COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Wednesday, April 29, 2020

தோழர் ஜேபியின் நாட்குறிப்பு

மாநில அமைப்புக் குழு உறுப்பினர்

2019 டிசம்பர் முதல் உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று தொடர்பான முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கை எதுவும் இல்லாமல்
நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதிலும், அய்க்கிய அமெரிக்க அதிபரின் இந்திய வரு கையையொட்டி பொருளாதார தீண்டாமை சுவர் எழுப்புவதிலும் ஆட்சி கவிழ்ப்பு குதிரை பேரத்திலும் ஈடுபட்டிருந்த பாஜக தலைமையி லான மத்திய அரசு, அனைத்து ஊடகங்களும் எதிர்கட்சிகளும் கொரோனா அபாயம் குறித்து பேசியபோதும் மவுனம் காத்து வந்த மத்திய அரசு, திடீரென மார்ச் 20 அன்று இரவு தொலைக்காட்சியில் மோடி மூலம் தோன்றி 22.03.2020 ஒரு நாள் ஊரடங்கு அறிவித்தது. மோடி, பரிவார் கூட்டத்தின் குதிரை பேரம் முடிவுக்கு வந்ததை கொண்டாடும் விதம் அன்று மாலை பால்கனிகளில் நின்று கை தட்டுங்கள் என்றார். முன்னெச்சரிக்கையாக அப்போதே குடிசைவாழ் மக்கள் பற்றியோ, வீடற்ற மக்கள் பற்றியோ எதுவும் பேசவில்லை. அன்று ஞாயிற்றுக் கிழமை என்பதாலும் தெருக் களில் மக்கள் நடமாட்டம் இன்றி இருந்தனர்.
எதிர்பார்த்துக் காத்தி ருந்ததுபோல் பிரிக்கால் நிர்வாகம் மார்ச் 22 இரவே நாளை முதல் ஆலை இயங்காது என அறிவித்தது.
23.03.2020: மார்ச் 23 காலை 7 மணிக்கு தோழர்கள் சுவாமிநாதன், நடராஜன் மற்றும் ஜேபி ஆலை வாயிலுக்கு சென்றிருந்தோம். தகவல் தெரியாத குறைவான தொழிலாளர்களே வந்திருந்தனர். ஆலைக்குள் சென்ற தோழர்கள் சுவாமிநாதன் மற்றும் நடராஜனிடம் நிர்வாக அதிகாரிகள், 31.03.2020 வரை ஆலை இயங்காது என தெரிவித்தனர். சம்பளம் பற்றி நிர்வாகிகள் கேட்டதற்கு அது பற்றி  தங்களுக்கு தெரியாது எனவும் முடிவு செய்தவுடன் தெரிவிப்பதாகவும் சொன்னார்கள்.
மார்ச் 23 மாலை கேஎம்பிடிஓஎஸ் நிர்வாகிகள் மற்றும் முன்னணித் தோழர்களிடம் சங்க வழக்கு நிலவரங்கள் மற்றும் அடுத்த கட்ட வேலைகள் பற்றி பேசப்பட்டது.
மார்ச் 23 மாலையே, மார்ச் 24 நள்ளிரவு முதல் 21 நாட்கள் நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. நாடு முழுவதும் உள்ள தினக்கூலி தொழிலாளர்களும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களும் செய்வதறியாது தமது சொந்த ஊர்களுக்கு செல்வது கோவையிலும் நடந்தது. துயரமிக்க இக்கட்டான சூழலில் முன்னணித் தோழர்களிடம் அலைபேசி மூலம் திட்டமிட்ட வேலைகளை, ஊரடங்கு அறிவிப்பால், தற்காலிகமாக ஒத்தி வைப்பது எனவும் மீண்டும் பேசி முடிவு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.
27.03.2020: மார்ச் 26 அன்று தொழிலாளர்கள் தங்களது வருங்கால வைப்புநிதி கணக்கிலிருந்து முன்பணம் எடுத்துக் கொள்ளலாம் என்ற மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பை தொடர்ந்து, 2018ல் பிரிக்காலில் பணியிட மாற்றம் செய்யப்பட்டவர்கள் வருங்கால வைப்புநிதி கணக்கிலிருந்து முன்பணம் எடுக்க முடியாமல் இருப்பது பற்றியும், அவர்கள்  தங்களது வருங்கால வைப்பு நிதி கணக்கிலிருந்து  முன்பணம் எடுத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியும் மத்திய நிதியமைச்சருக்கும் மத்திய தொழிலாளர் அமைச்சருக்கும் 27.03.2020 அன்று மின்னஞ்சல் அனுப்பப்பட்டது.
01.04.2020: பிரிக்கால் போராட்ட காலத்தில் வேலை நீக்கம் செய்யப்பட்டு (2009) கணக்கு முடித்துக் கொண்ட முன்னாள் பிரிக்கால் தொழிலாளியான தோழர் மணி அலெக்ஸ் 30.03.2020 அன்று நம்மை தொடர்பு கொண்டார். கொரோனா தடுப்பு நடவடிக்கையால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட வடமாநில தொழிலாளர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்டம் எல்டியுசி தோழர்கள் அறிவித்துள்ள உதவிக் குழு முயற்சிகள் பற்றிய செய்தியை முகநூல் மூலம் அறிந்து, திருமலைநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள வடமாநில தொழிலாளர் குடும்பத்திற்கு உதவுமாறு கோரினார். தோழர் குருசாமி ஊருக்கு சென்றுவிட்டதால் தோழர் மணிகண்டன் மற்றும் ஒருசில முன்னணி தோழர்களிடம் பேசிவிட்டு, 01.04.2020 அன்று காலை நானும் தோழர் ரதீஸ்குமாரும் நேரில் சென்று விசாரித்துவிட்டு இரண்டு குடும்பங்களுக்கு அடுப்பெரிக்க டீசல், மற்றும் பிற சமையல் பொருட்கள் வாங்கிக் கொடுத்து வந்தோம். அதன் பிறகு கோவை எல்டியுசி உதவிக் குழு அமைப்பது என்றும் வாய்ப்புள்ள தோழர்களை இணைத்துக் கொள்ளலாம் என்றும் முடிவு செய்யப்பட்டது.
03.04.2020: காலை கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு.அருண்குமார் அவர்களை சந்தித்து வேலை இழந்துள்ள பிரிக்கால் தொழிலாளர்களின் வருங்கால வைப்புநிதி கணக்கிலிருந்து முன்பணம் எடுப்பதில் உள்ள பிரச்சனைகள் பற்றியும், 2018லிருந்து ஊதியம் இல்லாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி சேமிப்பை இந்த இக்கட்டான நேரத்தில் எடுத்துக் கொள்ள உதவுமாறு, பகுதி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டது. அவரும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.
04.04.2020: கூடலூர் பேரூராட்சி 5ஆவது வார்டு பகுதியில் இரண்டு குடும்பங்கள் ஊரடங்கால் வேலையிழந்து உணவுக்கு தவிப்பதாக தகவல் வந்ததை அடுத்து தோழர் சுந்தராஜனுடன் சென்று விசாரித்தோம். கட்டிட தொழிலாளிகளான இரண்டு குடும்பத்தினருக்கும் குடும்ப அட்டை இல்லாததால் தமிழக அரசு அறிவித்த விலையில்லா அரிசியும் ஆயிரம் ரூபாயும் கிடைக்கவில்லை என்பது தெரிந்தது. உணவுக்கு அரிசியோ மளிகைப் பொருள்களோ ஏதும் அவர்களிடம் இல்லை. தோழர்கள் சுந்தரராஜ், சிவக்குமார், ரதீஸ் குமார், நடராஜனுடன் சென்று அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் கொடுத்தோம்.
மதியம் 2.30 மணிக்கு பிரிக்கால் நிர்வாகம், கேஎம்பிடிஓஎஸ் நிர்வாகிகளிடம் கொரோனா பாதிப்பால் ஆர்டர்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் உற்பத்தி செய்ததை விற்க முடியாததால் நிறுவனம் நஷ்டம் அடைந்துள்ளதால் மார்ச் முதல் 4 மாதங்களுக்கு 30% சம்பளம் பிடித்தம் செய்வதாகவும், நடைமுறையில் இருந்துவரும் தற்காலிக விடுப்பு நாட்களை வெட்டி சுருக்குவதாகவும், 2019 - 2020ல் தொழிலாளர்கள் ஈட்டாத நாட்களுக்கான தொகை மற்றும் அதற்கான வெகுமதி தொகைகளையும் நிறுத்துவதாகவும் 2019ல் 18(1)ஒப்பந்தம் போட்டுள்ள சங்கத்திற்கு முன்னரே தகவல் தெரிவித்துவிட்டதாகவும் சொன்னது. நம் தரப்பில் இக்கட்டான சூழலில் நம்மால் ஆன ஒத்துழைப்புகளை வழங்குவதாகவும், தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில் சம்பளத்தில் பிடித்தம் எதுவும் செய்யக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டது. நிர்வாகத்திறகு சங்கடமான காலங்களில் அனைத்து வகையிலான ஒத்துழைப்புகளை வழங்கிய (போராடும் தொழிற்சங்கத்திற்கு எதிராக) கோவை மாவட்ட பிரிக்கால் தொழிலாளர் நலச் சங்கம் (ஏஅய்டியுசி) கேட்டுக் கொண்டும் நிர்வாகம் 30% பிடித்தம் செய்துவிட்டது.
07.04.2020: அன்று கூடலூர் பேரூராட்சி 5ஆவது வார்டு பகுதியில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள கட்டுமான மற்றும் தினக் கூலி தொழிலாளர் குடும்பங்களை  சந்தித்த கோவை எல்டியுசி உதவிக்குழுவினர், 10 குடும்பத்தினருக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டது. மேலும் ஒரு குடும்பத்தினர் மட்டும் அரிசி தேவைப்படுவதாக கேட்டதால், அடுத்தநாள் தரப்பட்டது.
14.04.2020: கோவையில் டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் உறுதியேற்பு கூட்டங்கள் 5 இடங்களில் நடத்துவது என திட்டமிடப்பட்டது. ஏப்ரல் 14 காலை கூடலூர் பேரூராட்சி சாமிசெட்டிபாளையத்தில் தோழர் குணபாலன் வீட்டில் தோழர்கள் கடம்பன், குணபாலன், ரதீஸ்குமார், சுவாமிநாதன் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். 4ஆவது வார்டில் தோழர் மணிகண்டன் வீட்டில் தோழர்கள் பிரபாகரன், மணிகண்டன், ஜானகிராமன், ஆர்.கவிதா, பிரமீளா ஆகியோரும், பெரியநாயக்கன்பாளையம் தோழர் சக்திவேல் வீட்டில் தோழர்கள் உதயகுமார், ராஜா, சிவக்குமார், சக்திவேல் ஆகியோரும் வீரபாண்டி பேரூராட்சியில் தோழர் மணிகண்டன் வீட்டில் தோழர்கள் ராதாகிருஷ்ணன், சக்திவேல், பிரபாகரன், சசிக்குமார், ஸ்ரீதேவி, மணிகண்டன் ஆகியோரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். தோழர் ஜானகிராமன் வீட்டில் தோழர்கள் சுபாஷினி, குருபிரசாத் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். மாவட்ட அலுவலகத்தில் தோழர்கள் சுந்தரராஜ், கிருஷ்ணமூர்த்தி, ராஜேந்திரன், பாபு, நடராஜன், ஜெயப்பிரகாஷ் நாராயணன் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். கோவை மாவட்டத்தில் 6 மய்யங்களில் 4 பெண்கள் உட்பட 27 பேர் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
15.04.2020: பிளிச்சி கோட்டை பிரிவு பகுதியில் மில் வேலைக்கு சென்ற பீகார் மாநிலம் சிபோலி பகுதியை சேர்ந்த இளம்தொழிலாளர்கள் மற்றும் காரைக்குடியை சேர்ந்த குடும்பம் ஒன்று என வேலை வருமானமின்றி கஷ்டப்படுவதாக கோவை எல்டியுசி உதவிக்குழுவின் கவனத்திற்கு வந்தது. தோழர்கள் கனகராஜ் மற்றும் குமார் ஆகியோருடன் சென்று அரிசி மற்றும் தேவையான பொருட்கள் வழங்கப்பட்டன.
20.04.2020: தொழிலாளர்களிடம் 30% சம்பளம் பிடித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரிக்கால் நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டது. மத்திய நிதிஅமைச்சருக்கும் மத்திய தொழிலாளர் அமைச்சருக்கும் வருங்கால வைப்பு நிதியை எடுப்பது தொடர்பாக 27.04.2020 அன்று சங்கம் எழுதிய கடிதத்தை மத்திய தொழிலாளர் அமைச்சகம் கோவை மண்டல வருங்கால வைப்புநிதி அலுவலகத்திற்கு அனுப்பிய விவரத்தையும் தெரிவித்து, தொழிற்தீர்ப்பாயத்தில் நடைபெறும் வழக்கில் இருதரப்பினரின் உரிமைகளுக்கு ஊறில்லாமல், கணக்குகளை முடித்துக் கொள்ளாமல், பணியிட மாற்றம் செய்யப்பட்ட தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதியிலிருந்து முன்பணம் கடன் பெற இந்த கொரோனா காலத்தில் ஆட்சேபணை இல்லை என கோவை வருங்கால வைப்புநிதி அலுவலகத்திற்கு தெரிவிக்குமாறு கடிதம் அனுப்பப்பட்டது.
21.04.2020: 21.04.2020 ஏற்கனவே நாம் உதவிப் பொருட்கள் வழங்கியது தீர்ந்து விட்டதால் மீண்டும் வழங்கினால் மிகவும் உதவியாக இருக்கும் என அம்பேத்கர் நகர் பகுதியிலிருந்து கேட்டதன்பேரில் எல்டியுசி உதவிக்குழு தோழர்கள் சுந்தராஜ், ரதீஸ்குமார், குருசாமி மற்றும் ஜேபி சென்று 20 குடும்பங்களுக்கு அரிசி வழங்கப்பட்டது.
ஏப்ரல் 22 லெனின் பிறந்த நாளில் கட்சித் தோழர்கள் படிப்பதற்காக  தலைமையகத்திலிருந்து அனுப்பபட்ட லெனின் மேற்கோள்கள் முன்னணி தோழர்களுக்கு வாட்சப் மூலம் அனுப்பப்பட்டது.
22.04.2020: 2018ல் பிரிக்கால் நிர்வாகத்தால் பழிவாங்கப்பட்டு வேலையிழந்து வழக்கை எதிர்நோக்கியுள்ள 2 தோழர்கள் கோவை எல்டியுசி உதவிக்குழு செய்துவரும் உதவிகளை கேள்விப்பட்டு, தங்களுக்கும் உதவ முடியுமா என தனித்தனியாக அலைபேசி வாயிலாக கேட்டதன் பேரில் தோழர் மணிகண்டனுடன் ஜேபி சென்று அரிசி மற்றும் நிதி உதவி வழங்கப்பட்டது.
23.04.2020: கம்யூனிஸ்ட் இதழுக்கு இந்த குறிப்புகளை தயார் செய்தேன்.
24.04.2020: காய்கறி மொத்த வியாபாரம் செய்யும் தோழர் தேவானந்த் உதவியதையடுத்து அம்பேத்கர் நகரில் 80 குடும்பங்களுக்கு 5 கிலோ முதல் 6 கிலோ எடையுள்ள காய்கறிகள் 80 குடும்பங்களுக்கு விநியோகிக்கப் பட்டன. தோழர் தேவானந்த், அவரது நண்பர்கள் பரமேஸ்வரன் மற்றும் மகேஷ் ஆகியோர் தங்களது ஒரு நாள் வியாபாரத்தை தள்ளி வைத்துவிட்டு விநியோகப் பணியில் எல்டியுசி தோழர்களுடன் இணைந்துகொண்டனர்.
உதவிகள் தேவைப்படுவோர்க்கு உதவ கோவை எல்டியுசி உதவிக்குழு ஆயத்தமாகி வருகிறது.

Search