பேயரசு செய்தால் சாத்திரங்கள்
பிணம் தின்னும். பாரதி சொன்னான். 2014 மே 26க்குப் பிறகு, ஜனநாயகம் என்ற
பொருளில், இந்தியா பின்னோக்கிச் செல்வதில் துரிதம் காட்டுவதாகத் தெரிகிறது.
இதற்குத்தான் காத்திருந்தோம் என்று பிற்போக்கு சக்திகள் ஆட்டம்
போடுகின்றன. நாம் எதிர் அவர்கள், மேல் எதிர் கீழ் என்ற கருத்தாக்கங்கள்
வலுப்பெறுகின்றன.
வெறுப்பு அரசியல் திட்டமிட்டு பரப்பப்படுகிறது. மதச்சார்பின்மை என்று சொன்னாலே அடிப்பார்களோ, சிறுபான்மையினர் உரிமை என்று வலியுறுத்திப் பேசினால் நாடு கடத்துவார்களோ, இந்து மத பழக்கவழக்கங்கள் பல வழக்கொழிந்தவை என்றால் சிறையில் அடைப்பார்களோ என்று சாமான்ய மக்களை அச்சுறுத்தும் விதம் சில நிகழ்வுகள் கடந்த 60 நாட்களில் நடந்தேறிவிட்டன.
டில்லியில் உள்ள மகாராஷ்டிரா சதன் உணவு விடுதியில், சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர் ராஜன் விசாரே, ரமலான் விரதத்தில் இருந்த அர்ஷத் சுபேர் என்ற இசுலாமிய ஊழியருக்கு, சப்பாத்தியை வாயில் பலவந்தமாக திணித்த காட்சி அது போன்ற நிகழ்வுகளில் ஒன்று. திண்ணியத்தில் தலித் ஒருவர் வாயில் மலம் திணித்தது நினைவை தட்டுகிறது. தடுமாறச் செய்கிறது. ராஜன் விசாரே மீது 19 குற்ற வழக்குகள் உள்ளன.
தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட காலத்தில், நான் அப்படிச் செய்யவே இல்லை என்று அந்த சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர் சொல்ல முடியவில்லை. அவருடைய அடாவடி வெறிச் செயல் கேமிராவில் பதிவாகி நாடு முழுவதும் ஒளிபரப்பப்பட்டுவிட்டது. எனவே, அவர் இசுலாமியர் என்பது தெரியாது என்று சொல்லப் பார்க்கிறார். அந்த ஊழியர் பெயர் பொறித்த அட்டை அணிந்திருந்தார். தான் விரதத்தில் இருப்பதாகச் சொல்லியிருக்கிறார். இதற்குப் பிறகும் சிவசேனாவும் சங்பரிவாரும் ஆட்சியில் இருக்கும் பாஜகவும் தந்த துணிச்சலில் அவர் தனது அத்துமீறலை நடத்தியிருக்கிறார். அந்த ஊழியர் இசுலாமியர் இல்லை, அவர் விரதத்தில் இல்லை என்றாலும் நடந்தது அத்துமீறல். சைவ உணவு உண்பவர் வாயில் இறைச்சியைத் திணித்தால் பாஜகவும் சங்பரிவாரும் என்ன செய்வார்கள் என்று தான் பார்க்க விரும்புவதாக ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா நியாயமான கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரச்சனை பெரிதாகி நாடாளுமன்றத்தில் வெடிக்கிறபோதும் மன்னிப்பு கேட்கச் சொல்வது, தண்டனை தொடர்பான நடவடிக்கைகள் அரைகுறையாக நடந்துகொண்டிருக்க, பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், கேள்வி எழுப்பும் நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பார்த்து நீங்கள் பாகிஸ்தான் போக வேண்டியதுதான் என்கிறார்.
தெலுங்கானாவின் புதிய நல்லெண்ணத் தூதுவராக சானியா மிர்சா நியமிக்கப்பட்டதற்கு தெலுங்கானா பாஜக சட்டமன்ற உறுப்பினர் பாகிஸ்தான் மருமகளை எப்படி தூதுவராக நியமிக்கலாம் என்று கேள்வி எழுப்பினார். சானியா மிர்சா, நான் இறுதி வரை இந்தியப் பிரஜையே என்று ஊடகங்கள் முன் சத்தியம் செய்ய வேண்டிய துரதிர்ஷ்டவசமான நிலைக்குத் தள்ளப்பட்டார்.
மோடியின் தலைமையில் இந்தியா ஒரு இந்து நாடாக மாறும் என்று கோவா சட்ட மன்ற உறுப்பினர் ஒருவர் சொல்ல, இந்தியா ஏற்கனவே இந்து நாடுதான் என்று கோவா துணை முதலமைச்சர் சொல்கிறார். 2002க்குப் பிறகான குஜராத் மாதிரிதான் சரி, அதை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த வேண்டும் என கர்நாடகா பாஜக தலைவர் சொல்கிறார். நாட்டை மாற்றிக் காட்ட தனக்கு 60 மாதங்கள் தரச் சொல்லிக் கேட்டார் மோடி. மோடியின் புகழ் பாடுபவர்கள் அவ்வளவு நாட்கள் காத்திருக்கத் தயாரில்லை.
இந்து மதம் பற்றி வென்டி டோனிகர் எழுதிய புத்தகம் தடை செய்யப்பட்டு அந்தப் புத்தகத்தின் பிரதிகள் அழிக்கப்பட்டன. இதற்காக நீதிமன்றம் சென்றவர் தீனாநாத் பத்ரா. சிக்ஷா பச்சாவோ அந்தோலன் சமிதி அமைப்பாளர். ஏ.கே.ராமானுஜம் எழுதிய 300 ராமாயணங்கள் கட்டுரைக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொண்ட வரும் இவரே. இவரது புத்தகங்கள், இன்று குஜராத் பள்ளிகளில் கட்டாயப் பாடங்கள்.
பிறந்த நாளில் மெழுகுவர்த்தியை ஊதுவது மேற்கத்திய கலாச்சாரம், அப்படிச் செய்யக் கூடாது, காயத்ரி மந்திரம் சொல்ல வேண்டும், இந்திய வரைபடத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நேபாளம், பூடான், திபெத், பங்களாதேஷ், சிறிலங்கா, பர்மா ஆகிய நாடுகளும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தும் அவரது புத்தகங்கள், நமது வரலாற்றையும் கலாச்சாரத்தையும் மாணவர்கள் புரிந்துகொள்ள உதவும் என்று குஜராத் மாநில பள்ளி பாடப் புத்தக ஆணையத்தின் இயக்குநர் பரத் பண்டிட் சொல்கிறார். இந்த ஆண்டுதான் இந்த 9 புத்தகங்கள் பாடமுறையில் புகுத்தப்படுகின்றன. குஜராத்தில் மாணவர்கள் மனதில் இந்துத்துவா நஞ்சு திட்டமிட்டு அரசு ஆதரவுடன் திணிக்கப்படுகிறது. கல்வி காவிமயமாக்கத்தில் தீர்மானகரமான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்திய வரலாற்றை காவிமயமாக்கவும் புதிய அரசு தயாராகியுள்ளது. இந்திய வரலாற்று ஆய்வு கவுன்சிலின் தலைவராக புதிய அரசால் நியமிக்கப்பட்டுள்ள சுதர்சன் ராவ், இந்திய வரலாற்றில் சாதிய முறையின் பாத்திரத்தை உயர்த்திப் பிடிப்பவர். ஆர்எஸ்எஸ் பின்னணி கொண்ட கல்வி அமைப்புக்களில் பொறுப்பில் இருந்தவர்.
பிரச்சனை குஜராத் எல்லையில் நிற்காமல், பெரியார் மண்ணையும் தொடப்பார்க்கிறது. மத்திய அரசு பாடத்திட்டம் உள்ள பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கடைபிடிக்கப்பட வேண்டும் என்ற சுற்றறிக்கை கடுமையான எதிர்ப்புக்களை சந்தித்துக் கொண்டிருக்கிறது. அலுவல் விவகாரங்கள், இணையதளத்தில் இந்தியில் இருக்க வேண்டும் என்ற புதிய அரசின் ஆணை கடுமையான எதிர்ப்புக்குள்ளான பிறகு இந்தி பேசும் மாநிலங்களுக்கு மட்டும் அது பொருந்தும் என மத்திய அரசு அறிவித்தது. சமஸ்கிருத வாரம் பிராந்திய மொழி வாரமாக மாற்றப்பட வேண்டும் என்று மோடிக்கு ஜெயலலிதா எழுதியுள்ள கடிதம் இதுபோன்ற மாற்றம் எதையும் கொண்டு வருகிறதா என்று பார்க்க வேண்டும்.
சப்பாத்தி திணிக்கப்பட்ட பிரச்சனையில், அது தவறு என்று அத்வானி சொன்ன பிறகும், சிவசேனா மற்றும் பாஜக தலைவர்கள் நியாயப்படுத்துவது போலவோ, அதற்கு எதிர்நிலையில் இருந்தோ, ஜெயலலிதா இன்னும் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.
மத்திய அரசின் ரயில்வே மற்றும் பொது நிதிஅறிக்கைகளை தொலைநோக்கு, வளர்ச்சி நோக்கு என்று விவரித்த ஜெயலலிதா, சப்பாத்தி திணிக்கப்பட்ட பிரச்சனையில் எதிர்க்கவில்லை என்றால் அதற்கு ஆதரவு என்றுதான் பொருள். இதில் நடுநிலை என்ற ஒன்று இருக்க முடியாது.விரதம் இருப்பவர்களுடன் விருந்தில் கலந்து கொள்வது இந்த ஆதரவு நிலைக்கு பாவ மன்னிப்பு தந்துவிடாது. ஜெயலலிதாவைப் பொறுத்தவரை, தம்பித்துரை துணை சபாநாயகர் ஆகிவிட்டால் சமஸ்கிருதமய முயற்சி மன்னிக்கப்படலாம். பிள்ளைகள் பதவிக்காக மத்திய அரசை கருணாநிதி விமர்சிக்கவில்லை என்று ஜெயலலிதா இனி துணிந்து சொல்ல முடியாது. பாஜகவின் தமிழகக் கூட்டாளிகள் தங்கள் வீர வசனங்களையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு இறைதூதனிடம் கையேந்திக் கொண்டிருக்கிறார்கள்.
பொதுவாக நிறைய பேசும் மோடி இந்த எல்லாப் பிரச்சனைகளிலும் மவுனம் காப்பது பற்றி கேள்வி எழுப்பப்படுகிறது. மோடி பேச வேண்டியதெல்லாம் தேர்தல் பிரச்சாரத்திலேயே பேசிவிட்டார். மாமிச ஏற்றுமதி பற்றி, பங்களாதேஷில் இருந்து ஊடுருவுபவர்கள் பற்றி, பாஜகவும் சங் பரிவார் அமைப்புக்களும் என்ன செய்ய வேண்டும் என்று பேசிவிட்டார். சங் பரிவார் அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள், தேர்தலுக்குப் பிறகு பாகிஸ்தான் செல்ல தயாராகுங்கள் என்று தேர்தல் பிரச்சாரத்திலேயே பாஜக எதிர்ப்பாளர்களிடம் சொன்னார்கள். தேர்தல் பிரச்சாரத்தில் மோடியும் பாஜகவும் சங் பரிவார் அமைப்புக்களும் வலுவாக முன்வைத்த இந்துத்துவ விஷக் கருத்துக்களும் வெறுப்பு அரசியலும் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இவை மோடியின் ஒப்புதல் இல்லாமல் நடக்கவில்லை. மவுனம் சம்மதம்.
மரபணு மாற்றப் பயிர்களுக்கு அனுமதி, காப்பீட்டில் அந்நிய நேரடி முதலீடு, தானியக் கொள்முதல் விலையில் மாநிலங்கள் தரும் ஊக்கத் தொகை கூடாது, ஒரு கிலோ தக்காளி ரூ.50 விற்கிற காலத்தில் ரூ.47 தாண்டாத வறுமைக் கோடு என கார்ப்பரேட் முன்னேற்ற நடவடிக்கைகள், மக்கள் வாழ்வாதாரம் மீது கடுமையான தொடர் தாக்குதல்கள் நடத்திக் கொண்டே, மறுபுறம் இந்துத்துவா முன்னேற்ற நடவடிக்கைகள் என மோடியின் அணிவகுப்பு வேகமாகச் செல்லப் பார்க்கிறது.
ஒரு புறம் நிலப்பிரபுத்துவ மிச்சசொச்சங்கள் மேலும் வலுப்பெறுவது, மறுபுறம் கார்ப்பரேட் முதலாளித்துவம் முன்னேறிப் பாய்வது என்ற இரட்டை இலக்குகளை இணைப்பதில் குஜராத் மாதிரியை நாடு முழுவதும் பொருத்த மோடியின் ஆதரவாளர்கள் மூர்க்கத்தனமான முயற்சிகள் மேற்கொண்டால், மோடியே ஒரு முறை எடுத்துச் சொன்னதுபோல், ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர்வினை இருக்கும்.