COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Wednesday, July 30, 2014

திருச்சி நாடாளுமன்ற தொகுதி வாக்குச் சாவடி மட்டங்களில் அமைப்பு நிலை பற்றிய ஆய்வு

கட்சியின் மத்திய கமிட்டி வழிகாட்டுதல் படி, திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் 2014 மக்களவை தேர்தல்களில் 10க்கும் மேற்பட்ட வாக்குகள் பெற்றுள்ள வாக்குச்சாவடிகளில் கட்சி அமைப்பு நிலவரம் பற்றி புதுக்கோட்டை மாவட்ட கமிட்டி ஆய்வு மேற்கொண்டது. ஆய்வின் அடிப்படையில் பின்வரும் விசயங்கள் முன்வைக்கப்படுகின்றன.

திருச்சி நாடாளுமன்ற தொகுதியின் கந்தர்வகோட்டை மற்றும் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிகளில் 24 வாக்குச் சாவடிகளில் 10க்கும் மேற்பட்ட வாக்குகள் பெற்றுள்ளோம். இவற்றில் 20 வாக்குச் சாவடிகள் கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதியிலும் 4 வாக்குச் சாவடிகள் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியிலும் உள்ளன. கந்தர்வகோட்டை வாக்கு விவரங்கள் அட்டவணையில் தரப்பட்டுள்ளன.

கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதி

    கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதியில் பெற்ற மொத்த வாக்குகள் 865. இங்குள்ள 20 வாக்குச் சாவடிகளில் 10 முதல் 89 வாக்குகள் வரை பெற்றுள்ளோம். 7 வாக்குச்சாவடிகளில் 10 முதல் 20 வரை வாக்குகளும், 7 வாக்குச் சாவடிகளில் 21 முதல் 30 வரை வாக்குகளும், 6 வாக்குச் சாவடிகளில் 40 முதல் 89 வரை வாக்குகளும் பெற்றுள்ளோம்.

    55 முதல் 89 வரை வாக்குகள் பெற்ற 4 வாக்குச் சாவடிகளில் அதிமுக, திமுகவுக்கு அடுத்து கூடுதல் வாக்குகள் பெற்றுள்ளோம்.

    29 வாக்குகள் பெற்ற 123ஆவது வாக்குச் சாவடியிலும் அதிமுக, திமுகவுக்கு அடுத்து கூடுதல் வாக்குகள் பெற்றுள்ளோம்.

    25 வாக்குகள் பெற்றுள்ள 99ஆவது வாக்குச் சாவடியில் அதிமுக, திமுகவுக்கு அடுத்து கூடுதல் வாக்குகள் பெற்றுள்ளோம். காங்கிரசும் இங்கு 25 வாக்குகளே பெற்றுள்ளது.

49, 40 வாக்குகள் பெற்ற 157 மற்றும் 190ஆவது வாக்குச் சாவடிகளில் அதிமுக, திமுக, தேமுதிகவுக்கு அடுத்து கூடுதல் வாக்குகள் பெற்றுள்ளோம்.

    10க்கும் மேற்பட்ட வாக்குகள் பெற்றுள்ள இந்த 20 வாக்குச்சாவடிகள் உள்ள பகுதிகளில் 11 உள்ளூர் கமிட்டிகளும் 38 கட்சிக் கிளைகளும் உள்ளன. இங்குள்ள மொத்த கட்சி உறுப்பினர் எண்ணிக்கை 546. (இவர்களில் 45 பேர் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் என்பதால் அவர்களுக்கு வாக்குகள் இல்லை). பெற்றுள்ள வாக்குகள் 647. இந்த 20 வாக்குச் சாவடிகளில் 3 வாக்குச் சாவடிகளில் கட்சி உறுப்பினர்கள் இல்லை.

    இந்த 20 வாக்குச் சாவடிகள் உள்ள பகுதிகளில் 1,950 அவிதொச உறுப்பினர்கள் உள்ளனர். இந்த 20 வாக்குச் சாவடிகள் உள்ள ஊராட்சிகளில் அவிதொச மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 4,950.

    89 வாக்குகள் பெற்ற வாக்குச் சாவடி எண் 138 பெரியகோட்டையில் உள்ளது; இங்கு 26 கட்சி உறுப்பினர்கள் உள்ளனர். 75 வாக்குகள் பெற்ற வாக்குச் சாவடி எண் 148 சங்கம்விடுதியில் உள்ளது; இங்கு 32 கட்சி உறுப்பினர்கள் உள்ளனர். 68 வாக்குகள் பெற்ற வாக்குச் சாவடி எண் 128 மட்டங்காலில் உள்ளது; இங்கு 40 கட்சி உறுப்பினர்கள் உள்ளனர். 55 வாக்குகள் பெற்ற வாக்குச் சாவடி எண் 195 குளந்திரான்பட்டில் உள்ளது; இங்கு 75 கட்சி உறுப்பினர்கள் உள்ளனர்.

    தேர்தல் நாளன்று இந்த 20 வாக்குச் சாவடிகளிலும் நமது கட்சித் தோழர்கள் சாவடி மட்ட குழு அமைத்திருந்தனர். 5 முதல் 40 பேர் வரை தேர்தல் நாளன்று பணிகளில் ஈடுபட்டனர். மொத்தம் 250 பேர் பணியாற்றினர். பெரியகோட்டையில் நமது தோழர்கள் ஊர்வலமாக வந்து வாக்களித்தனர்.

    இவற்றில் வாக்குச் சாவடி எண் 156, 157 ஆகியவை துவார் கிராமத்தில் வருகின்றன. இந்த வாக்குச்சாவடிகளில் முறையே 14 மற்றும் 49 வாக்குகள் பெற்றுள்ளோம். வாக்குச் சாவடி எண் 156 துவார் வாக்காளர்களுக்கானது. இங்கு கட்சிக் கிளை இல்லை; அவிதொசவில் 200 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.  இந்த வாக்குச் சாவடி ஆண்டிகுளப்பன்பட்டி உள்ளூர் கமிட்டி பகுதிக்கு அருகில் உள்ள பகுதி. இங்கு தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. ஆண்டிகுளப்பன்பட்டியில் உள்ள கட்சித் தோழர்கள் இங்குள்ள தலித் பிரிவு மக்களுடன் தொடர்ந்து ஊடாடுகின்றனர். இந்தப் பகுதியில் முன்னர் 7 உறுப்பினர்களுடன் ஒரு கிளை இயங்கியது. கிளைப் பொறுப்பாளர்களில் ஒருவர் வெளிநாடு சென்றுவிட்டதாலும் ஒரு பெண் தோழர் திருமணமாகி வேறு பகுதிக்குச் சென்றுவிட்டதாலும் இங்கு அமைப்பு நடவடிக்கைகளை தொடர முடியாமல் போனது. மீதமிருந்த கட்சி உறுப்பினர்கள் ஆண்டிகுளப்பன்பட்டி கிளையில் இணைக்கப்பட்டுள்ளனர்.

49 வாக்குகள் பெற்றுள்ள 157ஆவது வாக்குச் சாவடி ஆண்டிகுளப்பம்பட்டி வாக்காளர்களுக்கானது. இந்த வாக்காளர்கள் துவார் சென்றுதான் வாக்களிக்க வேண்டும். ஆண்டிகுளப்பம்பட்டி மக்களுக்கான ரேசன் கடையும் துவாரில்தான் உள்ளது.

கட்சி உறுப்பினர் யாரும் இல்லாத, அவிதொச உறுப்பினர்கள் 100 பேர் இருக்கிற புதுநகர் 108ஆவது வாக்குச்சாவடியில் வருகிறது. இங்கு 21 வாக்குகள் பெற்றுள் ளோம். இந்தப் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மட்டும் மேற்கொள்ளப்பட்டது.

இந்த வேலைப் பகுதிகளில் இந்த வாக்குச் சாவடிகள் தவிர இன்னும் ஓரிரு வாக்குச் சாவடிகள் உள்ளன. அவற்றில் இந்த வேலைப் பகுதிகளில் உள்ள பிற கட்சி உறுப்பினர்கள், வெகுமக்கள் வாக்குகள் பெற்றுள்ளோம்.

புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி

புதுக்கோட்டை சட்ட மன்ற தொகுதியில் நான்கு வாக்குச் சாவடிகளில் 12 முதல் 29 வரை வாக்குகள் பெற்றுள்ளோம்.

இந்த நான்கு வாக்குச் சாவடிகளில் 3 கிளைகளும் 1 உள்ளூர் கமிட்டியும் இயங்கு கின்றன.

கணபதிபுரத்தில் (வாக்குச் சாவடி எண் 163) 14 கட்சி உறுப்பினர்கள், கருப்புடையான்பட்டியில் (வாக்குச் சாவடி எண் 159) 8 கட்சி உறுப்பினர்கள், ஆத்தியடிப் பட்டியில் (வாக்குச் சாவடி எண் 184) 3 கட்சி உறுப்பினர் கள் உள்ளனர். கடுக்காகாடு பகுதியில் (வாக்குச் சாவடி எண் 203) கட்சி உறுப்பினர்கள் இல்லை.

25 கட்சி உறுப்பினர்கள் உள்ள இந்த 4 வாக்குச் சாவடிகளில் மொத்தம் 77 வாக்குகள் பெற்றுள்ளோம்.

200 அவிதொச உறுப்பினர் இந்த 4 வாக்குச் சாவடிகள் எல்லைக்குள் உள்ளனர்.

29 வாக்குகள் பெற்றுள்ள 163ஆவது வாக்குச் சாவடி வருகிற கணபதிபுரம் பகுதியில் 500 அவிதொச உறுப்பினர்கள் உள்ளனர். மற்ற 3 வாக்குச் சாவடிகள் உள்ள பகுதிகளான கருப்புடையான்பட்டி (12 வாக்குகள்), ஆத்தியடிப்பட்டி (14 வாக்குகள்), கடுக்காகாடு (22 வாக்குகள்) ஆகியவற்றில் வெகுமக்கள் உறுப்பினர்கள் இல்லை.

கடுக்காகாடு, ஆத்தியடிப்பட்டி, துத்தான் கரைவிடுதி ஆகிய விடுதலை சிறுத்தைகள் செல்வாக்குள்ள பகுதிகளில் நாம் அவர்களின் சில வாக்குகளையும் பெற்றுள்ளோம்.

தேர்தல் வேலைகளில் மொத்தம் 55 பேர் பங்கேற்றுள்ளனர். இவர்களில் 28 பேர் புதிதாக வந்த இளைஞர்கள்.
தொகுத்துச் சொன்னால்,

10க்கு மேல் வாக்குகள் பெற்றுள்ள இந்த 24 வாக்குச் சாவடிகளிலும் வாக்குச்சாவடி மட்ட குழுக்கள் இயங்கின.

24 வாக்குச் சாவடிகளில் 20 வாக்குச் சாவடிகளில் கட்சி அமைப்பு இயங்குகிறது.

24 வாக்குச் சாவடிகளில் 13 வாக்குச் சாவடிகளில் அவிதொச இயங்குகிறது.

24 வாக்குச் சாவடிகளில் 11 வாக்குச் சாவடிகளில் பெண்கள் பிரச்சாரம் நடந்தது.

24 வாக்குச் சாவடிகளிலும் பொதுக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

24 வாக்குச் சாவடிகளிலும் இளைஞர்கள் வேலை செய்தனர். அவர்களது அசைவு உற்சாகம் தந்தது. இளைஞர்களை தொட்டது சாதகமானது.

நமது வேலை 24 வாக்குச் சாவடிகளிலும் குறிப்பாக தலித் பகுதியில் நடந்தது.

தேர்தல் பிரச்சாரம் செய்த தலித் பகுதிகளில், பிற கட்சிகளின், குறிப்பாக, விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம் இளைஞர்கள் சிலரை ஈர்க்க முடிந்தது.

ஊராட்சி மட்டத்தில் எந்த வாக்குச் சாவடியிலும் 100களில் வாக்குகள் பெறும் நிலையை நாம் எட்டவில்லை என்பது தெளிவு. அப்படி ஒரு சமூக, வர்க்க, மக்கள் திரள் செல்வாக்கை பெறும் திசையில் வேலைகள் செலுத்தப்பட வேண்டிய அவசியத்தை ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன.

பல வருடங்கள் கட்சி செயல்பட்டும், நாம் சட்டமன்ற தொகுதிகளில் நாடாளுமன்ற தேர்தலில் ஆகக் குறைந்த வாக்குகள் பெற்றுள்ளோம் என்பதை கூருணர்வோடு புரிந்து கொண்ட பின்புதான் வாக்குச் சாவடி மட்ட ஆய்வை மேற்கொண்டோம்.

ஆய்வு முடிவுகள் நமக்கு எந்த சுயதிருப்தியும் தரவில்லை. சிறிய அளவில் குறைந்த வீச்சில், ஆனால், திட்டமிட்ட விதத்தில் அமைப்புரீதியாக செயல்பட்டதற்கே விளைவுகள் கிடைக்கும்போது, முறையாக, தொடர்ச்சியாக அமைப்பாக்கப்பட்ட விதத்தில், அரசியல் முனைப்புடன் மக்கள் திரள் பணிகளை மேற்கொண்டால், விளைவுகளும் அதற்கேற்ப அமையும் என்பதையே ஆய்வு முடிவுகள் புலப்படுத்துகின்றன.
 

Search