COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Wednesday, April 29, 2020

நான் வீட்டை நெருங்கிவிட்டேன் அப்பா
வெயில் சுட்டெரிக்கும் நமது கிராமத்தை
தூரத்திலிருந்து பார்க்க முடியும் என நான் நினைக்கிறேன்.
மதிய உணவு இன்னும் சாப்பிடவில்லை என்றால்
எனக்காகக் காத்திருங்கள் அப்பா.
உங்கள் அனைவரோடும் இணைந்து கொள்ள வருகிறேன்.
இப்போது மூன்று நாட்களாக நடந்து கொண்டிருக்கிறேன்.
என்னுடைய தொண்டை வறண்டு விட்டது.
எனக்கு ஒரு கோப்பை குளிர்ந்த நீர் தேவைப்படும்.
நிறைய சோறும்தான், அப்பா
அதோடு கூட்டும் சிவப்பு சட்னியும்
உங்கள் அனைவருக்கும் தேவையான சோறு இருக்கும்தானே அப்பா
அம்மா சமைக்கும் எல்லா பதார்த்தங்களையும்
நான் கனவில் கண்டுகொண்டே இருக்கிறேன்
நான் மிகுந்த பசியில் இருக்கிறேன்,
கடந்த மூன்று நாட்களாக அதிகம் சாப்பிடவில்லை
நீங்கள் ஊரடங்கு பற்றி கேள்விப்பட்டீர்களா அப்பா
பெரிய நோய் வருகிறது
திடீரென்று வேலை இல்லை
வெளியே போ, வேளியே போ என்று அவர்கள் சொன்னார்கள்.
சாப்பிடக்கூட ஒன்றும் இல்லை அப்பா
எனவே நாங்கள் நடக்க ஆரம்பித்தோம்
ஓய்வெடுக்கக்கூட நேரமில்லாமல்
அப்பா
என்னுடைய கால்களில் முட்கள் குத்தி ரணமாகியிருக்கிறது.
நாங்கள் சாலைகளையும், காவலர்களையும் தவிர்ப்பதற்காக காடுகளின் வழியே நடந்தோம்
அப்பா
நான் வந்து சேரும்போது, நமது பிரியமான வெள்ளாட்டையும்
என்னுடைய சின்னத்தம்பியையும் ஆரத்தழுவிக் கொள்வேன்.
பிறகுதான் நான் சாப்பிட உட்காருவேன்.
எல்லா உணவும் காலியாகும் வரை
சாப்பிட்டுக்கொண்டே இருப்பேன்
நீங்கள் ஆச்சரியத்தில் உங்கள் கண்களை
அகலத் திறந்திருப்பீர்கள்
ஓ, எல்லா சோற்றையும் காலி செய்து விட்டாயா நீ என்பீர்கள்
நீங்கள் என்னுடைய கேசத்தை கோதிவிடுவீர்கள்
நாம் எல்லோரும் சந்தோஷமாக சிரிப்போம்.

(சத்தீஸ்கர் மாநிலம், பீஜப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி, ஜம்லொ மாக்டெம் பிழைப்புக்காக புலம் பெயர்ந்து தெலுங்கானாவில் வயல் வேலைக்கு சென்றிருந்தாள். தன் சொந்த கிராமத்திற்கு நடைபயணமாகச் சென்ற அவர் தனது கிராமத்தில் இருந்து 14 கி.மீ தொலைவு இருக்கும்போது 18.04.2020 அன்று இறந்துவிட்டார்.
தில்லியைச் சேர்ந்த எழுத்தாளர் திரு.உமாங்குமார் இந்தக் கவிதையை எழுதியுள்ளார். தமிழில் இல.உமாமகேஸ்வரன்)

Search