ஒரு கப்பல் சொல்லும் கதை
ஆபத்தில் அறியலாம் அருமை நண்பனை
டைட்டானிக் கப்பல் பேரழிவில் முடிந்தது போல அந்தக் கப்பலுக்கும் நேர்ந்திருக்கக் கூடும். கியூபா உதவிக் கரம் நீட்டவில்லை என்றால்.
பிப்ரவரி 27 அன்று டாமினிகன் ரிபப்ளிக் தீவின் ரோமானா துறைமுகத்துக்கு வந்த அந்தக் கப்பலில் இருந்த சிலர் அங்கிருந்து விமானம் மூலம் இங்கிலாந்து திரும்பினர். அப்போது பயணிகள் சிலருக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டதால் அந்தத் துறைமுகத்தில் நிற்க அனுமதிக்கப்படவில்லை. மார்ச் 1 அன்று செயின்ட் மார்டின் தீவில் கப்பல் நிறுத்தப்பட்டு அங்கிருந்து சில பயணிகள் இங்கிலாந்து திரும்பினர். அங்கு கப்பலில் புதிதாக இன்னும் சிலர் ஏறிக்கொண்டனர். அங்கிருந்து குராகுவா மற்றும் பார்படாஸ் துறைமுகங்களுக்குச் அந்தக் கப்பல் சென்றது. இந்தத் துறைமுகங்களில் யாரும் கப்பலை விட்டு இறங்க அந்தத் தீவுகள் அனுமதிக்கவில்லை. மார்ச் 12 அன்று அந்தக் கப்பல் பஹாமாஸ் வந்தது.
இதற்கிடையில், கப்பலில் இருந்து வீடு திரும்பியவர்கள் யாரும் தனிமைப்படுத்தப்படவில்லை. அவர்களில் சிலருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டு மார்ச் 9 அன்று அறிவிக்கப்பட்டது. மார்ச் 11 அன்று கப்பலில் இருந்த ஆறு பேருக்கு கொரோனா அறிகுறிகள் காணப்பட அய்ந்து பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
பிரேமார் என்ற அந்தக் கப்பல் இங்கிலாந்தின் ஃப்ரேன் ஆஸ்லென் க்ரூஸ் லைன்ஸ் என்ற நிறுவனத்துக்குச் சொந்தமானது. அந்தக் கப்பலில் இங்கிலாந்து, இத்தாலி, ஜப்பான், ஸ்வீடன், ஆஸ்திரேலியா, கனடா, நியுசிலாந்து, நார்வே ஆகிய நாடுகளைச் சேர்ந்த 682 பேரும் கப்பல் ஊழியர்கள் 381 பேரும் இருந்தனர். பஹாமாஸ் வந்தபோது ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இருந்த அந்த கப்பலில் ஊழியர்கள் அய்ந்து பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். கிட்டத்தட்ட 50 பேருக்கு அறிகுறிகள் இருந்தன. பஹாமாசில் இறங்கி மருத்துவம் பார்க்க வேண்டியவர்கள் பார்க்க மற்றவர்கள் இங்கிலாந்து திரும்பலாம் என்று அவர்கள் திட்டமிட்டிருந்தனர். கப்பல் தங்கள் நாட்டு துறைமுகத்துக்குள் வர முடியாது என்றது பஹாமாஸ் அரசு. கப்பலுக்கு எரிபொருளும் உணவுப் பொருட்களும் கொடுத்து திருப்பி அனுப்பியது. கொரோனா பாதிக்கப்பட்டவர்கள், அறிகுறிகள் இருந்த 50க்கும் மேற்பட்டோர் இருந்த அந்தக் கப்பல் மீண்டும் கடலிலியே நின்றது. முறையான சிகிச்சை, தனிமைப்படுத்துதலுக்கான வாய்ப்புகள் எதுவும் இன்றி பயணிகளும் ஊழியர்களும் வாழ்வின் நிச்சயமின்மையை நேரில் கண்டனர்.
கப்பலில் இருந்த யாரும் எதிர்ப்பார்க்காத அந்த மறுப்புக்குப் பின் இங்கிலாந்தின் அயல் விவகாரத் துறையும் கப்பல் நிறுவனமும் அடுத்த அய்ந்து நாட்களில் பல்வேறு முயற்சிகள் எடுத்து கப்பல் இருந்த இடத்துக்கு அருகில் இருந்த நாடுகளுடன் பேசிப் பார்த்தன. உலகுக்கே நியாய அநியாயம் போதிக்கும் அய்க்கிய அமெரிக்காவும் அந்த நாடுகளில் ஒன்று. எந்த நாடும் அந்தக் கப்பலை தன் நாட்டு கரைக்கு வர அனுமதிக்கவில்லை.
வல்லரசு என்று பெருமை பேசும் அய்க்கிய அமெரிக்காவே அனுமதிக்காத அந்தக் கப்பலை, மார்ச் 18 அன்று, சின்னஞ்சிறிய கியூபா தனது நாட்டுக் கரையில் ஒதுங்க சம்மதித்தது. கியூபாவின் ஹவானாவில் இருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள மேரியல் துறைமுகத்துக்கு கப்பல் வந்தது. அங்கிருந்து பேருந்துகளுக்கு மாற்றப்பட்ட பயணிகள் கியூபாவின் ஜோஸ் மார்டி சர்வதேச விமான நிலையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து இங்கிலாந்து அனுப்பிய விமானத்தில் இங்கிலாந்துக்கு அனுப்பப் பட்டார்கள். பேருந்தில் விமான நிலையம் செல்லும் வரை, பயணிகளுடன் கியூப மருத்துவரும் இருந்தார். அனைவரையும் பாதுகாப்பாக அனுப்பி வைக்க இரண்டு நாட்கள் ஆனது. பயணம் செய்ய முடியாத அளவுக்கு பாதிக்கப்பட்டிருந்தவர்களுக்கு கியூபா மருத்துவம் பார்த்தது.
கொரோனா தொற்று இருந்தவர்களை தாங்கி வந்த இங்கிலாந்து கப்பல் கியூபாவுக்குள் வந்து சென்ற இதே நாட்களில், கியூபாவும் கொரோனா தொற்றால் பாதிப்புக்கு உள்ளாகியிருந்தது. நாட்டு வருவாயின் ஒரு பகுதியை சுற்றுலா மூலம் பெறும் கியூபாவுக்கு வந்த இத்தாலிய சுற்றுலா பயணிகள் மூன்று பேருக்கு கொரோனா தொற்று இருந்தது கண்டறியப்பட்டு கியூபாவிலேயே சிகிச்சை தரப்பட்டது. அவர்களின் ஒருவர் உயிரிழந்ததுதான் கியூபாவில் நடந்த முதல் உயிரிழப்பு. சுற்றுலா பயணிகள் இன்னும் சிலருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மார்ச் 20க்குப் பிறகு கியூபா தனது நாட்டு எல்லைகளை மூடத் துவங்கியது.
2010ல் ஹைட்டியில் நிலநடுக்கம் ஏற்பட்டு, காலரா தொற்று பரவி மக்கள் துன்புற்ற போது, 2014ல் மேற்குஆப்பிரிக்கா எபோலாவால் பாதிக்கப்பட்டபோது கியூப மருத்துவ குழு அந்த நாடுகளுக்குச் சென்றது. இப்போது வெனிசூலா, நிகரகுவா, சூரிநாம், ஜமாய்க்கா, கிரேனடா ஆகிய நாடுகளுக்கு தனது மருத்துவ குழுக்களை அனுப்பியுள்ள கியூபா, கொரோனாவால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இத்தாலிக்கு 52 பேர் கொண்ட மருத்துவ குழுவை அனுப்பியுள்ளது.
பொல்சனரோ பிரேசிலில் ஆட்சிக்கு வந்தவுடன், கொரில்லா குழுக்களை உருவாக்குகிறார்கள் என்று குற்றம் சுமத்தி பிரேசிலில் இருந்து கியூப மருத்துவர்கள் பலரை கியூபாவுக்கு திருப்பி அனுப்பினார். இப்போது கொரோனா காலத்தில் கியூப மருத்துவர்கள் அவருக்கு தேவைப்படுகின்றனர்.
பேசத் துவங்கும்போதே, சைனீஸ் வைரஸ் என்று துவங்கும் ட்ரம்ப், தொற்றுப் பரவலில் இசுலாமிய ஆபத்தை அடையாளம் கண்டுள்ள பழனிச்சாமி அரசு என, துன்பம்சூழ் நிலையிலும் வெறுப்பரசியலை முன்னிறுத்தும் ஆட்சியாளர்கள் இருக்கும் உலகில், கொரோனா ஆபத்து பரவுகிற இந்த நேரத்திலும் பொருளாதாரத் தடைகள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாக்கியுள்ள நிலையிலும், சோசலிச கியூபா நம்பிக்கை தருகிறது.
தனது நாட்டு மருத்துவ கட்டமைப்பை உலகத்திலேயே சிறந்ததாக கட்டியெழுப்பியுள்ள கியூபாவில் 1000 பேருக்கு 8.2 மருத்துவர்கள் இருக்கிறார்கள். அய்க்கிய அமெரிக்காவில் 1000 பேருக்கு 2.6 மருத்துவர்கள் இருக்கிறார்கள். சீனத்தில் 1000 பேருக்கு 1.8 மருத்துவர்கள் இருக்கிறார்கள்.
டெங்கு, எய்ட்ஸ் போன்ற நோய்களை குணப்படுத்திய இன்டர்ஃபெரான் ஆல்ஃபா 2 பி என்ற கியூப மருந்தையும் கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் சீனம் பயன்படுத்தியது. சிலி, ஸ்பெயின் போன்ற நாடுகளும் அந்த மருந்து வேண்டும் என்று கேட்டுள்ளன.
எல்லாவற்றுக்கும் மேலாக, கியூபாவில் மக்களுக்கான மருத்துவ சேவை நடக்கிறது. வியாபாரத்துக்கான மருத்துவத்துக்கு அங்கு இடமில்லை. எனவேதான் வியாபார மருத்துவம் நடக்கும் அய்க்கிய அமெரிக்கா கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டு பெரும் இழப்புகளைச் சந்தித்துக் கொண்டிருக்க, கொரோனா தொற்று இருப்பதும் பரவுவதும் உறுதிசெய்யப்பட்டதால், பல நாடுகளும் கைவிட்டுவிட்ட ஒரு கப்பலை தரையிறக்கி அதில் இருந்த பயணிகளை பாதுகாப்பாக சொந்த நாடுகளுக்கு அனுப்பியதுடன், பிற நாடுகளுக்கு மருத்துவக் குழுக்களை அனுப்பிக் கொண்டிருக்கிறது கியூபா. ஆபத்தில் அறியலாம் அருமை நண்பனை.