COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Wednesday, July 30, 2014

இஸ்ரேல் நடத்தும் படுகொலைகளும் குற்றங்களும் நிறுத்தப்பட வேண்டும்! பாலஸ்தீனத்தை விட்டு இஸ்ரேல் வெளியேற வேண்டும்!

 ‘எனது அரசாங்கம் பெரிதும் காரணமான, நானே மறைமுகமாக ஆதரித்துக் கொண்டி ருக்கிற ஓர் இனப்படுகொலையின் நடுவே நான் இருந்துகொண்டிருக்கிறேன்’ என்று அமெரிக்க இளைஞர் ரச்சேல் கோர்ரி கூறினார். பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்க இவர் பாலஸ்தீனம் சென்றபோது இஸ்ரேலிய புல்டோசரால் 16.03.2003 அன்று நசுக்கிக் கொல்லப்பட்டார். 2003 பிப்ரவரில் ரச்சேல் சொன்னது இன்றும் 11 ஆண்டுகள் ஆனபின்பும் தொடர்கிறது.

2008 - 2009 புத்தாண்டு பிறந்தபோது 500 பெண்கள், குழந்தைகள் உட்பட 1100 பாலஸ்தீனர்கள் காசா மீது இஸ்ரேல் நடத்திய கொடூரக் குண்டு வீச்சில் கொல்லப்பட்டார்கள். மசூதிகள், அகதிகள் முகாம், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் என்று குறி வைத்து குண்டுகள் வீசியது இஸ்ரேல். 

இப்போது 2014ல் இன்னும் மோசமாக பாலஸ்தீனத்தில் இஸ்ரேல்  இனப்படுகொலை நடத்திக்கொண்டிருக்கிறது. காஸா மீது இஸ்ரேல் நடத்திவரும் தொடர் தாக்குதலில் இதுவரை 1000க்கும் மேற்பட்ட பாலஸ்தீன அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். நாளுக்கு நாள் இந்த எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது.

இஸ்ரேல் பாலஸ்தீனத்தில் உள்ள காசாவையும் வெஸ்ட் பாங்க் பகுதியையும் பல பத்தாண்டுகளுக்கும் மேலாக சட்டவிரோதமாக ஆக்கிரமித்து வைத்துகொண்டு, அந்தப் பகுதிகளுக்கு பொருளாதாரத் தடை விதித்து, அந்தப் பகுதிகளுக்கு எரிபொருள், மின்சாரம், ஏற்றுமதி, இறக்குமதி ஆகியவற்றை தடுத்து, மக்களின் நடமாட்டத்தை முடக்கியது மட்டுமின்றி தண்ணீர் விநியோகம், சுகாதாரம், போக்குவரத்தையும் முடக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

காசா ஒரு திறந்தவெளிச் சிறை என்றார் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன். நம் வார்த்தைகளில் சொல்வதென்றால், காசா ஒரு மிகப்பெரிய ஜாலியன் வாலாபாக். அங்கே உணவுக்காக, தண்ணீருக்காக, மருந்துக்காகத் தவித்துக் கொண்டு இருக்கும் மக்கள் மீது அவ்வப்போது குண்டுகள் போடப்படுகின்றன.

வெஸ்ட் பாங்க்கில் 3 யூதச் சிறுவர்கள் கடத்தப்பட்டு கொல்லப்பட்டார்கள். இச்செயல் மிகவும் கண்டனத்திற்குரியது. ஆனால், அந்த மூவரின் கொலைக்குக் காரணமானவர்களைக் கண்டுபிடித்துத் தண்டிப்பதற்குப் பதிலாக இஸ்ரேல் இதைச் சாக்காக வைத்துக் கொண்டு பாலஸ்தீன மக்களைக் கொன்று குவித்து வருகிறது. பாலஸ்தீன இளைஞர்களைக் குறி வைத்துத் தாக்கியது இஸ்ரேல். ஓர் இளைஞர் உயிரோடு எரிக்கப்பட்டார்.

ஒவ்வொரு ஆண்டும் பாலஸ்தீன மக்களை இஸ்ரேல் படுகொலை செய்வதை ‘புல் அறுப்பது’ என்று இஸ்ரேலிய அடிப்படைவாதிகள் 2012ல் கூறினார்கள். அந்தப் ‘புல் அறுப்பு’ படுகொலைக்கு இந்த ஆண்டு 3 யூதச் சிறுவர் கள் கடத்திக் கொல்லப்பட்டதைச் சாக்காக்கிக் கொண்டுள்ளது இஸ்ரேல். இஸ்ரேல் நடத்தும் மனிதத்தன்மையற்ற இனப்படுகொலைக்கு இது மாதிரி பெயர்கள் வைத்து அதை நியாயப்படுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள் இஸ்ரேல் அரசியல்வாதிகள்.

1969ல் இஸ்ரேலியப் பிரதமராக இருந்த கோல்டா மேயர் பாலஸ்தீனர்கள் என்று இருந்ததே இல்லை என்றார். 1982ல் பிரதமர் மேனாகெம் பெகின், பாலஸ்தீனர்களை, இரண்டு கால்களால் நடக்கும் விலங்குகள் என்றார். 1988ல் மற்றொரு பிரதமர் யிட்சாக் சமீர், பாலஸ்தீனர்கள் வெட்டுக்கிளிகளை அழிப்பதுபோல் அழிக்கப்படுவார்கள் என்றார். இப்போதைய பிரதமர் நெதன்யாகு, உலக நாடுகள் எங்களைத் தடுத்து நிறுத்த முடியாது, நாங்கள் தொடர்ந்து செல்வோம் (கொல்வோம்) என்று அறிவிக்கிறார்.

உலகின் பெரிய நாடுகள் அனைத்தும் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன. வீடுகள், மருத்துவமனைகள், பொதுமக்கள் வாழ்விடங்கள் குறிவைத்துத் தாக்கப்படுகின்றன. பாலஸ்தீனத்தில் கொல்லப்பட்டுள்ளவர்களில் 80%க்கும் மேற்பட்டவர்கள் பொதுமக்கள் என்று சொல்லும் அய்க்கிய நாடுகள் சபையே காசாவின் மீது நடத்தப்படும் தாக்குதலைத் தடுத்து நிறுத்த உருப்படியான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஹமாஸ்கள் மருத்துவமனைகள், பள்ளிக் கூடங்களில் ஒளிந்து கொண்டிருப்பதால்தான் நாங்கள் அங்கே குண்டுகள் வீசுகிறோம் என்று தனது அநியாயச் செயலை நியாயப்படுத்துகிறது இஸ்ரேல். இஸ்ரேல் அரசும் அய்க்கிய அமெரிக்காவும் இஸ்ரேல்தான் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இஸ்ரேல் மக்கள் உயிர் வாழும் உரிமைக்காகவே தங்களைத் தற்காத்துக் கொள்ளவே தாக்குதல் நடத்துகிறார்கள் என்றும் திரும்பத் திரும்பப் பிரச்சாரம் செய்கின்றன.

இது அப்பட்டமான பொய். இஸ்ரேலைப் பொறுத்தவரை பாலஸ்தீனர் ஒவ்வொருவரும் தீவிரவாதி. யூதர் இல்ல கட்சி (Jewish Home Party)யைச் சேர்ந்த இஸ்ரேல் நாடாளுமன்ற உறுப்பினர் அயலெட் ஷகீத், குட்டிப் பாம்பு களைப் பெற்றெடுக்கும் பாலஸ்தீனப் பெண்களை (அம்மாக்களை) வெட்டித் தள்ள வேண்டும் வெளிப்படையாக அறிக்கை விடுகிறார். இஸ்ரேல் பல்கலைக்கழகம் ஒன்றைச் சேர்ந்த அரபு இலக்கிய ஆசிரியர் மொர்டாசாய் கேதார், பாலஸ்தீன தாய்மார்களையும் சகோதரிகளையும் வன்புணர்ச்சி செய்தால் மட்டுமே தீவிரவாதிகளைத் தடுக்கமுடியும் என்கிறார்.

ஹமாஸின் தாக்குதலில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவே இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்துகிறது, இரண்டு பக்கமும் தவறு இருக்கிறது, இந்தியா எந்தப் பக்கமும் இருக்கக் கூடாது என்று இஸ்ரேலுக்காக வக்காலத்து வாங்குகிறார்கள் இந்தியாவில் இஸ்ரேலுக்கு ஆதரவாகப் பேசுபவர்கள். எது உண்மை? இஸ்ரேல் பக்கம் இழப்பு என்பது மிகச் சொற்பமே.ஆனால், பாலஸ்தீன் பக்கம் ஆயிரக்கணக்கில் கொல்லப்படுகிறார்கள். அதில் பெரும்பாலும் குழந்தைகள். இஸ்ரேல் பாலஸ்தீனர்களை வீட்டை விட்டுவிட்டு ஓடு என்று எச்சரிக்கிறது. தங்கள் இடத்தில் தங்கியிருக்கும் பாலஸ்தீனர்களை தீவிரவாதிகள் என்று சொல்லி கொல்கிறது இஸ்ரேல் படை. பாலஸ்தீனியர்கள் எங்கு போய் ஓடி ஓளிவார்கள்?

ஹமாஸ்களை தீவிரவாதிகள் என்றும் அவர்கள்தான் இந்தத் தாக்குதல்களுக்குக் காரணமானவர்கள் என்று சொல்லும் இஸ்ரேலும் மேற்குலகு நாடுகளும், ஹமாஸ்களுக்கு முன்பே சியோனிஸ்ட்டுகள் தங்களின் ‘விரிவாக்கம் மற்றும் வெளியேற்றுதல்’ திட்டத்தைத் தொடங்கி விட்டார்கள் என்பதை வசதியாக மறந்துவிடுகின்றன. 1947 அய்க்கிய நாடுகள் சபை ஆணை பாலஸ்தீனத்தில் 55%அய் இஸ்ரேலுக்குக் கொடுத்தது. ஆனால், இஸ்ரேல் அதோடு நிற்கத் தயாராக இல்லை. தனது ராணுவ பலத்தால் 78% பகுதியை ஆக்கிரமித்து வைத்துக் கொண்டது. அதற்குப் பிறகும் இஸ்ரேலுக்கு திருப்தி வரவில்லை.

மத்திய தரைக்கடல் பகுதியில் அமெரிக்க நலன்களுக்கு மிகவும் பாதுகாப்பாக இருப்பது இஸ்ரேல். அய்க்கிய அமெரிக்க ஏகாதியத்தியத்தின் உலக மேலாதிக்கத்திற்கு மத்திய கிழக்குப் பகுதியில் தன் அடியாளாக இஸ்ரேலை அய்க்கிய அமெரிக்கா வைத்துள்ளது. இஸ்ரேல் இருந்திருக்கவில்லை என்றால், அய்க்கிய அமெரிக்க தொழில் துறை புதிதாக அதைக் கண்டுபிடிக்க வேண்டியதிருந்திருக்கும் என்று கூறினார் இஸ்ரேலிய எழுத்தாளர் யூரி அவ்னரி.

ஆகவேதான் இஸ்ரேலின் வெளிநாட்டு உதவி நிதியில் மூன்றில் ஒரு பங்கு அய்க்கிய அமெரிக்காவினுடையது. கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக, ஆண்டுக்கு 3 பில்லியன் டாலர் அய்க்கிய அமெரிக்கா இஸ்ரேலுக்கு வழங்கி வருகிறது. அரசியல், ராஜதந்திரம், ராணுவம், பொருளாதாரம் என அனைத்திலும் இஸ்ரேலுக்கு அய்க்கிய அமெரிக்கா உதவுகிறது. இஸ்ரேலுக்கு பொருளாதார உதவி மட்டுமின்றி போலீஸ் உதவியும் செய்கிறது அய்க்கிய அமெ ரிக்கா. அய்க்கிய நாடுகள் சபையில் தனக்குள்ள தனித்த அதிகாரத்தைப் (veto power) பயன் படுத்தி இஸ்ரேலின் போர்க் குற்றங்களை நியாயப்படுத்தி, இஸ்ரேலுக்கு எதிரான தடைகளில் இருந்து அதைக் காப்பாற்றுகிறது அய்க்கிய அமெரிக்கா. 

இந்த நிலையில், இஸ்ரேலின் அராஜகம் தொடர்பாக இந்திய அரசாங்கம் வெட்கங்கெட்ட வகையில் அமைதி காப்பது மட்டுமின்றி இரட்டை வேடம் போடுகிறது. பாலஸ்தீன மக்கள் படுகொலை தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க அனுமதி மறுத்தது மத்தியில் உள்ள பாஜக அரசு. பின்னர், ராஜ்ய சபா தலைவர் விவாதிக்கலாம் என்றார். ஆனால், இஸ்ரேல் நடவடிக்கையைக் கண்டித்து நாடாளுமன்றத்தில் தீர்மானம் போட இந்திய அரசு மறுத்துவிட்டது. அது இந்தியாவின் நலனுக்கு எதிரானது என்றது. 

இந்திய அரசின் இப்போதைய மவுனம் பாலஸ்தீன மக்கள் போராட்டத்திற்கு இந்தியா அளித்து வந்துள்ள நீண்டகால ஒருமைபாட்டினை கேலிக்குரியதாக்குகிறது. பாலஸ்தீனத்திற்கு இந்தியாவின் ஒருமைப்பாடு, ஆதரவு என்பது காலனியாதிக்கத்தை எதிர்த்த இந்திய சுதந்திரப் போராட்டத்தின் அனுபவத்தில் உண்டானதாகும். அதனால்தான் காந்தி உட்பட இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் பாலஸ்தீன போராட்டத்தை எவ்வித தயக்கமும் இல்லாமல் ஆதரித்தனர்.

‘ஆங்கிலேயர்களுக்கு இங்கிலாந்து சொந்தம், பிரஞ்சுக்காரர்களுக்கு பிரான்ஸ் சொந்தம் என்பதுபோல் அரேபியர்களுக்கு பாலஸ்தீனம் சொந்தம்’ என்றார் காந்தி.

கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவின் ஆளும் வர்க்கம் அய்க்கிய அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் நெருங்கிச் செயல்பட ஆரம்பித்ததில் இருந்து ஒரு விடாபிடியான உறவை இந்தியா இஸ்ரேலுடன் கொண்டுள்ளது. முந்தைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் இந்த உறவு கருத்தியல் ரீதியாகவும் வலுப்பெற்றது. இஸ்லாத்திற்கு எதிரான ஒத்த கருத்தில் சியோனிசமும் இந்துத்துவாவும் ஒன்றிணைந்தது. இருந்தபோதிலும் காங்கிரஸ் ஆட்சியிலும் சரி பாஜக ஆட்சியிலும் சரி இஸ்ரேலின் ஆயுதங்களை இறக்குமதி செய்வதில் இந்தியாதான் அதன் மிகப் பெரிய வாடிக்கையாளர். அதன் காரணமாகவேதான் இஸ்ரேலுக்கும் இந்தியாவுக்குமான உறவு மேலும் வலுப்பெற்றது.

காலனிய ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியா, பாலஸ்தீனத்திற்கு இடையிலான பிணைப்பை, பாரம்பரிய வரலாற்றை காவிக் கூட்டத்தினர் மோடி அரசாங்கத்தின் ஆதரவோடு இப்போது அழிக்கப் பார்க்கிறார்கள். இந்தியாவில் உள்ள சிறுபான்மையினரை, இந்தியா மற்றும் அருகில் உள்ள தேசிய இனங்களை அடக்கி ஒடுக்குவதன் மூலம் இந்தியத் துணைக் கண்டத்திற்கு ஓர் இஸ்ரேல் முகம் கொடுக்கப் பார்க்கிறார்கள்.

இஸ்ரேலின் கொடூரச் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்ரேல் தூதரைத் தன் நாட்டில் இருந்து வெளியேற்றினார் வெனிசுலா முன்னாள் அதிபர், இறந்துபோன, ஹூயுகோ சாவேஸ். ஆனால், வெட்கக்கேடு என்னவென்றால், இந்தியாவின் அய்முகூ அரசின் பிரதமர் மன்மோகன் சிங் இஸ்ரேலை ஒடுக்குமுறை அரசு என்று வெளிப்படையாகக் குற்றம் சுமத்தக்கூட மறுத்துவிட்டார். அதே நிலையைத்தான் மோடி அரசும் எடுக்கிறது. இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே நடுநிலை வகிக்க வேண்டும் என்கிறது மோடி அரசு.

இந்திய சுதந்திரப் போராட்டத்தை உயர்த்திப் பிடிக்கும் இந்தியர்கள் அனைவரும் இஸ்ரேலுக்கு ஆதரவாகச் செயல்படும் நாடுகளில் உள்ள மக்களுடனும் உலகில் விடுதலையை விரும்பும் அனைவருடன் ஒன்றிணைந்து ஏகாதி பத்தியத்தையும் இஸ்ரேலின் பாலஸ்தீனத்தின் மீதான தாக்குதலையும் ஆக்கிரமிப்பையும் எதிர்க்க வேண்டியது காலத்தின் கட்டாயம். மன சாட்சிப்படி இந்திய அரசு பாலஸ்தீனத்துடன் நிற்பதற்கு மாறாக காலனிய ஆதிக்கத்திற்கு எதிரான இந்திய மற்றும் பாலஸ்தீன சுதந்திரப் போராட்ட பாரம்பரியத்தை அழிக்க முயற்சிப்பதை இந்திய மக்கள் அனுமதிக்கக் கூடாது.

இந்தியாவில் உள்ள ஜனநாயகவாதிகளும் ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களும் பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் தாக்குதலை நிறுத்தச் செய்யவும் இஸ்ரேலைக் கண்டிக்கவும் இந்திய அரசை வலியுறுத்த வேண்டும். இஸ்ரேலுடன் நடக்கும் ஆயுத வியாபாரத்தைக் கைவிட்டு விட்டு பாலஸ்தீன மக்களுக்கு மறுவாழ்வு அளிக்க, அதற்காக அய்க்கிய நாடுகள் சபையை தலையிடச் செய்ய இந்திய அரசை நாம் வலியுறுத்த வேண்டும்.

இன்று இனவெறிக்கு எதிராக, காலனிய ஆதிக்கத்திற்கெதிராக, ஆக்கிரமிப்பிற்கு எதிராக நடைபெறும் மிகப்பெரிய போராட்டம் பாலஸ்தீனர்களின் போராட்டம்தான். ஒரு காலத்தில் ஹிட்லரின் நாசிச இனவெறியால் பாதிக்கப்பட்ட, படுகொலைக்குள்ளான யூத மக்கள் இப்போது அதே போன்றதொரு இனவெறிப் படுகொலைகளை நடத்திக் கொண்டிருப்பது விந்தை முரண். இந்த இனவெறிப் படுகொலையை முடிவுக்குக் கொண்டுவர உலகத்தின் மனசாட்சியைத் தட்டியெழுப்ப வேண்டியது இன்று நமது தலையாயக் கடமையாகும்.

(லிபரேசன், 2014 ஆகஸ்ட்
தமிழில்: ஜி.ரமேஷ்)



Search