப்பு ரத்து என்ற மாற்றி மாற்றி வெளியான அறிவிப்புகளிலும் மோடியின் தலையீடு இருந்திருக்க வாய்ப்புண்டு. இது தமிழக அமைச்சர் பெருமக்களின் சொந்த குளறுபடியாகவும் இருக்கலாம் என்றே தமிழக மக்கள் அனுபவம் சொல்கிறது.
ஊரடங்கு பற்றி மத்திய அரசுதான் முடிவு எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் சொல்வது கூடுதல் கவலைகளையும் கரிசனங்களையும் உருவாக்குகிறது. மோடி அறிவித்த ஒரு நாள் ஊரடங்குக்குப் பிறகு தமிழக அரசு மார்ச் 31 வரை ஊரடங்கு அறிவித்தது. தமிழக அரசு மார்ச் 31 வரை ஊரடங்கு அறிவித்த பிறகுதான் ஏப்ரல் 14 வரை 21 நாட்கள் ஊரடங்கு என்ற மோடியின் அறிவிப்பு வந்தது. அப்படியானால், மத்திய அரசு அறிவிக்கும் முன்பே, தமிழ்நாட்டில் ஊரடங்கு அறிவிப்பதற்கான அவசியம் இருந்தது. அதை தமிழக அரசு உணர்ந்திருந்தது. பக்கத்தில் கேரளத்தில் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டதும் ஒரு காரணம். மகாராஷ்டிராவுக்கு அடுத்து தொற்றில் இரண்டாம் இடத்துக்கு வந்துவிட்டோம்.
இந்தப் பின்னணியில், ஊரடங்கு நீடிப்பது பற்றி மத்திய அரசு முடிவு எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் சொல்லும்போது, அவருக்கு தமிழ்நாட்டு நிலைமைகள் பற்றி முழுவதும் தெரியவில்லை என்றுதான் நாம் முடிவு செய்ய வேண்டியுள்ளது. மாவட்டந்தோறும் ஓடித்திரிந்து தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டு அவ்வப்போது பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி செய்திகள் சொல்லிக்கொண்டிருந்த அமைச்சர் விஜயபாஸ்கர் இடத்தை துறை செயலாளர் பீலா ராஜேஷ் நிரப்பிக் கொண்டிருக்கிறார். துறை அமைச்சர் என்னவானார்? நேரடியாக காட்சிக்கு வராமல் முன்னரே எடுக்கப்பட்ட காட்சி ஒன்றில் வந்து ஏதோ சொல்லிவிட்டுப் போகிறார்.
காய்கறி வாங்க, இறைச்சி வாங்க மக்கள் கூடுகிறார்கள் என்று மக்கள் மீது குற்றம் சுமத்துவது எளிது. அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்கும் என்று உறுதிபடச் சொல்வது மட்டும் அத்தியாவசியப் பொருட்களை மக்களிடம் எடுத்துச் சென்று சேர்க்காது. அதற்கான நடவடிக்கைகள் வேண்டும். கேரளத்தைவிட மேலான உள்கட்டமைப்பு இருக்கிற இடத்தில், கேரள அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளையே எடுத்தால்கூட மக்கள் கூடுவதைத் தடுத்துவிட முடியும். புதிதாகக் கூட யோசிக்க வேண்டியதில்லை. (யோசிக்காமல் இருந்தால் நல்லது என்று நமக்குத் தோன்றுகிறது. நாப்கின் தருவது பற்றி செல்லூர்காரர் எங்கோ பேசியிருக்கிறார்).
தமிழ்நாட்டைவிட சிறியதொரு மாநிலம் ரூ.20,000 கோடி ஒதுக்கி தடுப்பு நடவடிக்கைகளை அமலாக்கும்போது, ரூ.3,200 கோடிக்கு சில அறிவிப்புகள் செய்துவிட்டு மத்திய அரசு நிதி தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருப்பது குற்றமய அலட்சியம். தமிழ்நாட்டில் இல்லாத பணமா? கண்டெய்னர் கண்டெய்னராக பணம் வைத்திருக்கும் மாநிலம் என்ற பெருமை நமக்குண்டு.
மருத்துவ கட்டமைப்பு தயார்நிலையில் வைப்பது எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவுக்கு தடுப்பு நடவடிக்கைகளும் முக்கியம். உண்மையில் கூடுதல் அவசியமும் கவனமும் தடுப்பு நடவடிக்கைகளுக்கு தேவை. இங்குதான் தமிழக அரசின் நடவடிக்கைகளில் மிகப் பெரிய இடைவெளி காணப்படுகிறது.
தொற்று தடுப்புக்கு மக்கள் கூடுவதை தடுப்பது மிகவும் அவசியம் என்றால், உணவுப் பொருட்களை, நிவாரண நிதியை வீடுகளுக்குச் சென்று தருவது தமிழ்நாட்டில் ஒரு விசயமே இல்லை. ஏற்கனவே தன்னார்வலர்கள் பலர் தாங்களாகவே, பல்வேறு சேவைகளைச் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். அவகாசம் இல்லை, எனவே கடைகளில் தருகிறோம் என அரசு சொல்வது குற்றமய அலட்சியம்.
இடம்பெயரும் தொழிலாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட பொருட்கள் அவர்களுக்குச் சென்று சேர்ந்ததா? காஞ்சிபுரம் மாவட்டம் காட்ரம்பாக்கத்தில் 1,500க்கும் மேற்பட்ட பிற மாநிலத் தொழிலாளர்கள் உள்ளனர். அவர்கள் நிலைமை என்ன என்று கண்டறியப்பட்டதா? அசாமைச் சேர்ந்த 80 தொழிலாளர்கள் முகாம் ஒன்றுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். திருவள்ளூர் அருகில் மணவாளன் நகரில் இடம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவுப் பொருட்கள் கிடைக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இடம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு மூன்று மாதங்களுக்கு மாதம் 15 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு, 1 கிலோ எண்ணெய் என்ற 110 அறிவிப்பு 108ல் ஏற்றப்பட்டுவிட்டதா?
இதுவரை எடுக்கப்பட்டுவருகிற தொற்று தடுப்பு நடவடிக்கைகள் நகரங்கள் சார்ந்தவையாக இருக்கின்றன. கிராமப்புறங்களில் கிருமி நாசினி தெளிக்கும் அடிப்படை பணியை கூட கிராமத்து இளைஞர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள். ஊராட்சிப் பணியாளர்கள், உள்ளூர் மட்ட வருவாய் அதிகாரிகள் என்ன செய்கிறார்கள், என்ன திட்டம், என்ன அமலாக்கம் என்று தெளிவாக எதுவும் சொல்லப்படவில்லை. கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில், அடுத் தடுத்த மட்ட மருத்துவமனைகளில் என்ன முன்னேற்பாடுகள், ஏற்கனவே அடிப்படை வசதிகள் முறையாக செயல்பாட்டில் இல்லாத அந்த மருத்துவமனைகளில் அவற்றை எப்படி சமாளிப்பார்கள் என்ற தகவல்கள் வெளிப்படையாக இருப்பது மக்களுக்கு இந்த நேரத்தில் நம்பிக்கை தர மிகவும் அவசியம். இந்த நேரத்தில் தமிழக அரசு காட்டும் மெத்தனமும் மந்தத் தனமும் பெருங்குழப்பத்துக்கு இட்டுச் சென்று விடும். தமிழக அரசு காலம் தாழ்த்தாமல், இன்னும் துரிதமாக, போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு பின்வருவனவற்றை நிறைவேற்ற வேண்டும்:
ஏப்ரல் 14 முடிந்தவுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முடிவுக்கு வந்துவிடாது. அதன் பிறகு இந்த நடவடிக்கைகள் தீவிரம் பெற நேரலாம் என்பதை தமிழக அரசு உணர வேண்டும். அதற்கான தயார்நிலை வேண்டும்.
மத்திய அரசு நிதி தர வேண்டும் என்று காலம் கடத்தாமல் கூடுதல் நிதி ஒதுக்கி, பாதுகாப்பு மற்றும் மருத்துவ உபகரணங்கள் போதுமான அளவு இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். மாநிலத்தின் ஒட்டுமொத்த மருத்துவ கட்டமைப்பும் தயார் நிலையில் வைக்கப்பட வேண்டும். பரிசோதனைகளுக்கு பஞ்சம் இருக்கக் கூடாது.
ஒரு லட்சம் வீடுகளில் 4 லட்சம் பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர் என்று முதலமைச்சர் சொன்ன தகவல் உள்ளிட்ட, தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான விவரங்கள் மக்களுக்கு உடனுக்குடன் தெரியப்படுத்தப் பட வேண்டும்.
மருத்துவர்கள், செவிலியர்கள், பிற வகை மருத்துவ ஊழியர்கள் துப்புரவு தொழிலாளர்கள் அனைவருக்கும் முறையான பாதுகாப்பு கவசங்கள் உறுதி செய்யப்பட வேண்டும்.
நூறு நாட்கள் வேலை செய்பவர்களுக்கு இரண்டு நாட்கள் கூலி என்ற பெருந்தொகை போக, அவர்கள் பட்டினியில் வாடாமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். ஊரடங்கால் ஊதியம் இழந்த நகர்ப்புற, நாட்டுப்புற தொழிலாளர்கள் அனைவருக்கும் மாதம் ரூ.15,000 வழங்கப்பட வேண்டும்.
கொரோனா சங்கிலியை அறுப்பதில் கவனம் செலுத்த, அளிப்புச் சங்கிலி அறுந்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு வந்துவிடாமல் இருக்க தேவையானவற்றைச் செய்ய வேண்டும்.
சமூக விலகலை கறாராக அமல்படுத்த காவல்துறையினரை மட்டும் நம்பியிராமல் அத் தியாவசிய உணவுப் பொருட்கள் மக்கள் இருக்கும் இடங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு விநியோகிக்கப்பட வேண்டும்.
தனியார் மருத்துவமனைகள், திருமண மண்டபங்கள் (நீங்கள் கேட்டால் ராகவேந்திராவை ரஜினிகாந்த் தரமாட்டாரா என்ன) என அனைத்தும் அரசு கட்டுப்பாட்டில் எடுக்கப்பட வேண்டும். முகாம்கள் என்ற பெயரில் அடிப்படை வசதிகள் இல்லாத இடங்களில் மக்களை அடைத்து வைப்பதற்குப் பதிலாக இதுபோன்ற இடங்களில் அவர்கள் தங்க வைக்கப்பட்டு தண்ணீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் உறுதி செய்ய வேண்டும். இந்த நேரத்தில் புதிய நோய் வராமல் தடுப்பதும் அரசின் கடமை.
இடம்பெயரும் தொழிலாளர்கள் இருக்கும் இடங்கள் கண்டறியப்பட்டு அந்த இடங்களில் அம்மா உணவகங்கள் இல்லையென்றால் சமூக உணவுக் கூடங்கள் உருவாக்கப்பட வேண்டும். தரமான உணவுகள் அவர்களுக்குத் தரப்பட வேண்டும்.
கிராமப்புறங்களில் கண்காணிப்பும் தொற்று தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட வேண்டும்.
துப்புரவு பணி முதல் விநியோகப் பணி வரை பல்வேறு பணிகளுக்கு தன்னார்வலர்கள் பதிவு செய்து கொள்ளலாம் என்ற தமிழக அரசின் அழைப்பு என்ன ஆனது? வெள்ளம், மழை, புயல் காலங்களில் தன்னார்வப் பணி பார்த்த வர்கள்போல் இப்போதும் பலரும் தயாராக இருக்கக் கூடும். அவர்களைக் கொண்டு பல பணிகளை நடத்திவிட முடியும். இந்த விசயத்தில் என்ன நடந்துள்ளது என்று தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் காணப்படும் இடைவெளிகளை மதச்சாயம் பூசி மறைக்க சிலர் மேற்கொள்ளும் முயற்சி ஆபத்தானது. தொற்று பரவிய நேரத்தில் கூட்டமாக ஓரிடத்தில் இருந்துவிட்டு திரும்பியவர்களை பரிசோதிக்க வேண்டியது மிகமிக அவசியம் என்பதை யாரும் இப்போது மறுக்கப் போவதில்லை. அதையே மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டு செய்தாக வேண்டிய மற்ற நடவடிக்கைகளை தள்ளிப்போடுவது, செய்யாமல் விடுவது, புதிய சகஜநிலை காலத்தில் நாம் காண்பது போல் திசைதிருப்பி விடுவது ஆகியவை ஆபத்தானவை. தொற்றுப் பரவலுக்கு சிறுபான்மையினரே காரணம் என்ற கதையாடலை கட்டமைத்து பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அதற்கு முற்றுப் புள்ளிவைக்கப்பட்டு உண்மையான தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும். 

Search