COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Wednesday, April 29, 2020

குழந்தைக்கு பால் பிஸ்கட் கூட
வாங்க முடியவில்லை


ஓட்டல் தொழிலாளர்களின் நிலை

சந்திரன். நான் சென்னை அகர்வால் பவன் தொழிலாளி. ஊரடங்கு உத்தரவால் எங்களைப் போன்ற தொழிலாளர்களின்  இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது
. எங்கள் நிறுவனத்தில் 120 பேர் முடங்கிப் போய்விட்டோம். நான், சென்னை சூளையில் வாடகை வீட்டில் வசிக்கிறேன். வாடகை தர முடியாமல் வாய்தா கேட்டுள்ளேன். எங்க தொழிலாளர் தோழர்கள் பலருக்கும் இதே நிலைமைதான். கொரானாவுக்கு முன்னரே நாங்க டிசம்பர் 2019 முதல் ஜனவரி 2020 வரை முதலாளியின் ஊதாரித்தனத்தால் வேலையில்லாமல் முடங்கி இருந்தோம்.  பிப்ரவரி, மார்ச் வரை வேலை செய்தும் சம்பளம் வரலை. 4 மாதமாக மிகுந்த பாதிப்பிலிருந்த எங்களை கொரானா லாக்டவுன் மேலும் முடக்கி விட்டது.
என் வயதுள்ள என் போல சென்னையில் வாடகை வீட்டிலுள்ள பல தோழர்கள் வீட்டில் குழந்தைக்கு பால் பிஸ்கட் கூட வாங்க முடியவில்லை. தாய் தகப்பானாருக்கு மருந்து வாங்கி தர கஷ்டப்படுகிறோம். ஒரு வேளை சாப்பாட்டிற்கு கூட வழி இல்லாமல் ஏதாவது தொண்டு நிறுவனம், நிவாரணம் தருகிறார்களா வருவாங்களா என பாக்குற மாதிரிதான் இருக்கு.
வீட்டு வாடகை தராததால வீட்டை காலி பண்ணச் சொல்லி ஓனர் பிரஷர் தராங்க என பல தோழர்கள் போன் பன்னி புலம்புறாங்க. சிலருக்கு சென்னையில் ரேஷன் கார்டு இருக்கு. அவுங்களுக்கு ரூ.1000 வந்துள்ளது. 2, 3 நாளுக்கு ஆறுதலா இருந்தாலும், ஒருவாரம் கூட பத்தவில்லை. இன்னும் எத்தனை நாளைக்கு இந்த கொடுமை தாங்கறது என கவலையோட போன்ல எல்லா தோழர்களும் பேசறது தினமும் நடக்கிறது.
வீட்டு வாடகை கட்ட ஏற்கனவே வட்டிக்கு பணம் வாங்கி அந்த கடனுக்கும் வட்டி கட்ட வழியில்லாம கஷ்டப்படறாங்க... கடை திறந்த பிறகு தருகிறோம் என சொல்வதை ஒரு சிலர் மட்டும்தான் கேட்டுக் கொள்கிறார்கள். இப்ப வாடகையும் தர முடியல.. பழைய கடனுக்கு பதில் சொல்ல முடியல... என்ன செய்யறதுன்னு தெரியாம இருக்கோம். இந்தப் பிரச்சனைக்கெல்லாம் இந்த கவர்மென்ட்டு என்ன பண்ணப் போவுதுன்னு தெரியல...
அகர்வால் பவன் விடுதியில் தங்கி உள்ள 35 பேருக்கு மட்டும் சாப்பாடு மட்டும் கெடைக்குது. அந்த தோழர்களின் குடும்பத்தினர் அவர்கள் வருமானத்தை எதிர்பாத்து வாழறாங்க. ஊருல வீட்டுக்கு பணம் அனுப்ப முடியாம நாங்க மட்டும் தின்னுகிட்டு எவ்வளவு காலம் இருக்க முடியும்னு விடுதியில் முடங்கி போனவர்களும் அவதிப்படுகின்றனர்.
அரசு தருகிற நிவாரண தொகையான ரூ1,000 அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய் இவற்றை வைத்து ஒருமாதம் வாழ்க்கை நடத்த முடியுமா? இந்த 1000 ரூபாய்  பத்தாது. நாங்கள் பழைய நிலைக்கு வாழ்க்கை நடத்த அரசு மாதம் ஒன்றுக்கு ரூ15,000 அல்லது 40,000 ரூபாய் கொடுத்து உதவி செய்தால்தான் நாங்கள் வாழ்க்கை நடத்த முடியும்.

Search