COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Tuesday, July 1, 2014

மோடியின் 30 நாட்களில் 30 மக்கள் விரோத நடவடிக்கைகள்

ரட்சகர் வந்துவிட்டார், நல்மேய்ப்பர் வந்துவிட்டார், இனி எல்லாமே நல்ல நாட்கள்தான் எனத் தேர்தலுக்கு முன்பு மோடி, கூவிகூவி விற்கப்பட்டார். தேர்தல் முடிந்து மோடி பிரதமராக பொறுப்பேற்று, அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்ட கருப்பு நாளான ஜூன் 26 அன்று, 30 நாட்கள் ஆட்சி நடத்தி முடித்து விட்டார். முதலாளித்துவ ஊடகங்கள், கிட்டத்தட்ட, தேனும் பாலும் ஆறாக பாய்வதாகச் சொல்கிறார்கள். எல்லாம் பிரமாதம் என வானளாவப் புகழ்கிறார்கள்.

புயலுக்கு முந்தைய அறிகுறிகள்

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது பழமொழி. 67 ஆண்டுகள் யார்யாரோ ஆண்டார்கள், எனக்கு 60 மாதங்கள் தாருங்கள் நான் என்னென்ன செய்கிறேன் பாருங்கள் என்றார் மோடி. 67 வருடங்களில் தமது கட்சித் தலைவர் வாஜ்பாயியின் 5 ஆண்டுகள் ஆட்சியில் இந்தியா ஒளி வீசி மின்னுகிறது எனப் பிதற்றி 2004ல் மக்கள் புரட்டிப்புரட்டி அடித்ததை மோடியும் அவர் துதிபாடிகளும் வசதியாக மறைக்கின்றார்கள். பானைச் சோற்றின் பதம் அறிய ஒரு சோறல்ல, பல சோறு உள்ளது. அடுத்த 59 மாதங்களுக்கு, முதல் 30 நாட்களே முன்னோட்டமாக அமைந்துவிட்டன.

நல்ல காலமா? கெட்ட காலமா?

கோவாவில் பேசிய மோடி தமது அரசு கடினமான முடிவுகள் எடுக்க உள்ளது எனவும், அவை மோடி மீது மக்களுக்கு உள்ள அன்பைப் பலவீனப்படுத்திவிடும் எனவும், வரும் காலங்கள் கடினமான காலங்களாக இருக்கும் எனவும், நாட்டின் பரந்த நலனில் கடினமான பொருளாதார முடிவுகள் எடுக்க நேரிடும் எனவும் எச்சரித்தார். ‘நல்ல கால’ தேர்தல் வாய்வீச்சு, தேர்தலுக்கு பிந்தைய ‘கெட்டகால’ எதார்த்தமாகி விட்டது.

1. பயணிகள் ரயில் கட்டணம் 14.2%, சரக்குக் கட்டணம் 6.5% உயர்த்தப்பட்டுவிட்டன. கட்டண உயர்வு, காலத்தின் கட்டாயம் என்று பாஜக ஆட்சியாளர்கள் சொல்கிறார்கள். பட்ஜெட் மூலம் அல்லாமல், நாடாளுமன்ற அவையில் அறிவிப்பில்லாமல், எந்த விவாதமும் இல்லாமல், மக்களிடம் தேர்தலுக்கு முன்பு சொல்லாததை சர்வ சாதாரணமாகச் செய்துவிட்டார் மோடி.

2. டீசல் விலை 50 காசுகள் உயர்த்தப்பட்டது. வேறு வழியில்லை என்றார்கள். வறியவர்கள் குரல்களைத் காது கொடுத்துக் கேட்டு, அவர்களுக்காக பணியாற்றி, அவர்களுக்காகவே வாழ்வோம் என வசனம் பேசிய  மோடி, வறியவர் மீது போர் தொடுத்துவிட்டார். வறுமை, பரந்து படரும்.

3. சர்க்கரை மீதான இறக்குமதி வரி உயர்த்தப்பட்டுள்ளதால் சர்க்கரை விலை கிலோவுக்கு ரூ.2 முதல் ரூ.3 வரை அதிகரிக்கும். அடுத்து கேஸ் சிலிண்டர் விலை உயர்வு வர உள்ளது. சந்தை மாற்றங்களுக்கு ஏற்ப பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வு காத்திருக்கிறது. காங்கிரஸ்/அய்முகூ ஆட்சி மக்கள் மீது சுமத்திய விலை உயர்வு, மோடி ஆட்சியிலும் பிணச் சுமையாய் மக்கள் தோள்களில் ஏறி அழுத்துகிறது.

4. அய்முகூ அரசாங்கம் முன்வைத்த இடைக்கால நிதியறிக்கையில் அறிவித்தபடி, 12%ல் இருந்து 8% என குறைக்கப்பட்ட வாகன உற்பத்தி தொழிலுக்கான கலால் வரி இன்னும் ஆறு மாதங்களுக்கு அப்படியே தொடரும்.  சாமான்ய மக்களுக்கு கசப்பு மருந்து. வாகன உற்பத்தியாளர்களுக்கு இனிப்பு விருந்து.

5. மஸ்தூர் நம்பர் 1, நாட்டின் முதல் தொழிலாளி என்று மோடி தம்மைச் சொல்லிக் கொண்டார். இந்தப் பக்கம் அதானி அந்தப் பக்கம் அம்பானி இருக்கும்போதுதான், இப்படி கூச்சம் இல்லாமல் சொன்னார். முந்தைய அரசு ஒப்புக்கொண்ட குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.1,000 என்பதை, மோடி அந்த 30 நாட்களில் அமலாக்கவில்லை. தொழிலாளியின் அடிப்படைச் சம்பளம் ரூ.6500க்கு மேல் இருந்தால் அதற்கேற்ப தொழிலாளியின் வருங்கால வைப்பு நிதிக்கு கூடுதல் தொகை செலுத்தும்படி முதலாளிகளை வற்புறுத்தக் கூடாது என்று மோடி அரசு சொல்லிவிட்டது. ஆனால், விலை உயர்வுகள் மட்டும் முந்தைய காங்கிரஸ் அரசு எடுத்த முடிவுகளின் தொடர்ச்சி என்கிறது.

6. மோடி அரசு மேற்கொள்ள வேண்டிய தொழிலாளர் நலச்சட்ட சீர்திருத்தங்களை, அவரது கட்சி ஆளும் ராஜஸ்தான் மாநில அரசாங்கம் துவக்கி வைத்துவிட்டது. முதலாளித்துவ உலகமய மொழியில் சீர்திருத்தம் என்றால் மக்கள் மீது தாக்குதல்கள் என்று பொருள். உலகம் முழுவதும் மூலதன ஆதரவாளர்கள் தொழிலாளர் சட்டங்களால்தான் வேலை வாய்ப்புக்கள் பெருகுவதில்லை எனக் கூசாமல் திரும்பத்திரும்ப பொய் சொல்லி, தொழிலாளர் சட்டங்களை பலவீனப்படுத்தப் பார்ப்பார்கள்.

வறுமை போக வருமானம் வேண்டும். வருமானம் கிடைக்க வேலை வேண்டும். வேலை கிடைக்க, முதலாளிகள் வேலை தரும் சூழல் வேண்டும். தொழிலாளர் சட்டங்கள் இறுக்கமாக இருந்தால் எப்படி வேலை வாய்ப்புக்கள் வரும் என கவலையோடு பேசுவார்கள். இது ஆடு நனைகிறது என ஓநாய் படுகிற கவலையே ஆகும். இப்போது ராஜஸ்தான் அரசாங்கம் நிரந்தர வேலை வாய்ப்புக்களை ஒழித்துக்கட்ட, வெட்டிச் சுருக்க, நிரந்தரமற்ற ஒப்பந்த பயிற்சி மற்றும் தற்காலிக வேலை வாய்ப்புக்கள் மட்டும்தான் இருக்கும் என்ற நிலை நோக்கிச் செல்ல தொழிற்சங்க உரிமைகளை முடக்க தொழிற் தகராறுகள் சட்டம், ஒப்பந்தத் தொழிலாளர் சட்டம், தொழிற்சாலைகள் சட்டம் ஆகிய மூன்றிலுமே திருத்தங்களுடன் தயாராகி உள்ளது. முதலாளிகள், ராஜஸ்தான் வழியில் புதுடில்லி செல்லும் என ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

7. கிரிக்கெட், கால்பந்து போன்ற விளையாட்டுகளில் ஆட்ட நாயகர் விருது வழங்குவார்கள். கார்ப்பரேட் கம்பெனிகளில், கழுதை கூடுதல் பொதி சுமக்க வைக்க கேரட்டை முன்னால் கட்டித் தொங்க விடுவதுபோல், விருதுகள், வெகுமதிகள் வழங்குவார்கள். இப்போது நவரச நாயகர் மோடி மத்திய அரசு அலுவலகங்களில் மாதத்தின் சிறந்த ஊழியர், ஆண்டின் சிறந்த ஊழியர் தேர்வு செய்யப்படுவார்கள் என ஜூன் 16 சுற்றறிக்கையில் குறிப்பிடுகிறார். கார்ப்பரேட்டுகளுக்காக ஆட்சி நடத்துபவர், அரசாங்கம் நடத்துவதிலும் கார்ப்பரேட் பாணியை பின்பற்றுகிறார்.

8. நிதி அமைச்சகத்தையும் கார்ப்பரேட் அமைச்சகத்தையும் ஒன்றிணைத்து, அரசாங்க நிதியே கார்ப்பரேட்டுகளுக்கானதுதான் என குறிப்பால் உணர்த்துகிறார்.

9. வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகங்கள் நேரடி அந்நிய முதலீட்டை அதிகரிக்கும் முயற்சிகளை துவக்கி விட்டார்கள். பாதுகாப்புத் துறையில் 100% அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் திட்டம் உள்ளதாகத் தெரிகிறது. இது பற்றிய நிதியமைச்சகத்தின் அறிவிப்பு ஏதும் வரும் முன்பே, இதற்கெதிரான எதிர்ப்புக்கள் எழத் துவங்கிவிட்டன.

10. சுற்றுச் சூழல் அமைச்சகம், வனங்களை ஆறுகளை பூமிக்குக் கீழே உள்ள வளங்களை கார்ப்பரேட்டுகள் சூறையாட உதவும் வகையில் ஒற்றைச் சாளர முறை மூலம் ஃபாஸ்ட் ட்ரேக் முறையில் (துரித தடம்) தொழில் துவங்குவதற்கான, விரிவுபடுத்துவதற்கான விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் தரும்.

11. தமிழ்நாட்டு மக்களின் கடுமையான எதிர்ப்பை சிறிதும் சட்டை செய்யாமல் கொலைகார ராஜபக்சேவை பதவியேற்பு விழாவிற்கு அழைத்து, ராஜபக்சேவுக்கு ஆறுதல் தந்துள்ளனர்.

12. அரசாங்க மொழியாக இந்தி இருக்கும் என அறிவித்து இந்தி திணிப்புக்கு முயன்று பார்த்து, ஆவேசமான எதிர்ப்பு கண்டு, பிறகு பாயலாமென பின்வாங்கியுள்ளார்கள்.

13. காவிரி நதி நீர் நிர்வாக ஆணையத்தை அமைக்க முடியாதென கர்நாடகாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் சதானந்த கவுடா, அனந்த குமார் மற்றும் துறை அமைச்சர் உமா பாரதி கைவிரித்து விட்டனர். (காவிரித் தாய் ஜெயலலிதா புதிய அரசுக்கு இன்னும் சற்று அவகாசம் தருவோம் என்கிறார்.)

14. சோரபுதீன் போலி மோதல் படுகொலை வழக்கில் மோடி அரசுக்கு எதிராக வாதாடிய கோபால் சுப்பிரமணியத்தை உச்ச நீதிமன்ற நீதிபதி ஆக்கக் கூடாது என, உச்ச நீதிமன்ற பரிந்துரையை புறக்கணித்து, ஆட்டம் போட்டுள்ளது மோடி அரசு. நீதித்துறை சுதந்திரம் கொடி கட்டிப் பறக்கும்!

15. மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் ஜம்மு காஷ்மீருக்கு அரசியலமைப்புச் சட்ட 370 பிரிவு சிறப்புப் பாதுகாப்பு கிடையாது எனச் சொல்லி இந்தியாவின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் சவால் விட்டுள்ளார்.

16. இஸ்லாமியருக்கு எதிரான முசாபர் நகர் கலவரத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள சஞ்சீவ் பய்யான் மோடி அமைச்சரவையை அலங்கரிக்கிறார். (குஜராத்தில் இஸ்லாமியர்கள் பலரை கொன்ற குற்றத்திற்கு ஆளான மாயா கோத்நானி நீதிமன்றம் தண்டிக்கும் வரை மோடி அமைச்சரவையில் அமைச்சராக இருந்தார்).

17. சிறுபான்மைத் துறை அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லா இஸ்லாமியர்கள் இந்தியாவில் பெரும் எண்ணிக்கையில் இருப்பதனால் அவர்கள் சிறுபான்மையினரே அல்ல எனச் சுலபமாக கதையை முடிக்கப் பார்க்கிறார்.

18. மோடியின் வெற்றியால் துணிச்சல் பெற்று சங்பரிவார் கூட்டங்கள் பல இடங்களில் சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தினார்கள். கர்நாடகாவில் வெற்றி ஊர்வலம் இஸ்லாமியர் மீதான தாக்குதலில் முடிந்தது.

19. மோடி பதவி ஏற்புக்கு முன்பு அகமதாபாத்தில் இஸ்லாமியர்கள் தாக்கப்பட்டனர்.

20. மகாராஷ்ட்ராவில் புனேவில் இந்து ராஷ்ட்ர சேனா மோஷின் சாதிக் என்ற இஸ்லாமிய இளைஞரை வெட்டிச் சாய்த்தது.

21. கேரளத்தில் மோடிக்கு எதிராக குறுக்கெழுத்துப் போட்டி வாசகங்கள் உருவாக்கிய, கல்லூரி பத்திரிகைகளில் எழுதிய மாணவர்கள், ஆசிரியர்கள் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்தது.

22. மோடி அரசு ஜனநாயக உரிமைகளை மட்டும் விட்டுவைக்குமா என்ன? ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தின் நுகத்தடியின் கீழ் துன்புறுகிற வடகிழக்கு மாநில மக்களுக்கு, உங்களுக்கான அமைச்சராக முன்னாள் ராணுவ தளபதி வி.கே.சிங் இருப்பார் என்று சொல்லியுள்ளார்கள்.

23. சுற்றுச் சூழல், அணுசக்தி ஆபத்து போன்ற பல பிரச்சனைகளை எழுப்புகிற இயக்கங்களுக்கு வாய்ப்பூட்டுப் போட புலனாய்வு அமைப்பின் (அய்பி) ஜோடிக்கப்பட்ட அறிக்கைகளைப் பயன்படுத்துகிறார்கள்.

24. எதிர்ப்புப் போராட்டங்களின் மய்யமாக பல பத்தாண்டுகளாக இருந்து வருகிற புது டெல்லியின் ஜந்தர் மந்தரில், 144 தடை உத்தரவு போட்டு போராட்ட உரிமைகளை பறிக்கிறார்கள்.

25. தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் தலைவர் டிராய் சட்டப்படி பணி ஓய்விற்குப் பிறகு அரசு பதவி வகிக்க முடியாது. இது முறியடிக்கப்பட்டு அவசர சட்டம் மூலம் முன்னாள் டிராய் தலைவர் பிரதமர் அலுவலகத்தில் இணைக்கப்பட்டுள்ளார்.

26. நர்மதை ஆற்றில் சர்தார் சரோவர் அணையை 17 அடி உயரத்தைக் கூட்டி 2.5 லட்சம் மக்களின் நிலத்தை, வாழ்வாதாரத்தை தண்ணீரில் மூழ்கடிக்கப் பார்க்கிறார்கள்.

27. மோடி பதவியேற்ற பிறகு, இந்தியா முழுவதும் ஆணாதிக்க, சாதி ஆதிக்க சக்திகள் துணிச்சல் பெற்று பெண்கள் மீதும் தலித்துகள் மீதும் தங்கள் கொடூரமான தாக்குதல்களை தீவிரப்படுத்திவிட்டார்கள்.

28. எரிவாயு விலை உயர்வை மூன்று மாதங்களுக்கு தள்ளிப் போட்டுள்ளார்கள். கைவிடுவதாகச் சொல்லவில்லை. உயர்த்துவது பற்றி மோடி இரண்டு முறை அமைச்சர்களை, அதிகாரிகளைச் சந்தித்து பேசி விட்டார். ரயில் கட்டண உயர்வு கொந்தளிப்பு உருவாக்கியிருக்கும் சூழலில் அம்பானியின் சொத்தை இன்னும் சில நூறு கோடிகள் அதிகரிக்கும், தொடர்ந்து உர விலையில் உயர்வைக் கொண்டு வரும் அந்த உயர்வை, தள்ளிப் போடலாம் என்று முடிவு செய்திருக்கலாம்.

29. மோடி உத்தரவின் பேரில் உள்துறை அமைச்சகத்தில் இருக்கிற ஒன்றரை கோடி கோப்புக்களை, பழையன கழிப்பதாகச் சொல்லி அழித்துவிட்டார்கள். பல அரிய விவரங்கள் அதில் அழிந்து போயிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இதற்கான வெளிப்படையான முறை பின்பற்றப்பட வேண்டும் என்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கோப்புகள் பாதுகாக்கப்பட கல்வியாளர்கள், அறிவாளிப் பிரிவினர் கலந்தாலோசனையுடன் இதற்கான செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் குரல்கள் எழுந்துள்ளன.

30. பீகாரில் ராஜதானி எக்ஸ்பிரஸ் விபத்துக்கு மாவோயிஸ்டுகள் காரணமாக இருக்கலாம் என்று சொல்லத் துவங்குகிறார்கள்.
கார்ப்பரேட் பாசிசம் மோடி மூலம் தன் ஆட்டத்தை துவங்கிவிட்டது. ஒவ்வொரு மக்கள் விரோத ஜனநாயக விரோத நடவடிக்கையையும் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி உடனுக்குடன் எதிர்ப்புப் போராட்டங்களை கட்டியமைப்பது அவசர அவசிய கடமையாகும்.

Search