COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Sunday, April 5, 2020

அய்ரோப்பிய ஒன்றியத்தில் கொரோனா பாதிப்புகள்

உமாமகேஸ்வரன்


அய்ரோப்பிய ஒன்றியத்தில் கொரோனா கொத்துக் கொத்தாக மனிதர்களை கொன்று குவிக்கிறது. முன்னாள் ஏகாதிபத்திய நாடுகளான பிரிட்டன், பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகள் பேரழிவைச் சந்திக்கின்றன.
ஹிட்லரின் ஜெர்மனியும், முசோலினியின் இத்தாலியும் விதிவிலக்கல்ல.
அட்லாண்டிக் கடற்கரையில் அழகான, அமைதியான தீவு அய்டில் டி நொயிற்முட்டர். இங்குள்ள உள்ளூர்வாசிகள் சிலர், பயத்தோடும் கோபத்தோடும் பாரிசிலிருந்து வரும் பிம்பங்களை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தார்கள். கொரோனா தொற்றால், தேசம் முழுவதும் முடக்கப் போகிறார்கள் என்கிற செய்தி அறிந்து பாரிஸ்வாசிகள் நூற்றுக்கணக்கில், இரயில்களில் ஏறினார்கள். அவர்களுக்கு தாங்கள் போய்ச் சேர வேண்டிய இடம் தெரிந்திருந்தது.
பாரிசிலிருந்து நொயிற்முட்டர் அய்ந்து மணி நேர பயண தூரம். பாரிஸ்காரர்கள் பொறுப்பற்ற மற்றும் சுயநலம் பிடித்தவர்கள் என்று அந்தத் தீவின் ஆறு மருத்துவர்களில் ஒருவரான டாக்டர் சிரில் சாடினார். உள்ளூர் மேயரோ, பிரதான ஊரிலிருந்து தீவுக்குள் வர இருக்கிற ஒரே பாலத்தை மூட உத்தரவிட்டார். ஆனால், பிரான்ஸ் தேச அதிகாரிகள் அதைச் சட்டவிரோதம் என்று அறிவித்துவிட்டார்கள். நாங்கள் சக்தி வாய்ந்தவர்கள் இல்லை, எங்களால் இந்த படையெடுப்பாளர்களை தடுக்க முடியாது என்றார்.
ஒரே நாளில் அங்கு மக்கட்தொகை இரு மடங்காக 20,000 பேர் என ஆனது. தேசம் முடக்கப்பட்டு இரண்டு வாரங்கள் ஆகும் போது மார்ச் 17 அன்று 70 பேருக்கு கொரோனா தொற்று இந்தத் தீவில் இருந்தது.
பிரான்ஸ் மற்றும் அய்ரோப்பா முழுவதும், வசதி படைத்த நகரவாசிகள் கொரோனா நெருக்கடியின் மய்யத்திலிருந்து வெளிவந்து அவர்களது இரண்டாவது வீடுகளில் வந்து முகாமிடுகிறார்கள். கடற்கரைக்கு அல்லது மலைகளுக்குப் பக்கத்தில் இருப்பது அவர்களுக்கு வீடுகளில் முடங்கியிருக்கும் வசதிக் குறைகளிலிருந்து மீள, ஒரு கண்ணியமான வலைதள இணைப்பு தூரத்திலிருந்து பணி செய்ய உதவுகிறது. ஆனால் குறைந்த வருமானம் உள்ள உள்ளூர்வாசிகள், முதியவர்கள் கொரோனா பரவல் அதிகமானால், இங்குள்ள மிகச்சில மருத்துவமனைகளால் தங்களை காப்பாற்றக் கூட முடியாத நிலை ஏற்படுமே என்ற அச்சத்தில் உள்ளனர்.
இரண்டாவது வீடுகளுக்கு வருபவர்கள் மீது வெறுப்பு ஏற்பட்டுள்ளது. பிரான்சில், 34 லட்சம் பேர் இரண்டாவது வீடுகள் வைத்துள் ளனர். சமீப வருடங்களில் இந்த சமத்துவமின்மையே பெரும் விவாதப் பொருளாகியுள்ளது. சொந்த இரண்டாவது வீடு வைத்திருக்கும் இவர்களைப் போல் அல்லாமல், பல அய்ரோப்பியர்கள் நெருக்கடியான இடங்களில் தனிமைப்படுத்தப்பட்டு பல வாரங்களாக அல்லல்படுகிறார்கள். சிலர் வேலை இழந்தும், பலர் தொடர்ந்து குறைந்த கூலியில் வேலை பார்க்கவும் வேண்டியுள்ளது. இந்த தீவுக்கு உல்லாசப் பயணம் வந்தவர்களைப் போல் இவர்கள் பட்டங்கள் விடுவதும், கடலில் சர்பிங் செய்வதும், நடைப்பயிற்சி, மற்றும் இருசக்கர வாகனங்களில் தீவைச் சுற்றுவதுமாக குதூகலிக்கிறார்கள். பாரிஸ் எண் உடைய வாகனங்களில் கண்டபடி சுற்றித் திரிகிறார்கள், ஏதோ சுற்றுலா வந்தவர்களைப்போல. நாம் சில வாரங்களுக்கு முன்பே இந்த பாலத்தை மூடியிருக்க வேண்டும் என்று ஒரு முதியவர் புலம்புகிறார்.
அய்ரோப்பாவின் மிக அதிகமான கொரோனா தொற்றும், சாவும் ஏற்பட்ட இத்தாலியில், கடுமையாக பாதிக்கப்பட்ட வடக்குப் பிரதேசத்திலிருந்து வெளியேறி தெற்குப் பகுதிகளுக்கு ஓடி விட்டார்கள். உண்மையான எண்ணிக்கை கிடைக்காவிட்டாலும் இவர்களின் வருகையாலேயே இங்கு நோய் தொற்று அதிகமாகி விட்டதாகக் கூறுகிறார்கள். சிசிலிசில் மட்டும் செவ்வாய்க்கிழமை வரை 846 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதற்கு காரணம் மற்ற பகுதியிலிருந்து இங்கு வந்து முகாமிட்டுள்ள 40,000 பேர்தான் என்கிறார்கள்.
ஸ்பெயினில் முன்னாள் பிரதமர் ஜோஸ் மரியா அஸ்நர், பெட்டிப் படுக்கைகளுடன்  மத்திய தரைக்கடலில் மார்பெல்லா என்னும் ஊரில் உள்ள அவருடைய விடுமுறை விடுதிக்குச் சென்றுவிட்டார். தலைநகர் மேட்ரிட்டில் தங்கியிருந்த அவர் அங்கு பல்கலைக் கழகங்கள் மற்றும் பள்ளிகள் மூடிய மறுநாளே அங்கு வந்துவிட்டார். இவரின் இந்தச் செயல் சமூக வலைதளங்களில் பெரும் கோபத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி, அவரை வீட்டை விட்டு வெளியே வர முடியாதபடி செய்துவிட்டது.
ஜெர்மனி, மக்கள் தங்களது இரண்டாவது வீடுகளுக்குச் செல்வதை தடை செய்துள்ளது.
கிரீஸ் நாட்டில், நாடு முழுவதும் முடக்கப்பட்டதும், பிரதமரின் வேண்டுகோளை புறந்தள்ளிவிட்டு வீடுகளில் தங்காமல் அவர்கள் கிராமங்களுக்கும், தீவுகளுக்கும் ஓடிவிட்டார்கள்.
மற்ற நாடுகளான பெல்ஜியம், நார்வே, மற்றும் க்ரோஷியா வெளிப்படையாகவே வீட்டுத் தனிமைப்படுத்துதலிருந்து தப்பிக்க அவர்களுடைய கோடைக்கால வீடுகளுக்குச் செல்வதற்கு தடைவிதித்துவிட்டது.
ஆனால் பிரான்சில் அப்படி எந்த தடையும் விதிக்கப்படவில்லை. உண்மையில் இப்படிப்பட்ட நிச்சயமற்ற காலங்களில் தலைநகரிலிருந்து வெளியேறுவது பிரான்ஸ் நாட்டின் வரலாற்றில் நிறைய நடந்துள்ளது. ப்ளேக் மற்றும் காலரா தொற்று, அத்துடன் அரசியல் நெருக்கடிகள் வரும்போது பாரிஸ் நகர மேட்டுக்குடியினர் கிராமப்புறங்களுக்கு ஓடுவது வாடிக்கைதான்.
பொருளாதாரச் சுருக்கம் ஏற்பட்டு, அய்ரோப்பிய ஒன்றியத்தில் விரிசல் விழ ஆரம்பித்திருக்கிறது. கொரோனா கொள்ளை நோய் ஏற்கனவே பல ஆயிரம் உயிர்களை பலி வாங்கி, உலகப் பொருளாதார மந்த நிலையை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், அய்ரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளுக்கிடையே பெரும் காயத்தை ஏற்படுத்தி வருகிறது.
அய்ரோப்பிய ஒன்றியத்தில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள இத்தாலி தனது பொருளாதாரம் உயிரோடு இருக்க வேண்டுமானால் அய்ரோப்பிய ஒன்றியம் தனக்கு மிகப்பெரிய அளவில் உதவ வேண்டும் என்று எதிர்பார்க்கிறது. இத் தாலி பிரதமர் திருகோண்ட்டே கூட்டுக்கடன் திட்டத்தை முன்வைக்கிறார். அதன்படி, அய்ரோப்பிய ஒன்றியத்தில் உள்ள ஏழை நாடுகள் குறைந்த வட்டியுடன் கூடிய கடன்கள் பெறுவதற்கு வளர்ச்சி அடைந்த அய்ரோப்பிய ஒன்றிய நாடுகள் கடனைத் திருப்பி செலுத்த உத்தரவாதத்தைத் தர வேண்டும் என்கிறார். இதற்கு ஸ்பெயின், போர்ச்சுகல் மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகள் தங்களது ஆதரவைத் தெரிவிக் கின்றன. இந்த வரலாறு காணாத சவாலை எதிர்கொள்ளாவிட்டால், அய்ரோப்பா தனது அடித்தளத்தை மக்கள் கண்முன் இழந்துவிடும் அபாயம் உள்ளதாக அவர் கூறுகிறார்.
இந்த கொரோனா கடன் திட்டத்திற்கு ஜெர்மனி, நெதர்லாந்து உள்ளிட்ட மற்ற அய்ரோப்பிய ஒன்றிய நாடுகள் கண்டிப்பான மறுப்பை தெரிவித்துவிட்டன. அய்ரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் காணொளி மாநாட்டில், பேச்சுவார்த்தையின்போது ஜெர்மனி அதிபர் மர்க்கேலுக்கும், இத்தாலி பிரதமர் கோண்ட்டேவுக்கும் கடுமையான நேரடி மோதல் ஏற்பட்டது. கோண்ட்டே வெளிப்படையாகவே அய்ரோப்பிய ஒன்றியத்துக்கு பத்து நாட்கள் காலக்கெடு விதித்தார். அதற்குள் மாற்றுத்திட்டத்தை அறிவிக்க வேண்டும் என்றார். 2008 பொருளாதார நெருக்கடியின்போது இதுபோன்ற திட்ட முன்வைப்புகள் நிராகரிக்கப்பட்ட நிலையில் அய்ரோப்பிய ஒன்றியம் என்ன மாதிரியான சூழ்நிலையை சந்திக்கும் என்று பார்க்க வேண்டும்.  

Search